elugai

ரஷ்யாவிடம் எரிபொருள் கிடைக்குமா? நழுவிப் போன வாய்ப்புகளும் முட்டுக்கட்டை போடும் தடைகளும்!

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கிடைக்குமா?

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கிடைக்குமா?

கட்டுரையாளர் - என்.கண்ணன்

மத்திய கிழக்கு போர்ச் சூழலை அடுத்து, ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரஷ்யாவுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது என ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக 10 ஆண்டுகள் பணியாற்றிய உதயங்க வீரதுங்க கூறியிருக்கிறார். அவர் ரஷ்யாவில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற அடிப்படையில், தனது அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ரஷ்யாவிடம் எரிபொருளை பெற்றுக்கொள்வது என்பது இலங்கைக்கு சிக்கலான ஒரு தெரிவாகவே உள்ளது. அதற்கு முதற்காரணம், அமெரிக்காவின் தடைகள். இரண்டாவது காரணம், ரஷ்யாவுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவுகளின் தன்மை.

ரஷ்யா இலங்கை எரிபொருள் உடன்பாடு ரஷ்யா-இலங்கை உறவுகள் — எரிபொருள் நெருக்கடியின் போது ரஷ்யாவுடன் உடன்பாடு எட்டுவதில் சிக்கல்கள் உள்ளன.

தொடர்ச்சியற்ற இராஜதந்திர உறவுகள்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகால நெருக்கம் காணப்பட்டிருந்தாலும், அதனை தொடர்ச்சியான பேணுவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் தவறியிருந்தனர். ரஷ்யாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, ராஜபக்ஷவினருக்கு பின்னரான ஆட்சியாளர்கள் பெருமளவில் நாட்டம் காண்பித்திருக்கவில்லை.

அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையில் இருந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சிம், ரஷ்ய உறவுகள் விடயத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுடன் உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது நீண்டகாலம் நீடித்திருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உக்ரைன் போர் தொடங்கி விட்டதால், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தாண்டி அதனுடன் உறவுகளையும் வர்த்தக தொடர்புகளையும் பேணிக் கொள்ள முடியாத நிலை இலங்கை அரசாங்கத்துக்குக் காணப்பட்டது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிகளை தடை செய்வதே ஒரே வழி என ட்ரம்ப் எடுத்த தீர்மானம், இலங்கையை இன்னும் அதிக தூரத்துக்கு தள்ளிச் சென்றது.

தவறவிடப்பட்ட வாய்ப்புகள்

இந்தச் சூழலில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, நெருக்கமான உறவுகள் ஏற்பட்டிருக்க வில்லை. இலங்கையில் அணு மின் நிலையத்தை உருவாக்குவதற்கு ரஷ்யா விரும்பிய போதும், அதற்கு அரசாங்கம் சரியான சமிக்ஞையை காண்பிக்கவில்லை. இது ரஷ்யாவுக்கு ஏமாற்றமளித்த ஒரு விடயம்.

அதுபோல மத்தள விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக நிர்வகிக்கின்ற ஒரு முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டது. குறித்த ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை சுட்டிக்காட்டி, முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அந்த முயற்சிகளைத் தோற்கடித்தார். இது ரஷ்யாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால், அதிருப்தியடைந்த, ரஷ்ய தூதுவர் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வில், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக்கான சூழல் இல்லை என, வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இலங்கையின் முதலீட்டுச் சூழலை வெளிநாட்டு தூதுவர் ஒருவர் பகிரங்கமாக விமர்சித்தமை ஒரு முக்கியமான இராஜதந்திர பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி தடைகள் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி — அமெரிக்காவின் தடைகள் இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதில் சிக்கல்களை உருவாக்குகின்றன.

30 நாள் தடை நீக்கமும் இலங்கையின் முயற்சிகளும்

மத்திய கிழக்கு போரை அடுத்து உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் போது, ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடையை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. ரஷ்யா இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது எண்ணெய் ஏற்றுமதியை பல மடங்கு அதிகரித்தது.

இந்த தடை நீக்கம், கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இது நீடிக்கப்பட்டுள்ளதா அல்லது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த அறிவிப்பையும் அமெரிக்க திறைசேரி இன்னமும் வெளியிடவில்லை. இந்த 30 நாள் காலக்கெடுவுக்குள் இலங்கை அரசாங்கம் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெறவில்லை.

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் அடுத்தடுத்து கொழும்புக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தனர். ரஷ்ய பிரதி எரிசக்தி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, மொஸ்கோவுடன் கலந்தாலோசித்து விட்டுப் பதிலளிப்பதாக கூறியிருந்தார். அதன் பின்னர் ஏதேனும் முடிவுகளை அறிவித்தாரா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அடுத்த மாதம் வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் ரஷ்யாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது எரிசக்தி கொள்வனவு தொடர்பாக பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார். ஆனால் இதன் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியம் இருப்பதாக நம்பக்கூடிய நிலை இல்லை. உதயங்க வீரதுங்கவின் கருத்து இதனையே வெளிப்படுத்துகிறது.

