பதுங்கிக் கொண்டது ஏன்?
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடந்த 11ஆம் திகதி எக்ஸ் தளத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டு, இலங்கைக்கு என்னவானது? வெளிவிவகார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் கூட எங்கே? என கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா — இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இலங்கை பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.
இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை மொறிஷியசில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், இலங்கையின் சார்பில் முக்கியமான தலைவர்கள் யாரும் பங்கேற்றிருக்கவில்லை, உயர் அதிகாரிகள் மட்டத்தில் இருந்து கூட யாரும் சென்றிருக்கவில்லை.
இது பாரதூரமான ஒரு விடயமாக அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் கருதப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சர்வதேச உரையாடல் அரங்கை தவறவிட்ட இரண்டாவது முக்கிய சந்தர்ப்பமாக இதனைக் குறிப்பிடலாம்.
2024ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் பங்கேற்காதது முக்கியமான ஒரு இராஜதந்திரத் தவறாக இப்போதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதுபோல மொறிஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் நடந்த 9வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், வெளிவிவகார அமைச்சரோ அல்லது பிரதி வெளிவிவகார அமைச்சரோ, உயர்மட்ட அதிகாரிகளோ பங்கேற்றிருக்கவில்லை.
ஏன் பங்கேற்கவில்லை என்ற ஹர்ஷ டி சில்வாவின் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சு இன்னமும் விளக்கம் அளிக்கவில்லை. அரசாங்கம் இதற்கு பதிலளிக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த அரங்கு
ஆனால் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரங்கு. இந்த மாநாடு 2016ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வருகிறது. இது ஒரு அமைப்பு அல்ல. ஆனால், இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இடம்பெற்று வருகிறது.
இந்தியப் பெருங்கடல் மாநாடு — 2016ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வரும் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு மாநாடு.
சிங்கப்பூரில் நடந்த முதல் மாநாட்டில், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். 2017ஆம் ஆண்டு இரண்டாவது மாநாடு கொழும்பில் இடம்பெற்ற போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
2018ஆம் ஆண்டு வியட்நாமின் ஹனோயில் இடம்பெற்ற 3வது மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். 2019ஆம் ஆண்டு நடந்த நான்காவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கி ஆரம்ப உரை நிகழ்த்தியிருந்தார்.
5வது மாநாடு 2021ஆம் ஆண்டு அபுதாபியில் இடம்பெற்ற போது, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் தலைமையிலான குழு பங்கேற்றது. 2023ஆம் ஆண்டு 6வது இந்தியப் பெருங்கடல் மாநாடு பங்களாதேஷின் டாக்கா நகரில் இடம்பெற்ற போது, இலங்கையை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
7வது இந்தியப் பெருங்கடல் மாநாடு, 2024ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்ற போது, ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றினார். 2025ஆம் ஆண்டு எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இடம்பெற்ற தருணத்தில், தற்போதைய அரசாங்கத்தின், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால் இம்முறை நடந்த 9வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இலங்கையின் சார்பில் யாருமே பங்கெடுக்கவில்லை.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையிலும், இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் நிறுவுநர் நாடு என்ற வகையிலும் இலங்கைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் எவரும் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.
இந்த மாநாட்டில் மொறிஷியஸ் பிரதமர், இந்தியா, மொறிஷியஸ், பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், தன்சானியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
விவேகமற்ற செயல்
இந்தியப் பெருங்கடலின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்ற இலங்கைத் தீவு இந்த மாநாட்டைத் தவிர்த்துக் கொண்டது ஆச்சரியமான விடயம். அதுவும் ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், அதன் தாக்கம் இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவுபடுத்தப்பட்ட சூழலில், இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இலங்கை, இந்த மாநாட்டை தவிர்த்துக் கொண்டது விவேகமற்ற செயல்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இடம் — புவிசார் அரசியலில் இலங்கைத் தீவு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை அரசாங்கம் இந்த வாய்ப்பைத் தவற விட்டதன் மூலம், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில், சுதந்திரமான போக்குவரத்துக்கு சவால்கள் எழுந்துள்ள சூழலில் இத்தகைய பிராந்திய பாதுகாப்பு அரங்குகள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்பொழுது அயல் நாடுகளுடனும் இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து பாதையில் உள்ள நாடுகளுடன் தொடர்புகளையும், இணைப்புகளையும் வலுப்படுத்துவது, இலங்கைக்கு அவசியமான தேவையாக உள்ளது.
இந்தச் சூழலில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏன் இந்த மாநாட்டின் அவசியத்தைக் குறைத்து மதிப்பீடு செய்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், உயர்மட்டத் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று வந்துள்ளனர். பெரும்பாலும் ஜனாதிபதி அல்லது பிரதமர் பங்கேற்ற சூழலே காணப்பட்டது.
ஆனால், இம்முறை அதிகாரிகள் மட்டக் குழுவைக் கூட அரசாங்கம் அனுப்பாமல் தவிர்க்கின்றமைக்கு சர்வதேச அழுத்தங்கள் காரணமா என்ற கேள்வியும் உள்ளது.
நடுநிலைமை குறித்த கேள்விகள்
சர்வதேசக் கப்பல் பாதையில் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமை இலங்கைக்கு அருகே ஈரானியக் கப்பல் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இலங்கை கருத்துத் தெரிவிக்கவில்லை. அத்தகைய அச்சுறுத்தல்கள் சவால்களைக் கண்டித்து எந்தக் கருத்தையும் முன்வைத்திருக்கவில்லை.
இது இலங்கையின் அணிசேரா கொள்கை மற்றும் நடுநிலைமை குறித்துக் கேள்விகளை எழுப்பவைத்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியப் பெருங்கடல் மாநாட்டை இலங்கை தவிர்த்துக் கொண்டதன் மூலம் சர்வதேச அரங்கு ஒன்றில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இருந்து தப்பிக்க முனைந்ததா என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன.
எது எவ்வாறாயினும் நிலவுக்கு அஞ்சி பிறதேசம் போக முடியாது. இந்தியப் பெருங்கடலின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இலங்கைத் தீவு இருக்கிறது.
புவிசார் அரசியலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவைப் புறக்கணித்து, ஒரு பாதுகாப்புக் கொள்கையை அமெரிக்கா போன்ற வல்லரசுகளால் எப்படி வகுத்துக்கொள்ள முடியாதோ, அதுபோலவே இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கொள்கை வகுப்புகளில் இருந்து இலங்கையினாலும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது.
அவ்வாறு ஒளிந்து கொள்ள முனைந்தால் சீப்பை ஒழித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்த முயன்றது போல ஆகிவிடும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அப்படி ஒரு முயற்சியைத்தான் மேற்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
0 Comments