ஒரு வேறுபட்ட தலைமைத்துவப் பண்புகொண்ட முதலமைச்சர் முக.ஸ்டாலின்
சில தலைவர்கள் இளமையிலேயே அதிகாரம் பெறுகிறார்கள். சில தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி நாட்கள் காத்திருந்து அதிகாரம் பெறுகிறார்கள்.
1953 ஆம் ஆண்டு பிறந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1969 இல் அரசியலில் நுழைந்தார். 1976 இல் அவசர காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1989 இல் சட்டமன்றத் தேர்தலில் முதல் வெற்றி.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால அரசியல் பயணம். ஒவ்வொரு படிமுறையிலும் தந்தை கலைஞரின் நிழல். ஒவ்வொரு தேர்தலிலும் "அடுத்த முறை" என்ற காத்திருப்பு.
ஒருவழியாக 2021 மே — அந்த காத்திருப்பு முடிந்தது. 2021 இல் DMK 159 இடங்களில் வென்றது. மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சரானார். இந்தியாவின் 12வது முதலமைச்சர்.
மே 7, 2021 — மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார். ஐம்பது ஆண்டு கால அரசியல் பயணத்தின் பின் கிடைத்த வெற்றி. (படம்: India Today)
சென்னை மேயர் காலம் — ஒரு தேர்ந்த நிர்வாகி
மு.க ஸ்டாலினைப் புரிந்துகொள்ள அவரது சென்னை மேயர் காலகட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். 1996 இல் சென்னையின் மேயரானார். "சிங்கார சென்னை" திட்டத்தைத் துவங்கினார்.
குப்பை அகற்றும் முறையை நவீனப்படுத்தினார். ஒன்பது பெரிய மேம்பாலங்கள் மற்றும் 49 பாலங்கள் அவரது ஆட்சியில் கட்டப்பட்டன. அந்த காலகட்டத்தில் மு.க ஸ்டாலின் ஒரு தேர்ந்த நிர்வாகியாகத் தன்னை உறுதி செய்து கொண்டார். வெறும் கட்சி தலைவராக மட்டுமல்ல, ஒரு நகரை மாற்றிய மனிதன் என்ற அடையாளம் அவருக்கு வந்தது.
2009 இல் தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சரானார். 2018 இல் கலைஞர் மறைந்த பிறகு DMK வின் தலைவரானார்.
நம்பகத்தன்மை — ஒரு வேறுபட்ட தலைமைத்துவ குணம்
ஸ்டாலினை ஒரு கவர்ச்சிகரமான மக்களின் மனதை வென்ற தலைவர் என்று சொல்ல முடியுமா?
இதற்கான நேர்மையான பதில், அவர் MGR போல திரைக் கவர்ச்சி கொண்டவரல்ல. ஜெயலலிதா போல விடாப்பிடியான பிடிவாதம் கொண்டவரல்ல. தந்தையைப் போல பல்துறை வித்தகரல்ல, ஆனால் அவரிடம் ஒரு வேறுபட்ட தலைமைத்துவ குணம் இருக்கிறது, அது "நம்பகத்தன்மை."
2021 ஆகஸ்ட் இந்தியாவில் முதலமைச்சர்களில் முதல் இடத்தில் "India Today Mood of the Nation" கருத்துக்கணிப்பில் நின்றார்.
அவரது தந்தையின் மறைவின் போது மெரினாக் கடற்கரையில் அவரை நல்லடக்கம் செய்து விட முடியுமா? என்று பெரிய கேள்விக் குறி இருந்தது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார்.
ஆனாலும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். வழக்குரைஞர் அணி உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது. எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு திறந்த மனம் கொண்டவராக இல்லை. அரசியல் பகைமையை, அதிகாரத் தொனியைக் காட்டி மறுத்தார்.
நள்ளிரவில் நீதியரசர் கலைஞரின் உடலை மெரினாவில் அவருடைய கடைசி ஆசையின்படி அண்ணாவிற்கு அருகில் நல்லடக்கம் செய்யும் வாய்ப்பை வழங்கினார். அந்தக் காட்சி ஒரு நெகிழ்வான தந்தை மகன் உறவின் சாட்சியாக இப்போதும் கண்களில் நிற்கிறது.
