தடுமாறும் அரசாங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் கடும் சவால்களை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நகர்வுகள், நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் அரசை வீழ்த்தும் வியூகம் மாத்திரமல்ل, அரசாங்கத்தின் தவறுகளும் தான் இதற்குக் காரணம்.
அடுத்தடுத்த சர்ச்சைகள்
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் விடுவிக்கப்பட்ட விவகாரம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி, போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களை அடுத்து, இப்போது டீசல் இறக்குமதி மோசடி, திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்டுள்ளது, அஞ்சல் திணைக்களத்தின் 625000 டொலர் திருடப்பட்டது என அடுத்தடுத்து அரசாங்கத்திற்கு சவாலான சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன.
அனுரகுமார திசாநாயக்க — ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதியுடன் ஜனாதிபதியாக பதவியேற்றார்
இவை அனைத்தையும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்று மட்டும் ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் இவை பாரிய குற்றச்சாட்டுக்கள். நெருப்பில்லாமல் புகை வராது என்பார்கள். இந்த விவகாரங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் அரசாங்கத்தின் தவறுகள் இருந்திருக்கின்றன என்பது வெளிப்படை. ஆனால், இந்தத் தவறுகள் எதையும் பொறுப்பேற்கின்ற நிலையில் அரசாங்கம் இல்லை. இதுதான் முக்கியமான பிரச்சினை.
திரும்பி வந்த வரலாறு
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் மூலக் கட்சியான ஜேவிபி என்பன, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களை, அரசாங்கத் தலைவர்களை திருடர்கள் என விழித்து குற்றம்சாட்டியது வரலாறு. அந்த வரலாறு இப்போது, தற்போதைய அரசாங்கத்தை நோக்கியும் அதன் தலைவர்களை நோக்கியும் திரும்பத் தொடங்கியிருக்கிறது.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு தவறிழைக்கின்றனரா அல்லது தங்களுக்குத் தெரியாமலேயே இவ்வாறான தவறுகளுக்குள் சிக்கிக் கொள்ளுகின்றனரா என்பது இன்னமும் வெளிப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் தவறுகள் இடம்பெறுகின்றன என்பது வெளிப்படையாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் — புதிய முகங்கள், பழைய பிரச்சினைகள்
நிர்வாகத் தோல்விகள்
முன்னைய அரசாங்கங்களில் எவ்வாறு தவறுகள் நிகழ்ந்தனவோ - தவறுகள் இழைக்கப்பட்டனவோ அவ்வாறே தற்போதைய அரசாங்கத்திலும் இடம்பெறுவது அனுர அரசாங்கத்தின் முக்கியமான பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கொடுக்கல் வாங்கல்களில், கொள்வனவுகளில் பொதுவாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுவது வழக்கம். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அரசியல் அதிகார மட்டத்தில் அல்லது அதிகாரிகள் மட்டத்தில் இவ்வாறான தவறான கைமாறல்கள், பணப்பரிமாற்றங்கள் இடம்பெறுவது புதிய விடயம் அல்ல. உலகம் முழுவதும் உள்ள ஒரு பாரிய பிரச்சினை இது.
ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இந்தப் பலவீனமான நிலையில் இருந்து விலகிச் செல்வதற்கான வழிவகைகளை செய்திருக்கவில்லை. வெறுமனே ஆட்சியில் உள்ளவர்கள் மாத்திரம் சுத்தமானவர்களாக இருந்தால் போதாது, அதற்கு அப்பால் அரச நிர்வாகத்தில் உள்ளவர்களும் தூய்மையானவர்களாக இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஊழல்கள், முறைகேடுகள் தவிர்க்கப்பட முடியாதவையாகி விடும்.
தற்போதைய அரசாங்கம் தங்களை ஊழலற்ற நிர்வாகமாக அறிமுகப்படுத்துகிறது, அது உண்மையா பொய்யா என்பது எதிர்காலத்தில் தான் தீர்மானிக்கப்படும். ஆனால், ஊழலற்ற தூய ஆட்சி என முன்னிறுத்தப்பட்ட விம்பம் ஆரம்பத்தில் இருந்தது போன்ற நிலையில் இப்போது இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அதிலும் முன்னைய அரசாங்கங்களின் மீது, ஆட்சியாளர்களின் மீது திருடர்கள் என முத்திரை குத்தியவர்களே, இப்போது குற்றச்சாட்டுகளை சுமக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருப்பது, அவர்களின் துர்பலன் தான்.
225 திருடர்கள் குற்றச்சாட்டு
கோட்டா அரசாங்கம் பதவி விலகிய பின்னர், அப்போதைய நாடாளுமன்றத்தில் இருந்த 225 பேரையும் திருடர்கள் என அப்போதைய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார். அந்த 225 பேரில், அவரும், அவரது இன்னுமிரு சகாக்களும் இருந்தனர். இந்த மூவரும் இப்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்ற நிலையில் தான், அதன் மீதும் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
மூன்றாவது சக்தியின் வருகை
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக, இரண்டு பிரதான கட்சிகளே மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி அல்லது அவை சார்ந்த கூட்டணிகள் ஆட்சி அமைத்து வந்த சூழலை, மாற்றியமைத்து, 2024 ஆம் ஆண்டு ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசமைத்தது.
