elugai

நவீன ட்ரோன் போரின் முன்னோடி வான்புலிகளா? இலங்கை விமானப்படை முன்னாள் தளபதியின் அதிரடி ஆய்வு!

நவீன ட்ரோன் போரும் வான்புலிகளும்

நவீன ட்ரோன் போரும் வான்புலிகளும்

கட்டுரையாளர் - சுபத்ரா

உலகம் இன்று காணும் நவீன ட்ரோன் போருக்கு பல வழிகளில் முன்னோடியாக இருந்த ஈழப்போர் முடிவிற்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்தது. மூன்று தசாப்தங்கள் நீடித்த அந்த ஆயுதப் போராட்டத்தில் பல வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன — அவை அத்தனையும் தமிழர்களுக்கென ஒரு தனி அரசை நிறுவும் நோக்கிலேயே தமிழர்களால் நிகழ்த்தப்பட்டவை. தனி அரசை நிறுவும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் பாரிய தமிழினப் படுகொலையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அது தனியே இலங்கையின் முப்படைகளாலும் நிகழ்த்தப்பட்ட சாதனை அல்ல — அதற்குப் பின்னால் பல நாடுகள், பல பலம் வாய்ந்த சக்திகள் இருந்தன என்பது வெளிப்படையான உண்மை.

மூன்று தசாப்த ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் உச்சபட்சமாக கடற்படையையும் விமானப்படையையும் உருவாக்கியிருந்தனர். அவை மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டதாக இருந்த போதும், இலங்கை அரசுக்கு மாத்திரமன்றி சர்வதேச சக்திகளுக்கும் சவாலாக இருந்தன என்பதே உண்மை. அதுதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச சக்திகள் ஒன்றிணைந்து அவர்களைத் தோற்கடிக்கவும் காரணமாயிற்று.

வான்புலிகள் விமானம் விடுதலைப் புலிகள் வான்புலிகளின் இலகுரக விமானங்கள் — குறைந்த உயரத்தில் பறந்து ராடரின் வரம்புகளைச் சாதகமாகப் பயன்படுத்திய இந்த விமானங்கள் நவீன ட்ரோன் போரின் முன்னோடியாக சர்வதேச போரியல் வல்லுனர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.

விமானப்படைத் தளபதியின் ஒப்புதல்

நவீன ஏவுகணைகள், போர் விமானங்களைக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகள் புலிகளின் விமான, கடற்படையைக் கண்டு அஞ்சினர் என்பது மிகையான கூற்றாகத் தெரியலாம். ஆனால், இன்றைய நவீன ட்ரோன் போருக்கு புலிகளே முன்னோடியாக இருந்தனர் என இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியே ஒப்புக்கொண்டுள்ளதை வைத்து நோக்கும்போது, அந்த அச்சுறுத்தலை யாரும் சாதாரணமாக எடைபோட மாட்டார்கள்.

அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வாள்களுடன் தொடங்கிய போர் படிப்படியாக மாற்றம் கண்டு ட்ரோன்களுடன் நடத்தும் போராக மாறியிருப்பது பற்றி அவர் அதில் விளக்கியிருந்தார். "வான்வழிப் போரில் அதிகம் அறியப்படாத ஆனால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிணாம வளர்ச்சியை இலங்கை கண்டது. வான் பலம் இனி தேசிய அரசுகளின் தனித்துவமான களமாக இல்லை என்ற கருத்துக்கு வான்புலிகள் ஒரு புதிய மற்றும் எதிர்பாராத பரிமாணத்தை அறிமுகப்படுத்தினர்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

குறைந்த உயரத்தில் செயற்படுவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி, அரசு சாரா அமைப்புகளால் கூட வான்வெளியில் ஊடுருவி திடீர் தாக்குதல்களை நடத்தி, ஒரு மரபுசார் இராணுவத்தின் மீது உளவியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர். இதுவே உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் பல வழிகளில் முன்னோடியாக இருந்தது.

மலிவான தாக்குதல் கருவிகள், தாக்குபவர்கள் தங்கள் ஆரம்பத் திறனுக்காகச் செலவிடுவதை விட தற்காப்பவர்களை எதிர் நடவடிக்கைகளுக்காக மிக அதிகமாகச் செலவிடச் செய்யும் நிலையை ஏற்படுத்தியது. இதுவே வான்வழிப் போரில் செலவுச் சமச்சீரின்மையை அறிமுகப்படுத்தியது. குறைந்த விலைகொண்ட விமானங்கள் அல்லது பறக்கும் கருவிகளைக் கொண்டு ஒரு நாட்டின் வான்பரப்பை கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்த முதல் அரசு சாரா அமைப்பு என்று அவர் விடுதலைப் புலிகளை விபரித்திருக்கிறார்.

கடற்புலிகள் முன்னோடித்தனம்

கடலில் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்கள் இலங்கை கடற்படையின் நடமாட்டங்களை மட்டுப்படுத்தும் அளவுக்கு திறன் பெற்றிருந்தனர். விநியோகத் தேவைகளுக்காக அவர்களின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்திருந்தது — அது சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கவலைகளை சர்வதேச சக்திகளிடம் ஏற்படுத்தியது.

