பகடையாக மாற்றப்படும் இலங்கை
அண்மையில் கொழும்பில் நடந்த பிராந்திய ஒத்துழைப்பு குறித்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய சீனத் தூதுவர் கி சென்ஹொங், இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாற்றப்படக் கூடாது என்றும், அது நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து வல்லரசுகளின் போட்டிக்களமாக இந்தியப் பெருங்கடல் மாற்றப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. அத்தகைய ஒரு சூழல் அல்லது அச்சம் எழுந்துள்ளதால்தான் அவர் இதனை முன்னிறுத்தியிருக்கிறார்.
1971ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பிரகடனப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியப் பெருங்கடலை தங்களின் போட்டிக்களமாக பயன்படுத்தக்கூடிய ஏதுநிலைகள் அதிகரித்திருந்தன. இப்போதும் அதே நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் ஒரு பக்கம் அமெரிக்கா இருக்கிறது என்றாலும், மறுபக்கம் ரஷ்யா மட்டுமல்ல சீனாவும் இருக்கிறது. அதே சீனாவிடம் இருந்துதான் இந்த அழைப்பு வந்திருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் — வல்லரசுகளின் போட்டிக்களமாக மாறி வருவதாக சீனத் தூதுவர் எச்சரித்தாலும், சீனாவே அந்தப் போட்டியில் பங்கேற்கிறது என்பது முரண்பாடு.
இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கப் போட்டியில் இறங்கி ஒன்றரை தசாப்தங்கள் ஆகிவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கும் பணியில் சீனா எப்போது இறங்கியதோ, அப்போதே இந்தியப் பெருங்கடல் மீதான அதன் அதிகார விரிவாக்கம் தொடங்கிவிட்டது. இது இந்தியாவுக்கு சவாலானது. இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளிடையிலான அண்மைய போட்டி, இந்திய-சீன அதிகாரப் போட்டியில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இப்போது இதற்குள் அமெரிக்காவின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் இலங்கை என்பது மறுக்க முடியாத உண்மை.
இலங்கை பலவீனமான நிலையில் இருப்பது முக்கியமான ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வலிமையான நிலையில் நாட்டின் பொருளாதாரமும் உறுதித்தன்மையும் இல்லாத போது, புறச்சக்திகளால் இலகுவாக கையாளப்படும் நிலை ஏற்படும். 2002ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி, பிராந்திய ரீதியாக இலங்கையின் செல்வாக்கை சீர்குலைத்துவிட்டது. அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற பல நாடுகள் இலங்கையை தங்கள் தேவைக்கு ஏற்பக் கையாளக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. இன்று ஆட்சியில் உள்ளது இடதுசாரி அரசாங்கமாக இருந்தாலும், அது காலம் காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று விமர்சித்து வந்த அமெரிக்காவுடன் தவிர்க்க முடியாதபடி கைகோர்த்துச் செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதனால்தான் காலம் காலமாக இலங்கை கடைப்பிடித்து வந்த அணிசேரா கொள்கை இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் — சீனாவின் முதலீட்டுடன் கட்டப்பட்ட இந்தத் துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் மூலோபாய விரிவாக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கொழும்பு துறைமுகத்திற்குள் சீனாவின் நிறுவனம் இருக்கிறது, கொழும்பு துறைமுக நகர கட்டுமானத்திலும் அவற்றின் முதலீடுகள் இருக்கின்றன. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீன முதலீடு இருக்கின்ற அதேவேளை, அங்கு ஒரு மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கும் சீனா திட்டமிட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இலங்கையின் மீதான சீனாவின் பொருளாதார நலன்களும் பூகோள மற்றும் பாதுகாப்பு நலன்களும் ஒன்று குவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பற்றதாக போட்டிகள் மிக்கதாக மாறுவது சீனாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதை சீனத் தூதுவருக்கு நன்றாகப் புரிகிறது.
இதே கருத்தரங்கில் சீனத் தூதுவர் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையும் சீனாவும் இணைந்து மேற்கொள்ளும் கடல்சார் ஆராய்ச்சிகள் தடைப்பட்டுப் போயிருக்கின்றன என்றும், இலங்கை அரசாங்கம் தனது இறையாண்மை, கண்ணியம் மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு விரைவில் சரியான முடிவை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார். சீனாவின் ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்திருப்பது குறித்தே அவர் இதனைக் கூறியிருக்கிறார். இலங்கை கடற்பரப்புக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவது தொடர்பான நிலையான செயற்பாட்டு நடைமுறை ஒன்றை உருவாக்குவதாக அரசாங்கம் கூறியிருந்த போதும், அந்தப் பணிகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இதன் பின்னணியில் அமெரிக்காவும் இந்தியாவும் இருந்தன என்று சீனா பலமுறை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறது. சீனத் தூதுவர் இதனைப் பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்ட போதும் இலங்கை அரசாங்கம் அதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
கொழும்பு துறைமுகம் — பல வல்லரசுகளின் முதலீடுகளும் மூலோபாய நலன்களும் குவிந்துள்ள இடமாக கொழும்பு மாறியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் நிலவுகின்ற அதிகாரப் போட்டியின் விளைவாகத்தான் சீன ஆய்வுக் கப்பல்கள் தடுக்கப்பட்டன. அதேவேளை சீனா இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த நெருக்கடி ஒரு வகையில் இந்தியப் பெருங்கடலின் அதிகாரப் போட்டியையே குறிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ஒரே கோட்டுக்கு வந்து நின்ற வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும் இப்போது இந்தியப் பெருங்கடலை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வதற்காக போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியிடும் தரப்புகளில் எதிலிருந்து இலங்கை தூர விலகிக்கொண்டாலும் அது இலங்கைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
0 Comments