நாடு எதிர்கொண்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும் அதனைச் சார்ந்த பிரச்சினைகளும், கடந்த கால ஆட்சிகள் மீதான மக்களின் கோபங்கள், எதிர்ப்புகளையும் சாதகமாக்கி, தற்போதைய ஆட்சியை உருவாக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. முன்னைய ஆட்சிகளில் இருந்தவர்கள் ஊழல் மோசடி செய்தவர்களாக - திருடர்களாக முத்திரை குத்தப்பட்டார்கள்.
2022 மக்கள் எழுச்சி — பொருளாதார நெருக்கடி தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வந்தது
எனவே தான் அதிலிருந்து விலகி புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அதிகாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் மூன்றாவது சக்தியை நோக்கி தங்களின் வாக்குகளை திருப்பினார்கள். ஆனால் அவர்கள் வைத்த நம்பிக்கை இப்பொழுது உடையத் தொடங்கியிருக்கிறது. முன்னைய ஆட்சியாளர்களை திருடர்களாக அடையாளப்படுத்தி ஆட்சியமைத்தவர்களே இன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்ற நிலை, அவர்களைத் தெரிவு செய்த வாக்காளர்களை தலைகுனிய வைத்திருக்கிறது. அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் வியூகம்
தற்போதைய அரசாங்கத்தினால் கட்டியமைக்கப்பட்ட தூய விம்பத்தை உடைத்து நொருக்குவதில், எதிர்க்கட்சிகள் கவனமாக இருப்பதை காண முடிகிறது. அந்த பிம்பம் உடைக்கப்பட்டால் தான், அடுத்து ஆட்சி அமைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும். தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற - நேர்மையான ஆட்சி என்பதை நிலை நிறுத்தி விட்டால், அதனை எதிர்ப்பது எதிர்க்கட்சி முகாம்களுக்கு கடினமானது. அதனால், தற்போதைய அரசாங்கத்தின் மீதான தூய ஆட்சி என்ற விம்பம் உடைக்கப்பட வேண்டும். அதனை குறி வைத்து அவர்கள் அடிக்கிறார்கள்.
வெறும் குற்றச்சாட்டுகளால் மாத்திரம், இது நடக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இழைத்த தவறுகள் தான் இந்த தாக்குதல்களுக்கு காரணம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருந்திருந்தால், அதனால் இவ்வாறான தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்திருக்கும். தற்போதைய அரசாங்கத்தில் நிகழ்ந்துள்ள தவறுகளே, அவர்களுக்கு ஆபத்தாக மாறிக் கொண்டிருக்கிறது. இது தற்போதைய ஆட்சியின் மீதான நம்பிக்கைகளை உடைத்துக் கொண்டிருக்கிறது.
தனித்துவத்தை இழக்கும் அபாயம்
இவர்களும் அவர்களைப் போல தான் என்ற கருத்து, மக்கள் மத்தியில் உருவாகத்தொடங்கி விட்டால் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியால் தனித்துவமான கட்சியாக நிலைத்திருக்க முடியாது. தனித்துவமான அரசியல் சக்தியாக தங்களைப் பிரசாரப்படுத்த முடியாது. மாற்று சக்தி ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்று மக்கள் ஆணையை கோர முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலைக்குள் தான் இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்து கொண்டிருக்கிறது. இது அவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக் கொண்ட பொறி.
எதிர்காலத்திற்கான சவால்கள்
ஒரு அரசாங்கம் ஆட்சியைப் பிடிப்பது மாத்திரம் முக்கியமல்ல, அமைத்துக் கொண்டு அரசாங்கத்தை கட்டி காப்பது அதைவிட முக்கியமானது. அது கடினமானது. ஒரு அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. ஜேவிபி இதுவரையில் தனது கட்சியை கட்டி காப்பாற்றுவதில் கவனம் செலுத்திய ஒரு அமைப்பு. அரசாங்கத்தை கட்டி காக்கின்ற போதிய அனுபவம் அதற்கு இல்லை. இதுவும் அதன் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று.
ஒன்றரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் அது கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, எஞ்சிய ஆட்சியை சரியாக நடத்த முற்பட வேண்டும். ஆனால், அதற்குள் அரசாங்கம் இவ்வாறான குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்ள போகிறது - அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறது, தனது தோல்விகளை ஒப்புக்கொள்ள போகிறதா என்பதைப் பொறுத்தே எஞ்சிய காலத்தில் அதன் நிலையைத் தீர்மானிக்க முடியும்.
0 Comments