எதிர்மறைத் தோற்றப்பாட்டாளர்களின் பொறி
இன்று உலகம் எதிர்மறை தோற்றப்பாட்டாளர்களால் கவரப்படுகின்ற சூழல் உருவாகியிருக்கிறது. அவர்கள் தங்களை நோக்கியே முழுக் கவனத்தையும் ஈர்க்க முனைகிறார்கள், தங்களின் செயற்பாடுகளை பிறர் உற்று நோக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், அதைப் பற்றியே மற்றவர்கள் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து, இவ்வாறான செயல்பாடுகளின் ஊடாக, பிறரைக் கவர முற்படுகிறார்கள். அவர்களுக்கென தூய அரசியல் நோக்கு அல்லது வேறு இலக்குகள் இருக்கிறதோ இல்லையோ, அதுபோன்ற இலக்குகள் இருப்பதாக, மற்றவர்களை நம்பவைக்கிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அத்தகைய ஒருவர். அவர் இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், எதிர்மறை தோற்றப்பாடு முக்கிய காரணம். அவர் நேர்மறையாகச் சிந்திப்பவரோ, நேர்மறையாக விவகாரங்களை கையாளுபவரோ அல்ல. அனைத்தையும் விமர்சன ரீதியாக அணுகுபவர், எதிர்மறையாக சிந்திப்பவர், எதிர்மறை கவர்ச்சிக்கு உயிரூட்டுபவர். ஈரான் மீதான போருக்கு முன்னரும் பின்னரும், அவர் வெளியிட்ட பல சமூக ஊடகப் பதிவுகள் முற்றிலும், எதிர்மறை கவர்ச்சியை மையப்படுத்தியவை. எத்தனையோ எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார், அவரது எச்சரிக்கைகளின் அளவுக்கு அவரால் போரில் சாதிக்க முடியவில்லை. எத்தனையோ போர்களை நிறுத்தியதாக கூறியிருக்கிறார், ஆனால் அவரே போரை நடத்திக்கொள்கிறார். இவ்வாறு முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்படுபவர் ட்ரம்ப். அவரைப் போன்று செயற்படும், சிந்திக்கும் எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள் இலங்கைத் தமிழ் அரசியலிலும் இருக்கிறார்கள். இந்திய அரசியலிலும் இருக்கிறார்கள். உலக அரசியலிலும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் முழு நோக்கம், தங்களை உலகம் உற்றுக் கவனிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆகும் — அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். தங்களைப் பற்றிப் பேச வேண்டும், தங்களைப் பற்றி நினைக்க வேண்டும், தங்களை சுற்றியே உலகம் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது மனோ வியாதி போன்றது.
டொனால்ட் ட்ரம்ப் — எதிர்மறை தோற்றப்பாட்டின் மிகப்பெரும் உதாரணமாக கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்; முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்படும் ட்ரம்பின் அணுகுமுறை இன்று தமிழ் அரசியலிலும் தென்படுகிறது.
பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஊடாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதை மையப்படுத்திய ஒரு விளம்பர கலாசாரம் முன்னர் இருந்தது. இது சிலருக்கு சாதகமானதாக இருந்திருக்கிறது, சிலரால் அதனை வெற்றிகரமாக கையாளத் தெரியவில்லை. 1990களின் இறுதியிலும், 2000 ஆண்டுகளின் தொடக்கத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெளியாகிய நாளிதழ்களில், தினமும் பாராட்டி வாழ்த்துகிறோம் என விளம்பரங்கள் பெருமளவில் வெளியாகும். சந்திரிகா அரசாங்கத்தில் ஈபிடிபி அங்கம் வகித்தது. அதன் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல பிரதேச சபைகள் இருந்தன. அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தொடக்கம் அந்தக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் வரை, அந்த பாராட்டி வாழ்த்துகிறோம் விளம்பரத்தில் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். ஆலயங்கள், சமூக நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்காகவும், பிற தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்ததற்காகவும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து, இந்த விளம்பரங்கள் வெளியிடப்படும். அது கட்டாயத்தின் பேரிலோ, விருப்பத்தின் பேரிலோ இடம்பெறும். அது ஒரு நியதியாக அன்று மாறியிருந்தது. நேர்மறையாக மக்கள் மத்தியில் பிரபலத்தை உருவாக்கிக்கொள்வதற்காக, கையாளப்பட்ட விளம்பர உத்தி. ஆனால், அந்த நேர்மறை விளம்பரங்கள், ஈபிடிபிக்கு இருந்த எதிர்மறைக் கருத்துக்களை அகற்றுவதற்கு பெருமளவில் உதவவில்லை.
