நினைவுப் பேருரையும் எதிர்வினைகளும்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு பேருரை, பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்த நினைவு பேருரையை நிகழ்த்தியவர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியராக இருந்து, சந்திரிகா குமாரதுங்கவினால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். நீதி மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் அமைச்சராக, கல்வி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சராக, மாத்திரமன்றி நிதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருந்திருக்கிறார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் — தந்தை செல்வா நினைவுப் பேருரை வழங்க யாழ்ப்பாணம் வருகை
போர் மற்றும் பேச்சுக்களில் பங்கு
விடுதலைப் புலிகளுடனான போர், பேச்சுக்கள் ஆகிய இரண்டிலும் அவர் தீர்க்கமான பங்கை வகித்தவர். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினால் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில், அவர் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்களில் அவர் அரசாங்கத்தின் பேச்சுக்குழு தலைவராக பங்கு பற்றியிருந்தார்.
அதேபோல சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்கள், விடுதலைப் புலிகளுடன் மிகக் கடுமையான போரில் ஈடுபட்ட தருணத்திலும், அவர் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இந்த சந்தர்ப்பங்களில் அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக, அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துபவராகவே இருந்தார்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு தந்தை செல்வா நினைவு பேருரை ஆற்றுகின்ற வாய்ப்பு வழங்கப்பட்டது சரியா என கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இன அழிப்புப் போரின் நியாயப்படுத்தல்
போர் முடிவுக்கு வந்த பின்னர், வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜி.எல்.பீரிஸ், இன அழிப்புப் போரை, சர்வதேச அளவில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக அடையாளப்படுத்துவதிலும் அதற்கு ஆதரவு தேடுவதிலும் தீவிரமான பங்கு வகித்தவர்.
போரின் போதும் போருக்கு பின்னரான காலகட்டத்திலும், இலங்கை அரசின் படுகொலைகள், நீதிக்கு புறம்பான செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை நியாயப்படுத்துவது அல்லது அவற்றை மூடி மறைப்பதில், அவருக்கு இருந்த பங்கையும் பற்றுறுதியையும் யாரும் ஒருபோதும் மறுக்க முடியாது.
தந்தை செல்வா நினைவு பேருரை — 2015இல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு
அவர் தனது கல்வி புலமையை நீதிக்காகவோ நியாயத்திற்காகவோ அமைதிக்காகவோ பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கவில்லை. தனது அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கவும் இல்லை. தவறுகள் இடம் பெற்ற போது, அதனை சுட்டிக்காட்டவோ, அதனை தட்டிக் கேட்கவோ துணிச்சலற்றவராகவே ஜி.எல். பீரிஸ் இருந்தார்.
எனவே, அந்த காலகட்டங்களில் அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரை தந்தை செல்வா நினைவுப் பேருரை ஆற்ற அழைத்தமை சரியா? அவர் இதற்கு பொருத்தமானவரா? என்ற கேள்விகள் எழுந்திருப்பதில், தவறில்லை.
1997 மற்றும் 2015 நினைவுப் பேருரைகள்
பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஒரு மென்போக்கான கல்வியாளர் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் முன்பிருந்தது. ஆனால், சந்திரிகா, மஹிந்த அரசாங்கங்களின் போர்களை நியாயப்படுத்துவதில் அவர் வெளியிட்ட கருத்துக்கள், அத்தகைய நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் இருந்து முற்றாக இல்லாமல் செய்து விட்டது.
ஜி.எல். பீரிஸ், 1997 ஆம் ஆண்டு தந்தை செல்வா நினைவு பேருரை நிகழ்த்திய போது, இந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கவில்லை. கொழும்பிலேயே அந்த நினைவு பேருரை இடம்பெற்றது. தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள், கொழும்பையே மையப்படுத்தி இருந்த அந்த சூழலில் அந்த உரை இடம்பெற்றிருந்தது.
அப்போது இரா.சம்பந்தன், நீலன் திருச்செல்வம், சிவசிதம்பரம், போன்ற தமிழ்த் தலைவர்கள் பெரும்பாலும் சந்திரிகா குமாரதுங்கவின் செல்லப்பிள்ளைகளாக இருந்த சூழலில், அந்த உரை இடம்பெற்றிருந்தது. அப்போதும், வன்னியில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வு பொதியை தயாரிப்பதில் முக்கியமான ஒருவர் என்ற அடிப்படையில், அவரது அப்போதைய உரை அமைந்திருந்தது.
சந்திரிகாவின் 2015 உரை
அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தந்தை செல்வா நினைவுப் பேருரையை ஆற்றியிருந்தார். அதற்கும் கூட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தளவுக்கும் சந்திரிகா குமாரதுங்க ஒரு காலகட்டத்தில் போர் தேவதை என அழைக்கப்பட்டவர். சமாதான தேவதையாக காண்பித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்து, போர் தேவதையாக மாறி தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்ற மோசமான போர் அழிவுகளுக்கு காரணமாக இருந்தவர்.
