கத்தோலிக்கத் திருச்சபையும் இனப்படுகொலையும்
2022 ஆம் ஆண்டு மே மாதம், 16ஆம் திகதி, தமிழ் இனப்படுகொலை நாளை முன்னிட்டு, கத்தோலிக்க திருச்சபையின் வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். திருகோணமலை ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல், யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம், மன்னார் ஆயர் கலாநிதி இமானுவல் பெர்னான்டோ, மட்டக்களப்பு ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.
"தமிழர்கள் தங்கள், இறந்தவர்களை நினைவு கூரும் போதும், சிங்களவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும்போதும், மே மாதம் இந்த தீவில் முரண்பாடான உணர்வுகளை கொண்டு வருகிறது" என்றே அந்த அறிக்கை தொடங்குகிறது. இந்த முரண்பாடு இப்போது, கத்தோலிக்க திருச்சபைக்குள் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆயர்கள் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை தான் என்பதை, 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அந்த அறிக்கையில் திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு — மே 18 ஆண்டுதோறும் தமிழ் மக்கள் இழந்தவர்களை நினைவுகூர்கின்றனர். (படம்: Wikipedia)
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆயர்கள் பேரவையினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் வெளியிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ் மக்களை இந்த நாட்டில் இருந்து இனஅழிப்புச் செய்யும் நோக்கத்துடன், 30 ஆண்டுகால போர் முன்னெடுக்கப்பட்டதாக, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்து கத்தோலிக்க திருச்சபையின் கருத்து அல்ல. அவரது சொந்தக் கருத்து என்று குறிப்பிட்ட கத்தோலிக்க திருச்சபை, இந்த கருத்தை வெளியிட்ட அருட்தந்தைக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தான் முன்னெடுக்கப்பட்டது என்றும் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ கூறியிருந்தார். தலதா மாளிகை, அரந்தலாவ, மத்திய வங்கி, கோட்டை பேருந்து நிலையம், தெஹிவளை ரயில் ஆகியவற்றின் மீத தாக்குதல் நடத்திய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்காகவே போர் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறான சம்பவங்களை வரிசைப்படுத்தி, அதனை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி, அதற்கு எதிராக போராக, இறுதிக்கட்டப் போரை நியாயப்படுத்தியிருப்பது, கத்தோலிக்க திருச்சபையின் பக்கச்சார்பபை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால், நவாலியில் கத்தோலிக்க திருச்சபையின், சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது விமானம் மூலம் குண்டு வீசி 150 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது பயங்கரவாதமாக தெரியவில்லை. யாழ்ப்பாணம், குருநகர் சென். ஜேம்ஸ் தேவாலயம் மீது குண்டு வீசி 9 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பயங்கரவாதமாக தெரியவில்லை. மடுத் திருத்தலத்தின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி 31 பொதுமக்கள் கொல்லப்பட்டது, பயங்கரவாதமாக தெரியவில்லை. வடக்கு கிழக்கில் எத்தனையோ தமிழ் கத்தோலிக்க குருமார் படுகொலை செய்யப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கத்தோலிக்க திருச்சபை கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் — 1995இல் விமானம் மூலம் குண்டு வீசப்பட்டு 150க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (படம்: Wikipedia)
வடக்கு கிழக்கில் கத்தோலிக்க மதத்தை பின்பற்றிய பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், அதனை அரச பயங்கரவாதமாகவோ, இனப்படுகொலையாகவோ ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை. ஆனால் தெற்கில் நடந்த குறிப்பிட்ட சில தாக்குதல்களை மட்டும், பயங்கரவாதமாக சித்திரித்து, இறுதிக்கட்டப் போரை அதற்கு எதிரான போராக வர்ணித்திருப்பது கத்தோலிக்கத் திருச்சபையின் போக்கை உணர்த்துகிறது.
இந்த விடயத்தில் வடக்கு கிழக்கில் உள்ள ஆயர்களும் ஏனைய பிரதேசங்களில் உள்ள ஆயர்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர். வடக்கு கிழக்கு ஆயர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், வடக்கும் தெற்கும் மே மாதத்தை நினைவு கொள்வதில் பிளவுபட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதேபோல, இப்போது கத்தோலிக்க திருச்சபை பிளவுபட்டிருக்கிறது.
