விஜய்யின் வெற்றி: ஈர்ப்பு, வாக்குறுதிகள் மற்றும் சவால்கள்
விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வியக்கத்தக்க தேர்தல் எழுச்சியானது, சமீபத்திய தசாப்தங்களில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் நகர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் பல ஆய்வாளர்கள் அவரது வெற்றியை வெறும் 'திரையுலகப் பிரபலம்' என்ற ரீதியில் மட்டுமே பார்த்தனர், ஆனால் அத்தகைய விளக்கம் மட்டும் போதுமானதல்ல.
விஜய்யின் வெற்றி, தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள ஆழமான கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கிறது — சினிமா, மக்களை அணிதிரட்டுதல், நலத்திட்ட அரசியல் மற்றும் பிராந்திய அடையாளம் ஆகியவற்றின் சங்கமத்தால் பல தசாப்தங்களாக வடிவமைக்கப்பட்ட உண்மைகளே இவை.
விஜய்யின் இந்த வளர்ச்சி முதன்மையாக 'ஈர்ப்பு' மற்றும் 'வாக்குறுதிகள்' ஆகிய இரு வலுவான தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் கவர்ச்சிகரமான தலைமைத்துவத்துடன் தமிழ்நாட்டிற்கு இருக்கும் நீண்டகால அரசியல் உறவிலிருந்து இந்த ஈர்ப்பு உருவானது; அதேவேளை, அவரது வாக்குறுதிகள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்ட மக்கள் நலன் மற்றும் முன்னேற்ற அரசியலின் ஒரு கலவையாகும். 'நிர்வாகத் திறன்' என்ற மூன்றாவது காரணிதான், இந்தத் தேர்தல் வெற்றி நிலையான அரசியல் நம்பகத்தன்மையாக மாறுமா என்பதைத் தீர்மானிக்கும்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) — சினிமா கவர்ச்சியும் இளைஞர் எழுச்சியும் ஒன்றிணைந்த தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் அலையை உருவாக்கியது.
பெரியார் முதல் பிம்ப அரசியல் வரை
நவீன தமிழக அரசியலின் வேர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்களில் உள்ளன. 1916-இல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு பிராமணரல்லாத அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. பின்னர், பெரியார் ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தின் மூலம் இந்த இயக்கத்தை மாற்றியமைத்து, 1944-இல் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக (தி.க) ஒருங்கிணைத்தார்.
பெரியாரின் அரசியல் முதன்மையாக பகுத்தறிவு, சாதி சமத்துவம், சமூக சீர்திருத்தம், சுயமரியாதை மற்றும் திராவிட அடையாளத்தை மையமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், வெகுஜன அரசியல் என்பது வெறும் அறிவுசார் விவாதங்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அரசியல் தொடர்பாடல் என்பது சாதாரண மக்களுடன் உணர்வுபூர்வமாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இணைக்கப்பட வேண்டியிருந்தது.
1949-இல் சி.என். அண்ணாதுரை தி.க-விலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க) உருவாக்கிய பிறகு, இந்த அணுகுமுறை அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடகம், மேடைப் பேச்சு, இலக்கியம் மற்றும் குறிப்பாக சினிமா ஆகியவற்றை அரசியல் அணி திரட்டலுக்கான கருவிகளாகப் பயன்படுத்துவதற்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகளை அண்ணாதுரை அடையாளம் கண்டார்.
மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் சமூக நீதி, மேட்டுக்குடி எதிர்ப்பு மற்றும் திராவிட அரசியல் கருத்துக்களை மக்கள் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதியச் செய்தனர். எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) வருகையுடன் இந்த மாற்றம் அதன் உச்சத்தை எட்டியது. சினிமாத் துறையை ஒரு தகவல் தொடர்பு கருவியாகப் பயன்படுத்திய முந்தைய தலைவர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆரே ஒரு செய்தியாக மாறினார்.
பின்னர், ஜே. ஜெயலலிதா இந்த அரசியல் மாதிரியை உள்வாங்கி, சினிமா கவர்ச்சியுடன் அதிகார மையப்படுத்தப்பட்ட அரசியல் ஆளுமையை இணைத்து அதனை மாற்றியமைத்தார். 1967-இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது இந்த மாற்றத்தை ஒரு நிறுவனமாக மாற்றியது. அன்றிலிருந்து தமிழக அரசியல் சினிமாவின் தாக்கத்திலிருந்து விடுபட்டது அரிது. அந்த வகையில், விஜய்யின் எழுச்சி என்பது ஓர் அரசியல் விசித்திரம் என்பதை விட, நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியின் அடுத்த கட்டமாகவே தெரிகிறது.
