இலங்கையை மையப்படுத்திய பனிப்போர்
சீனாவும் இந்தியாவும் இலங்கையை மையப்படுத்தி இரகசியமாக நடத்திக்கொண்டிருந்த ஒரு போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் தரவுகள், இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்த இந்தியாவை சீனா முந்திவிட்டதாக காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில் சீனா-இலங்கை இடையிலான வர்த்தகம் 5.5 பில்லியன் டொலர்களை எட்டியதாகவும் இந்தியாவின் 5.4 பில்லியன் டொலர் வர்த்தகத்தை அது முந்திவிட்டதாகவும் மத்திய வங்கியின் தரவுகள் காண்பித்திருந்தன. இலங்கையின் மூன்றாவது வர்த்தக பங்காளியாக 3.5 பில்லியன் டொலர்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருந்தது.
இலங்கை மத்திய வங்கி — 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் சீனா இந்தியாவை முந்தியதாக காட்டும் தரவுகள் வெளியிடப்பட்டதும் இந்திய-சீன இராஜதந்திர மோதல் வெளிப்படையானது.
எக்ஸ் தளத்தில் வெடித்த இராஜதந்திரப் போர்
இந்த அறிக்கை வெளியான போது இந்தியா உடனடியாக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்த நிலையில் இலங்கையின் முதன்மையான வர்த்தகப் பங்காளியாக சீனா மாறிவிட்டது என்று இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் யூ ஜிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 2025 ஆம் ஆண்டில் சீனா-இலங்கை இடையிலான வர்த்தகம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் அந்தப் பதிவில் கூறியிருந்தார். இதன் மூலம் புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் யூ ஜிங் இந்தியாவை உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினார்.
உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்திய வர்த்தக அமைச்சின் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்திருந்த அவர், 2025 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இருதரப்பு வர்த்தகப் பரிவர்த்தனை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டில் 689 மில்லியன் டொலர்களிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 1.53 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இலங்கை ஏற்றுமதிகளுக்கு இந்தியா தற்போது இரண்டாவது பெரிய இலக்காக உள்ளதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டிருந்தார். இதற்கு சீனத்தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
சீன வாகனங்களும் வர்த்தகப் போட்டியும்
அண்மையில் இலங்கை அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி அளித்த பின்னர் சீன வாகனங்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. இது இருதரப்பு வர்த்தகத்தின் அளவை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் இலங்கையை மையப்படுத்தி பல்வேறு துறைகளில் போட்டி போடுகின்றன என்பது இரகசியமான விடயம் அல்ல. நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு தரப்பும் இலங்கையின் மீது செல்வாக்கு செலுத்த முற்பட்டிருக்கின்றன. இதனால் இலங்கை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் நெருடலான முறையில் தீர்மானங்களை எடுக்கவும் நேரிட்டது.
சீன மின்சார வாகனங்கள் — இலங்கையில் வாகன இறக்குமதி தாராளமாக்கப்பட்டதைத் தொடர்ந்து சீன வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இது இருதரப்பு வர்த்தக புள்ளிவிவரங்களில் சீனாவுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையுடனான மிகப்பெரிய வர்த்தக பங்காளர் நாமே என்று கூறிக்கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்கின்றன என்பது இலங்கைக்கு பெருமைக்குரிய விடயம் தான். ஏனென்றால் இன்று சீனா உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்திற்கான போட்டியில் நிற்கிறது; இந்தியாவும் அதற்கு சவால் விடும் வகையில் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக மாறிவிட்டோம் என சீனா உரிமை கோருகின்ற அளவுக்கு இலங்கை ஒன்றும் மிகப்பெரிய பொருளாதார சக்தி அல்ல. அது இந்தியாவை வீழ்த்திவிட்டோம் என்று உரிமை கோருகிறது என்பது தான் இதற்குப் பின்னாலுள்ள உண்மை.
விரக்தியும் வர்த்தகப் பனிப்போரும்
அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சீன தூதுவர் அளித்துள்ள செவ்வியில் புற அழுத்தங்களினால் வடக்கு கிழக்கில் சீன முதலீடுகள் திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனை அவர் ஒரு தேவையற்ற தலையீடாக, அழுத்தமாக கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இந்தியாவின் அழுத்தங்களினால் சீனா விரக்தி அடைந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
வர்த்தகத் துறையில் நீடிக்கின்ற இந்த பனிப்போர் சாதாரணமானது அல்ல என்பதை இரண்டு நாடுகளினதும் இராஜதந்திரிகள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் முதலீடுகளை அதிகரித்து இருதரப்பு வர்த்தகத்தையும் உறவுகளையும் வலுப்படுத்துவதன் ஊடாக சீனா அடைய நினைக்கும் இலக்கு இந்தியாவை பின்தள்ளுவது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளை இந்தியாவும் அதற்கு சளைக்காத வகையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை எந்தளவுக்கு மட்டுப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மட்டுப்படுத்துவதற்கு முற்படுகிறது. நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற மூலோபாய ரீதியான போட்டியை ஒதுக்கித்தள்ளிவிட்டு வர்த்தக ரீதியான போட்டி இரு நாடுகளுக்கும் இடையில் தீவிரமடைந்திருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.
0 Comments