elugai

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதா? – நாலாய் உடையும் அபாயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

பிளவுகளை நோக்கி தமிழ் அரசுக் கட்சி

பிளவுகளை நோக்கி தமிழ் அரசுக் கட்சி

கட்டுரையாளர் - கபில்

வடக்கு, கிழக்கு பகுதிகள் கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் மூழ்கி இருந்த சூழலில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளுக்கு முதல் நாளான மே 17ஆம் திகதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழ் அரசுக் கட்சி இம்முறை அதிகளவிலான இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளும் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுத்திருந்தது. ஆயினும், துக்க வாரமாக கடைப்பிடிக்கப்படுகின்ற இந்த நினைவேந்தல் வாரத்தில் தமிழ் அரசுக் கட்சி தனது உள்ளக முரண்பாடுகளை ஆராய்வதற்கு எடுத்த தீர்மானம் நியாயப்படுத்த முடியாதது.

இந்த மத்திய குழுக் கூட்டம் ஒன்றும் மிக அவசரமான ஒன்று அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை குற்றவாளியாக்கும் நோக்கில், அவரை கட்சிக்குள் ஓரம் கட்டுவதற்கோ வெளியேற்றும் நோக்கிலோ கூட்டப்பட்ட கூட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சிறிதரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கமலேஸ்வரன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். இவர்கள் சிறிதரனிடம் விசாரணை நடத்தி சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை மத்திய குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் தமிழ் அரசியல் யாழ்ப்பாணம் — தமிழ் அரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடுகள் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியலமைப்பு பேரவையில் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டார் என்பதே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு. ஆயினும், அதிலிருந்து விலகுமாறு கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானத்தை மீறினார் என்பது உள்ளிட்ட இன்னும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். அவை என்னென்ன என்பது கட்சியின் பொதுச்செயலாளரான சுமந்திரனே தீர்மானிப்பார் என தெரிகிறது. இந்தக் குழு எப்போது விசாரணை நடத்தி எப்போது அறிக்கை சமர்ப்பிக்கும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் இது கட்சிக்குள் ஏற்படப் போகும் ஒரு பெரும் பிரளயத்திற்கான அறிகுறியாகத் தெரிகிறது.

தமிழ் அரசுக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற வகையில் அண்மையில் சுமந்திரன் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கட்சியில் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் கடுமையாகச் செயற்படுவதாக அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறார். கடந்த காலங்களில் அவரால் தமிழ் அரசுக் கட்சியை விட்டோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டோ வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் அதிகம். குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களை அவர் தன் வாதத் திறமையால் மௌனிக்கச் செய்யும் சூழலும் உள்ளது. இப்போது அவரது தலைமைத்துவக் கனவுக்குச் சவாலாக இருப்பவர் சிறிதரன். அந்த வகையில் அவருக்கு எதிரான நகர்வுகளை சுமந்திரன் முன்னெடுக்கிறார் என்பது கட்சியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கட்சிக்குள் தகுதி வாய்ந்த, பலம் வாய்ந்த தலைவர்களை உருவாக்குவதை தவிர்த்து அவ்வாறானவர்களை வெளியே தள்ளுவது தமிழ் அரசுக் கட்சிக்கு ஒரு நோயாகி விட்டது. கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அல்லது தமது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை சிதைப்பதிலேயே பலர் முன்னிற்கிறார்கள்.

இது கட்சியை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. தமிழ் அரசுக் கட்சிக்குள் இப்போது பல அணிகள் இயங்குவதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சி இரண்டாகப் பிளவுபடும் நிலை பற்றி பேசப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மூன்றாவதாக ஒரு அணி இருக்கிறது, பிளவுபட்டால் எந்த அணி பக்கம் சேர்வது என்று தெரியாத அணி அது என்று கூறியதாக தெரிகிறது. அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் நான்காவதாக ஒரு அணியும் இருக்கிறது, அவ்வாறு பிளவு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தீர்மானித்திருக்கிறது அந்த அணி என்று கூறியிருக்கிறார். ஆக சிறிதரன்-சுமந்திரன் என்ற இரண்டு துருவநிலைப்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு இடையிலான போட்டிக்குள் தமிழ் அரசுக் கட்சி சிக்கியிருக்கிறது. இந்த இரண்டு பக்கங்களிலும் சார்ந்திருப்பவர்கள், இரண்டு பக்கங்களையும் சாராமல் இருப்பவர்களுக்குள் இரண்டு அணிகள் என பல பக்கங்களாக தமிழ் அரசுக் கட்சி இன்று சிதறிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் — நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான குற்றச்சாட்டுகள் கட்சியை பிளவுநிலைக்கு தள்ளியிருக்கின்றன.

அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு அந்தக் கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அது எடப்பாடி அணி மற்றும் எஸ்.பி. வேலுமணி-சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்து செயற்படுகிறது. அதிமுகவில் இந்தப் பிளவு இப்போது தொடங்கியதல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற போது தொடங்கியது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியை உடைத்தார். அதற்குப் பின்னர் எடப்பாடி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு சசிகலாவையும் தினகரணையும் வெளியேற்றினார். பின்னர் ஓ.பி.எஸ். உள்ளே கொண்டு வரப்பட்டு டம்மி ஆக்கப்பட்டு கட்சியை விட்டு வெளியே விரட்டப்பட்டார். கட்சியை ஒற்றுமைப்படுத்த முயன்று தோற்றுப் போன செங்கோட்டையன் விஜயுடன் இணைந்து அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். அதுபோல பலர் கட்சியில் இருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு திமுக, தவெக என்று பல கட்சிகளில் இணைந்து சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடைசியாக அவருடன் கூட இருந்து பலருக்கு குழி பறித்தவர்களே இன்று அதிமுகவின் சட்டமன்ற குழுவை உடைத்து தனி அணியாக சென்று தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிமுக பலவீனமடைந்து போயிருக்கிறது. சசிகலா ஒரு பக்கம், தினகரன் ஒரு பக்கம், எடப்பாடி இன்னொரு பக்கம், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் மற்றொரு பக்கம் என்று கிட்டத்தட்ட நான்கு அணிகளாக சிதைந்து போயிருக்கிறது அதிமுக. இந்த அணிகளில் எதில் இணைந்துகொள்வது என தெரியாமல் செம்மலை போன்ற மூத்த தலைவர்கள் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு நிலையை நோக்கித்தான் தமிழ் அரசுக் கட்சி நகருவதாகத் தெரிகிறது.

தமிழ் அரசுக் கட்சியில் இரண்டு அணிகள் இருப்பது தான் வெளியே தெரிந்தது. ஆனால் உள்ளே இரண்டு அல்ல, நான்கு அணிகள் இருப்பதாக அந்தக் கட்சியினரே கூறுகின்ற நிலை இருக்கிறது. இது கட்சி எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்தப் பிளவு தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டுமல்ல, அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களுக்கும் ஆரோக்கியமானதல்ல.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கட்சியின் உள்ளக சிக்கல்களை ஆராய்ந்தது பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

சிறிதரனை வெளியே தள்ளுவது மட்டும்தான் கட்சியின் இலக்காக இருக்குமேயானால், அதனை நோக்கித்தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமானால், அது எந்த தரப்புக்குமே ஆரோக்கியமானதல்ல. முக்கால் நூற்றாண்டு பாரம்பரியம் உள்ள கட்சி என்ற பெருமையோ, தந்தை செல்வாவின் வழிவந்த கட்சி என்ற செல்வாக்கோ மட்டுமே தேர்தல்களில் கட்சியைக் காப்பாற்றாது. கொள்கைகளும் தத்துவங்களும் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் காலம் வேகமாக மாறி வருகிறது. இறுக்கமான வலதுசாரிக் கொள்கை தோல்வி அடைகிறது, இடதுசாரிக் கொள்கையும் வீழ்ச்சி அடைகிறது. கிட்டத்தட்ட அறுபதாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியே தமிழகத்தில் இல்லாமல் போயிருக்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனை ஒட்டி தமிழ் அரசுக் கட்சியும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. அதனைப் பற்றிச் சிந்திக்காமல் கட்சியை சிதைப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் இது மிக மிக ஆபத்தானது.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு சிறிதரன் தயாராக இருப்பதான தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தமிழ் மக்கள் வீட்டு சின்னத்தை காப்பாற்றுவார்கள் என்று யாரும் நம்பிக்கொள்ளக் கூடாது. வரலாறு சிலவேளை பின்னோக்கியும் பாயும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது ஒரு முன்னெச்சரிக்கையை கொடுத்தது. அதற்குப் பின்னரும் கூட தமிழ் அரசுக் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறியது போல நடந்துகொள்கிறது. இது தமிழரின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் தமிழ் அரசுக் கட்சியின் வகிபாகத்தை எந்தளவுக்கு உறுதிப்படுத்தும் என்ற கேள்விகளை எழுப்ப வைக்கிறது. இவ்வாறான ஒரு சூழலுக்குள் கட்சி சிக்கியிருப்பது துரதிஷ்டம். எல்லா தரப்புகளும் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த நிலை அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும் கட்சியைப் பொறுத்தவரையில் கடினமானதொன்று.

Post a Comment

0 Comments