ஆனால், இப்போது எதிர்மறை தோற்றப்பாட்டாளர்களால், சமூக ஊடகங்களை வெற்றிகரமாக கையாள முடிகிறது. இன்றைய நவீன ஊடக உலகத்தில் நேர்மறை சிந்தனைகளுக்கும் நேர்மறை பரப்புரைகளுக்கும் அதிகம் வரவேற்பு கிடைப்பதில்லை. அவர்களால் அதிகளவில் மக்களை ஈர்க்கவோ அல்லது சென்றடையவோ முடிவதில்லை. எதிர்மறையான கருத்துக்கள், எதிர்மறையான செய்தி தலைப்புகள், எதிர்மறையான நிலைப்பாடுகளின் ஊடாக அதிகளவானோரின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. அவர்களை வசப்படுத்த முடிகிறது. ஒரு பிரபலத்தை ஆதரிக்கும் பதிவை இடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஊடக கவர்ச்சியை விட அவர் எதிர்ப்பதன் மூலம் அல்லது விமர்சிப்பதன் மூலம் அதிகம் கவனத்தை ஈர்க்க முடிகிறது. இதனூடாக, அதிகமானோரை சென்றடையக்கூடிய நிலை காணப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்குள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள முனைப்பவர்கள் தங்களை யதார்த்தவாதிகளாக காட்டிக்கொள்கிறார்கள். தங்களை தூய்மையானவர்களாக வெளிப்படுத்திக்கொண்டு, எல்லோரையும் விமர்சிக்கிறார்கள். தங்களின் அரசியல் இலக்கை அடைவதற்கான ஒரு வழியாக இதனைப் பயன்படுத்த முற்படுகிறார்கள். அவர்கள் சிலவேளைகளில் கால்பந்தாட்டத்தில் சேம் சைட் கோல் அடிப்பது போல, அடிப்பார்கள். சிலவேளைகளில் குத்துச்சண்டை வீரரை போல முகத்தில் ஓங்கியும் குத்துவார்கள். இன்னும் சிலவேளைகளில் முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்கள்.
நாடாளுமன்றத்திலும் வெளியேயும் சமூக ஊடகப் பரப்பிலும் இத்தகைய எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள் தமிழ் அரசியல் சூழலை சீர்குலைப்பதுடன் அதனை குழப்பநிலைக்குள் தள்ளுவதற்கு முற்படுகிறார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒரு வலுவான சக்தி இருக்கிறது. அதனால் அவர்கள் இயக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. இவர்களின் அடிப்படை நோக்கம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து, அதனை தங்களுக்கான ஆதாயமாக திரட்டிக்கொள்வதுதான். இவ்வாறானவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் அல்லது வெளியே கொண்டுவருகிறார்கள். அதனூடாக நிதி ஆதாரங்களையும் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைப்பதில்லை. அந்தத் தீர்வை அடைவதற்கான வழிகளை உருவாக்கிக்கொடுப்பதில்லை. பிரச்சினை ஒன்றை தூக்கி வெளிக்காட்டிவிட்டு அதனை அப்படியே போட்டுவிட்டு, இன்னொரு பிரச்சினையைத் தேடுவது அவர்களின் வாடிக்கை. இது அவர்களின் சமூக ஊடக ஆதாயத்தை மட்டும் மையப்படுத்தியதே தவிர, மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது அவர்களின் இலக்கு அல்ல. ஒரே பிரச்சினையை திரும்பத் திரும்ப பேசிக்கொள்வது அல்லது திரும்பத் திரும்ப கையாளுவது அவர்களுக்கு ஆதாயத்தை தராது. அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும். அது கவர்ச்சியற்றது என்பதால் அவர்கள் அதனை தொடமாட்டார்கள். அவர்களுக்கு புதிதாக ஒரு பிரச்சினை தேவை.
