elugai

மாகாண அதிகாரத்துக்கு கடிவாளம்? 'மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகள்' நியமனத்தின் பின்னணி

மாகாண அதிகாரத்துக்கு கடிவாளம்?

மாகாண அதிகாரத்துக்கு கடிவாளம்?

கட்டுரையாளர் - என்.கண்ணன்

முதலாம் கட்ட ஈழப் போர் காலத்திலும், இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சிக் காலகட்டத்திலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் மாவட்ட சிவில் நிர்வாக இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ கட்டளை அதிகாரிகளே அப்போது சிவில் நிர்வாக இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். மாவட்டத்தை நிர்வாகிப்பதற்கு அரசாங்க அதிபர் என்ற பதவி இருந்த போதும், இராணுவ இணைப்பதிகாரிகளே சிவில் நிர்வாகத்தை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர் — அவர்களை மீறி சிவில் அதிகாரிகளால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத நிலை இருந்தது.

அந்த வரிசையில், இப்போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனையின் அடிப்படையில், 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இணைப்பதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு மாவட்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது போலவே, ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் — ஆளும்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இராணுவ இணைப்பதிகாரிகள் சிவில் நிர்வாகத்தை எப்படி கட்டுப்படுத்தினார்களோ, அதுபோல சுகாதாரத்துறையை மாவட்ட ரீதியாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்படுத்துகின்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நியமனம் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்று.

13வது திருத்தச்சட்டமும் மாகாண அதிகாரங்களும்

இலங்கையில் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய அரசு, மாகாண அரசு என இரண்டு விதமான அதிகாரக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கிடையில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன — கல்வி, சுகாதாரம், காணி, காவல்துறை போன்ற துறைகள் மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். ஆனால், 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எதுவும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தினால் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க வேண்டியிருக்கும். மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. மாகாண சபைகளுக்கு கடைசியாக தேர்தல்கள் நடத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன; மாகாண சபை என ஒன்று இயங்கியதையே இப்போது நாட்டு மக்கள் பலர் மறந்து போய்விட்டார்கள்.

மாகாண சபைகள் செயலிழக்கத் தொடங்கியதன் பின்னர், மாகாணங்களிடம் இருந்து அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்தெடுப்பதில் மத்திய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வந்திருக்கிறது. சட்ட உருவாக்கங்களின் ஊடாகவும், வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாகவும், அமைச்சரவை தீர்மானங்களின் ஊடாகவும் மாகாணங்களின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்தெடுக்கப்படுகின்றன.

இலங்கை 13வது திருத்தச்சட்டம் மாகாண சபை இலங்கையில் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 38 ஆண்டுகள் ஆகியும் மாகாண அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தொடரும் விவாதமாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டதற்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்திய ஜேவிபியின் வழிவந்த ஒன்று. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் 13வது திருத்தச்சட்டத்தையும் மாகாண சபை முறையையும் ஜேவிபி மிக தீவிரமாக எதிர்த்து அரசியல் நடத்தியது. அவ்வாறான ஒரு அமைப்பு, தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு மாற்றுப் பெயரின் ஊடாக இலங்கையில் ஆட்சியை நிறுவியிருக்கிறது. இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை மாகாண சபைகள் என்ற கட்டமைப்பு தொடர்ந்து பேணப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியை கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை.

தற்போதைய அரசாங்கத்துக்கு மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் ஈடுபாடு இல்லாத அதேவேளை, மாகாணங்களிடம் உள்ள அதிகாரத்தை குறைத்து அதனை ஒரு பலவீனமான அமைப்பாக மாற்றுகின்ற நோக்கம் இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் மாவட்டங்களுக்கு சுகாதார இணைப்பதிகாரிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு பெரும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது.

சுகாதாரத்துறை அதிகாரங்கள் பெருமளவில் மாகாண சபைகளிடமே இருக்கிறது. பெரும்பாலான மருத்துவமனைகள், சுகாதார கட்டமைப்புகள் மாகாண சபைகளிடமே இருந்து வந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கம் மாகாண சுகாதார அமைச்சுகள் வினைத்திறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதனை சீர்படுத்துவதாக ஒரு தோற்றப்பாட்டைக் காண்பித்துக்கொண்டு மத்திய அரசின் கீழ் மருத்துவமனைகளை உள்ளீர்க்கின்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்போது மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகள் நியமனத்தின் ஊடாக அரசாங்கம் இரண்டு விடயங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஒன்று — மாகாண நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கின்ற அதிகாரங்களையும் கூட மேற்பார்வை செய்கின்ற பொறுப்பை மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக கையாள முற்படுகிறது. இன்னொன்று — சுகாதாரத்துறையில் ஆளும்கட்சியின் அதிகாரத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறது.

மத்திய-மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அந்த குறைபாட்டை நீக்கவே இந்த நியமனம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் இதனை கையாளும் பொறுப்பிற்கு ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் நியமிக்கப்பட வேண்டும் என்றில்லை — பொருத்தமான எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூட நியமித்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை.

நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார அமைச்சர் இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ — மாவட்ட சுகாதார இணைப்பதிகாரிகள் நியமனம் தொடர்பான அமைச்சரவை யோசனையை சமர்ப்பித்தவர்.

இதன் பாதிப்பு தற்போது பெரிதாக தெரியாவிட்டாலும், மாகாண சபைகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அந்தக் கட்டமைப்பின் மீது மத்திய அரசின் தலையீடுகள் இருப்பதற்கு வழிவகுக்கும். அது அதிகார வேறாக்கத்திற்கு முரணான விடயமாக இருக்கும். தேசிய மக்கள் சக்தி ஒரு பக்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை இழுத்தடித்துக்கொண்டு இன்னொரு பக்கம் மாகாண நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பறிக்கின்ற வேலையில் இறங்கி இருக்கிறது.

பிரஜாசக்தி என்ற பெயரில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளுக்கு சமாந்தரமான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றின் ஊடாக பெருமளவில் நிதி ஒதுக்கீட்டில் திட்டங்களையும் செயற்படுத்துகிறது. மாகாண சபைகள் தெரிவு செய்யப்படுகின்ற போது மத்திய அரசின் கடிவாளத்தின் கீழ் இயங்குகின்ற ஒன்றாகவே அதனை மாற்றப் போகிறது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டு — சாறு உறிஞ்சப்பட்ட பழம் போல மாகாண சபைகளை மாற்றுவது தான் அரசாங்கத்தின் இலக்காக தெரிகிறது.

இதன் பின்னால் உள்ள ஆபத்தை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்ற, மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்துமாறு கோருகின்ற தமிழ் கட்சிகள் இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம்.

Post a Comment

0 Comments