மீண்டும் ஆட்டம் காணும் பொருளாதாரம்
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்ற நிலை உலகம் முழுவதையும் ஆட்டம் காணும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இலங்கை ஏற்கனவே பொருளாதார ரீதியாக நெருக்கடியில் சிக்கி இருக்கும் சூழலில், மத்திய கிழக்கு மோதல் பெறும் இடருக்குள் நாட்டைச் சிக்க வைத்திருக்கிறது. அண்மையில் நாடாளுமன்ற நிதிக் குழுவின் முன்பாக முன்னிலையாகி இருந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போதைய இந்தப் போக்கு இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.
இது சாதாரணமான விடயம் அல்ல. அண்மைக்காலத்தில், அரசாங்கம் இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்திருக்கவில்லை. நாடு ஆபத்தான சூழலை நோக்கி நகருகிறது என்பதை ஒப்புவிக்கக் கூடிய ஒரு கருத்தை, அரசாங்கத்தின் எந்த நிறுவனமும் முன்வைத்திருக்கவில்லை. ஆனால், இப்போது மத்திய வங்கி ஆளுநர் இதனை கூறியிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் கடிவாளம் கையை விட்டு போய்க் கொண்டிருப்பதுதான்.
மெது மெதுவாக அதிகரித்துக் கொண்டிருந்த இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி, இப்போது ரொக்கட் வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னர் சதக்கணக்கில் இடம்பெற்ற மதிப்பிறக்கம், இப்போது ஒரே நாளில் 10, 12 ரூபா வரை இடம்பெறுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 289 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு கடந்த 21ஆம் திகதி 354 ரூபாவைத் தொட்டது. இது சாதாரண விலை ஏற்றம் அல்ல — 65 ரூபாவுக்கு மேல் ஒரு டொலரின் மதிப்பு இரண்டு ஆண்டுகளுக்குள் உயர்ந்திருக்கிறது.
இலங்கை மத்திய வங்கி — ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான சூழலை நோக்கி நகர்வதாக எச்சரித்திருக்கிறார்.
இலங்கை ரூபாவின் இந்த மதிப்பு வீழ்ச்சி பொருளாதாரத்தின் அத்தனை அம்சங்களையும் அசைத்துப் பார்க்கக் கூடிய ஒன்று. 2028ஆம் ஆண்டு இலங்கை 3.259 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்ற சூழலில், டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதும், அதன் கையிருப்பு குறைந்து வருவதும், ஆபத்தான அறிகுறியே ஆகும். டொலரின் கையிருப்பை பேணுவதற்காக, அரசாங்கம் கூடுதல் விலை கொடுத்து அதனை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அவ்வாறு கொள்வனவு செய்ய முடியாது போனால், இறக்குமதிகளுக்காக அமெரிக்க டொலரை விடுவிக்க முடியாத நிலை ஏற்படும். அது உள்நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கும்.
ஆரம்பத்தில் இது பற்றிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போது, அதை அரசாங்கம் அலட்சியம் செய்திருந்தது. பொருளாதாரம் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும், அது முன்னோக்கி பயணிப்பதாகவும், வெற்றிகரமாக 2028ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் கூறியிருந்தது. ஆனால் இப்போது அத்தகைய வீராப்புடன் கதையை கூற முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், இப்போது ஆபத்து, அபாயம் என எச்சரிக்கை வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கியிருக்கிறது.
சுற்றுலா வருமானம் சரிவும் அரசின் சவாலும்
இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடிக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டும் என்றில்லை. ஏனென்றால் இந்த நிலை பெருமளவிலான புற அதிர்ச்சிகளால் ஏற்பட்டது. ஆனால் அரசாங்கம் நிலைமையை சரியாக கையாளுகிறதா என்ற கேள்வி இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கூட கோவிட் தொற்றுதான் பிரதான பிரச்சினையாக இருந்தது. அந்த நிலைமையை சரியாக கையாள தவறியதால்தான், கோட்டாவின் அரசாங்கம் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாறியது. இப்போது ஏற்பட்டுள்ள போர்ச்சூழல், கொரோனாவுக்கு ஒத்த நெருக்கடி என்பதைவிட அதற்கு அப்பாற்பட்டது என்பதே உண்மை. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டில் 14 பில்லியன் முழு நேர வேலை இழப்புக்கு சமமான வேலை இழப்பு ஏற்படும் என கூறியிருக்கிறது. இது கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்பை விட அதிகமாகும்.