பெருந்தன்மை மற்றும் உள்ளடக்கிய அரசியல்
2021 ஆம் ஆண்டில் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு கொரானா பெருந்தொற்றுக் காலத்தின் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள ஒரு குழுவை அமைத்த போது அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றிருந்தார். அவரது பெருந்தன்மையும், மக்கள் மீதிருந்த உண்மையான அக்கறையும் வெளிப்பட்டது.
ஜெயலலிதாவும், கலைஞரும் கடுமையான அரசியல் மோதல்களில் இருந்த காலத்தில் முதல்வராக இருந்த அரசியல் எதிரியான அம்மையாரை சந்தித்து பேரிடர் நிவாரண நிதியை புன்னகைக்கும் முகத்தோடு வழங்கி விட்டு வந்தார். "அப்பாவின் உடல்நலம் எப்படி இருக்கிறது?" என்று முதல்வர் அவரிடம் நலம் விசாரித்ததாகத் செய்திகள் வந்தது.
முதல்வராகப் பொறுப்பேற்ற உடன் பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அமைத்தார். அறிவியல்பூர்வமாகப் பொருளாதார முன்னேற்றங்களை நோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
திட்டக்குழுவில் சமூக அக்கறையும், எளிய வாழ்வியல் முறைகளும் கொண்ட மனிதர்களை நியமித்தார். திட்டக் குழுவில் இடம்பெற்ற திரு.ஜெயரஞ்சன், மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் போன்றவர்கள் எழிலகத்தின் அறைகளில் எப்போதும் இருந்தார்கள்.
அவர்களை சந்திப்பது, அணுகுவது என்பதெல்லாம் மிக எளிமையான ஒன்றாக இருந்தது. கொள்கை முரண்பாடுகள், தொடர் எதிர்ப்பியக்கம் இருப்பினும் எதிர்வீட்டில் வசித்த முதிய பிராமணக் குடும்பத்து மனிதர்களை மதிப்போடு சந்தித்து அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கடுமையான அரசியல் முரண்பாடுகள் இருப்பினும் கலைஞரின் இறுதிப் பயண நிகழ்வுகளில் தனது சகோதரர் மு.க.அழகிரி அவர்களை இடையிடையில் அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டார். அது ஒரு எளிய சகோதரனாக அவரது மதிப்பை உயர்த்தியது.
வரலாற்றில் மூன்று முக்கிய காலகட்டங்கள்
வரலாற்றில் மூன்று சூழல்கள் அவரை ஒரு மகத்தான தலைவராக உயர்த்தின.
முதலாவது பெருந்தொற்றுக் கால நிர்வாகம். 2021 ஆம் ஆண்டில் அவர் பதவி ஏற்ற உடனேயே COVID இரண்டாம் அலையை சந்தித்தார். நிர்வாக திறன் காட்டினார். மக்களோடு நின்றார்.
இரண்டாவது மத்திய அரசுடன் எந்த சமரசமும் இல்லாமல் மோதினார். தமிழகத்தின் தேவைகளுக்காக அந்த மோதல் இருந்தது என்பதுதான் சிறப்பம்சம்.
NEET, ஆளுநருடன் அதிகாரங்கள் தொடர்பான மோதல், இந்தி திணிப்பு, Delimitation— இவை எல்லாவற்றிலும் ஸ்டாலின் மத்திய அரசை வெளிப்படையாக எதிர்த்தார்.
தமிழக நலன்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர்களுக்கு இது ஒரு தலைவன் செய்ய வேண்டிய காரியம் என்று ஆழ்மனதில் தோன்றியது.
மூன்றாவது — "டெல்லி vs தமிழ்நாடு" என்கிற கருத்தாக்கம். திமுகவின் ஜூன் 2025 மதுரை பொதுக்குழுவில் மு.க ஸ்டாலின் "டெல்லி ஆக்கிரமிப்பை" எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்.
நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை மசோதாவின் நகலை நாமக்கல்லில் ஏப்ரல் 16, 2026 அன்று எரித்தார். இது தமிழர்களின் ஆழ்மன உணர்வை ஒரே நேரத்தில் தொட்டது.
நாமக்கல், ஏப்ரல் 16, 2026 — மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரிக்கிறார். தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தின் அடையாளம். (படம்: The Quint)
பெண்களை மாற்றிய திட்டங்கள்
நான்கு - பெண்களை மாற்றிய திட்டங்கள், மு.க ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய அரசியல் ஆயுதம், சமூகம் குறித்த சிந்தனை என்பது பெண்களை நேரடியாக சென்றடைந்த திட்டங்கள் தான்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் — ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மாதம் ₹1,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது.
