கட்சித் தாவல் தடை – அச்சப்படும் ஆளும்கட்சி
கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, தற்செயலாக ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்வதை தாங்கள் ஊக்குவிக்கவில்லை என்றும், கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறிக்கும் சட்டத் திருத்தத்தை விரைவில் அரசாங்கம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது ஒரு சாதாரணமான விடயமல்ல. இதற்குப் பின்னால் ஒரு அரசியல் பின்னணி உள்ளது.
இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அந்தக் கட்சியை சேர்ந்த பலர் ஆளும் தவெகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் பதவிகளை விட்டு விலகிய பின்னர், ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசாங்கம் அறுதி பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கில், நடத்துகின்ற குதிரை பேரம் இது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கட்சி தாவும் உறுப்பினர்கள் பதவி இழக்க நேரிடும் என்பதால், அவர்கள் பதவியில் இருந்து விலகி ஆளும்கட்சியில் இணைந்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு நுழைவதற்கு எதிர்பார்க்கிறார்கள். அல்லது தவெக அந்த ஆசனத்தை கைப்பற்றுவதற்கு அவர்கள் துணை நிற்பார்கள். அதற்கு கைமாறாக ஏதேனும் பதவிகளையோ வாய்ப்புகளையோ பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கை நாடாளுமன்றம் — கட்சித் தாவல் தடைச் சட்டத்தை விரைந்து கொண்டுவர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுவது, அதன் உள்ளக அச்சத்தை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
தவெகவைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றும் ஆட்சியில் அனுபவமற்றவர்களை கொண்டு ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கிறது. முற்றிலும் புதியவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதிகாரத்தை கையாளும் பக்குவம் இல்லாதிருப்பது அவர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு பிரச்சினை. இதே பிரச்சினையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் எதிர்கொண்டது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 159 பேரில், மிகச் சிறியளவிலானவர்களே, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த முன் அனுபவம் கொண்டவர்கள். அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், லால்காந்த ஆகியோர் மட்டும் அமைச்சர்களாகவும், நிகால் கலப்பதி, பிமல் ரத்நாயக்க, சமந்த வைத்யரத்ன, சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் பிரதி அமைச்சர்களாகவும் இருந்தனர். வேறெவரும், அரச அதிகாரப் பதவிகளை வகித்திருக்காதவர்கள். இது ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு உள்ளேயும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிடுவதற்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஜேவிபி தலைமையகத்தின் வங்கிக் கணக்கிற்கு கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வாறான கட்டுப்பாடுகள் தேசிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கியிருந்தன. இந்தச் சூழலில்தான் கட்சி தாவுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டுவருவதற்கு தயாராகி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜேவிபியின் உறுப்பினர்கள் அல்ல. தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணிக்கு, ஜேவிபி தலைமை தாங்குகிறது. அதனை கட்டுப்படுத்துகிறது. தேசிய மக்கள் கட்சியில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களில் 52 பேர் மட்டுமே ஜேவிபியின் உறுப்பினர்கள். ஏனைய 107 பேரும் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் துறைசார் நிபுணர்களுமே அவர்கள். இவர்கள் ஜேவிபியின் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துழைப்பவர்களோ ஒத்துப்போகக் கூடியவர்களோ அல்ல. இவர்களுக்கு முன்னைய அரசியல் அனுபவமும் இல்லை. அதேவேளை அரசியல் கட்சிகளுடன் இணங்கிச் செயற்படுவது தொடர்பான நெளிவு சுழிவுகளையும் தெரியாதவர்கள். இந்த அரசாங்கம் பெரியளவில் மாற்றங்களை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் அரசியலுக்கு வந்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதும் அது தொடர்பான எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர். ஆனால் காலப்போக்கில் தமது கால்கள் கட்டப்பட்டுள்ளன, வாய் மூடப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் இந்த அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட முதல் புகைச்சல்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிப்புகள் வெளிப்பட்டாலும் ஆழமான பிளவுகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதேவேளை அத்தகைய பிளவு ஏதும் இல்லை என ஆளும்கட்சி நிராகரித்து வந்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகை வராது என ஒரு பழமொழி இருக்கிறது. எப்போதுமே எந்த ஒரு அமைப்புக்குள்ளும் மாற்றுக் கருத்துகளும் இருக்கும். அது தேசிய மக்கள் சக்திக்குள் இல்லை எனக் கூற முடியாது. சில வாரங்களுக்கு முன்னர், கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க தலையிடுமாறு ஜனாதிபதிக்கு, 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாக ஒரு தகவல் வெளியானது. அவர்கள் உள்ளிட்ட 15 வரையிலான உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது.
