முரண்படும் புள்ளிவிபரங்கள்
அண்மைக்காலங்களில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 6.25 இலட்சம் டொலர் மோசடி, மக்கள் வங்கியில் வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் போது மிகையாக வரவு வைக்கப்பட்ட 656 மில்லியன் ரூபா, அஸ்வெசும கணக்கில் 500 மில்லியன் ரூபா மேலதிகமாக வரவு வைக்கப்பட்டது என்று அடுத்தடுத்து பல நிதி இழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை இத்துடன் நிற்குமா, இன்னும் வருமா என்று தெரியாது. இவை உடனடியாக நிகழ்ந்த தவறுகள் மட்டுமல்ல, நீண்டகாலமாக இடம்பெற்றுள்ள தவறுகளும் அடங்கியுள்ளன.
அரசு நிறுவனங்களில் மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு தாராளமான வழிகள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. முன்னைய அரசாங்கங்களில் மட்டுமன்றி தற்போதைய அரசாங்கத்திலும் அதே நிலை நீடிக்கிறது என்பதை இந்த விவகாரங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அரசாங்கம் இந்த விடயத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு உள்ளன.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் — எரிபொருள் கொள்வனவு தொடர்பான புள்ளிவிபரங்கள் முரண்பாடாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் எரிபொருள் கொள்வனவு தொடர்பாக, அதற்காக செலவிடப்படுகின்ற நிதி தொடர்பாக அரசாங்கத் தரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்தப்படுகின்ற தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுக்கு இடையில் ஒருமைப்பாடு இல்லை என்பது தெளிவு. ஏன் இந்தளவிற்கு முரண்பாடுகள் காணப்படுகின்றன என்ற கேள்வி உள்ளது.
நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த 13ஆம் திகதி உரையாற்றிய போது, எரிபொருள் கொள்வனவு தொடர்பான சில தரவுகளை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் எரிபொருள் கொள்வனவுக்காக 98 மில்லியன் டொலர் செலவிடப்பட்ட நிலையில், தற்போது ஆறு மடங்கு அதிகம் நிதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரது அந்த தரவுகள் குழப்பமானவையாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தன.
ஆனால் கடந்த 14ஆம் திகதி பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகி விளக்கம் அளித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இன்னொரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி முதல் நாள் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் இருந்து இந்த தரவுகள் வேறுபட்டதாக இருந்தன. கடந்த ஆண்டு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்காக 1.5 பில்லியன் டொலரை செலவிட்டதாகவும், ஆனால் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் டொலர் செலவாகிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டில் மொத்தமாக செலவிடப்பட்ட நிதியில் மூன்றில் இரண்டு பங்கு, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் செலவிடப்பட்டிருக்கிறது. அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சலை நியாயப்படுத்தும் வகையில் அவரது இந்தக் கருத்து அமைந்ததா என்ற சந்தேகம் உள்ளது, ஏனென்றால் டொலரின் வெளியேற்றம்தான் அதன் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது.
இலங்கை மத்திய வங்கி — ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வழங்கிய தரவுகளுக்கும் ஜனாதிபதி கூறிய தரவுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மத்திய வங்கி ஆளுநர் வழங்கிய தரவுகளுக்கும் நிதியமைச்சரான ஜனாதிபதி கூறிய தரவுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெப்ரவரி மாதம் 98 மில்லியன் டொலரும், மார்ச் மாதம் 216 மில்லியன் டொலரும், ஏப்ரல் மாதம் 368 மில்லியன் டொலரும் எரிபொருள் கொள்வனவுக்காக செலவாகியிருப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். இதன்படி பார்த்தால் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான மூன்று மாதங்களுக்கு 682 மில்லியன் டொலர் செலவாகி இருக்கிறது. ஜனவரி மாதத்தில் நிச்சயமாக 318 மில்லியன் டொலருக்கு எரிபொருள் வாங்கியிருக்க சாத்தியம் இல்லை, ஏனென்றால் பெப்ரவரி மாத இறுதியில்தான் மத்திய கிழக்குப் போர் தொடங்கியது, அதற்குப் பின்னரே எரிபொருள் விலை தாறுமாறாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்காக 1.5 பில்லியன் டொலரை செலவிட்டிருந்தது என்றால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு 125 மில்லியன் டொலர் வரைதான் செலவாகியிருக்கிறது. எனவே ஜனவரி மாதமும் அதனை அண்மித்த ஒரு தொகையில்தான் எரிபொருள் இறக்குமதி இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் பார்த்தால் சுமார் 200 மில்லியன் டொலர் கணக்கு முரண்படுகிறது.
