போர் வெற்றியும் மஹிந்தவின் நிலையும்
மே 18ஆம் திகதி, போர் முடிவுக்கு வந்த நாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். 17 ஆண்டுகளுக்கு முன்னர், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட செய்தியை, அவர் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். பல அரசாங்க தலைவர்களால் முடியாது போன ஒன்றை, சாதித்து விட்ட சிங்களப் பெருந்தலைவராக அவர் கொண்டாடப்பட்டார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் புதுப்பிக்கப்பட்டு எழுதப்படும் அளவுக்கு, அவரது போர் வெற்றி சிங்கள சமூகத்தில் பிரதானமாக குறிக்கப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அரசப் படைகள் ஈட்டிய வெற்றி சாதாரணமானதல்ல. அந்த வெற்றி விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்புக்கு எதிராகப் பெறப்பட்ட வெற்றி. புலிகளின் பலம் குறைவாக இருந்தாலும், அவர்களிடம் வளங்கள் குறைவாக இருந்தாலும், சர்வதேச ஆதரவு இல்லாவிட்டாலும், போர்த்தந்திர உபாயங்கள் மற்றும் அதன் இலட்சியம் மீதான பற்றுறுதி போன்றவற்றினால், மிகவும் உயர்ந்த மனோபலத்துடனும் இருந்த அமைப்பு அது. அதனால்தான் தோற்கடிக்க முடியாதவர்களாக விடுதலைப் புலிகள் கருதப்பட்டார்கள்.
புலிகளுக்கு எதிராக பெறப்பட்ட வெற்றியை வைத்தே, அரசப் படைகளின் வெற்றி மதிப்பீடு செய்யப்படுகிறது. விடுதலைப் புலிகளை சாதாரணமாக — குறைத்து மதிப்பீடு செய்தால், அரசப் படைகளின் வெற்றி மலினத்தனமான ஒன்றாகவே இருக்கும். அதனால்தான், போருக்கு முந்திய காலத்தில் விடுதலைப் புலிகளின் பலத்தை குறைத்து மதிப்பீடு செய்த அரசாங்கம் மற்றும் சிங்கள ஆய்வாளர்கள் போருக்கு பின்னர், புலிகளின் மதிப்பை, பலத்தை உயர்த்திக் காண்பித்து வருகிறார்கள். அதனூடாகத்தான், தங்களின் வெற்றியை பிரமாண்டமானதாக, ஈடு இணையற்றதாக காண்பிக்க முடியும் என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ அடைந்த அந்த வெற்றி இலங்கையின் நவீன சரித்திரத்தில் வேறு எந்த அரசத் தலைவரும் பெற்றிராத ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் அனுரகுமார திசாநாயக்க வரைக்கும், ஆட்சியில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு, பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர். ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவின் இந்தப் போர் வெற்றி அவர்கள் அனைவரினது வெற்றிகளை விட வேறுபட்டதாக நிலைத்து நிற்கிறது. ஆனால், வரலாறு அவரை விடுதலை செய்யவில்லை. அவர் இன்று குப்பைக்குள் வீசப்படும் நிலையில் இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ — 2009 மே 19இல் நாடாளுமன்றத்தில் போர் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். (படம்: Wikipedia)
இலஞ்ச விசாரணையும் தனிமையும்
மே 19ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட, மே மாதத்தில் அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, வாக்குமூலம் வழங்கி விட்டு பதற்றத்துடன் வெளியே வர நேரிட்டது. தனது ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற விமான கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட அவர், கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியிலேயே வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்தார். அவர் தற்போதைய ஆட்சியாளர்களால் குறி வைக்கப்படுகிறார் என்பது, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் இப்போது, தாங்கள் குறி வைக்கப்படுவதாக, அவ்வப்போது ஊடகங்களிடம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருக்கிறார் — எதிர்காலத்தில் தன்னை மக்கள் மறந்து விட கூடும் என்றும், ஆனாலும் அவர்கள், படையினரை மறந்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது உத்தரவிற்கு அமையவே, அவர்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்து போராடினார்கள். அந்த போரில் ஏராளமான மீறல்கள் இடம்பெற்றிருந்தன. அவை இடம்பெறும் என்பதையும் மஹிந்த ராஜபக்ஷ அறிந்திருந்தார். ஆனால், அதை தடுப்பதற்கு அவர் முயற்சிக்கவில்லை.
