elugai

மத்தலவை வசப்படுத்துமா அமெரிக்கா? வெள்ளை யானைத் திட்டமும், சர்வதேச நாடுகளின் மூலோபாயப் போட்டியும் - ஓர் அலசல்!

மத்தலவை வசப்படுத்துமா அமெரிக்கா?

மத்தலவை வசப்படுத்துமா அமெரிக்கா?

கட்டுரையாளர் - ஹரிகரன்

மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தை முப்பது ஆண்டுகளுக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மீண்டும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர், மத்தல விமான நிலையத்தை இந்திய- ரஷ்ய நிறுவனங்கள் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தன. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த தருணத்தில், அமெரிக்க தூதுவராக இருந்த ஜூலி சங் அதனை தடுத்து நிறுத்தியிருந்தார். மத்தல விமான நிலையத்தில் முதலீடு செய்யவுள்ள ரஷ்ய நிறுவனம் அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டது என அவர் எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த கூட்டு முயற்சி உடன்பாட்டை செயற்படுத்துவதில் இருந்து விலகிக் கொண்டது.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இந்தியா காலடி எடுத்து வைப்பது அமெரிக்காவுக்கு பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. இந்திய நிறுவனத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ரஷ்யா முதலீடு செய்ய முன்வருவதை அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனாலேயே அந்த முதலீட்டு முயற்சி தடுக்கப்பட்டது.

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் — 250 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட வெள்ளை யானைத் திட்டம், இப்போது 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. (படம்: Wikipedia)

வெள்ளை யானை — இலங்கைக்கு தொடர் நட்டம்

சீனாவின் கடனுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையம் இலங்கைக்கு சுமையாகவே இருந்து வருகிறது. வெள்ளை யானைத் திட்டம் என வர்ணிக்கப்படும் இந்த திட்டம், இலங்கைக்கு பல தசாப்தங்களாக நெருக்கடியை கொடுத்து வருகிறது. இந்த விமான நிலையத்தினால் கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மொத்த நட்டம் 38.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

இந்த தொடர் இழப்பை தவிர்க்க வேண்டுமானால் விமான நிலையத்தை வெற்றிகரமாக இயக்க வேண்டும், அதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களுமே இதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். இடையில் ஒரு குறிப்பிட்ட காலம் மாத்திரம், மைத்திரி- ரணில் அரசாங்கம், இந்த விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தது. அதற்கு பின்னர் விமான நிலையத்தை வெற்றிகரமாக இயக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின.

மத்திய கிழக்கு போரும் மத்தலவின் வாய்ப்பும்

அண்மையில் மத்திய கிழக்கு போர் வெடித்த போது, வளைகுடா நாடுகளை மையப்படுத்தி இருந்த விமான நிலையங்கள், ஈரானின் தாக்குதல்களினால் செயலிழந்தன. குறிப்பாக பயணிகள் விமானம் மாறிச் செல்லும், டுபாய், டோஹா, அபுதாபி விமான நிலையங்கள் செயற்பட முடியாமல் போனதால், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைக்கும் விமானப் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு மாதத்திற்கு மேலாக இந்த நிலை நீடித்த போது இலங்கை அரசாங்கம் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. மத்தல விமான நிலையத்தை, மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கான மாற்றுத் தரிப்பிடமாக பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் டுபாய், கட்டார், அபுதாபி போன்ற நாடுகளின் விமான நிறுவனங்கள் அதற்கு முன் வரவில்லை.

மத்தல விமான நிலையத்தை அவ்வாறு மாற்றியமைப்பது, எதிர்காலத்தில் தங்களின் விமான நிலையங்களின் பயன்பாட்டை குறைக்கும் ஆபத்து இருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அது தவிர மத்தலவில் அவர்கள் தங்களின் வளங்களை கொண்டு வந்து புதிதாக கட்டி எழுப்ப வேண்டிய பிரச்சினையும் இருந்தது.

இலங்கை ரஷ்யா இந்தியா மூலோபாய உறவுகள் இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சி மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்கு முன்வந்தது, ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. (படம்: Wikipedia)

மத்திய கிழக்கு போரின் காரணமாக மத்தல விமான நிலையத்தை எழுச்சி பெற வைக்கின்ற முயற்சி சாத்தியமற்றுப் போன நிலையில் தான், இப்போது இலங்கை அரசாங்கம் 30 ஆண்டுகளுக்கு அதனைக் குத்தகைக்கு வழங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது.

விமான நிலையத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் மூலம் உணரப்பட்டு விட்டது.

ஆனாலும் 250 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை, கைவிட முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு கைவிடப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஒரு பக்கம் இருக்க, அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையம் உருவாகும்.

எனவே அரசாங்கத்திற்கு இருக்கின்ற ஒரே வழி, அதனை வெளித்தரப்பினருக்கு வழங்குவதாகும்.

மூலோபாய நலன்கள் மட்டுமே காரணம்

வெள்ளை யானைத் திட்டம், பயணிகள் யாரும் வராத விமான நிலையம் என அறியப்பட்ட மத்தல விமான நிலையத்தை வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்கும் என நம்புவது கடினமானது.

ஏனென்றால் இலாபம் சாத்தியமற்ற ஒரு விமான நிலையத்தை பொறுப்பேற்பதற்கு எந்த ஒரு நிறுவனமும் முன் வராது.

