அதிகரிக்கும் பணவீக்க ஆபத்து
இலங்கையின் பணவீக்க நிலை தொடர்பாக, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். உலகளாவிய ரீதியான எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்ந்து நீடிக்குமானால், இலங்கையின் பணவீக்கம் ஏழு சதவீதத்தை எட்டக் கூடிய அபாயம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரோ அரசாங்கமோ மத்திய கிழக்குப் போர் இவ்வளவு காலமும் நீடிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை, அவரது கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தப் போரினால் தான் பணவீக்கம் அதிகரிக்கிறது என்பது அவரது கருத்து. மத்திய கிழக்குப் போர் எல்லா நாடுகளினதும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இது இலங்கையை இன்னும் அதிகமாக பாதித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கு நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்ய தவறியிருந்தால் அது அரசாங்கத்தின் தவறே தவிர, புவிசார் அரசியல் மோதலின் தவறல்ல. இந்தப் போர் நீண்டு கொண்டிருந்தால், அதன் தாக்கம் இலங்கையில் எதிரொலிக்கும். அதற்கேற்ப பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது, அதற்கான திட்டங்களை வகுப்பது தான், அரசாங்கத்திற்குரிய கடமை.
தங்களின் தவறுகளை மறைத்துக் கொள்வது எல்லா அரசாங்கங்களினதும் வழக்கம். யாருமே தங்களின் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தவறுகளை ஒப்புக் கொள்வதில்லை. தற்போதைய அரசாங்கமும் கூட, அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. முற்றுமுழுதாக சர்வதேச அரசியல் சூழலையும் எரிபொருள் விலை அதிகரிப்பையும் காரணம் காட்டி, தப்பிக் கொள்ளும் முயற்சியே முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க — பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டக்கூடும் என எச்சரித்திருக்கிறார். (படம்: Ada Derana)
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம், 69.8 சதவீதத்தை எட்டியிருந்தது. அந்தளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. பின்னர் அந்த நிலையில் இருந்து மீட்சி பெற்று, 2024 செப்டம்பர் மாதம், பணவீக்கம் எதிர்மறை நிலைக்குச் சென்றது. பணச்சுருக்கம் என அழைக்கப்படும் இந்த நிலையில் இருந்து, 2025 ஓகஸ்ட் மாதத்தின் பின்னர், இலங்கை மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில் தான், மத்திய கிழக்கு போர் மூண்டது. அதையடுத்து பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்து, ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாகவும், மே மாதத்தில் 5.5 சதவீதமாகவும், உயர்ந்திருக்கிறது.
இதேபோக்கில் சென்றால், பணவீக்கம் ஏழு சதவீதத்தை எட்டும் என்பது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கணிப்பாக இருக்கிறது. அவர் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, நாட்டின் பணவீக்க போக்கு சரியான நிலையில் சென்று கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அப்போது மத்திய கிழக்குப் போர் அபாயம் ஏற்பட்டிருக்கவில்லை. மத்திய கிழக்குப் போர் ஏற்பட்ட பின்னர் கூட, அவர் பணவீக்கம் உயரும் என்பதற்கான எந்த முன்னெச்சரிக்கையையும் விடுக்கவில்லை. பணவீக்கம், 5 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என்றே அவர் கூறி வந்திருந்தார். ஆனால் இப்பொழுது திடீரென பணவீக்கம் 7 சதவீதத்தை தொடும் என அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாட்டை செய்து கொண்டு பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தவணை அடிப்படையில் கடனுதவி பெறப்பட்டு வருகிறது. இதுவரையில் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கடைசி தவணையாக, 650 மில்லியன் டொலர் திறைசேரிக்கு கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில் சர்வதேச நாணய நிதியம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் எதையும் முன்வைத்திருக்கவில்லை.
பணவீக்கம் எந்த சதவீதத்தில் இருக்க வேண்டும் என்ற எந்த இலக்கும் முன்வைக்கப்படவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் முன்னர் கூறியிருந்தார். எனினும் 8 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை பேணுவது என்பது சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள உறுதிப்பாடாகும். ஆனால் பணவீக்கத்தை 5 வீதத்துக்குள் பேணுகின்ற சொந்த உறுதிப்பாட்டை அரசாங்கம் கொண்டிருந்தது. அந்த இலக்கை அடைய தவறினால் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்போம் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கடந்த செப்டம்பர் மாதம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது போல, ஏப்ரல் மாதமே பணவீக்கம் 5 சதவீதத்தை தாண்டிவிட்டது. ஆனால் மத்திய வங்கி ஆளுநர் கூறியது போல, அது பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இப்போது மே மாதமும் பணவீக்கம், 5 சதவீதத்தை தாண்டி விட்டது.
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி — மத்திய கிழக்குப் போர் காரணமாக எரிபொருள் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன. (படம்: Ada Derana)
அடுத்து மத்திய கிழக்குப் போர்ச்சூழல் தணியாத நிலையில், இலங்கை அரசாங்கம் கூடுதல் விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்கின்ற சூழலில், உள்நாட்டு சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ள சூழலில், பணவீக்கம் மேலும் மேலும் உயரும் சூழலே காணப்படுகிறது. கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்தது போல, பணவீக்கம் 7 சதவீதத்தை விரைவில் எட்டக் கூடும், அதனை தாண்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் 8 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய இலக்கை தாண்டும் போது அரசாங்கத்தின் மீதான பிடி மேலும் இறுகக் கூடும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் அரசாங்கம் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என்பதே உண்மை. கிட்டத்தட்ட அது கையறு நிலையை எட்டியிருக்கிறது. அரசாங்கம் தனது இருப்பை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதில் அது கடுமையாகத் தடுமாறுகிறது.
மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்- பணவீக்கம் உச்சத்தில் இருந்த போதும்- அந்நியச் செலாவணிக் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருந்த போதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மக்களுக்கான மானியங்களை அதிகளவில் வழங்கியிருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ரணில் விக்கிரமசிங்க தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில் அதை முன்னெடுத்தாரோ இல்லையோ, தற்போதைய அரசாங்கத்தினால் அதனை முன்னெடுக்கக் கூடியளவுக்கு நிலை இல்லை என்பதே உண்மை.
பணவீக்கத்தின் அதிகரிப்பு அதனை கணக்கீடு செய்யக் கூடிய திறன் அரசாங்கத்துக்கு இல்லாமல் போனது அதன் முக்கியமான ஒரு தோல்வி. மத்திய கிழக்கு போர் தொடர்பான குறைமதிப்பீடுகள் செய்யப்பட்டதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரம் கேள்விக்குள்ளாகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து செல்லும். ஏற்கனவே தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களை, அரசாங்கம் எவ்வாறு திருப்திப்படுத்தப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.
எரிபொருள் விலை, மின்சார கட்டணம், போக்குவரத்து செலவுகள், பொருட்களின் விலைகள் போன்றவற்றின் அதிகரிப்பு அடுத்தடுத்து மக்களுக்குப் பொருளாதார இன்னல்களைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டும்போது அது நாட்டில் மேலும் குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இது அரசாங்கத்துக்கு ஒரு நல்ல சகுனமாக இருக்காது. அது, அரசாங்கத்தை மக்கள் கேள்வி கேட்கின்ற நிலைக்கு கொண்டு வரக் கூடும். அத்தகைய நிலையை எந்த ஒரு அரசாங்கமும் விரும்பாது. அவ்வாறான நிலையொன்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு, வேறேதும் வழியும் தற்போதைய அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை.
0 Comments