இது, சர்வதேச சந்தையில் எரிபொருளை அரசாங்கம் கூடிய விலைக்கு பெற்றுக்கொள்கிறதா என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் எச்எஸ்பிசி வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரி 286 டொலருக்கு இலங்கை மசகு எண்ணெயை வாங்குவதாக அறிந்துகொண்டதாக கூறியிருந்தார் என்பதே அந்தச் செய்தி. அதனை அரசாங்கம் மறுத்திருந்தது, ஏனென்றால் குறித்த காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை 71 டொலருக்கும் 113 டொலருக்கும் இடையிலேயே காணப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் கடந்த சில மாதங்களில் அதிகூடிய விலைக்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றை சுத்திகரிக்கப்பட்ட நிலையில் கொள்வனவு செய்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பீப்பாய் டீசல் 300 டொலருக்கும் மேல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது, ஒரு பீப்பாய் பெட்ரோல் கொள்வனவுக்காக 150 டொலருக்கும் மேல் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கையிருப்பை பேணத் தவறியது மட்டுமே இந்தச் சிக்கலுக்கு காரணம் அல்ல. தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் குறைந்தது. இதனால் ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எரிபொருள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அதனால்தான் எரிபொருள் தட்டுப்பாடும் செலவு அதிகரிப்பும் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் மீதுள்ள உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாவிட்டாலும், அரசாங்கத்தின் மாறுபட்ட குழப்பகரமான புள்ளிவிபரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் — தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் உற்பத்தித் திறன் குறைந்து எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பெட்ரோலிய இறக்குமதி விடயத்தில் அரசாங்கம் அவசரப்பட்டு கொள்வனவுகளில் ஈடுபட்டதா என்ற கேள்வி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாட்டில் நெருக்கடி ஏற்பட்டால், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்ற போராட்டங்கள் வெடிக்கக்கூடிய சூழல் இருந்தது. அதற்கு இடம்கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் எந்த விலைக்காவது எரிபொருளை வாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த நெருக்கடியின் போது இந்தியா இரண்டு கப்பல்களில் எரிபொருளை அனுப்பி வைத்தது. அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முதலில் இந்தியாவே உதவியதாக அது பெருமைப்பட்டுக்கொண்டது. அதேவேளை சீனாவும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போது தாங்களே தனித்துவமான நண்பன் என்பதை வெளிப்படுத்தியதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையை நட்பு நாடு என்ற வகையில் அணுகி இந்த நாடுகள் எரிபொருளை விற்பனை செய்திருந்தால், நியாயமான விலையிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் கூறுவது போல இந்த நான்கு மாதங்களில் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை மிக அதிகமாக உள்ளது. இது, இந்த நாடுகள் குறைந்த விலைக்கு அல்லது சந்தை விலைக்கு எரிபொருளை விற்றனவா அல்லது அதைவிட கூடிய விலைக்கு விற்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்வனவில் இடம்பெறக்கூடிய மிகச்சிறிய பேரங்களோ மோசடிகளோ கூட மிகப்பெரிய அளவிலான நிதி இழப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் அரசாங்கம் முற்றிலும் உண்மைகளை கூறுகிறதோ இல்லையோ, அது பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. இது அரசாங்கத்தின் பெயருக்கு இழுக்கையே ஏற்படுத்தும்.
0 Comments