இருதலைக் கொள்ளி நிலையில் அரசு
மத்திய கிழக்கு போர் ஏற்பட்ட பின்னர், உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி உருவாகியிருக்கிறது.
இந்த நெருக்கடி இரண்டு விதங்களில் எதிர்கொள்ளப்படுகிறது. ஒன்று எரிபொருள் விலை அதிகரிப்பு. இன்னொன்று எரிபொருள் தட்டுப்பாடு.
இந்த இரண்டும் பல நாடுகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது. அதற்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல.
சில வாரங்களுக்கு முன்னர், இலங்கைக்கு இந்த இரண்டு பிரச்சினைகளும் காணப்பட்டன. தற்போது இதில் ஒரு பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதாவது எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அது நிரந்தரமானது அல்ல. தற்காலிகமானது தான்.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி — உலகளாவிய விலை உயர்வு மற்றும் விநியோக பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன.
தற்காலிக தீர்வுகள் மட்டுமே
அடுத்த மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்வதிருப்பதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை எப்படி இருக்கும் என இப்போது கூற முடியாது. அரசாங்கமும் அதனை கூறக்கூடிய நிலையில் இல்லை.
அதற்காக அரசாங்கம் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. அதன் ஊடாக சில எரிபொருள் கப்பல்களை பெற்றுக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.
இது நிரந்தரமான விநியோக சங்கிலி அல்ல. இந்த விநியோக சங்கிலியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில் - நிலையானதாக பேணுகின்ற முயற்சியில்- அரசாங்கம் இன்னமும் வெற்றி பெற்றதாக கூற முடியாது.
விலை உயர்வின் தாக்கம்
அதேவேளை எரிபொருள் நெருக்கடியின் விளைவாக அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு பிரச்சினை எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு ஆகும்.
இது இலங்கை அரசாங்கத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல, நாட்டு மக்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை. எரிபொருள் விலைகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் எதிர்விளைவாக பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களும் உயர்ந்து கொண்டே போகின்றன.
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை 600 ரூபா வரை உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
அதேவேளை டீசல் விலை நிலவரப்படி இலங்கை 78 வது இடத்தில் உள்ள அதேவேளை இலங்கைக்கு பின்னால் 91 நாடுகள் இருக்கின்றன.
இந்த பட்டியல் உள்ள பல நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளது. இலங்கையை விட அதிக விலைக்கு எரிபொருள் விற்கப்படுகின்ற நாடுகளில், பெட்ரோலிய வளம் கொண்ட பல நாடுகளும் உள்ளன. அவற்றினாலேயே எரிபொருள் விலைகளை குறைக்க முடியவில்லை.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு — மத்திய கிழக்கு போர் காரணமாக விலைகள் கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகரித்துள்ளன.
அதேவேளை இலங்கையில் பெட்ரோலிய வளம் இல்லாத போதும், நடுத்தர விலை நிலையில் உள்ளது அவதானிக்கப்படத்தக்கது.
மத்திய கிழக்கு போர் நிலையின் விளைவாக உலகளாவிய ரீதியாக ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து எரிபொருள் விலை கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகரித்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையினால் உள்நாட்டில் எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இது உலகளாவிய ரீதியில் உள்ள பிரச்சினை. எல்லா நாடுகளும் இந்த சிக்கலை எதிர்கொள்ளுகின்றன.
பிற நாடுகளின் முயற்சிகள்
இந்த நிலையில், சர்வதேச சந்தைக்கு அதிகரிப்புக்கு ஏற்ப விலையை மிதக்க விடுவது என்பது சிக்கலான பொருளாதார சூழலை உருவாக்கும். எரிபொருள் விலை அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் போகின்ற போது, பொருளாதார நிலை பலவீனம் அடையும்.
ஏனென்றால், அதன் தாக்கம் எல்லாத்துறைகளிலும் எதிரொலிப்பதுடன், பணவீக்கம் பொருளாதார வளர்ச்சி வீதம் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பல நாடுகள் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முற்படுகின்றன. இதன் ஊடாக, அவை தங்களின் பொருளாதார உறுதித் தன்மையை பேண முற்படுகின்றன.
ஜெர்மனி, ஒஸ்ரியா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் அண்மையில் எரிபொருள்களுக்கான வரியை ரத்து செய்திருக்கின்றன. இது ஒரு முக்கியமான படி.
எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் எரிபொருள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை விட்டுக் கொடுக்கின்ற இந்த முயற்சியின் மூலம், மக்களுக்கு நன்மைளை பெற்றுக் கொடுக்க அந்த அரசாங்கங்கள் முற்படுகின்றன.