அவரது இந்த கருத்தில் இருந்து, போர் எப்படி முன்னெடுக்கப்படும் என அவர் அறிந்திருந்தார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர் ஈவிரக்கமற்ற ஒரு போருக்கு தயாராக இருந்தார். போருக்கு முன்னரே அவர் இதற்கான திட்டத்தைக் கொண்டிருந்தார் என்பது இப்பொழுது உறுதியாகியிருக்கிறது. ஈவிரக்கமற்ற போரில் இடம்பெறக் கூடிய மனித உரிமை மீறல்கள், தனக்கு எதிராக விரல்களை நீட்டுவதற்கு காரணமாக அமையும் என்ற உண்மையும் கூட அவருக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் அவர், ஆட்சியில் இருந்தபோது படையினரை விட்டுக் கொடுக்கவோ, காட்டிக் கொடுக்கவோ இல்லை. அவர்களை சர்வதேசத்தின் முன்பாக கொண்டு செல்வதற்கான முயற்சிகளை கடுமையாக எதிர்த்தார். சர்வதேச விசாரணைகளோ அல்லது சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தும் முயற்சிகளோ முன்னெடுக்க முடியாதபடி தடைகளை ஏற்படுத்தினார். அதற்காக சர்வதேச சூழலை தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டார். உலக வல்லரசுகளைக் கூட தனக்கு சாதகமான நிலையை எடுக்க வைத்தார். ஆனால் அவரது நிலை இன்று பரிதாபத்துக்குரிய ஒன்றாக மாறிக்கொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மே 18ஆம் திகதி, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக — விளக்கேற்றி அஞ்சலித்த போது, அந்தப் போரில் உயிரிழந்த படையினருக்காக, பொது இடம் ஒன்றில் விளக்கேற்ற கூட முடியாதவராக இருந்தார் மஹிந்த. படையினரின் நினைவாக தன் வீட்டுக்குள் குடும்பத்தினருடன் சேர்ந்து விளக்கேற்றினார். தன்னை ஒரு உண்மையான சிங்கள பௌத்தனாக காட்டிக் கொண்டுள்ள அவர் தான் ஒருபோதும் இனவாதி அல்ல என்று நிரூபிக்க முயன்று தோல்வி அடைந்து விட்டார்.
அவர் தனது அறிக்கையில் இரண்டு விடயங்களை கூறியிருக்கிறார் — ஒன்று, தான் ஒருபோதும் இனவாதி அல்ல என்பது; இன்னொன்று, தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக போர் நடத்தவில்லை என்பது. இந்த இரண்டையும் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான், அவர் 17 ஆண்டுகளாக இதனை கூறிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு உண்மையை நீண்டகாலம் மறைக்க முடியாது. அதுபோல, பொய்யை நம்ப வைப்பதற்கு எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற முடியாது.
மஹிந்த ராஜபக்ஷ தன்னை இனவாதி இல்லை என்று கூறுவதையும், தான் தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை என்று கூறுவதையும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் பெரும்பாலான தமிழர்கள் இல்லை. அவரால் அதனை நிறுவ முடியாது, அதனால்தான் அவர் தொடர்ந்து இந்த இரண்டும் உண்மைதான் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். அவர் கூறுவது போல, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்தான் என்றால், அரசப் படையினர் தமிழர்களை அழிக்கவில்லை, பாதுகாப்பாக மீட்டெடுத்தனர் என்பது உண்மை என்றால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏன் இத்தனை உணர்வுடன் இன்றைக்கும் முன்னெடுக்கப்படுகிறது?
போர் வெற்றியின் கதாநாயகனாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ — இன்று இலஞ்ச விசாரணைகளையும் அரசியல் தனிமையையும் எதிர்கொள்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள சமூகம் தன்னை மறந்து விடுமோ என்ற பயம் வந்து விட்டது. அது நடக்கலாம் என்ற உணர்வு அவருக்குள் தோன்றத் தொடங்கி விட்டது. அதனால்தான், தன்னை மறந்து போனாலும், உயிர்களை கொடுத்து போராடிய படையினரை மறந்து விடக்கூடாது எனக் கூறியிருக்கிறார். ஏனென்றால் அவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவரை கதாநாயகன் ஆக்கியவர்கள் அவர்கள்.
தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வாரத்துக்கு பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரையில், அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் தன்னாட்சியை நிறுவுகின்ற முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டிருந்ததாக நினைவுபடுத்தியிருக்கிறார் மஹிந்த. அதுபோல, இன்னும் எவ்வளவு காலம் கடந்தாலும் பல்வேறு வடிவங்களில், எமது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த முனைவார்கள் என்பதை நான் அறிவேன் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அப்படியானால் அவர் 17 ஆண்டுகளுக்கு முன்னர், பிரபாகரனையும் அவரது ஈழக்கனவையும், முள்ளிவாய்க்கால் மண்ணில் குழி தோண்டி புதைத்து விட்டதாக கூறியது பொய்தானே. இலங்கையின் ஒற்றையாட்சி இறுமாப்புத்தான் இத்தனை அழிவுகளுக்கும் காரணம். எதிர்காலத்தில் அதற்கு அச்சுறுத்தல் வரும் என்ற அச்சம், மஹிந்தவுக்குள் இருந்து இன்னும் போகவில்லை. அப்படியானால், 17 ஆண்டுகளுக்கு முந்திய போரில் மஹிந்த ஈட்டிய வெற்றி நிலையானதோ, நிரந்தரமானதோ அல்ல என்பதை, அவர் இந்த அறிக்கையின் ஊடாக ஒப்புக்கொண்டிருக்கிறாரா?
0 Comments