கடற்புலிகள் தாக்குதல் படகு விடுதலைப் புலிகள் கடற்புலிகளின் அதிவேக தாக்குதல் படகுகள் — இந்த உத்தி பின்னாளில் ஈரான் உட்பட பல நாடுகளின் கடற்படை உத்தியாக உள்வாங்கப்பட்டது. ட்ரோன் குண்டுப் படகுகளுக்கும் புலிகளே முன்னோடி என போரியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்று ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவும் உக்ரேனும் இதனையே செய்ய முனைகின்றன. ஈரானும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனையே செய்ய முயன்றுகொண்டிருக்கின்றன. பல பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட விமானங்களைக் கூட இந்த ட்ரோன்கள் அழித்துவிடுகின்றன — பெறுமதியற்றதாக மாற்றிவிட்டன. சில ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ட்ரோன்களை அழிப்பதற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதிகளை இயக்க வேண்டிய நிலைக்கு போர் முறை மாறியிருக்கிறது.

உக்ரேன் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தயாரித்த ட்ரோன் குண்டுப் படகுகளின் முன்னோடியாகவும் புலிகளே இருந்தனர். இறுதிப்போரில் கைப்பற்றப்பட்ட அவர்களின் படகுகளை ஒத்த ட்ரோன் படகுகள் ஈரான் மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாடுகள் புலிகளின் போர்க்கருவிகளின் மாதிரிகளை ஆய்வு செய்து உருவாக்கியவையே இந்த ட்ரோன்கள். ஈரானின் கடற்படை பலத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினாலும் அது பாரசீக வளைகுடாவில் ஆதிக்கம் செலுத்துகிறது — அதற்கு சிறிய அதிவேக தாக்குதல் படகுகள் தான் காரணம்; அந்த உத்தி கடற்புலிகளிடம் இருந்து பெறப்பட்டது.

தோல்வியில் பாடமும் வரலாற்றுப் பெறுமதியும்

விடுதலைப் புலிகள் அமைதித் தீர்வுக்கு இணங்காது போனது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உத்திக்குள் அவர்கள் அகப்பட்டுக்கொண்டது என்பன போன்ற பல காரணங்கள் கடந்த 17 ஆண்டுகளில் அடுக்கப்பட்டன. போரில் தோல்வியடைந்தவர்களின் மீது எப்போதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தான் இது. தோல்வியடைந்தவர்களுக்கு வரலாறு இல்லை என்று மூன்று தசாப்த ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுப் பாடத்தை மறைக்கும் சூழ்ச்சிகளில் இன்று பலர் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் தோல்வி தான் வெற்றிக்கான அடிப்படை — தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டவர்கள் தான் வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள்.

தமிழர்கள் பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு ஆயுதப் போராட்டமும் அதனுடன் இணைந்த சம்பவங்களும் தான் காரணமாக இருந்தன. தோற்றுப்போன போராட்டத்திற்கு வரலாற்றுப் பெறுமதியில்லை என்று கற்பிதம் செய்பவர்கள் கூட அந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளின் ஊடாகவே வெளிச்சத்துக்கு வந்தவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் 2009 முள்ளிவாய்க்கால் — 2009 மே 18ஆம் திகதி மூன்று தசாப்த ஆயுதப் போராட்டம் இங்கே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் போரியல் நுட்பங்கள் உலக வல்லரசுகளின் நவீன போர்முறைகளில் அங்கீகரிக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் நடக்கும் நவீன போருக்கு அவர்களே முன்னோடி என்று விமானப்படையின் முன்னாள் தளபதியே குறிப்பிடும் அளவுக்கு அவர்கள் சிறந்து விளங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் அறிமுகப்படுத்திய இவ்வாறான முன்னோடி போர்நுட்பங்கள் சர்வதேச சக்திகளை அச்சம்கொள்ள வைத்தது. அரசு சாரா சக்தி ஒன்று தங்களை மீறி வளருவதை, வான்வெளி கடற்பரப்பைக் கட்டுப்படுத்துவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் இறுதிக்கட்டப் போரில் அவர்கள் ஒன்றுதிரண்டமைக்கு அடிப்படைக் காரணம். ராஜிவ் காந்தி கொலை போன்ற பல புறக்காரணங்கள் இருந்தாலும், புலிகளின் போரியல் வளர்ச்சியும் அவர்களின் போர்நுட்பங்கள் மீதிருந்த அச்சமும் தான் புலிகளை அழிக்கும் போரில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைய வைத்தது. பெரும் இனஅழிப்பு ஒன்று நிகழும் எனத் தெரிந்திருந்தும் சர்வதேசம் கண்மூடியிருந்ததற்கும் இனஅழிப்பை வேடிக்கை பார்த்ததற்கும் அதுதான் அடிப்படைக் காரணம்.

Post a Comment

0 Comments