குருவியின் தலையில் பனங்காய்
தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் நடிகர் விஜய், பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழக மக்கள் மத்தியில் மட்டுமன்றி, இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலும், இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் அவர் பற்றிய எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.
தமிழக மக்களைப் பொறுத்தவரையில் விஜய் தலைமையில் அமைந்திருக்கும் அரசாங்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், தங்களுக்கு பெரியளவிலான நலன்களைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜயின் ஆட்சி இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேவேளை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் விஜய் பலத்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருக்கிறார். அவரது வெற்றியை தங்களுக்கு சாதகமான ஒரு மாற்றமாக இங்குள்ள தமிழர்கள் பார்க்கிறார்கள். இதுவும் கூட எந்தளவுக்கு சாத்தியமானது, இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு விஜயினால் செயற்பட முடியுமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதுபோல, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரைக்கும், சிங்களத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள், அவரிடம் எதிர்பார்ப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் புதிய சூழலை உருவாக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி அனுரவின் வாழ்த்து செய்திக்கு விஜய் நன்றி தெரிவித்து பதிலும் அனுப்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரின் வெற்றி குறித்து, இலங்கையில் இருந்து இந்தளவுக்கு வாழ்த்துகள் குவிவது — அதுவும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் பிரமுகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிவது — இதுதான் முதல்முறை. கடந்த பல தசாப்தங்களில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வலுவான தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்த போது கூட, இலங்கையில் இருந்து இந்தளவிற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டதில்லை. இப்போது சமூக ஊடகங்கள் வாழ்த்துகளை பரிமாறும் தளமாக இருப்பதால் வாழ்த்துகள் பரிமாறப்படுவது மட்டுமன்றி, அவை சமூக மயப்படுத்தப்படுவதும் அதிகரித்திருக்கிறது.
தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் நடிகர் விஜய் — இலங்கை உட்பட பரவலான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறார். (படம்: Wikipedia)
கச்சதீவும் மீனவர் பிரச்சினையும்
இந்த வாழ்த்துகளுக்கு பின்னால் தமிழக முதல்வர் விஜயிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கோரிக்கைகள் அவருக்கு சுலபமாக நிறைவேற்றக் கூடியவை அல்ல.
தமிழக மக்களுக்கு விஜய் ஒரு முக்கியமான வாக்குறுதியைக் கொடுத்திருந்தார் — கச்சதீவை மீட்பதுதான் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரே வழி என்று அவர் கூறியிருக்கிறார். இது ஒரு சிக்கலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை அவரால் தீர்க்க முடியாது. ஏனென்றால், இது இந்திய மத்திய அரசின் கையிலும் இலங்கை அரசின் கையிலும் உள்ள பிரச்சினை — இரண்டு நாட்டு அரசுகளும் இணைந்து கையாள வேண்டியது.
இதில் விஜய் அல்லது தமிழக அரசு அழுத்தங்களைக் கொடுக்கலாமே தவிர, அதற்கு அப்பால் செல்ல முடியாது. இதற்கு முன்பிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அதையே செய்து கொண்டிருந்தார். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்புவதை வழக்கமாக்கியிருந்தார். அந்த வழக்கத்தை இப்போது விஜய் தன் கையில் எடுத்திருக்கிறார். இனி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ விஜயினால் கடிதம் எழுத முடியும். ஆனால் அவர்களை விடுவிப்பதாயினும் சரி, அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதாயினும் சரி, அது இந்திய மத்திய அரசின் கையிலே உள்ளது. ஏனென்றால் இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய விவகாரம்.
இந்தியாவின் அரசியலமைப்பில் வெளியுறவு மத்திய அரசின் கீழ் இருக்கிறது. எந்தவொரு சமஷ்டி அரசியலமைப்பிலும் வெளியுறவு விவகாரங்கள் மாகாண அல்லது மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு வெளியுறவு விவகாரங்களில் எந்தப் பங்கும் கிடையாது, வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்கள் தலையிடவும் முடியாது. மத்தியில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு மாநிலங்களால் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதனைக் கடந்து மத்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்த வேண்டுமானால், மத்திய அரசை தம் கைக்குள் வைத்திருக்க வேண்டும். அது மத்திய அரசைக் கட்டுப்படுத்துகின்ற வெற்றியின் மூலமாகவோ அல்லது கூட்டணி அதிகார பலத்தின் மூலமாகவோ கையாள முடியும்.