விஜய்யும் சினிமா அரசியலின் டிஜிட்டல் பரிணாமமும்
முந்தைய சினிமா பின்னணி கொண்ட தலைவர்களிடமிருந்து விஜய்யை வேறுபடுத்துவது அவர் உருவெடுத்த காலகட்டம் ஆகும். முந்தைய தலைமுறையினர் அரசியல் சினிமாவைத் திரையரங்குகள், ரசிகர் மன்றங்கள், சுவரொட்டிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாக அனுபவித்தனர். இன்றைய இளைய தலைமுறை வாக்காளர்கள் அரசியல் படிமங்களை சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ரசிகர் வலைப்பின்னல்கள், ரீல்ஸ்கள் (reels), மீம்கள் (memes), குறுகிய வீடியோக்கள் மற்றும் அல்காரிதம் சார்ந்த தகவல் தொடர்புகள் வழியாக எதிர்கொள்கின்றனர்.
பல இளம் வாக்காளர்களுக்கு, குறிப்பாக ஜென்-இசட் (Gen Z) தலைமுறைக்கு, விஜய் என்பவர் அரசியலுக்கு வரும் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு தலைமுறை மாற்றத்தின் அடையாளமாகவும் தெரிந்தார். அவரது திரைப்படங்கள் ஏற்கனவே ஊழல் எதிர்ப்பு, தார்மீக நீதி, சமூகப் பொறுப்பு மற்றும் அதிகார மையங்களுக்கு எதிரான எதிர்ப்பு போன்ற கருப்பொருள்களைக் கொண்டிருந்தன.
தமிழ்நாட்டின் இளைஞர் வாக்காளர்கள் — டிஜிட்டல் காலத்தில் சமூக ஊடகங்கள் வழியாக அரசியலை அனுபவிக்கும் புதிய தலைமுறை விஜய்யின் வெற்றிக்கு முக்கியமான காரணியாக அமைந்தது.
வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் மற்றும் வழக்கமான கட்சி அமைப்புகள் மீது பல இளம் வாக்காளர்கள் விரக்தியில் இருந்த நேரத்தில், விஜய் தன்னை ஒரு பழக்கமான அதேசமயம் மாற்றத்தை உருவாக்கும் ஆளுமையாகக் காட்டிக்கொள்வதில் வெற்றி பெற்றார். முதல்முறை வாக்காளர்கள், நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் டிஜிட்டல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் தவெக கணிசமான ஆதரவைப் பெற்றதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
வாக்குறுதிகள்: மக்கள் நலனும் எதிர்கால முன்னேற்ற அரசியலும்
வெறும் கவர்ச்சி மட்டும் தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றியைத் தக்கவைக்க முடியாது; மக்கள் நல அரசியலானது மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதை விஜய் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தவெக-வின் தேர்தல் அறிக்கை, பாரம்பரிய நலத்திட்டங்களையும் எதிர்காலத் தேவைகளுக்கான தொழில்நுட்ப நவீனத்துவத்தையும் இணைத்திருந்தது.
பெண்களுக்கு மாதாந்த நிதி உதவி, இலவச எரிவாயு சிலிண்டர்கள், பட்டதாரிகளுக்கு வேலையின்மை உதவித்தொகை, ஸ்டார்ட்-அப் மற்றும் கல்விக்கடன்கள், ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்னணுவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கான ஆதரவு ஆகியவை அதன் முக்கிய முன்மொழிவுகளில் அடங்கும்.
நீட் (NEET) தேர்விற்கு அந்தப் கட்சி காட்டிய எதிர்ப்பு அரசியல் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பது என்பது தமிழ்நாட்டின் மிகவும் உணர்ச்சிகரமான அரசியல் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது, குறிப்பாக மாணவர்கள், கிராமப்புற குடும்பங்கள் மற்றும் திராவிட சமூக நீதி கட்டமைப்பை ஆதரிப்பவர்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் கச்சத்தீவு மற்றும் பாக்கு நீரிணை மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நீண்டகால உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் விஜய் பயன்படுத்திக்கொண்டார். தேர்தல் வியூகத்தில் பெண்களும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தனர். பெண்களை மையமாகக் கொண்ட நிதி உதவித் திட்டங்கள் தமிழகத் தேர்தல்களில் வரலாற்று ரீதியாகத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளன.