முன்னதாக தேசிய மக்கள் சக்தியில் அதிருப்தியடைந்துள்ள ஒரு தொகுதி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான போது, அதனை ஆளும்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஜேவிபி அதனை பாரதூரமானதாக கருத வேண்டியிருக்கவும் இல்லை. தற்போதைய தேர்தல் முறைப்படி அவர்கள் பதவி விலகிச் சென்றால் அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க முடியும். அந்த இடங்களுக்கு தங்களின் முழு நேர உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜேவிபி நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அவ்வாறான சூழல் ஒன்று தேசிய மக்கள் சக்தியை ஜேவிபியாக மாற்றுவதற்கு வழிவகுக்கும், அதன் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும். எனவே அத்தகைய முரண்பாடுகளை கொண்டுள்ளவர்களை சமாதானப்படுத்தவோ அல்லது வலிந்து உள்ளே வைத்திருக்கவோ ஜேவிபி தலைமை விரும்பவில்லை.
அதேவேளை, அவர்கள் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி தனி அணியாக இயங்குவதற்கு முற்பட்டால், கட்சி அவர்களை உறுப்புரிமையிலிருந்து நீக்கும். அதன் அடிப்படையில் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும். அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்லலாம். அவ்வாறு சென்றால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும். அவ்வாறில்லாமல் கட்சி தாவல் இடம்பெற்றவுடன் கட்சி தாவியவர்களை பதவி இழக்கச் செய்யும் வகையில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் முற்படுகிறது.
கட்சி தாவல் என்பது எல்லா கட்சிகளுக்குமே பிரச்சினைக்குரிய ஒன்றுதான். மக்களின் ஆணை பெற்றுவிட்டு இடை நடுவில் வேறு கட்சிக்கு தாவுவது ஒரு நோயாகவே இருக்கிறது. சந்திரிகா குமாரதுங்கவின், மஹிந்த ராஜபக்ஷவின், மைத்திரிபால சிறிசேனவின், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இவை எல்லாம் இடம்பெற்றிருந்தன. இப்போதும் கூட அதற்கான சூழல் இல்லை என்றில்லை. தேசிய மக்கள் சக்தியிடம் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றதால், பிற கட்சியினரை கவர வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. கட்சி தாவினால் நலன்கள் கிடைக்கும் வாய்ப்பும் இல்லை. அதனால் அதற்கான வாய்ப்பு குறைவு.
தமிழ்நாட்டில் நிலைமை எவ்வாறில்லை. தவெக அறுதிப் பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கவில்லை. அதனால் அந்தக் கட்சி பிற கட்சிகளை உடைத்து தன்னை பலப்படுத்துகிறது. தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான நிலை தற்போது வரை ஏற்படவில்லை. அது பலமான நிலையிலேயே இருக்கிறது. அதனால் பிற கட்சிகளை உடைத்துக்கொண்டு வர வேண்டிய தேவை அதற்கு இல்லை. ஆனால் தனது கட்சி உடைந்துபோகாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் அதற்கு எழுந்திருக்கிறது. எனவே கட்சி தாவுபவர்களை பதவி இழக்கச் செய்யும் சட்டத்தை விரைவாக கொண்டுவருவதற்கு அது முற்படுகிறது. இதன் ஊடாக தேசிய மக்கள் சக்தி தன் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்வதற்கு முனைகிறது. அதன் அதிகாரத்துக்கு இதுவரையில் அச்சுறுத்தல் ஏற்படவில்லை, ஆனால் அது நிரந்தரமானதா இல்லையா என்று இப்போது கூற முடியாது. எந்தவொரு கட்சிக்குள்ளேயும், விரிசல் வெடிக்காத வரை, அது பாதுகாப்பானதாகவே இருக்கும். அந்த நிலை எதுவரை என்பதுதான் பிரச்சினை. அதனால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முந்திக்கொள்ளப் பார்க்கிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — தேசிய மக்கள் சக்தியின் உள்ளக ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் கட்சித் தாவல் தடைச் சட்டம் விரைவுபடுத்தப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
0 Comments