ஆனால், விஜயிடம் தற்போது அத்தகைய எந்த வாய்ப்பும் இல்லை. அவரது கட்சி தமிழகத்தில் மட்டுமே இப்பொழுது அதிகாரத்துக்கு வந்திருக்கிறது, அதுவும் பிற கட்சிகளின் தயவுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கூட கொண்டிருக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜயின் கட்சிக்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் மீது தாக்கம் செலுத்த வேண்டுமானால், அதனுடன் இணங்கி நெருங்கிச் செயற்பட வேண்டும். அந்த சூழ்நிலையும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.
கச்சதீவு தீவு — தமிழக மீனவர் பிரச்சினையின் மையமாக இருக்கும் இந்தத் தீவை மீட்பது தமிழக அரசின் கையில் இல்லை; இது மத்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து தீர்க்க வேண்டிய விவகாரம். (படம்: Wikipedia)
பாஜகவுடனான தந்திரோபாய உறவு
விஜய் தலைமையிலான தவெகவை பாஜகவின் 'பி அணி' என முன்னர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தவெக ஆட்சியமைப்பதற்கு பாஜக அரசு தாராளமாக முட்டுக்கட்டைகளை போட்டுக் கொண்டே இருந்தது. இவ்வாறான ஒரு சூழலில் மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணைக்கப்போக்கில் செயற்பட முடியாத நிலையில் இருக்கிறது தமிழக அரசு. இன்னொரு பக்கத்தில் தமிழக அரசு மத்திய பாஜக அரசுடன் முற்றிலும் முரண்பட்டுச் செல்ல முடியாத நிலையிலும் உள்ளது. அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால் மாநிலத்துக்கான நலன்களைப் பெற்றுக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படும்.
முன்னைய திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசுடன் கடுமையாக முரண்பட்டுக்கொண்டதால் தமிழகத்திற்கான பல நிதி ஒதுக்கீடுகள் தடுக்கப்பட்டன. அதுபோன்ற நிலை ஒன்று உருவாவதை விஜய் தலைமையிலான தமிழக அரசு விரும்பாது. எனவே, பாஜக அரசுடன் தந்திரோபாயமான ஒரு உறவைக் கையாளவே அது விரும்பும். இவ்வாறான சூழலில் மத்திய அரசின் தீர்மானங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வலுவான சக்தியாக தவெகவோ அல்லது தமிழக அரசோ இல்லை என்பது தெளிவு.
வரலாற்று நிகழ்வுகளின் பாடம்
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் — குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கும் — இடையிலான உறவுகள் முக்கியமானவை. கடந்த காலங்களிலும் இது இறுக்கமாக பேணப்பட்டது. ஆனால் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் சூழல்களின் காரணமாக அந்த உறவுகள் அவ்வப்போது தொய்வடைந்து போனதுண்டு. தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கையிலும் பெருமளவில் ரசிகர்கள் இருப்பதால், அவர்களின் நலன்களையும் புறக்கணிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் நலன்களை புறக்கணிக்க முடியாத சூழல் முன்னைய அரசுகளை விட தற்போதைய தமிழக அரசுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் தலைமையிலான தமிழக அரசு செயற்படுவது கடினம்.
இந்த நிலை ஒரு கட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்தது. கலைஞர் கருணாநிதிக்கும் இருந்தது. ஜெயலலிதாவுக்கும் இருந்தது. முன்னர், எம்ஜிஆர் இந்திய மத்திய அரசை பணிய வைக்க முயன்றார். ஆனால், சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அவரால், மத்திய அரசை தம் விருப்படி இயக்க முடிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்த விடயத்திலோ, விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் போர் விடயத்திலோ அவரால் தீர்க்கமாகச் செயற்பட முடியவில்லை.
அதுபோல, கருணாநிதியினால் இறுதிக்கட்ட போரை நிறுத்த முடியவில்லை. தன் இயலாமையை மறைக்க அவர் மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அதையும் கூட பிரணாப் முகர்ஜி மூலம் இந்திய மத்திய அரசு கைவிடச் செய்தது. போர் முடிந்த பின்னர், கருணாநிதியினால் இலங்கைத் தமிழர்களுக்காக செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் — ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கச் செய்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவர் இருந்ததால் அதனைச் செய்ய முடிந்தது.
இவ்வாறான நிலையில், இப்போது மத்திய அரசுக்கு வெளியே இருக்கின்ற — அதனுடன் கூட்டு சேராத — தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தினால் எவ்வாறு மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தாண்டி, விஜய் தலைமையிலான தமிழக அரசினால் மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்கலாம், அழுத்தங்களைக் கொடுக்கலாமே தவிர — தீர்மானங்களை எடுக்க முடியாது. மத்திய அரசை எடுக்கக் கூடிய தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய தரப்பாக தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளும் போதுதான், இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்தகைய ஒரு புறச்சூழல் இப்போதைக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
0 Comments