நிர்வாகச் சவால்கள்
விஜய்யின் மிக முக்கியமான சவால் என்பது தேர்தல்களில் வெற்றி பெறுவதில் இல்லை, மாறாக திறம்பட ஆட்சி செய்வதில்தான் தொடங்குகிறது. முதல் முக்கியமான கேள்வி நிதி நிலைத்தன்மை பற்றியது. இந்தியாவிலேயே மிகவும் விரிவான மக்கள் நலத்திட்டங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு ஏற்கனவே திகழ்கிறது.
இரண்டாவது சவால் அதிகாரத்துவ நிர்வாகத்தில் உள்ளது. சினிமாவில் கிடைக்கும் பிரபலம் என்பது தானாகவே நிர்வாகத் திறனாக மாறிவிடாது. நிர்வாகத்திற்கு நிறுவன ரீதியான பேச்சுவார்த்தை, கொள்கை ஒருமைப்பாடு, செயல்படுத்தும் ஒழுக்கம் மற்றும் போட்டியிடும் நலன்களை நீண்டகால அடிப்படையில் கையாளுதல் ஆகியவை அவசியம்.
மூன்றாவது சவால் நிறுவனமயமாக்கல் ஆகும். ரசிகர்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்கள் மிகப்பெரிய தேர்தல் எழுச்சியை உருவாக்க முடியும், ஆனால் நிலையான நிர்வாகத்திற்கு நிறுவன ஆழம், அனுபவம் வாய்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஒழுக்கமான கட்சி கட்டமைப்புகள் தேவை.
தமிழ்நாடு சட்டமன்றம் — தேர்தல் வெற்றியை நிலையான நிர்வாகமாக மாற்றுவதே விஜய்யின் உண்மையான சோதனை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெறும் திரை பிம்ப அரசியலுக்கு அப்பால்
விஜய்யின் எழுச்சியை அரசியலுக்கு வரும் மற்றுமொரு நடிகரின் வரவு என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது பகுப்பாய்வு ரீதியாக எளிமையானது. தமிழ்நாடு இதற்கு முன்பும் சினிமா தலைவர்களைக் கண்டுள்ளது. ஆனால் விஜய்யின் வெற்றியைத் தனித்துவப்படுத்துவது எதுவென்றால், பாரம்பரிய சினிமா சார்ந்த அரசியல் கலாச்சாரம், டிஜிட்டல் காலத் தகவல் தொடர்பு, இளைஞர்களின் அபிலாஷைகள், நலத்திட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் ஆட்சி முறைக்கு எதிரான மனநிலை ஆகியவற்றுடன் இணைந்த விதம்தான்.
திராவிட அரசியல் மாதிரியானது வரலாற்று ரீதியாக உணர்ச்சிகரமான தகவல் தொடர்பு, மக்கள் நல அரசியல், பிராந்திய அடையாளம் மற்றும் கவர்ச்சிகரமான தலைமை ஆகியவற்றை ஒன்றிணைத்திருந்தது. விஜய் அந்தச் சட்டகத்தைச் சுவீகரித்துக் கொண்டார், ஆனால் சமூக ஊடகங்கள், முன்னேற்றத்திற்கான பொருளாதாரம் மற்றும் வழக்கமான அரசியல் மேட்டுக்குடியினர் மீதான விரக்தி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தலைமுறைக்கு ஏற்ப அதனை மாற்றியமைத்தார்.
இருப்பினும், உண்மையான சோதனை இனிமேல்தான் உள்ளது. உணர்ச்சி, அடையாளங்கள் மற்றும் நம்பிக்கை மூலம் தேர்தல்களை வெல்ல முடியும். ஆனால் அரசாங்கங்கள் இறுதியாக அவற்றின் செயல்பாடுகள், நிறுவனத் திறன், பொருளாதார மேலாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
விஜய் ஏற்கனவே தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைத்துவிட்டார். அவரது வெற்றி ஒரு நீடித்த அரசியல் மாற்றத்தின் தொடக்கமாக இருக்குமா அல்லது மாநிலத்தின் நீண்டகால சினிமா மைய அரசியல் பாரம்பரியத்தின் மற்றுமொரு அத்தியாயமாக அமையுமா என்பது ஒரு தீர்க்கமான காரணியைப் பொறுத்தே அமையும்: ஈர்ப்பும் வாக்குறுதிகளும் இறுதியில் நிர்வாகச் சவால்களைச் சமாளிக்குமா என்பதே அது.
வழிமூலம் — வீரகேசரி வாரப்பத்திரிகை
0 Comments