இலங்கையின் சிக்கல்
இலங்கையில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட போதும், அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை.
ஏனென்றால், அரசாங்கம் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு மாத்திரமன்றி, அதற்காக அளவிடுகின்ற வரிகளைக் குறைப்பதிலும் கூட, சிக்கலை எதிர்கொள்கிறது. அவ்வாறு செய்வது அரசாங்கத்துக்கு வரி வருமான இழப்பை ஏற்படுத்தும்.
பல்வேறு சிக்கல்களுக்கும் மத்தியில் அரசாங்கம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், உள்நாட்டு வரி வருமானங்களின் மூலமாக 606 பில்லியன் ரூபாவை திரட்டியிருக்கிறது.
ஜனவரி தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பெறப்பட்டிருக்கின்ற இந்த வரி வருமானம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 17.7 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலமாக, இந்த ஆண்டில் பெறப்பட வேண்டிய வரி வருமானத்தில் கால் பங்கை அது ஏற்கனவே வசூலித்து விட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு — இலங்கை அரசாங்கம் IMF நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய சூழலில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகள்
நாட்டில் என்ن் நடந்தாலும் சரி வரி வருமானத்தை இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அதற்கு உள்ள முதல் பிரச்சினை, வருமானம் மாத்திரமல்ல. அதனை உறுதி செய்து கொள்வதில் சர்வதேச நாணய நிதியம் கடிவாளத்தை இறுக்கமாக வைத்திருப்பதும் ஒரு காரணம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் மீட்பு ஒப்பந்தம் தான் இதற்குக் காரணம். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை அரசாங்கம் பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க முடியாமல் முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
அதன் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய சூழலும் அதன் நிபந்தனைகளை தட்டிக் கழிக்க முடியாத சூழலும் அதற்கு இருக்கிறது. அதனால் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடியாத சூழல், அரசாங்கத்துக்கு உள்ளது.
அரசாங்கம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, இந்த சூழலில் இருந்து மக்களை மீட்கின்ற அல்லது காப்பாற்றுகின்ற வாய்ப்பை பயன்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.
100 பில்லியன் நிவாரண பொதி
அண்மையில், பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு, 100 பில்லியன் ரூபா நிவாரண பொதிகளை அறிவித்திருந்தார் ஜனாதிபதி. அது கூட ஒரு தெளிவான நிவாரண பொதி அல்ல.
அது எவ்வாறு மக்களை சென்றடைய போகிறது? பாதிக்கப்பட்ட மக்களை எப்படி அணுகப்போகிறது என்று தெரியவில்லை.
ஆனால் எரிபொருள்களின் விலை உயர்வின் மூலம், அனைத்து மட்டங்களில் உள்ள மக்களுக்கும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா மக்களும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களை மாத்திரம், இந்த நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இது ஒரு வகையில் அநீதியானது. ஒரு பகுதி மக்கள் மாத்திரம் இதன் ஆதாயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இது ஒரு சமத்துவமற்ற நிலையை ஏற்படுத்தும்.
அதற்காக எல்லோருக்கும் வரி விலக்கை கொடுப்பது அல்லது நிவாரணத்தை கொடுப்பது அரசாங்கத்துக்கு சாத்தியமாகப் போவதில்லை.
அரசின் இருதலைக் கொள்ளி நிலை
இந்த விடயத்தில் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் சிக்கலான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. அது எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையிலும், அதேவேளை அந்த எரிபொருளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறது.
அதிகரித்த விலையை மக்களின் தலையில் கட்டி விடும் அரசாங்கத்தின் எந்த ஒரு முயற்சியும் அரசாங்கத்தையே பாதிக்கக்கூடும். இது எரிபொருளுக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல, மின்சாரத்துக்கும் எரிவாயுவுக்கும் கூட பொருத்தமானது தான்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த சூழலினால் ஏற்பட்ட நெருக்கடியை அரசாங்கம் தன்னளவில் சுமந்து கொள்வதற்கு தயாராக இல்லை. முழுமையாக அல்லது பெரும்பகுதியை மக்களின் தலையில் கட்டுவதற்கே முற்படுகிறது.
இது ஒரு கட்டத்திற்கு மேல் செல்லுமானால், அரசாங்கத்திற்கு எதிரான சூழலையே உருவாக்கும். அத்தகைய சூழல் உருவாவதை தடுப்பதற்காகத்தான் அரசாங்கம் 100 பில்லியன் ரூபா நிவாரணத்தை அறிவித்திருக்கிறது.
ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் காழ்ப்பையும் தடுத்து வைத்திருக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
0 Comments