elugai

வெடுக்குநாறிமலை யாருக்குச் சொந்தம்? - நீதிக்காகக் காத்திருக்கும் ஆதி லிங்கேஸ்வரர்!

மாறாத அநீதிப் போக்கு

மாறாத அநீதிப் போக்கு

கட்டுரையாளர் - கபில்

வவுனியா, நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறிமலை, பௌத்த மதத்திற்கு சொந்தமானது என்றும், அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். ஏப்ரல் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக் கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகள் மூலம், அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் குறித்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு தயாராகி வருவதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தமிழர் வழிபாடு தமிழ் மக்களால் பாரம்பரியமாக வழிபடப்பட்டு வந்த வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அடுத்ததாக பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அவரது இந்த அறிவிப்பு தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பாரம்பரியமாக தமிழ் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், அடுத்ததாக தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் வழிபாட்டிடங்கள் அபகரிப்பு

தமிழ் மக்களால் பாரம்பரியமாக வழிபடப்பட்டு வந்த பல ஆலயங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள பௌத்த பாரம்பரிய சின்னங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

திருகோணமலையில் கன்னியாயில் இருந்த பிள்ளையார் கோவில் மீளக் கட்டி எழுப்ப முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் அருகே, அடாத்தாக புத்தர் சிலையும், விகாரையும் அமைக்கப்பட்டன.

குருந்தூர்மலையில் இருந்த ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு, அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, அரச படைகளுடன் இணைந்து, தொல்பொருள் திணைக்களம் இதனைச் செய்து முடித்திருக்கிறது.

குருந்தூர்மலை ஆலயம் அழிப்பு தமிழர் வழிபாட்டிடம் குருந்தூர்மலை ஆலயம் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி அரச படைகளுடன் இணைந்து தொல்பொருள் திணைக்களம் அழித்தது.

இதுபோல பல இடங்களில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்பட்டு அல்லது அவற்றின் அருகே பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன அல்லது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்து வந்திருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளில் இத்தகைய சம்பவங்களால் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களையும் வழிபாட்டு இடங்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களாலும் இனவாதிகளாலும் தொடர்ந்து துரத்தப்படுவதாக உணர்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதற்கு அல்லது நிலங்களை அபகரிப்பதற்கு, பௌத்த வரலாற்று தொல்லியல் சின்னங்களை ஒரு ஆயுதமாக மாற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கிறது.

ஆட்சி மாற்றமும் தொடரும் அநீதியும்

ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆட்சி மாற்றம் என்பது ஒரு அதிகார மாற்றமே தவிர, களநிலையில் அதனை முன்னெடுத்துச் செல்லும் அதிகாரம் படைத்தவர்கள் மாறுவதில்லை. அவர்கள் தொடர்ந்து தமது இலக்கை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது. மக்களின் நிலம் மக்களுக்கே என்று கூறியது நினைவிருக்கலாம். மக்களின் நிலம் மக்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் கூறியது. ஆனால், தமிழ் மக்களின் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கப்படுகிறது, அது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் தொடர்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் உரிமைகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கு வாக்குறுதிகள் அளித்தது, ஆனால் நிலையில் மாற்றம் இல்லை.

இப்போது வெடுக்குநாறிமலை பௌத்த வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. அந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது என்ற போர்வையில் தான், அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

ஏற்கனவே அப்பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், விரைவில் வர்த்தமானி அறிவிப்பு மூலம் அந்த இடத்தை அரசின் நேரடிப் பாதுகாப்பில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

சட்டவிரோதமாக்கப்படும் தமிழர் வழிபாடு

இது மிகத் தெளிவாக ஒன்றைக் கூறுகிறது - வெடுக்குநாறிமலையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வழிபாட்டு சின்னங்கள் சட்டவிரோதமானது என்பதே அது. அந்த மலை பௌத்த வழிபாட்டுச் சின்னமாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் வழிபாட்டு சின்னங்களுக்கு இடமிருக்கப் போவதில்லை.