ஜேவிபி-ரஷ்யா உறவுகளின் வரலாறு

ஆனால், முன்னைய அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் ரஷ்யாவுடன் நெருங்கி செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஜேவிபி நிறுவுநரான றோகண விஜேவீர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டதன் மூலம், மொஸ்கோவின் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

எனினும், பாதிப்படிப்பு முடிந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட நோயினால், நாடு திரும்பிய போது, கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்பு – பீஜிங் சார்பு என பிளவுபட்டிருந்தது. பீஜிங் சார்பாளராக இருந்த றோகண விஜேவீரவுக்கு ரஷ்யா வீசா கொடுக்க மறுத்ததால், அவரால் மருத்துவப் படிப்பை சிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது ஜேவிபிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திய முதல் தருணம்.

அந்த அடிப்படை விரிசலை, ரஷ்யா இப்போது மனதில் கொண்டிருக்காவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ஒரு இடதுசாரி அரசாங்கம் என்ற வகையில் திறந்த மனதுடன் அணுக முற்பட்டது.

பிரிக்ஸ் மாநாடு கசான் ரஷ்யா பிரிக்ஸ் மாநாடு, கசான் ரஷ்யா — இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் பங்கேற்காதது ஒரு தவறவிடப்பட்ட வாய்ப்பாகும்.

பிரிக்ஸ் அழைப்பு — தவறவிடப்பட்ட வாய்ப்பு

கடந்த 2024 செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசநாயக்கவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து ஒரு அழைப்பு கிடைத்திருந்தது. 2024 ஒக்ரோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறும், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை அனுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொள்ளவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அவர் அல்லது அவருக்கு பதிலாக பிரதமர் அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். இரண்டு பேரும் அதில் பங்கேற்கவில்லை. இது பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை நெருங்கி செயற்படுவதற்கு கிடைத்த வாய்ப்ப நழுவிப் போனதற்கு ஒரு காரணம்.

பிரிக்ஸ் அமைப்பின் ஊடாக இலங்கைக்கு கடனுதவி கிடைப்பதற்கும, மேலும் பல பொருளாதார நலன்களை அடைவதற்குமான வாய்ப்பு அந்த இடத்தில் தவறவிடப்பட்டது.

அமெரிக்காவுடன் உறவுகளை தக்க வைத்துக் கொள்வதற்கும், அமெரிக்காவை பயன்படுத்தி பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்கும், அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்குமாகவே, அனுரகுமார திசாநாயக்க அந்த ரஷ்ய பயணத்தை தவிர்த்திருந்தார். இது ரஷ்யாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. ரஷ்யா தனக்கு நெருக்கமான நாடுகளின் வட்டத்திற்குள் இலங்கையை கொண்டு வருவதை தடுத்திருந்தது.

கூலிப்படைகள் பிரச்சினை

ரஷ்ய படைகளில் இலங்கையர்கள் கூலிப்படைகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட விவகாரத்தினால். அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியான பின்னர், ரஷ்யாவுடன் முதலாவது சிக்கலை எதிர்கொண்டிருந்தார். ரஷ்யாவில் போரிடுவதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட பலர் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் இன்னமும் என்னவாயினர் என்று தெரியாத நிலை உள்ளது. அண்மையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 275 இலங்கையர்கள் இறந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூலிப்படைகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்களை மீட்க, இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட எந்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. உயிருடன் அல்லது காயங்களுடன் இருப்பவர்களை மீட்கவோ, கொல்லப்பட்டவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கோ, இராஜதந்திர ரீதியாக ரஷ்யாவுடன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதனால் இதுவரையில் ஒருவரை கூட உயிருடனோ அல்லது சடலமாகவோ கொழும்புக்கு கொண்டுவர முடியவில்லை. இதுகுறித்துப் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினரை அணுகியிருந்த போதும் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்கள் எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. இது முக்கியமான ஒரு பின்னடைவு.

நட்பு நாடுகள் வட்டத்திற்கு வெளியே

அதுபோலவே, எண்ணெய் கொள்வனவு தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களும் கூட வெற்றியளிக்கச் சாத்தியமில்லை என உதயங்க வீரதுங்க குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கியமான ஒரு விடயம், இலங்கையை ரஷ்யா தனது நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்துக்குள் வைத்திருக்கவில்லை என்பதாகும். அவ்வாறு ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்துக்குள், இலங்கை உள்ளடங்கியிருப்பதற்கான வாய்ப்பை, தானாகவே பறி கொடுத்தது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்தித்த பின்னர், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எரிபொருள் தேவையை நிறைவேற்றக் கூடிய நிலையில் ரஷ்ய இருப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், சேர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ள நிலையில் தான், அந்த வட்டத்துக்குள் இலங்கை இல்லை என்பது இலங்கைக்குத் தெரியவந்திருக்கிறது.

அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம், நடுநிலையாக செயல்படுவதாக கூறிக் கொண்டாலும், ரஷ்யாவுடன் அது நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவை சமாளிப்பதற்காக அல்லது சமாதானப்படுத்துவதற்காக அல்லது அதன் பகைமையை தவிர்ப்பதற்காக ரஷ்யாவை இரண்டாம் நிலையில் வைத்திருந்தது.

இதன் விளைவு எரிபொருள் நெருக்கடியின் போது அதனிடம் இருந்து எரிபொருளை வாங்க முடியாத நிலையை தோற்றுவித்திருக்கிறது. எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்புக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இடதுசாரி அரசாங்கம் என்று கூறப்பட்டாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரஷ்யாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனது, அதன் பலவீனம் தான்.

Post a Comment

0 Comments