சந்திரிகா உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தீர்வு ஒன்றை பெற முடியும் என இரா. சம்பந்தன் அப்போது நம்பியிருந்தார். கொழும்பில் நடந்த அந்த நினைவு பேருரை "போர் இல்லாதிருப்பது என்பது அமைதியல்ல" என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது.
அந்த உரையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதையும், அதன் விளைவாகவே பிரிவினைவாத கோரிக்கைகள் எழுந்ததையும், சந்திரிகா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 1956-இல் கொண்டு வரப்பட்ட 'சிங்களம் மட்டும்' சட்டம் மற்றும் சிறுபான்மையினரின் மொழி உரிமைகளை அங்கீகரிக்கத் தவறியது போன்ற வரலாற்றுத் தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததை மட்டும் அமைதியாகக் கருத முடியாது என்றும், உண்மையான அமைதிக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் - பாரம்பரிய சிங்கள தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் பிரதிநிதி என்ற வகையில், சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
யாழ்ப்பாணம் — தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை
தோல்வியுற்ற முயற்சிகள்
ஆனால், சிங்கள பௌத்த அரசியலில் இந்தக் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவை அமைதியையோ நிலையான தீர்வு ஒன்றையோ கொண்டு வருவதற்கு உதவவில்லை. சந்திரிகா குமாரதுங்கவின் கருத்துக்கள் வெறும் செய்திகளாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றை பாடமாக எடுத்துக் கொண்டு சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவில்லை.
எனவே, சந்திரிகா குமாரதுங்கவை அழைத்து வந்து, கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளச் செய்து முன்னோக்கி செல்வதற்கான வழிவகைகள் குறித்து முன்மொழிவுகளை செய்ததன் மூலம், தந்தை செல்வா நினைவு பேருரை எதனையும் சாதிக்கவில்லை. தந்தை செல்வா அறக்கட்டளை இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டிருந்தால், பேராசிரியர் ஜி.எல். பீரிசை இந்த நினைவு பேருரை ஆற்றுவதற்கு மீண்டும் அழைத்து வந்திருக்கமாட்டார்கள்.
2026 உரையின் பிரச்சினைகள்
பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் இந்த நிகழ்வில் நிகழ்த்திய உரையின் தலைப்பு, "சமஷ்டிக் கோட்பாடும் அரசமைப்பு சீர்திருத்தத்திற்கான பாதையும்" என்பதாகவே இருந்தது. இந்த உரையில் அவர் விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். பேச்சுக்களின் தோல்வி எங்கிருந்து தொடங்கியது என்பதை புரியாதவராகவே அவர் யாழ்ப்பாணத்தில் பாடம் எடுக்க முயன்றிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் பரிசீலிக்க இணங்கிய உள்ளக சுயாட்சித் திட்டத்தையும் கூட அவர், தனியரசுக்கான வரைபடமாகவே சித்திரித்திருக்கிறார். அவரது சமஷ்டி குறித்த நோக்கு சிங்கள பௌத்த பேரினவாத மனநிலையில் இருந்ததே தவிர, நடைமுறைச்சாத்தியமான - சாத்தியப்படுத்த வேண்டிய சமஷ்டித் தீர்வு பற்றியதாக இருக்கவில்லை.
சமஷ்டி தீர்வு ஏன் அவசியம், அதனைக் கொண்டு வருவதற்கான வழிகள் அல்லது தடங்கல்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். இவ்வாறானதொரு தீர்வை அடைவதற்கு தடையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பற்றி விபரித்திருக்கலாம். சிங்கள சமூகம் ஏன் இத்தகைய தீர்வை அடைவதற்கு தடையாக இருக்கிறது அல்லது விரும்பவில்லை என்பதையும் நேர்மையுடன் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் கடந்த கால மாயைகளில் இருந்து விலகாத ஒரு அரசியல்வாதியாகவே அந்தப் பேராசிரியர் வகுப்பெடுத்திருக்கிறார்.
அரசியல் நோக்கங்கள்
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தற்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர் நினைவுப் பேருரையாற்றுவதற்காக, யாழ்ப்பாணம் வந்த போது, தமிழ்க்கட்சிகள் அவருடன் உரையாடியிருக்கிறார்கள். அதில் முக்கியமாக உரையாடப்பட்ட விடயம், மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு ஒன்றுபட்டு குரல் கொடுப்பது பற்றியதாகும்.
இப்போது தமிழ் அரசுக் கட்சிக்கு அவசரமாக தேவைப்படுவது, சமஷ்டி அல்ல, மாகாண சபை தேர்தல் மட்டும் தான். அதனை நடத்த செய்வதற்கு எதிர்க்கட்சிகளின் ஊடாக அழுத்தம் கொடுப்பதற்காக, பீரிசை பயன்படுத்த தமிழ் அரசுக் கட்சி முற்படுகிறதா? நினைவுப் பேருரையாற்றுவதற்கு பீரிஸ் அழைக்கப்பட்டதன் பின்னணி அதுவாகவும் இருக்கலாம்.
0 Comments