elugai

அதிகார மையங்களுக்கு அப்பால்: ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றுப் பிழைகளும், எதிர்காலத் தேடல்களும்.

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்த ஈழத்தமிழரும்

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்த ஈழத்தமிழரும்

கட்டுரையாளர் - புதினப்பலகை குழுமம்

2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவல முடிவின் பின்னரான முழுமையான காலப்பகுதியில் மற்றுமொரு புதிய காலகட்டத்துள் நாம் நுழைந்திருக்க வேண்டும். ஆற்றல் கொண்ட புதிய தலைமைத்துவத்துடன் காலத்துக்கேற்ற வழிமுறைகளுடன் இலக்கினை நோக்கியும் நடந்திருக்கவும் வேண்டும். ஆனால் பதினேழு ஆண்டுகளை எட்டியுள்ள நாம் இன்னமும் இருட்டை துழாவியபடி திசைதெரியாமல் அலைகின்றோம் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் லண்டன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், லண்டன் — 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவல முடிவுக்கு பின் பதினேழு ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர் சமூகம் திசைதெரியாமல் அலைகிறது.

ஆதலால், ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தொடர்பான ஆக்கபூர்வமான தொடர்ந்த தேடல்கள் தற்போதும் அவசியம் என்பதனையே எமது கருத்துக்களமான 'புதினப்பலகை' குழுமம் முன்மொழிகின்றது.

மீள்பரிசீலனையின் அவசியம்

ஈழத்தமிழரின் நிகழ்காலம் என்பது கடந்தகால குற்றங்களுக்கும் உரிமைமறுப்புக்களுக்கும் நியாயம் தேடும் முனைப்புகளுக்குள் மட்டுப்படுத்திக்கொள்வது என்ற நிலையினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. தமிழ்மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனஒழிப்பு படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பது வெறுமனே பழிவாங்கும் உணர்வுகளுக்கு அப்பால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை பெற்றுக்கொள்வதாக விரிவுபடுத்தப்படவேண்டும்.

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மக்களின் அரசியல் மூலோபாயங்கள் தொடர்பாகவும் சிறப்பானமுறையில் மீளாய்வுகள் செய்யப்படுவது எதிர்கால செல்நெறியினை தீர்மானிப்பதற்கான முதற்பயிற்சியாகவும் அவசியமாகவும் உள்ளது.

இதுவரை, நம்மிடையே மீளாய்வுகள் மிகமிக அரிதாகவே நடத்தப்பட்டுள்ளன. மீளாய்வு என்றாலே பலருக்கும் கசப்பாகத்தான் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் தமிழர் போராட்டம் யாழ்ப்பாணத்தில் தமிழர் போராட்டம் — ஆட்சியதிகாரம் சார்ந்த ஒற்றைப்பரிமாண அரசியல் அணுகுமுறை தமிழ்மக்களின் போராட்டவரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தவறு.

ஒற்றைப்பரிமாண அரசியலின் தவறு

எழுபதாண்டுகளுக்கும் மேலாக பலபரிமாணங்களில் மேலேழுந்த தமிழ்மக்களின் அரசியற்தலைமைகள் யாவும் அரசியல் போராட்டம் என்பது ஆட்சி அதிகாரத்தினை வென்றெடுப்பது அல்லது அரசுசார்ந்த அதிகாரங்களினை பரிமாறிக்கொள்வது என்ற ஒற்றைப்பரிமாண தளத்திலேயே கட்டியெழுப்பப்பட்டிருந்தன.

ஆட்சியதிகாரம் வலுவிழக்கப்படும் சூழலிலும் சமூகம் தன்னைத் தக்கவைத்து மேலேழக்கூடிய பொருண்மியக்கட்டமைப்புகளும் தனித்துவமான நிறுவனக்கட்டமைப்புகளும் உருவாக்கப்படாமை தமிழ்மக்களின் போராட்டவரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தவறாகவே எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

2009-மே மாதத்திற்கு முன் தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பினுள் நிர்வகிக்கப்பட்ட முறைசார அரசநிர்வாகமும் கூட தமதுஅமைப்பு சார்ந்த அதிகாரக்கட்டமைப்பிற்கு புறம்பாக தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் தனித்துவமாக செயற்படக்கூடிய பொருண்மிய கட்டமைப்புக்களினையும் அதுசார்ந்து செயற்படக்கூடிய தனிமனித மற்றும் சமூக ஆளுமைகளினையும் உருவாக்குவதிலோ, ஊக்கப்படுத்துவதிலோ ஆர்வம்கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானது.

புலம்பெயர் சமூகத்தின் தோற்றப்போலிகள்

2009 மே மாதத்திற்கு பின்பு தோற்றம் பெற்றுள்ள அக புற சூழல்கள் தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானிக்கும் உரிமையினை பல்வேறு தேசிய, அனைத்துலக பிராந்திய சக்திகள், குழுக்கள், தனிமனிதர்கள், மற்றும் மறைகரங்களின் விளையாட்டுப் பொருளாக்கியுள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

லண்டன் புலம்பெயர் தமிழர் போராட்டம் லண்டனில் புலம்பெயர் தமிழர் போராட்டம் — புலம்பெயர் சமூகத்தினுள் குழுநிலைவாதங்களும், தோற்றப்போலிகளும் மக்களை பலிக்கடாவாக்குகின்றன.

அத்துடன், புலம்பெயர் சமூகத்தினுள் ஊதிப்பெருத்து நிற்கும் குழுநிலைவாதங்களும், தங்களது தொடர் இருப்புக்காக மேடையேற்றப்படும் சாகச மகாநாடுகளும் – கூட்டங்களும், இரகசியக் கலந்துரையாடல்களும் இன்னுமொரு வகையான தோற்றப்போலிகள் எனவே உணரமுடிகின்றது. இந்த தோற்றப்போலிகளின் அரைவேக்காட்டு செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் மக்களே பலிக்கடாவாக்கப்படுகின்றனர் என்பதே 'புதினப்பலகை'யின் கவலையாக உள்ளது.

Post a Comment

0 Comments