elugai

பொருளாதாரப் போர்வையில் ஒரு பூகோளச் சதி! – வடக்கு - கிழக்கை நிரந்தரமாகத் துண்டாடத் துடிக்கும் திருகோணமலை வழித்தடம்.

வடக்கு, கிழக்கை கூறுபோடும் வழித்தடம்

வடக்கு, கிழக்கை கூறுபோடும் வழித்தடம்

கட்டுரையாளர் - ஹரிகரன்

திருகோணமலையை மையப்படுத்தி, புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையான பொருளாதார பலத்தை அடைய முடியும் என்று, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க யோசனை ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கான நெடுஞ்சாலையை விட, திருகோணமலைக்கான இந்த வழித்தடம் முக்கியமானது என்று அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த யோசனை இலங்கையின் அபிவிருத்தியை மையப்படுத்தி மட்டும் முன்மொழிக்கப்பட்டதல்ல. பூகோள அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் சூழல் ஆகியவற்றை மையப்படுத்தியது. சிங்கள அரசியல் தலைமைகள் எப்போதுமே பூகோள அரசியல் சூழலை தங்களுக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. அதனூடாக, அவர்கள் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை பலவீனப்படுத்துவதற்கு, முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள்.

ராஜபக்ஷவினர் இறுதிக்கட்டப் போரைத் தொடங்குவதற்கும், அதனை நிறைவு செய்வதற்கும், ஜேவிபியினருக்கு இணையாக — தூண்டுகோலாக நின்றவர்களில் சம்பிக்க ரணவக்கவும் ஒருவர். பின்னர், ராஜபக்ஷவினருடன் முரண்பட்டுக்கொண்டாலும், தமிழரின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தும், அடிப்படை இலக்குகளை நிறைவேற்றுவதில் அவர் முரண்படவில்லை. ராஜபக்ஷவினர் அதிகாரத்துக்கு வந்த போது, சீனாவை பயன்படுத்தி, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உபாயம் வகுக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக்கொள்வதற்கு முற்பட்ட அந்த சமயத்தில், சீனாவுக்கு இடமளித்து, ராஜபக்ஷவினர் தங்களின் இலக்கை நிறைவேற்றிக்கொண்டனர். இப்போது மீண்டும் ஒரு சுழற்சி உருவாகியிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் மீது அமெரிக்காவின் கவனமும் சீனாவின் கவனமும் ஒன்று குவிந்திருக்கின்ற சூழலில், இதனை பயன்படுத்திக்கொள்ள சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் யோசனை முன்மொழிந்திருக்கிறார்கள்.

கடந்த தசாப்தத்திலேயே இந்தியப் பெருங்கடல் மீதான கவனத்தை அமெரிக்கா ஒன்று குவிக்கத் தொடங்கிவிட்டது. முன்னர் பசிபிக் பிராந்திய கட்டளை மையம் என இயங்கிய அமெரிக்காவின் இராணுவ கட்டளைப் பீடம், 2018ஆம் ஆண்டில், இந்தோ பசுபிக் கட்டளை மையமாக மாற்றப்பட்டது. இது இந்தப் பிராந்தியத்தின் மீதான அமெரிக்கத் தலையீட்டை வலுப்படுத்தும் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை. அடுத்த கட்டமாக இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டது.

"பூமியின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் அதிவேகமாக வளரும் பிராந்தியமான, இந்தோ-பசுபிக் பகுதி, அமெரிக்காவின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது. உலக சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் காரணமாக அமைகிறது. அமெரிக்காவிற்கும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கும் இடையிலான வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 2 ட்ரில்லியன் டொலர்களைத் தாண்டும். இந்தோ-பசிபிக் பகுதியிலிருந்து வரும் 956 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் அமெரிக்கா பயனடைகிறது." — 2001ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட இந்தோ-பசுபிக் மூலோபாயம் குறித்த அறிக்கையின் தொடக்கம்.

இது அமெரிக்காவின் எதிர்கால நோக்கத்தை தெளிவாக காட்டியது. இப்போது அமெரிக்கா இந்தோ-பசுபிக்கில் தன் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு முற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று சீனா. சீனாவை எதிர்கொள்வது, அதனை முறியடிப்பது, அதனை கையாளுவதற்கு, இந்தோ-பசுபிக் அமெரிக்காவுக்கு முக்கியமானது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் நோக்கி தனது கவனத்தை ஈர்த்துள்ள சீனாவை, கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்தப் பிராந்தியத்தின் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முனைகிறது. அதற்காக இந்தியாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, இலங்கை போன்ற நாடுகளையும் கைக்குள் போட்டுக்கொள்ள முற்படுகிறது. ஆனால் இலங்கையை சீனா ஏற்கனவே தன் கைக்குள் வைத்திருந்தது. போருக்குப் பின்னரான சூழலில் இலங்கையுடன் ஏற்படுத்திக்கொண்ட பொருளாதார ரீதியான உறவுகளும், முதலீடுகள் மற்றும் தலையீடுகளும், சீனாவுக்கு வசதியான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன் வசப்படுத்திக்கொண்டதன் மூலம் சீனா, அதனை மேலும் வலுப்படுத்திக்கொண்டது. இப்போது சீனாவை எதிர்கொள்வதற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் செல்வாக்கை இன்னும் வலுப்படுத்திக்கொள்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை தயாராக வேண்டும் என்பதுதான் சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனை. சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள இந்த அதிகார மற்றும் பொருளாதாரப் போட்டியை பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கையை தயார்படுத்துவது அவரது நோக்காக தெரிகிறது.

திருகோணமலை துறைமுகம் இலங்கை திருகோணமலை துறைமுகம் — அம்பாந்தோட்டையை விட திருகோணமலை துறைமுகம் மீது முன்னரே கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இலங்கைக்கு இன்னும் சாதகமாக அமைந்திருக்கும் என சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார்.

அம்பாந்தோட்டையை விட திருகோணமலை துறைமுகம் மீது முன்னரே கவனம் செலுத்தப்பட்டிருந்தால், இலங்கைக்கு இன்னும் சாதகமாக அமைந்திருக்கும் என அவர் கூறியிருக்கிறார். அது உண்மையும் கூட. ஆனால் இந்தியாவை மீறி திருகோணமலை துறைமுகத்தை சீனாவைக்கொண்டு அபிவிருத்தி செய்வது சாத்தியமானதல்ல. இந்தியாவும் கூட அப்போது அதற்கு தயாரான நிலையில் இருந்திருக்கவில்லை. இப்போது திருகோணமலையில் இருந்து, கொழும்புக்கான ஒரு வழித்தடத்தை உருவாக்குவது முக்கியம் என, சம்பிக்க ரணவக்க முன்மொழிந்திருக்கிறார். இது பொருளாதார இலக்கை மட்டும் மையப்படுத்திய கருத்தல்ல.

கொழும்புக்கும் திருகோணமலைக்கும் இடையே உருவாக்கப்படக்கூடிய வழித்தடம், கிழக்கையும் வடக்கையும் தனித்தனியாக பிரிக்கக்கூடிய ஒரு கோடாக இருக்கும். நெடுஞ்சாலைகள் எப்போதுமே நிலப்பரப்புகளை மட்டும் துண்டாடுவதில்லை, சமூகங்களை, நாகரீகங்களையும் துண்டாடுகின்றன. ஒரு காலத்தில், எதிர் வீடுகளில் இருந்தவர்களை, நெடுஞ்சாலைகள் பிரித்து தனித்தனியே துருவமயப்படுத்துகின்றன. இது மனிதர்களை மட்டுமல்ல, காடுகளுக்குள் உள்ள விலங்குகளையும் கூட தனிமைப்படுத்துகிறது. இதனால்தான் யானை-மனித மோதல்கள் அதிகரிக்கின்றன. காட்டு விலங்குகள் தங்களின் வழித்தடங்களை இழந்துபோகின்றன. இப்போது இந்த முரண்பாடுகள் அதிகரித்துள்ள சூழலில், புதிதாக நெடுஞ்சாலைகளில் யானைகள் போன்ற விலங்குகள் கடந்துசெல்வதற்கான வழிகள் உருவாக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் எந்தளவுக்கு மனிதர்களை, பிரதேசங்களை பிளவுபடுத்துகின்றதோ அதுபோல, வடக்கையும் கிழக்கையும் கூட, பிளவுபடுத்தக்கூடியது.

