elugai

ஜனநாயகத்தின் இறுதி அதிகாரிகள் எளிய மக்களே! 2026 தேர்தல் உணர்த்தும் பாடமும், திராவிட இயக்கத்தின் எதிர்காலமும்.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் - ஒரு பகுப்பாய்வு

மக்களின் பக்கம் நில்லுங்கள் - தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்த சிந்தனைகள்

கட்டுரையாளர் - கை அறிவழகன்

மாண்புமிகு C ஜோசப் விஜய் தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு திராவிட இயக்கங்களின் வழியாக வாழ்வின் இடர்களை எதிர்கொண்டு இயங்கும் ஒரு எளிய உழைக்கும் மனிதனாக எனது வாழ்த்துகளையும், அன்பையும் உளப்பூர்வமாக முன்வைக்கிறேன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மாபெரும் ஆளுமையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் இயங்கி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மீது முற்றிலுமாக தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. ஏறத்தாழ 60 இடங்களில் திமுகவின் வேட்பாளர்களை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களைத் தவிர்த்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் பல்வேறு குறைகளைக் கடந்து மக்களோடு உண்மையாக நின்றவர்கள். சாதி, மதம், மொழி என்று எந்த வேறுபாடுகளையும் காட்டாமல் அவர்கள் அரசியல் இயக்கத்தில் மக்களோடு இணைந்திருந்தார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் — மக்கள் தீர்ப்பு புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கியுள்ளது.

பாஜக நிராகரிப்பும், இளைஞர் புரட்சியும்

மக்கள் முழுமையாக திமுகவையோ, அதிமுகவையோ நிராகரித்து விட்டார்கள் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை அதிமுக பாரதீய ஜனதாவின் துணையின்றி தனித்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ் மக்கள் பாரதீய ஜனதாவை முற்று முழுதாக நிராகரித்து விட்டார்கள். பாரதீய ஜனதாவும் இந்த முறை கழகங்களை நீர்த்துப் போகச் செய்வது என்ற செயல்திட்டத்தோடு மட்டும்தான் களமிறங்கியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருக்கும் என்கிற குற்றச்சாட்டை நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒருவேளை அப்படி பாஜக திட்டமிட்டிருந்தால் தனது சொந்த வேட்பாளர்கள் 10 பேரையாவது வெற்றி பெற வைத்து இப்படி ஒரு வாய்ப்பை மிக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குறித்த ஒரு மிகப்பெரிய இடைவெளியில் நாம் இருந்திருக்கிறோம். அவர்களைப் பற்றிய கருத்தாக்கங்களை நாம் தவறாகவே கணித்திருக்கிறோம். இளைஞர்கள் நினைத்தால் இப்படி ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

திரு.விஜய் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்பது அவர்களது கனவாக இருந்தது. குறிப்பாக இளம்பெண்கள் அவர் மீது வைத்திருக்கிற நம்பிக்கையும், அன்பும் திகைக்க வைப்பதாக இருக்கிறது. இளம்பெண்கள் தான் ஆழமாகவும், நுட்பமாகவும் தவெகவுக்கான பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டார்கள். அந்தப் பெண்களை மையமாக வைத்து அவர்களை முன்னிறுத்தி திரு.விஜய் அவர்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவை. இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்களா என்பதைத் தீவிரமாக யோசித்து அவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த செயல்திட்டங்களை திரு.விஜய் அவர்களது அணியினர் முன்னெடுக்க வேண்டும்.

ஜோசப் விஜய் தவெக பொதுக்கூட்டம் திரு.ஜோசப் விஜய் தவெக பொதுக்கூட்டத்தில் — இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் மாபெரும் ஆதரவைப் பெற்றுள்ளார்.

இந்துத்துவ ஐயப்பாடும், காங்கிரஸ் நகர்வும்

திரு.ஜோசப் விஜய் அவர்கள் இந்துத்துவ ஆற்றல்கள் வழியாகக் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். ஒருவேளை அவர் இந்துத்துவ ஆற்றல்களால் உருவாக்கப்பட்ட பிம்பமாக இருக்கலாம் என்ற ஐயப்பாடு எனக்கும் எழுந்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களில் அவரது செயல்பாடுகள் அந்த ஐயப்பாட்டை நீக்கியது. அவர் காங்கிரஸ் கட்சியோடும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியோடும் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி திமுகவோடு இருந்த 20 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டு தவெகவின் பக்கமாகச் சென்றது அதை உறுதி செய்தது.

திமுகவின் வழியாகவே பல்வேறு அதிகார மையங்களை வந்தடைந்த காங்கிரஸ் அப்படிச் செய்தது சரியா? தவறா? என்ற விவாதம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட வேண்டியது. திமுக இதுகுறித்து விரிவாகவும், உறுதியாகவும் விவாதிக்கும். திமுகவைக் கடந்து காங்கிரஸ் இப்படிப் போனதற்கான காரணிகளில் மிக முக்கியமானதாக அரசியல் பார்வையாளர்களால் வைக்கப்படுவது பாரதீய ஜனதா தொடர்புடைய பல்வேறு வணிக மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் திரு.சபரீசன் அவர்கள் ஈடுபாடு காட்டியது என்கிறார்கள் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.

அது நம்பத்தகுந்ததா இல்லையா? என்ற கேள்வியைத் தாண்டி திரு.சபரீசனின் திரைமறைவுப் பங்களிப்புகள் கடந்த ஆட்சியின் போது இருந்தது என்பதை நேர்மையாக நான் ஒப்புக் கொள்வேன். அதை திராவிட இயக்க முட்டுக் கொடுப்பால் சரிசெய்து விடமுடியாது.

திரைக்கவர்ச்சியும், தலைமுறை இடைவெளியும்

தவெக மீதான இளைஞர்களின் மிகப்பெரிய ஈர்ப்பு திரைக்கவர்ச்சி என்பதில் எனக்கு இப்போதும் முரண்கள் இல்லை. ஆனால், அத்தகைய திரைக்கவர்ச்சியை உடைக்கும் பணிகளை, இளைஞர்களிடம் சென்று அவர்களை அரசியல் மயப்படுத்தும் வேலையை நாம் செய்யவில்லை. இந்த இயக்கத்தில் நாம் தலைமுறை இடைவெளியை உருவாக்கி இருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள், பெரும்பாலான அமைச்சர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக எண்ணாமல் குறுநில மன்னர்களைப் போல வலம் வந்தார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அவர்களது உடல் மொழியில் ஒரு செருக்கும், அதிகாரத் திமிரும் இருந்தது.

திரு.சேகர் பாபுவைப் போன்றவர்கள் சென்னை மேயர் திருமதி ப்ரியா அவர்களோடு எப்போதும் திரிந்ததை வெகுமக்களில் யாரும் ரசிக்கவில்லை. அது ஒரு மாதிரியான ஆணாதிக்க சமூக மனநிலையின் எதிரொலி போலவே இருந்தது. குறிப்பாகப் இன்றைய இளம்பெண்கள் அந்தக் காட்சிகளை வெறுத்தார்கள். அந்தக் காட்சிகள் பொதுச் சித்திரமாக உருவாகி வாக்காளர்களின் ஆழமான உளவியலில் மாற்றத்தை உருவாக்கி இருந்தது என்பதை திமுக உணர வேண்டும்.

இவ்வளவு நலத்திட்டங்களைப் பெண்களுக்கு வழங்கியும் அவர்களது வாக்குகளைப் பெற முடியவில்லை என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணிகள் குறித்து நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய இடத்தில் நிற்கிறோம்.

திமுக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் — வாரிசு அரசியல் குற்றச்சாட்டும், கட்சி மறுசீரமைப்பு தேவையும் முன்னணியில் உள்ளது.

வாரிசு அரசியலும், எதிர்காலப் பாதையும்

வாரிசு அரசியல் குற்றச்சாட்டு மிக எளிதில் கடந்து போக இயலாதது. இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் திரு.உதயநிதி ஸ்டாலினை நியமித்தால் திமுகவின் மீதான வெகு மக்களின் பொதுப்பார்வை எதிர்மறையாகவே செல்லும் என்பதை நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். கடைமட்டத் தொண்டர்களில் ஒருவரை திரு.சா.சி.சிவசங்கர் போன்ற மக்களோடு மிக இணக்கமாக இருந்து செயல்பட்ட ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமியுங்கள். அது திமுகவின் ஒட்டுமொத்த பிம்பத்தையும் மாற்றி அமைக்கும்.

இறுதியாக திரு.ஜோசப் விஜய் அவர்களது வெற்றியானது ஒட்டுமொத்தமாக அவரிடம் தமிழக மக்களால் வழங்கப்படவில்லை. இடதுசாரிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கும் நீங்கள் செய்த தொகுதிப் பங்கீட்டு மோசடியில் தேமுதிக (பிரேமலதா) என்கிற குதிரை பேர அரசியல் இயக்கத்தை முன்னிறுத்தினீர்கள். அவர்களுக்கு மாநிலங்களவைப் பதவி வழங்கப்பட்டதும் வெகு மக்களின் பார்வையில் மட்டுமல்லாமல் தலித் மக்களின் ஆழ்மனதில் தீராத வேதனையை உருவாக்கி இருந்ததை நீங்கள் அறிவீர்கள். வெறும் வாக்கு வங்கி அரசியல் என்பதைத் தாண்டி இவற்றை எல்லாம் திராவிட இயக்கம் சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனாலும், இப்போதும் இடதுசாரிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், விடுதலைச் சிறுத்தைகளும் தான் இந்துத்துவ ஆற்றல் தமிழ் மக்களின் வாழ்வில் படிந்து விடக்கூடாது என்கிற முடிவை தீர்க்கமாக எடுத்து உங்களையும் ஓரளவு மதிப்பு மிக்கவர்களாக மாற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மனப்பூர்வமாக அதற்கு அனுமதித்ததில் உங்கள் பங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் மனம் நிறைவடைகிறது.

காங்கிரஸ் எப்போதும் முழுமையான இந்துத்துவ எதிர்ப்பியக்கம் இல்லை. அது ஒரு மிதவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் என்பதை நீங்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள். திரு.ராகுல் காந்தியைக் கடந்து காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவதில் இந்துத்துவ அடிப்படைவாதிகள் எப்போதும் முன்னே நிற்கிறார்கள். நிற்பார்கள். வடக்கின் அரசியல் சமன்பாடு அதுதான்.

உண்மையாகவே திராவிட இயக்கம் இடதுசாரித் தத்துவங்களோடு இணைந்ததாக இருக்குமேயானால் நாம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எளிய மக்களின் நம்பிக்கையை, இளம் தமிழ் இதயங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். அதற்காக வரும் காலங்களில் உழைக்க வேண்டும்.

அதிகாரம் இன்று வரும் நாளை இன்னொருவரிடம் போகும். நேற்றுவரை உங்கள் பின்னால் அணிவகுத்து வந்த பிரம்மாண்டமான "கான்வாய்" இப்போது திரு.ஜோசப் விஜய் என்கிற திரைப்பட நடிகரின் பின்னால் செல்லுமாறு மக்கள் ஆணையிட்டிருக்கிறார்கள். நேற்றுவரை உங்களிடத்தில் கைகட்டி நின்று உயர் காவல்துறை அதிகாரிகளும், தலைமைச் செயலக அதிகாரிகளும் இப்போது திரு.விஜய் அவர்களின் பின்னால் குடை பிடித்துக் கொண்டு ஓடுவார்கள். இது நாளை திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் நிகழும்.

எளிய உழைக்கும் மக்களே இங்கு இறுதி அதிகாரிகள், அவர்கள் செருப்பில்லாமல் நடந்து போய் எங்காவது நின்று வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால், அவர்களது மனம்தான் இங்கு அதிகாரத் தோரணைகளைத் தவிடு பொடியாக்கி பிரம்மாண்டமாக எப்போதும் உயர்ந்து நிற்கும் பேரண்ட இயக்கம்.

மக்களின் பக்கம் நில்லுங்கள், மக்கள் உறுதியாக உங்கள் பக்கம் நிற்பார்கள். இது அரசியல் மட்டுமில்லை. இதுதான் மானுட வாழ்வின் ரகசியமே.

Post a Comment

0 Comments