அவ்வாறு இருக்கின்ற வழிபாட்டுச் சின்னங்கள் சட்டவிரோதமானவை அல்லது சட்டவிரோத கட்டுமானம் என்று வகைப்படுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையானது, சட்டவிரோதமாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்களிடம் இருந்து வெடுக்குநாறிமலை பிரதேசம் முற்றுமுழுதாக அபகரிக்கப்படும் சூழலை உருவாக்குகிறது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் நாசூக்காக நடந்து கொள்ளவே முற்படுகிறது. தமிழர்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என நிராகரித்தால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும்.

அதனால் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை தடுக்காமல், அதே நேரம் குறித்த மலை தமிழ் பௌத்தர்களுக்கு உரியது தான் என அறிவிப்பதன் ஊடாக, சட்டபூர்வமான வகையில் அதற்கு உரித்தில்லாதவர்களாக தமிழர்களை ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வெடுக்குநாறிமலைக்காக அதன் வழிபாட்டு உரிமைக்காக போராடுகின்ற மக்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தின் இரட்டை வேடம்

சட்டவிரோத கட்டுமானங்கள் பௌத்த வரலாற்றுச் சின்னத்தை சிதைத்திருப்பதாக அமைச்சர் சுனில் செனவி கூறியிருக்கிறார். ஆனால் குருந்தூர்மலையில் என்ன நடந்தது? அங்கு தொல்பொருள் திணைக்களமும் அரச படைகள் மற்றும் பொலிசாரும் கூட்டாக இணைந்து தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் - ஒரு விகாரைக் கட்டுமானத்தையே முன்னெடுத்துள்ளன.

தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே தவிர அவற்றை முழுமைப்படுத்தி புதுப்பிக்க வேண்டியவை அல்ல. ஆனால் தொல்பொருள் திணைக்களம் இந்த விதிமுறையை தமிழர் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதில்லை. வடக்கு கிழக்கில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாக கூறும் இடங்களை பௌத்தமயப்படுத்துகிறது. பௌத்த சின்னங்களை நிறுவி அல்லது புனரமைத்து கட்டுமானங்களை உருவாக்குகிறது.

தொல்பொருள் திணைக்களம் இலங்கை தமிழர் பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களம் தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளது.

தொல்பொருள் சின்னம் எனக் கூறிய குருந்தூர்மலையில் ஒரு பௌத்த விகாரையை இரகசியமாக கட்டி எழுப்பியது போல, வவுனியா - சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. அங்கிருந்த எண்கோண மண்டப கட்டுமானத்தைப் புனரமைப்பதாக கூறி, பௌத்த விகாரையை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொல்பொருள் சின்னமாக இருந்தால், அதனை பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, விகாரையைக் கட்டுமானம் செய்வது அவர்களின் வேலையல்ல. முன்னைய ஆட்சிகளில் தான் இந்த நிலை என்றால் தற்போதைய ஆட்சியிலும் இவ்வாறான நிலையே தொடர்கிறது. வெடுக்குநாறிமலை விவகாரத்தில் இருந்து இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படியே போனால், வெடுக்குநாறிமலையில் ஒரு பௌத்த வரலாற்றுச் சின்னம் கட்டியெழுப்பப்படவோ விகாரை ஒன்று நிறுவப்படவோமாட்டாது என உறுதியாக கூற முடியாது.

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு

தமிழர் பிரதேசங்களில் விகாரைகளை கொண்டு பௌத்த பிரதேசங்களாக அடையாளப்படுத்துவதன் மூலம், ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கான வாயில் திறந்து விடப்பட்டிருக்கிறது. தற்போதைய ஆட்சியிலும் அதுவே தான் நடக்கிறது. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களை, தள்ளி விழுத்தவும் தமிழ் மக்களை கட்டி ஆளவும் இது அவசியம் என கருதுகிறார்கள்.

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கின்ற இத்தகைய நடவடிக்கைகள் தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் போக்கில் இருந்து சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் விடுபடப் போவதில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

Post a Comment

0 Comments