முன்னர், வடக்கு, கிழக்கை பிளவுபடுத்துவதற்கு, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையே, சிங்களக் கொடியேற்றங்கள் நிறுவப்பட்டன. அதன் ஊடாக, ஒரு தனித்துவமான பிளவு உருவாக்கப்பட்டது. அந்தப் பிளவு, வடக்கிற்குள் விடுதலைப் புலிகளை முடக்கி வெற்றிகொள்வதற்கு உதவியது. அதன் பின்னர் வடக்கு, கிழக்கு இணைந்த — தமிழர் தாயக கோட்பாட்டை, சிதைப்பதற்கு எப்போதுமே, ஆட்சியாளர்களாலும், சிங்கள பௌத்த தேசியவாதிகளாலும் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சிங்கள குடியேற்றங்கள், பௌத்த ஆக்கிரமிப்புகள் போன்றவை இதனை வலுப்படுத்தின. திருகோணமலையில் இருந்து ஹபரண ஊடாக கொழும்புக்கு ஒரு வழித்தடம் உருவாக்கப்படும்போதும் இந்தப் பிளவு இன்னும் ஆழப்படுத்தப்படும். இது புவியியல் ரீதியாக ஏற்படுத்தப்படக்கூடிய, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய ஒரு பிளவு. இதனை மையப்படுத்தியே இந்த வழித்தடத்தை உருவாக்க முனைகிறார் சம்பிக்க ரணவக்க.

இந்தியப் பெருங்கடல் வடக்கு கிழக்கு இலங்கை இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் — வல்லரசுகளின் போட்டிக்களமாக மாறியுள்ள இந்தப் பிராந்தியத்தில் தமிழர் பாரம்பரிய தாயகம் புவியியல் ரீதியாக பிளவுபடுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதாக கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.

சர்வதேச முதலீடுகள், தலையீடுகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதன் மூலமாக, ஒரு புறநிலை கவசத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். சர்வதேச நாடுகள், தங்களின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்புக்கு வரக்கூடிய எந்த ஒரு அபாயத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ளாது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, தமிழரின் மீது நம்பிக்கை வைக்க சிங்கள அரசியல் தலைமைகளும் சரி, இராணுவ தலைமைகளும் சரி தயாராக இல்லை. அவர்கள் உயர் பாதுகாப்பு வலயங்கள், கேந்திர நிலைகள் என்ற பெயரில், படைகளை நிலைப்படுத்துவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அது என்றோ ஒரு நாள், தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம் என்ற அச்சத்தின் ஊடாக வந்த பாதுகாப்பு உணர்வல்ல. தமிழர்களை அடக்கி ஆளுவதற்கான முனைப்பும் கூட. எவ்வாறாயினும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்பது ஒரு நாட்டின் இராணுவத்துக்குரிய வழிமுறைதான்.

என்றோ ஒருநாள் ஆயுதப் போராட்டம் முளைகொள்ளுமானால், அதற்கு தயாராகக்கூடிய நிலையிலே இந்த வழித்தடத்தை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம், தமிழரின் பாரம்பரிய தாயகம் துண்டாடப்படும், தமிழர்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றில் இறங்கினாலும், அதனை இலகுவாக நசுக்க முடியும், அதற்கு சர்வதேச ஆதரவை திரட்டிக்கொள்ள முடியும். இப்படி பல நோக்கங்கள் இதற்குள் அடங்கியிருக்கிறது. பூகோள அரசியலின் மாற்றங்களை உள்வாங்கி சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் காலத்துக்கு காலம் தங்களை வலுப்படுத்திக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இதனை எதிர்கொள்வதற்கு வியூகங்கள், உத்திகளை வகுப்பதில் தமிழர் தரப்பு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது.

Post a Comment

0 Comments