elugai

ஜனாதிபதி போட்ட குண்டு: 6 மடங்கு எரிபொருள் செலவு அதிகரிப்பு உண்மையா? மாயையா?

ஜனாதிபதி போட்ட குண்டு

ஜனாதிபதி போட்ட குண்டு

கட்டுரையாளர் - சத்ரியன்

கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் எரிபொருள் இறக்குமதிச் செலவு 6 மடங்காக அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் வெளியிட்ட இந்தத் தரவுகள் அதிர்ச்சியையும் அதேவேளை ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று எரிபொருள் விலை உயர்வு ஒரு உலகளாவிய நெருக்கடியாக மாறியிருக்கிறது — ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்ததன் நேரடியான விளைவு தான் இது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பினாலும் கூட இந்த ஆண்டுக்கான எண்ணெய்த் தேவையை முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றும் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமையின் மே மாத அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு பக்கம் மக்களின் மடியில் இருந்து பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நாட்டின் திறைசேரியில் உள்ள அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. பெப்ரவரி மாதம் 7.2 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்புச் சொத்துகளின் மதிப்பு ஏப்ரலில் 6.759 பில்லியன் டொலராக குறைந்திருக்கிறது. அதுபோல அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக சரிந்துகொண்டிருக்கிறது — தற்போதைய அரசாங்கம் 2024இல் ஆட்சிக்கு வரும்போது 289 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 2026 ஏப்ரல் 14ஆம் திகதி 330 ரூபாவாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 41 ரூபா வீழ்ச்சி என்பது சாதாரண விடயம் அல்ல.

இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு வரிசை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு — பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது போர் தொடங்கப்பட்டதும் நாடு முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. சராசரியாக மாதம் 333 மில்லியன் டொலர் செய்ய வேண்டிய இடத்தில் பெப்ரவரியில் 98 மில்லியன் டொலருக்கே கொள்வனவு செய்யப்பட்டது.

பெப்ரவரியின் உண்மை என்ன?

2024 ஆம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக 4.4 பில்லியன் டொலர் செலவிட்டதாகவும் 2025இல் இது 4 பில்லியன் டொலராக குறைந்ததாகவும் மத்திய வங்கியின் தரவுகள் முன்னர் வெளியாகியிருந்தன. 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி சராசரியாக மாதம் ஒன்றுக்கு 333 மில்லியன் டொலருக்கு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெப்ரவரியில் 98 மில்லியன் டொலருக்கே எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது என்றால் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கும். பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது போர் தொடங்கப்பட்டதும் நாடு முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது நினைவிருக்கலாம் — அப்போது அரசாங்கம் ஒன்றரை மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக கூறியது. ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் அரசாங்கம் எண்ணெய் இருப்பை சீர்படுத்தியிருக்கிறது. அதனால் தான் மார்ச் மாதம் எண்ணெய் இறக்குமதி செலவு 216 மில்லியன் டொலராகவும் ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் அதிகரித்தது. மே மாதம் எரிபொருள் கொள்வனவு செலவு 522 மில்லியன் டொலரை எட்டும் என ஜனாதிபதியினால் ஒரு கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பும் கடந்த சில மாதங்களில் கொள்வனவில் ஏற்பட்ட தொய்வும் சேர்ந்து இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன.

பெப்ரவரியில் 98 மில்லியன் டொலருக்கு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் மே மாதம் 522 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்யப்படும் அளவுக்கு ஆறு மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஒரு மாய பிம்பத்தை ஜனாதிபதி உருவாக்க முற்பட்டிருக்கிறார். இது அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

டீசல் 720 ரூபா — உண்மையா? அச்சுறுத்தலா?

இலங்கை எரிபொருள் நிலையம் விலை உயர்வு இலங்கை எரிபொருள் நிலையம் — ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் டீசலை 600 ரூபாவுக்கு விற்க வேண்டிய நிலை இருப்பதாக கூறிய சில நாட்களில் விலை 392 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இப்போது 720 ரூபா என்று கூறியிருப்பது மேலும் உயர்வுக்கான அபாய சமிக்ஞையா என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் டீசலை 600 ரூபாவிற்கு விற்க வேண்டிய நிலை இருப்பதாக கூறிய சில நாட்களில் அதன் விலை 392 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இப்போது அவர் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாவாக உயர்ந்திருப்பதாக கூறியிருப்பது டீசல் விலையை மேலும் உயர்த்துவதற்கான அபாய சமிக்ஞையா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் ஒரு லீற்றர் டீசல் 279 ரூபாவாகவே விற்கப்பட்டது. அப்போது சர்வதேச சந்தையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 1.20 டொலராக இருந்தது. 2026 மே 11ஆம் திகதி அது 1.58 டொலராக உயர்ந்திருக்கிறது — இது கிட்டத்தட்ட 31.6 வீத அதிகரிப்பாகும். ஆனால் இலங்கையில் விலை 279 ரூபாவிலிருந்து 392 ரூபாவாக 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதற்குள் அரசாங்கம் 100 ரூபா மானியம் வழங்குவதாக கூறுகிறது — அப்படியானால் அது எங்கு செல்கிறது?

வாகன இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியதன் விளைவாக டொலரும் வெளியே போனது, எரிபொருள் தேவையும் அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு என்பன ஏற்பட்டிருப்பது உண்மை — அது இலங்கைக்கு விதிவிலக்கான ஒன்று அல்ல. ஆனால் இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் தமது தவறுகளை இதற்குள் மறைத்துக்கொள்ள முற்படுகிறது என்பதே தெளிவாகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எரிபொருள் செலவு ஆறு மடங்கு அதிகரித்ததாக வெளியிட்ட தரவுகள் கேள்விக்குட்படுகின்றன. சர்வதேச விலை உயர்வை மட்டுமே காரணமாகக் காட்டுவது அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைக்கும் முயற்சியாக விமர்சிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments