elugai

மார்க்சியமும் தமிழ் மரபும்: திணைக் கோட்பாடு முதல் பண்பாட்டு அரசியல் வரை பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு.

பேராசிரியர் சிவத்தம்பி: தமிழ் மரபின் உயிர்ப்பு நிலை

பேராசிரியர் சிவத்தம்பி: தமிழ் மரபின் உயிர்ப்பு நிலை

கட்டுரையாளர் - ஆய்வாளர் குழு

1932 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி அவர்களுக்கு 2012 ல் 80 ஆம் ஆண்டுவிழாவை சிறப்புற நடத்த அவரது மாணவர்களும் நண்பர்களும் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் 2011 சூலை மாதம் ஆறாம் நாள் அவர் மறைந்தார். உண்மையில் சூன் மாதம் 18 ஆம் நாளில் அவரது எண்பதாம் அகவையைச் சிறப்பிக்கும் முதல் கூட்டம் அவரது ஊரவர்கள், பள்ளி, கல்லூரித் தோழர்களால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தை அவர் ஆவலோடு எதிர்நோக்கவும் செய்தார். அக்கூட்டத்தில் அவரைச் சிறப்பித்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள இயலவில்லை.

தமிழாய்வுப் பெரும்பரப்பில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈடு இணையற்ற செல்வாக்கைச் செலுத்தி வந்த அவரது மறைவு திடீரென ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. 70 நூல்கள், 200 ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் படைத்துள்ளார் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவரது எழுத்துக்களின் அளவை விட மிகப் பரந்த செல்வாக்குப் புலம் அவருக்கு உண்டு என்பதை அவரை அறிந்தோர் ஒத்துக்கொள்வர்.

இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கம், தமிழ்நாட்டில் தோழர்கள் ரகுநாதன், ஜீவா, நாவா, நல்லகண்ணு ஆகியோருடனான தொடர்புகள், பேராசிரியர் கைலாசபதியுடனான அவரது நட்பு, தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களுடனான உறவுகள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர்களான ரொமிலா தப்பார், சம்பகலட்சுமி ஆகியோருடனான ஆய்வுத் தொடர்புகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்களுடன் தொடர்புகள், தமிழ் நாட்டில் பேராசிரியர்கள், நண்பர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், வீ. அரசு, மே.து.ரா, பொன்னீலன், அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி, சுப்பராயலு, ராஜன், நாகசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோருடனான உறவுகள், இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அவரது அற்புதமான மாணவர்கள், இலங்கையிலும் தமிழகத்திலும் கல்விப்புலங்களில் கற்கை நெறிகளில் அவர் முன்னின்று ஏற்படுத்திய மாற்றங்கள் எனப் பன்முகப்பட்டதான செல்வாக்குப்புலம் கொண்டதாக பேராசிரியர் சிவத்தம்பியின் வாழ்வு அமைந்திருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை யாழ்ப்பாணம் — பேராசிரியர் சிவத்தம்பி 1932-ல் கரவெட்டியில் பிறந்து தமிழாய்வுப் பெரும்பரப்பில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செல்வாக்கு செலுத்தினார்.

பேராசிரியர் சிவத்தம்பியும் மேற்கத்திய மார்க்சியமும்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மார்க்சிய அறிஞர்களும் சிந்தனையாளர்களும் சோவியத் மார்க்சிய செல்வாக்கைப் பெற்றவர்கள் என்றே அதிகம் அறியப்பட்டுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பியின் மீதும் கூட ரஷ்ய மார்க்சியத்தின் செல்வாக்கு உண்டு. சோவியத் யூனியனுக்கும் சீனாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நாட்களில் "கைலாசபதி சீன ஆதரவு நிலை எடுத்தார்; நான் மாஸ்கோ ஆதரவு நிலை எடுத்தேன்" என்று அவரே குறிப்பிடுவார். இருப்பினும் பேராசிரியர் சிவத்தம்பியிடம் மேற்கத்திய மார்க்சியத்தின் பதிவுகள் மிக அடிப்படையாக உண்டு என்பதைச் சொல்லியாக வேண்டும்.

"தமிழை முறையாகக் கற்ற பண்டிதரின் மகனாக வளர்ந்தாலும் பேராசிரியர் கண்பதிப்பிள்ளை, செல்வநாயகம் ஆகியோரது ஆங்கிலம் சார்ந்த செல்வாக்கை உள்வாங்கியதாலும் இங்கிலாந்தில் தோம்சனின் மார்க்சிய கிரேக்க அறிவியலைக் கற்றதாலும் அவருடைய சிந்தனையும் பார்வையும் புதிய திசைகளை நோக்கிச் சென்றன" என்று செல்வா கனகநாயகம் தெரிவிக்கின்றார் (மணற்கேணி, இதழ் 7, ஆகஸ்ட் 2011). 1968-69 ஆம் ஆண்டுகளில் அவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்திற்காக ஆய்வில் ஈடுபட்ட நாட்களிலிருந்து மேற்கத்திய மார்க்சியம், மேற்கத்திய ஆய்வு முறையியல் ஆகியவற்றின் செல்வாக்கு அவரிடம் உருவாகியது என்று கணிக்கலாம்.

அந்நாட்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஒருவர் முழுக்க மேற்கத்திய வகைப்பட்ட மார்க்சியராக இருப்பது மிகக்கடினமான காரியமாகும். அப்படி அவர் இருந்தால், அவர் கட்சி அரசியலுக்கு மிகவும் அந்நியப்பட்டவராக ஆகவேண்டி வரும். சமகால இடதுசாரி நடைமுறை அரசியலோடு தொடர்பு வைத்துக் கொண்டு மேற்கத்திய மார்க்சியக் கோட்பாட்டாளராக இருக்க முடியாது. பேராசிரியர் சிவத்தம்பி இத்தகைய நிலையைத் தனக்குத் தேர்வு செய்துகொள்ளவில்லை. அவர் கட்சி அரசியலோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்ட, அதனாலேயே சோவியத் மார்க்சிய ஆதரவாளர் எனப் புலப்பட்ட, இன்னொரு புறம் மேற்கத்திய மார்க்சியம் அறிந்த சிந்தனையாளராகக் காட்சியளிக்கிறார்.

பர்மிங்காம் பல்கலைக்கழகம் இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகம் — 1968-69-ல் சிவத்தம்பி இங்கு கலாநிதி பட்டத்திற்காக ஆய்வு செய்தபோது மேற்கத்திய மார்க்சியத்தின் செல்வாக்கு அவரிடம் உருவானது.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு ஆய்வுகள்

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சில பிரத்தியேக ஆய்வுத் தேர்வுகள் பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். சர்வதேச அளவில் மார்க்சியம் சார்ந்த பண்பாட்டு ஆய்வுகளுக்குப் புகழ்பெற்ற மையம் (Centre for Contemporary Cultural Studies-BCCCS) பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் 70-80 களில் உருவாயிற்று. ஜியார்ஜ் தாம்சன் அவ்வகைப் பண்பாட்டு ஆய்வுச் செயல்பாடுகளுக்கு சிறிது முந்திய தலைமுறையாளர்தான் எனினும் அந்த வகையான ஆய்வுகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தார் எனலாம்.

பண்டைய கிரேக்கத் தொன்மங்கள், முதல் தத்துவங்கள், தொன்மங்களிலிருந்தும் மந்திரச் செயல்பாடுகளிலிருந்தும் தத்துவத்தின் தோற்றம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர் பேராசிரியர் தாம்சன். மாவோயிசச் செல்வாக்கும் கொண்டவர். கிரேக்க நாடகம் உள்ளிட்ட கலை இலக்கிய வடிவங்களின் மானுடவியல் அடிப்படை அவரது சிறப்பான ஆய்வுப் புலம். இது போன்ற ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னர், பர்மிங்காம் பண்பாட்டு ஆய்வு மையம் மிக எளிதாக அந்தோனியோ கிராம்சியின் பண்பாட்டு மார்க்சியக் கோட்பாட்டைச் சுவீகரித்துக் கொண்டது. இப்பல்கலைக் கழகத்தில் கிராம்சிய பண்பாட்டுச் சிந்தனையை ஸ்டுவர்ட் ஹால் என்ற பேராசிரியர் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு ஆய்வுப் போக்குகளின் வழியாக சமகால மேற்கத்திய மார்க்சிய விகசிப்புகளை பேராசிரியர் சிவத்தம்பி தொடர்ந்து பின்பற்றி வந்தார். முந்திய நிலையில் ஜியார்ஜ் தாம்ப்சன், அடுத்து அந்தோனியோ கிராம்சி, அதனுடன் அல்த்தூசர் என்ற மேற்கத்திய மார்க்சியப் பரப்பு பேராசிரியர் சிவத்தம்பிக்கு நன்கு அறிமுகப்பட்டிருந்தது. மேற்கத்தியக் கல்விப்புலத்தில் பயின்றவர் என்ற நிலையில் அதன் தொடர்ந்த வளர்ச்சிப் போக்குகளை அவரால் தவறவிட முடியாது என்று இதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அவர் பொதுநிலையில் சோவியத் மார்க்சிய ஆதரவாளராகவும் சிறப்புநிலையில் மேற்கத்திய மார்க்சியப் போக்குகளில் புலமை கொண்டவராகவும் திகழ்ந்தார் என்று ஒரு முடிவுக்கு நாம் வரலாம். சோவியத் மற்றும் மேற்கத்திய மார்க்சியங்களின் சந்திப்பில் விளையும் சில தவிர்க்கமுடியாத நெருக்கடிகளைச் சுமந்தவராகவே அவர் வாழ்ந்தார் எனலாம்.

ஈழப் பிரச்சினையும் பேராசிரியரும்

பேராசிரியர் சிவத்தம்பி ஈழத் தமிழ்ச் சிந்தனையாளர் என்ற உண்மையை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சுதந்திரமடைந்த இலங்கையில் படிப்படியாக ஈழத்தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்ட சூழல்களை ஆரம்பம் முதல் அவரது இறுதிக்காலம் வரை நேரடியாக அனுபவித்து உணர்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்ற முதல் தகவலிலிருந்து நாம் தொடங்க வேண்டும். மலையகத்தமிழர்களின் குடியுரிமை மறுப்பு என்ற முதல் அசைவிலிருந்து, வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆயுதமேந்திய போராட்டங்களுக்குத் தள்ளப்பட்ட சூழல்கள், தமிழர் திரட்சிக்கு ஆதாரமாக எடுத்தாளப்பட்ட அரசியல்-பண்பாட்டுக் கருத்துநிலைகள் ஆகியவற்றோடு ஒரு மார்க்சியர் என்ற முறையிலான அவரது சிக்கலான ஊடாட்டங்கள் அவரது ஆய்வுகளின் போக்கை நிர்ணயித்தன என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

மேற்குறித்த சூழல்களிலிருந்து ஒருகணம் கூட அவர் விலகியிருக்கவில்லை என்பது அவரது ஆய்வுகள் குறித்த புரிதலுக்கு மிக முக்கியமான தகவலாகும். வேறுவார்த்தைகளில் சொல்லுவதானால், ஈழச் சூழல்களின் தொடர்ந்த நெருக்கடி நிலை இலங்கை கம்யூனிஸ்டுகளின் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, அவரது ஆய்வுகளில் அடிப்படையான, தீர்மானகரமான பாத்திரம் வகித்தது என்பது நம்மால் குறித்துக் கொள்ளப்படவேண்டும். அவரது ஆய்வுப் போக்குகள் ஈழச் சூழல்களின் அழுத்தங்களை நிரந்தரமாக அனுபவித்தன என்பது நாம் இங்கு முன்வைக்கும் இரண்டாவது கருதுகோளாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை இலங்கை ஈழப் பிரச்சினை — தமிழர் உரிமைகள் ஒடுக்கப்பட்ட சூழல்கள் சிவத்தம்பியின் ஆய்வுகளில் அடிப்படையான பாத்திரம் வகித்தன.

தமிழ் அடையாள அரசியலும் திராவிட இயக்கமும்

ஈழத்தில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் வழக்கிலிருந்த தமிழ் அடையாள அரசியலின் போக்குகளைப் பேராசிரியர் நன்குணர்ந்திருந்தார். ஒரு மார்க்சியர் என்ற முறையில் கோட்பாட்டுத் தளத்தில் அவற்றில் பலவற்றோடு அவருக்கு ஒப்புதல் இல்லை. தமிழ் அடையாளம், தமிழ்ப் பண்பாடு குறித்த ஒரு மாற்றுப் (வரலாற்றுப் பொருள்முதல்வாதப்) புரிதல் அவரது மார்க்சிய வேலைத்திட்டமாக இருந்தது என்று கூட குறிப்பிடலாம். இந்நிலையில், ஈழப் பிரச்சினை பற்றிய புரிதலில் தமிழ்நாட்டின் திராவிட இயக்கம், அது கட்டமைத்த திராவிடச் சொல்லாடல்கள் அவருக்கு எப்போதுமே ஓர் ஒப்பீட்டுக்களமாக (Reference Point) இருந்து வந்தது. இது தவிர்க்க முடியாதது.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கச் சொல்லாடல்களை அவர் அனைத்திந்திய அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் ஒளியிலும் புரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநில உருவாக்கம், திராவிடக் கட்சிகள் மாநில ஆட்சி அதிகாரத்தை ஏற்றமை, அனைத்திந்திய அரசியலில் அவை பங்கேற்றமை போன்ற நிலைகள் ஒருபுறமும், இலங்கையில் மொழி வழி மாநிலம் உருவாகாமை, தமிழர் உரிமைகள் அடுத்தடுத்து அதிக தீவிரத்துடன் பறிக்கப்பட்டமை, ஈழத் தமிழர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகக் கூட ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஆகியவை இன்னொருபுறமும் எதிரெதிர் திசைகளில் நடந்தேறிய நிகழ்வுப்போக்குகளாக அவரால் உள்வாங்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் தமிழர்கள் ஓரளவு உரிமைகளை ஈட்டிய நிகழ்வும் சுதந்திர இலங்கையில் அவர்கள் உரிமைகளை அடியோடு இழந்த நிகழ்வும் அவரது ஆய்வுகளின் போக்கை நிர்ணயித்த முரண் எதார்த்தமாக அமைந்தன எனக் கூறலாம். இந்த இரண்டு நிகழ்வுப் போக்குகளுமே தமிழ் அடையாளம் என்ற பிரச்சினையை அவர் விட்டு விலக முடியாமல் செய்தன எனலாம்.

ஆசிய உற்பத்திப் பாங்கு எனும் கருத்தாக்கம்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்ற ஆய்வினைப் பேராசிரியர் சிவத்தம்பி மேற்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர் எழுதி வெளியிட்ட ஒரு கட்டுரை திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் பற்றியது. இக்கட்டுரையை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர்கள் பேராசிரியர்கள் நா. வானமாமலையும் ஆ. சிவசுப்பிரமணியனும் ஆவர் (ஆராய்ச்சி மலர் 2, இதழ் 3 ஜுலை 1971). பழந்தமிழகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து திணைகளின் நிலங்களும் வாழ்க்கை முறைகளும் தமிழ் மண்ணில் நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன என பல அறிஞர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், பேராசிரியர் சிவத்தம்பி அதற்கு வேறுவிதமாக விளக்கமளித்தார்.

ஐந்திணைகள் ஒரே காலத்தில் நிலவிய அசமத்துவமான சமூக நிலைகளைக் குறிக்கின்றன என்பது பேராசிரியரின் புதிய விளக்கமாக அமைந்தது. இக்கருத்துக்காக இக்கட்டுரை அறிஞர் பலரால் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஆயின் இக்கட்டுரையில் கூடுதலாக இன்னும் சில கருத்துக்கள் உள்ளன. திணைகளின் அசமத்துவ நிலையைப் பேராசிரியர் சிவத்தம்பி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வேக விகிதம், வளர்ச்சி முடக்கம், உட்சுயதேவைப் பூர்த்தி, பூகோளரீதியாகவும் சமுதாயரீதியாகவும் தனிமைப்படல் போன்ற காரணிகளைக் கொண்டு விளக்க முனைகிறார்.

திணைகள், பண்டைய தமிழகத்தின் பல்வேறு நிலப்பகுதிகளிலும் முதன்முதலில் பரவலாகத் தோன்றிய வேளாண்மைக் குழுக்களிடையே நிலவிய பண்பாட்டு முழுமைகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் குறிக்கின்றன என்ற முடிவுக்கு (சுப்பாராவ் என்ற அகழ்வாய்வாளரின் கருத்தை எடுத்தாண்டு) அவர் வந்து சேருகிறார். திணைகளின் வழித் தொழில்படும் பண்பாட்டு முழுமை என்ற கருத்தாக்கத்தைப் பேராசிரியர் சிவத்தம்பி மார்க்ஸ் பயன்படுத்திய ஆசிய உற்பத்திப் பாங்கு (Asian Mode of Production) என்ற கருத்தாக்கத்துடன் இணைக்கிறார்.

சங்க இலக்கியம் திணைக் கோட்பாடு திணைக் கோட்பாடு — பேராசிரியர் சிவத்தம்பி ஆசிய உற்பத்திப் பாங்கு என்ற மார்க்சின் கருத்தாக்கத்தைக் கொண்டு திணைக் கோட்பாட்டை ஆய்வு செய்தார்.

தமிழ்ப் பண்பாட்டின் அக அமைப்புகள்

பண்டைத் தமிழில் நாடகம் குறித்த ஆய்வுக்குப் பிறகு, 1980களில் பேராசிரியர் சிவத்தம்பி சில முக்கியமான கருத்துநிலை வளர்ச்சிகளை எட்டுகிறார் எனத் தோன்றுகிறது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள மேற்கத்திய மார்க்சியத்தில் விளைந்த சில புதிய போக்குகளும் ஈழப்பிரச்சினையின் அழுத்தங்களும் பேராசிரியரின் கருத்துநிலை மாறுபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. 80களில் வெளியான நூல்களில் இந்த மாற்றங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

"இலக்கியமும் கருத்துநிலையும்" என்ற நூலின் முதல் கட்டுரை கீழ்க்கண்டவாறு தொடங்குகிறது, "இலக்கியத்தினை இயந்திரத் தன்மையுள்ளதான ஒரு 'பிரதிபலிப்பு'க் கொள்கைக்கு உட்படுத்தாது, சற்று அகண்ட நிலையில் அதனை (இலக்கியத்தை) 'ஒரு பண்பாட்டு உற்பத்திப் பொருளாக'க் கொண்டு (Cultural Product), அந்தப் பண்பாட்டு உருவாக்கத்திற்கான கருப்பொருட்களும் (நிலவுகின்ற நிலையில் உள்ளவை – உணவு, தெய்வநம்பிக்கை, பொருளாதார நடவடிக்கை ஆகியன) கருத்துநிலைக் கூறுகளும் (Ideological Aspects) எவ்வாறு இலக்கியத்தினுள்ளே 'ஓடியாடி'த் திரிகின்றன என்று பார்க்க வேண்டும்."

பிரதிபலிப்புக் கோட்பாட்டை, "தமிழில் இலக்கிய வரலாறு" நூலிலும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். அறியப்பட்ட மார்க்சியத்தின் அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற கோட்பாட்டை அதே நூலில் தொடர்ந்து விமர்சிக்கிறார். இக்கோட்பாடுகளை ஜியார்ஜ் லுக்காச், அல்த்தூசர், றெய்மெண்ட் வில்லியம்ஸ், ஹிண்டெஸ்-ஹேர்ஸ்ட் ஆகியோரின் புதுவிளக்கங்களின் ஊடாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்.

இவை குறித்து மார்க்சியத்தினுள் ஒரு சிந்தனைப் புரட்சி நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் அவர், அல்த்தூசரின் சமூக உருவாக்கம் என்ற (அமைப்பியல் தொடர்பு கொண்ட) கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அல்த்தூசரின் சமூக உருவாக்கம் என்ற கோட்பாடு உண்மையில் முன்பு நாம் பேசி வந்த சமூகப் பொருளாதார அமைப்பை மட்டும் குறிக்காமல், "முழுச் சமூகக் கட்டமைப்பையும்' 'அதனுள் வரும் அமைப்பு மட்டங்களையும்' குறிக்கிறது எனத் தெளிவுபடுத்துகிறார்.

மரபுப் பேணுகையும் தொகுப்பு முயற்சிகளும்

சங்கம் மறுவிய காலத்திலிருந்து அடுத்தடுத்து சமூக மாறுபாடுகள் தீவிரப்பட்ட காலத்திலெல்லாம் இவ்வாறாகப் பழம்மரபுகளைத் தொகுக்கும் முயற்சிகள் நடந்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர், இவ்வகை முயற்சிகளில் ஒரு பாரம்பர்யத்தின் உயிர்ப்பு நிலையைக் காணுகிறார். இவற்றின் ஊடாகத்தான் தமிழ்ச் "சமூகப் பண்பாட்டு அக அமைப்புக்கள்" பேணப்பட்டு வந்துள்ளன என்கிறார். பண்பாட்டு அக அமைப்புகளின் பேணுகை என்ற வரலாற்று நிகழ்வை முன்வைத்து பேராசிரியர் பழந்தமிழின் தனித்துவம், அச்சமூகத்தின் அடுத்தடுத்த சிதைவுகள், சிதைவை மீறிய தொடர்ச்சி, இயைபு படுத்தல், மரபுப் பேணுகை என்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.

இலங்கைச் சூழல்களில் இப்பிரச்சினையைப் பேசும் பேராசிரியர் சிவத்தம்பி, "இலங்கைத் தமிழரின் அரசியல் தனித்துவத்திற்கான போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சிங்கள புத்திஜீவிகளும் அரசாங்கத்தினரும் இலங்கைத்தமிழரின் பண்பாட்டுத் தனித்துவத்தை, இலக்கியத் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டனர்" என்ற செய்தியை தெரியப்படுத்துகிறார். அரசியல் பிரச்சினையாகக் காட்சியளிக்கின்ற தேசிய இனத் தனித்துவத்திற்கான அடிப்படையாக பேராசிரியர் தமிழ்ப் பண்பாட்டுத் தனித்துவத்தை முன்வைப்பதாகத் தோன்றுகிறது. பண்பாட்டு தனித்துவம் கொண்ட மக்கள் அரசியல்ரீதியாக தேசிய தனித்துவம் கோருவது பண்பாட்டு அரசியலின் தொடர் பண்பாகும்.

பண்டைய தமிழ் கல்வெட்டு தமிழ் மரபு — பண்பாட்டு அக அமைப்புகளின் பேணுகை என்ற வரலாற்று நிகழ்வை பேராசிரியர் சிவத்தம்பி விரிவாக ஆய்வு செய்தார்.

முடிவுரை

பேராசிரியர் சிவத்தம்பி ஒரு தமிழ்ப் பேராசிரியராக வாழ்ந்த காலம் மிகச் சிக்கலானது. தமிழர்கள் தமது சீவாதாரமான சில அடிப்படைகளை அகழ்ந்தெடுத்துப் பற்றிக்கொள்ள இக்காலத்தின் நெருக்கடிகள் நம்மைத் தூண்டியுள்ளன. தொடக்கம் முதல் இறுதி வரை தன்னை ஒரு மார்க்சியராக வரையறுத்துக் கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்ப் பண்பாட்டின் அக அமைப்புகள், மரபுப் பேணுகை ஆகியவை குறித்து வந்து சேரும் கருத்துக்கள் தொடர்ந்து நாம் இவை குறித்து ஆய்வு செய்வதற்கும் அரசியல் நிலைகள் எடுப்பதற்கும் மிகக் கட்டாயமான தொடக்கங்களாகும்.

Post a Comment

0 Comments