elugai

கூவி அழைக்காத சனத்திரள், குன்றாத நீதிக்கான குரல்! – முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அசுர பலம்.

கூர்மை பெறும் நினைவேந்தல்

கூர்மை பெறும் நினைவேந்தல்

கட்டுரையாளர் - சுபத்ரா

கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 18ஆம் திகதி மிகப்பெரிய சனத்திரள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கால் பதித்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கப்பட்டதில் இருந்து சிறிது சிறிதாக திரளத் தொடங்கிய கூட்டம் இப்போது மிகப்பெரிய திரளாக மாறியிருக்கிறது. இந்த நிகழ்வில் சில வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திரள் முள்ளிவாய்க்கால் — போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் திரள் பெரிதாகி வருகிறது; இது தமிழர்களின் நீதிக்கான வலியின் அடையாளம்.

இந்த நினைவேந்தல் தெற்கில் உள்ளவர்கள் மட்டுமன்றி தமிழ் தேசிய எதிர்ப்பாளர்களாலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. மே 18 என்பது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவேந்தும் நாள். இதனை விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூரும் நாளாகக் கருதிக்கொண்டு எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். இறந்துபோன பொதுமக்களை நினைவுகூரும் இந்த நினைவேந்தலை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு எதிர்ப்பவர்களைத் தாண்டி இந்த நினைவேந்தல் தன் விரிவை அடைந்து வருகிறது என்பது உண்மை. கடந்த ஆண்டுகளை விட ஒவ்வொரு ஆண்டும் இந்த நினைவேந்தல்கள் கூர்மை பெறுகின்றன, அவற்றின் எழுச்சியும் உணர்வும் அதிகரிக்கின்றன.

ஒரு பக்கத்தில் தமிழ் தேசிய இனத்தின் அடையாளம், அரசியல் உணர்வுகள், அபிலாசைகள் என்பன கூர்மை இழந்து போவதாக விமர்சனங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி இந்த நினைவேந்தல்கள் இன்னும் விரிவடைகின்றன, வீச்சு பெறுகின்றன. இதுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பலம். இந்த நினைவேந்தல்தான் தமிழரின் தேசிய பலம். இந்த நினைவுகள் இருக்கும் வரையில் தமிழரின் பலத்தை உடைக்க முடியாது என்பதை முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த நினைவுகளை அழிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் சார்பற்றது, அமைப்பு சார்பற்றது. யாரும் கூவி கூவி அழைக்கவில்லை, கூட்டம் கூட்டி இழுத்துச் செல்லவில்லை, வாகனங்களில் ஏற்றி அடைத்துச் செல்லப்படவில்லை. தானாக செல்கிறார்கள், தானாக திரள்கிறார்கள், தானாக கலைந்து போகிறார்கள். இதுதான் ஈழத் தமிழினத்தின் நினைவேந்தல் பாரம்பரியம். இது தூய்மையானது.

சிங்கள பௌத்த பேரினவாதத் தரப்புகள் பயங்கரவாதத்தின் மீள எழுச்சியாக இதனை பார்க்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக கூறியவர்கள், இப்போது இந்த நினைவேந்தல்கள் பயங்கரவாதத்திற்கு மீள உயிர் கொடுக்கும் என்று அஞ்சுகிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டுமல்ல, தமிழ் தேசியவாத எதிர்ப்புணர்வு கொண்டவர்களும் தமிழ் தேசிய போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பவர்களும் கூட, இதனை சிறுமைப்படுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள். மே மாதம் வந்தவுடன் அவர்கள் எல்லோரும் ஒரே கூட்டுக்குள் வந்து விடுகிறார்கள். சமூக ஊடகங்கள் எங்கும் எதிர் பிரசாரங்களும் வெறுப்பு பிரசாரங்களும் கக்கப்படும். ஆனால் அதனை தாண்டித்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் கூர்மை பெறுகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விளக்குகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் — ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு இடத்திலும் நிறைந்திருக்கும் இழப்புகளும் அவலங்களும் இந்த நினைவேந்தலை இன்னும் உணர்வுமிக்கதாக்குகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் ஒவ்வொரு முறையும் தன் உச்சத்தைத் தொடுகிறது என்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காயம் அந்தளவுக்கு ஆழமானது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு இடத்திலும் இழப்புகளும் இறப்புகளும் நிறைந்திருக்கின்றன. அவர்களுக்குள் உள்ள அடிப்படை காயங்கள் மாறவில்லை. அதனை மாற்றுவதற்கு யாரும் முன்வரவுமில்லை. சர்வதேச சமூகம் நினைத்திருந்தால் 17 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். பொறுப்புக்கூறலை உறுதி செய்து, குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையை முடிவுக்கு கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களின் காயத்தை ஆற்றியிருக்க முடியும். அதனை சர்வதேச சமூகம் செய்யவில்லை, பல்வேறு காரணங்களால் அந்த முயற்சிகளை கைவிட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்தவர்கள் கூட எதையும் செய்யவில்லை. அவர்கள் தமது படையினரை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமானால் குற்றமிழைத்த படையினரை பொறுப்புக்கூற வைத்தேயாக வேண்டும். நியாயமான ஒரு தலைமைத்துவம் இலங்கையில் உருவாக வேண்டும். அது இதுவரை உருவாகவில்லை. இப்போதும் அவர்கள் நாட்டை பாதுகாத்த படையினரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என உறுதிகூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க தயாராக இல்லை, உண்மைகளை ஒப்புக்கொண்டு தவறுகளை ஏற்றுக்கொண்டு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்வர தயாராக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நல்லிணக்கம் உருவாகும்?

முள்ளிவாய்க்கால் மலர்வைத்தல் நீதி கோரல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் — நீதி வழங்காமல் தப்பிக்க முனைவதும் நினைவேந்தலை மறக்கச் செய்ய முனைவதும் ஒன்றே என்று கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்கள் மறக்கப்படக்கூடியவை அல்ல. அவற்றை மறக்கச் செய்ய முனைவதும் நீதி வழங்காமல் தப்பிக்க முனைவதும் ஒன்றுதான். இரண்டுமே ஒரு எரிமலையின் மேல் குந்தியிருப்பதற்கு சமம். இலங்கை இப்போது அப்படியான நிலையில்தான் இருக்கிறது, இருக்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவேந்தலை கொச்சைப்படுத்துவது இன்னும் இன்னும் தவறிழைக்கவே வழி வகுக்கும், ஏனென்றால் தமிழ் தேசிய இனத்தின் நினைவேந்தல் உணர்வு காயப்படுத்தப்படும் போது அதன் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும். இதற்கு யார் பொறுப்பு — அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் எஞ்சியிருக்கும் மக்களா? அல்லது அழிவுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சிங்களத் தலைமைகளா?

Post a Comment

0 Comments