இந்தப் பிளவு, தமிழர்கள் - சிங்களவர்கள் என இன ரீதியாக பிளவுபட்டிருக்கிறது என்று முற்றிலும் கூற முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தமிழர் அல்ல. அவர் ஒரு சிங்களத் துறவி. தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக சிங்களவர்கள், சிங்கள மதகுருமார் குரல் கொடுக்க முன்வரும்போது, அவர்களும் அடக்கப்படுகிறார்கள், என்பதையே அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு எதிரான கண்டனங்கள், விமர்சனங்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. இங்கு இனரீதியான பிளவு என்பதை தாண்டி, அரசியல் ரீதியாக பிளவு உருவாகியிருக்கிறது, உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.
கத்தோலிக்க திருச்சபை ஒரு கண்ணில் வெண்ணெயையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவுகின்ற வகையில் செயற்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச நீதியை கோருகிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அதற்கு நியாயம் தேடுகின்ற நீதியை கோருகின்ற முயற்சிகளை பலவீனப்படுத்துகிறது. இது எந்த வகையில் நியாயமானது?
சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் கத்தோலிக்க திருச்சபை சிக்கியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழருக்கு எதிரான நிலைப்பாடுகளை வெவ்வேறு முனைகளில் இருந்து முன்னெடுக்கிறது. அந்த வகையில் தான், கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயும் அதன் ஆதிக்கம் விரிவடைந்திருக்கிறது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இது வெளிப்பட்டிருந்தது.
30 ஆண்டு காலப் போரில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற வன்முறைகளும், அட்டூழியங்களும், அக்கிரமங்களும், நியாயப்படுத்த முடியாதவை. அவற்றுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கும் போது, நீதியை கோரும் போது, அதனை பலவீனப்படுத்தும் வகையில், நாட்டின் பிரதான மத பீடங்களில் ஒன்றான கத்தோலிக்க திருச்சபை செயற்படுகிறது. இது அந்த மதத்தைப் பின்பற்றிய பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டிருந்த போதும் – அவர்கள் தமிழர்கள் என்பதால், இந்த நிலைப்பாட்டை திருச்சபை எடுத்திருக்கிறது. இதுவும் தமிழருக்கு எதிரான ஒரு இனவெறுப்புச் செயற்பாடு தான்.
கத்தோலிக்க திருச்சபை உண்மையையும் நீதியையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகின்ற போதும், அது கடந்த கால மீறல்களை ஒப்புக் கொள்ளவோ உண்மையை ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லாதிருப்பது தான் பிரச்சினை. வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையின் 2022 ஆம் ஆண்டு அறிக்கையில், இலங்கையில் உள்ள சமூகங்களின் தனித்துவமான வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும், உண்மையை ஏற்றுக் கொள்வது அதன் முதல் படியாகும் என்றும் கூறியிருந்தது. ஆனால் கத்தோலிக்க ஆயர் பேரவையின் - கத்தோலிக்க திருச்சபையின் அறிக்கைகள் இதற்கு மாறானவையாகவே தென்படுகின்றன.
இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக- அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக – சிங்கள, தமிழ் அருட்தந்தையர், அருட்சகோதரிகள் உள்ளிட்ட மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு செயற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்கள். இது ஆறுதலளிக்கும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபைக்குள் இனப்படுகொலை தொடர்பாக உருவாகி வருகின்ற ஆழமான கருத்தியல் மாற்றத்தை இது காட்டுகிறது.
கத்தோலிக்க திருச்சபை தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் கூட, அதனை நிராகரிக்காமல் இருப்பது அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போராக அதனை அடையாளப்படுத்துவதை நிறுத்திக் கொள்வதே சரியானது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பிற மதத்தினர் அல்ல, கத்தோலிக்க மதத்தவர்கள் கூட அதிகளவில் இருக்கிறார்கள். அது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கிறதோ இல்லையோ, தமிழ் கத்தோலிக்கர்களை ஆழமாக பாதிக்கும், வேதனைக்குள்ளாக்கும், வெறுப்படையச் செய்யும் என்பதையாவது இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையும் ஆயர்கள் பேரவையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
0 Comments