இலங்கை சுற்றுலாத்துறை — 2026 ஏப்ரல் மாதத்தில் வருமானம் 257 மில்லியன் டொலரிலிருந்து 157 மில்லியன் டொலராக சரிந்திருக்கிறது; கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு.
பிந்திய தரவுகளின்படி ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருமானம் கடுமையாக சரிந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டிய மாதமாக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைந்திருக்கிறது. 157 மில்லியன் டொலர் மட்டுமே ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் வருமானமாக கிடைத்திருக்கிறது. 2025ஆம் ஆண்டு இதே மாதத்தில் 257 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்திருந்தது. ஒரு ஆண்டுக்கு இடையில் ஒரு மாதத்தில் 100 மில்லியன் டொலர் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றால், அடுத்த 12 மாதங்களும் இதே நிலை ஏற்படுமானால், ஒரு ஆண்டில் ஏற்படக்கூடிய மொத்த வருமான இழப்பு 1.2 பில்லியன் டொலராக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானம் குறைந்து கொண்டிருக்க, செலவினங்கள் அதிகரிக்கின்ற சூழல் ஆபத்தானது. அதனால்தான் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இதுபற்றி எச்சரித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, விரைவில் டொலரின் பெறுமதி 360 ரூபாவாக உயரும் என்றும், 4 மாதங்களில் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அழைக்கும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தவறினால், இதுவும் இன்னொரு கோட்டா அரசாங்கமாகவே அமைந்து போகலாம். மக்கள் தம் மீது சுமத்தப்படுகின்ற சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் கோபம் ஆட்சியாளர்களின் பக்கம் திரும்பினால், அதனை கட்டுப்படுத்துவது கடினம்.
இன்று மலிந்து போய் கிடக்கும் சமூக ஊடகங்களும் இணைய வசதிகளும் இத்தகைய ஆட்சி மாற்றங்களை ஒருங்கிணைப்பதற்கு சுலபமான வழிகளாக அமைந்திருக்கின்றன. மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் கோபத்தையும் தூண்டுவதற்கு இவை தாராளமாக பங்களிக்கக் கூடியவை. இதனை சரியாகவோ தவறாகவோ பயன்படுத்த முற்படுகின்ற எவராலும், ஆட்சி மாற்றத்தை நோக்கி நாட்டை தள்ள முடியும். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது. இலங்கையும் இது பற்றிய அச்சம் இல்லாமல் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2022 இலங்கை பொருளாதார நெருக்கடி — தட்டுப்பாடும் விலையேற்றமும் மக்களை வீதிகளுக்கு இறக்கியது; அதே நிலை மீண்டும் வருமோ என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.
எவ்வாறாயினும், உலக வங்கியின் 200 மில்லியன் டொலரும், சர்வதேச நாணய நிதியத்தின் 700 மில்லியன் டொலரும் அடுத்த சில நாட்களில் கைக்கு வந்த பின்னர், ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி கட்டுக்குள் வரும் என மத்திய வங்கி ஆளுநரும் வெளிவிவகார அமைச்சரும் கூறியிருக்கின்றனர். ஆனால், இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரிப்பதே முக்கிய காரணம் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியிருந்தார். 700 பில்லியன் டொலரை கையிருப்பில் வைத்திருக்கும் இந்தியாவின் நாணயமே மதிப்பிழந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் 900 மில்லியன் டொலர் கிடைத்ததும் இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் கட்டுக்குள் வரும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறார் என்று தெரியவில்லை.
0 Comments