இவ்வாறானவர்கள், விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் தங்கள் தேவைக்கு அவ்வப்போது பயன்படுத்திக்கொள்கிறார்கள். சில வேளைகளில் எதிர்மறை கருத்துக்களையும் பரப்புகிறார்கள். சில வேளைகளில் நேர்மறை கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். இது மக்களிடையே குறித்த நபர்கள் பற்றிய தெளிவான ஒரு படத்தை போட முடியாத நிலையை தோற்றுவிக்கிறது. இத்தகைய நபர்கள் உள்நாட்டு அரசியலில் ஏற்படுத்திய குழப்பத்தை இப்போது, தமிழ்நாட்டை நோக்கியும் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நகர்த்தல் மிக மிக ஆபத்தானது. ஏனென்றால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திலும் சரி, அரசியல் போராட்டத்திலும் சரி தமிழகத்தின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது. எப்போதும் தமிழகத்தின் ஆதரவு, தமிழ் மக்களுக்கு கவசமாக இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தின் அழுத்தங்கள், பல சந்தர்ப்பங்களில் பல ஆபத்துகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுத்திருந்தது.
சமூக ஊடகம் — எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி, பிரச்சினைகளை உருவாக்கி நிதி ஆதாரங்கள் திரட்டுகிறார்கள் என கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
இவையெல்லாம் தெரிந்திருக்காத அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள் தமிழகத்துடன் பகைமையை வளர்க்கின்ற, பகைமையை மூட்டுகின்ற காரியத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக அரசியல் பரப்பில் உள்ள அனைத்து தரப்புகளினது ஆதரவும் இங்குள்ள தமிழர்களுக்கு தேவைப்படுகிறது. அது யாரேனும் ஒரு தரப்புக்கு என வரையறுக்கப்பட்டதல்ல. எல்லா கட்சிகளிலும் எல்லா தரப்புகளிலும் ஈழத் தமிழ் அரசியல் போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பை பகைத்துக்கொண்டு இன்னொரு தரப்பை ஆதரிக்க முடியாது. அந்தச் சூழலை கூட புரிந்துகொள்ளாத எதிர்மறை தோற்றப்பாட்டாளர்கள், தாங்கள் குளிர் காய்ந்துகொள்வதற்காக, தங்களின் அரசியல் மற்றும் நிதி ஆதாரங்களை தேடிக்கொள்வதற்காக, முரண்பாடுகளை உருவாக்கிவிடுகிறார்கள். இந்த முரண்பாடுகளின் காரணமாக பாரியதொரு இக்கட்டான நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.
இந்த எதிர்மறை தோற்றப்பாட்டாளர்களின் சின்னத்தனமான காரியங்களும் செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் கவர்ச்சியை இழக்கும் வரை இந்த நிலை தொடர போகிறது. இவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது மட்டும்தான் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியம். இவர்களின் பதிவுகளுக்குள் நுழையாமல், அவற்றைத் தேடாமல், பார்வையிடாமல் இருப்பதன் ஊடாக மட்டுமே இத்தகைய எதிர்மறை தோற்றப்பாட்டாளர்களின் கருத்தியல் பொறியில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரே வழி. இவர்களைத் தோற்கடிப்பது என்ற பெயரில், எதிர்ப்பிரசாரம் அல்லது எதிர் விமர்சனத்தில் இறங்கினால், இவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அது தான் அவர்களுக்குத் தேவை. அதை வைத்தே அவர்களின் அரசியல் அமையும். அதற்கு இடம்கொடாமல், அவர்களை கண்டுகொள்ளாமல், விடும்போது, அவர்களின் பலம் குறையும். இது சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு நுண் அரசியல். இந்த நுண் அரசியலை, சாதாரண மக்கள் விளங்கிக்கொள்ளாத வரை, எதிர்மறைத் தோற்றப்பாட்டாளர்கள் போடுகின்ற இரைக்கு, அகப்படுகின்ற மீன்களாகவே எல்லோரும் இருக்கப்போகிறார்கள்.
0 Comments