ஆனால் மூலோபாய நலன்களை அடையும் நோக்கில் உள்ள நிறுவனங்கள் அல்லது நாடுகள் அல்லது தரப்புகள் இதனை இலக்கு வைக்கலாம்.

அப்படித்தான் முன்னர் ரஷ்ய -இந்திய கூட்டு முயற்சியாக இந்த விமான நிலையத்தை இயக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கூட இந்த விமான நிலையத்தை, விமான சேவைகளை நடத்துவதற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்படவில்லை.

மாறாக விமானிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் பழுது பார்ப்புக்குமான ஒரு கேந்திரமாக, இதனை பயன்படுத்துவதே ரஷ்ய - இந்திய கூட்டு முயற்சியின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறான ஒரு மையம் மத்தல விமான நிலையத்தில் உருவாவதை அமெரிக்கா விரும்பாமல் போனது ஆச்சரியம் இல்லை.

இதேபோன்று தான், முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் திருகோணமலையில் ஒரு விமானங்களைப் பழுதுபார்க்கும் நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியது.

இலங்கை விமானப்படையில் உள்ள சீனத் தயாரிப்பு விமானங்களை பழுதுபார்ப்பதற்கான நிலையத்தை, சீனக்குடாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதேபோன்று தான், மத்தல விமான நிலையத்தை இந்திய- ரஷ்ய கூட்டு நிறுவனத்திடம் வழங்கும் முடிவும் கூட கைவிடப்பட்டது.

அமெரிக்கா இப்போது மத்தலவை இலக்கு வைக்குமா?

இப்போது மீண்டும் அந்த விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்ற முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதனைப் பெறுவதற்கு உலகளாவிய ரீதியாக யாரும் போட்டியிடலாம்.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என எந்த நாடும் அதற்கு முயற்சிக்கலாம்.

அப்படியானால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கேள்வி இருக்கிறது.

இந்தியா இந்த விமான நிலையத்தை பெற்றுக்கொள்ள விரும்பினாலும், வர்த்தக நோக்கில் பயனற்ற இந்த விமான நிலையத்தை பொறுப்பேற்பதற்கு தயாராக இல்லை.

வர்த்தக ரீதியாக இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு இடத்தை பெற்றுக் கொள்வதற்கு, இந்தியா விரும்பவில்லை.

அதனால் தான் ரஷ்ய நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து செயற்பட முன்வந்திருந்தது.

இப்போது கூட இந்திய தரப்பு இதில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுமா என தெரியவில்லை.

ரஷ்யத் தரப்பு மீண்டும் வந்து முட்டிக் கொள்வதற்கு முற்படுமா என்ற கேள்வி உள்ளது.

இந்தக் கூட்டு முயற்சித் திட்டம் நிறுத்தப்பட்ட பின்னர், இலங்கையில் முதலீட்டுக்கான சூழல் இல்லை என ரஷ்யத் தூதுவர் விசனத்துடன் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மீண்டும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ரஷ்யா முன் வந்தாலும் கூட, அதையும் தட்டிக் கழிப்பதற்கு- வெட்டி விடுவதற்கு அமெரிக்கா முற்படக் கூடும்.

அமெரிக்க கடற்படை இந்தியப் பெருங்கடல் மூலோபாய கட்டுப்பாடு இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையின் மூலோபாய பிரசன்னம் — மத்தல விமான நிலையம் இப்போது அமெரிக்காவின் கவனத்திற்கு வந்திருக்கலாம். (படம்: US Navy / Wikipedia)

இது ஒரு புறம் இருக்க, இப்போது அவசர அவசரமாக மத்தல விமான நிலையத்தை சர்வதேச முதலீட்டாளர்களுக்காக திறந்து விட அரசாங்கம் எடுத்த முடிவுக்கு பின்னால், இன்னொரு மூலோபாய நலன் காரணமாக இருக்கலாம்.

ஈரானிய போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு தெற்காக மூழ்கடிக்கப்படுவதற்கு, சில நாட்களுக்கு முன்னதாக, தமது இரண்டு போர் விமானங்களை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அமெரிக்காவினால் அனுமதி கோரப்பட்டதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதற்கு தமது அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது அமெரிக்காவுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்காது என கருதினால், அது முட்டாள்தனம்.

இவ்வாறான நிலையில், மத்தல விமான நிலையத்தை சீனா அல்லது ரஷ்யா பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமானால், அமெரிக்கா அதனை பொறுப்பேற்க வேண்டும். அதில் முதலீடு செய்ய வேண்டும்.

மத்தலவில் தனது விமானங்கள் தரையிறக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்த சூழலில், அந்த விமான நிலையத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அமெரிக்கா எண்ணியிருக்கலாம்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கூட, இலங்கை அரசாங்கம் இந்த கேள்விப் பத்திரங்களை கோரியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருங்கி செயற்படுகிறது, அமெரிக்காவை பகைத்துக் கொள்ள தயாராக இல்லை.

எனவே மத்தல விமான நிலையம் அமெரிக்காவுக்கு 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

இது நடக்குமா இல்லையா என்று உறுதியாக கூற முடியாது.

ஆனால், இவ்வாறான நிகழ்வு ஒன்றுக்கான சாத்தியங்கள் உள்ளதா என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவரும்.

Post a Comment

0 Comments