இதை "இலவசம்" என்று சொல்லாமல் "உரிமைத் தொகை" என்று சொன்னது பெண்களின் மனதை வென்ற அரசியல் நகர்வு. இது பெண்களின் பல்லாண்டு கால கூலியற்ற வீட்டு வேலைக்கான சம்பளம் என்று இந்த அரசு அங்கீகரிக்கிறது என்ற செய்தியை கொண்டு சென்றது.
பாரதீய ஜனதா கண்கொத்திப் பாம்பாக இந்த தேர்தலுக்கு முந்தைய அதிரடியான மு.க.ஸ்டாலினின் திட்டத்தைத் தகர்க்க உச்சநீதி மன்றம் செல்லத் தயாராக இருந்த நாளின் அதிகாலையில் கச்சிதமாக எந்தக் குழப்பங்களும் இல்லாமல் பணத்தைப் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து திராவிட எதிர்ப்பு இந்துத்துவ ஆற்றல்களில் கண்களில் மண்ணைத் தூவினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் — ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படுகிறது. இது மு.க.ஸ்டாலின் அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று. (படம்: The Hindu)
புதுமை பெண் திட்டம்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நேரடியாக வழங்கப்படும் திட்டம். இது ஒரு தலைமுறையின் கனவை சுமக்கும் பெண்குழந்தைகளை நேரடியாகத் தொட்டது.
"இல்லத்தரசி" கூப்பன்: ₹8,000 மதிப்பிலான வீட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான கூப்பன் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இது நடுத்தர வர்க்கப் பெண்களைப் பெருமளவில் கவர்ந்தது.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெண்களில் வாக்குகளைக் கவர்வதில் 11% முன்னிலை வகித்தது. ஆனால் 2021 இல் DMK பெண் வாக்குகளில் 45% பெற்று அதிமுகவை முதன்முறையாக (42%) முந்தியது.
இந்த மாற்றம் தற்செயலானதல்ல, இது ஸ்டாலின் அரசின் திட்டமிட்ட முயற்சிகளின் பலன்.
மத்திய அரசுடனான மோதல்கள்
தொகுதிகள் மறுவரையறை எதிர்ப்பு: மத்திய அரசின் Delimitation திட்டம் தெற்கு மாநிலங்களை நாடாளுமன்றத்தில் பலவீனப்படுத்தும் என்று ஸ்டாலின் வெளிப்படையாகத் தீர்க்கமுடன் போரிட்டார். நாமக்கல்லில் அந்த மசோதா நகலை எரித்தார்.
இந்திய தேசத்தில் தமிழர்களின் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் போராட்டம் என்ற செய்தியை அந்தப் போராட்டம் மக்களிடம் ஆழமாகக் கொண்டு சென்றிருக்கிறது.
ஆளுநர் உடனான மோதல்: ஆளுநர் ஆர்.என் ரவியுடன் ஸ்டாலின் அரசு தொடர்ந்து மோதியது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது அவரை முகம் சுளிக்க வைத்தது.
இந்த மோதலில் மு.க ஸ்டாலின் ஒருபோதும் விலகவில்லை, பின்வாங்கவில்லை. மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார். வழக்கை வென்றார். அது ஒரு மிக முக்கியமான, பொறுப்பான தலைவர்கள் செய்யும் பணி என்று மக்கள் நினைத்தார்கள்.
இந்தி எதிர்ப்பு: மூன்று மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்பை எதிர்த்து மு.க ஸ்டாலின் தொடர்ந்து போராடினார். தமிழ் அடையாளம் என்பது ஸ்டாலினுக்கு தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல, அது ஒரு நிலையான கொள்கை நிலைப்பாடு என்ற நம்பிக்கை மக்களிடம் உருவானது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டணி நிர்வாகம்
கோவில் சீர்திருத்தம்: நூற்றுக்கணக்கான கோவில்களை அவரது ஆட்சி சீரமைத்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். கோவில் வளங்களை சமூக நலனுக்கு பயன்படுத்தினார். இது பாரதீய ஜனதாவின் "நாங்கள் இந்துக்களின் கட்சி" என்ற கூற்றை பலவீனப்படுத்தியது.
பொருளாதார வளர்ச்சி: VinFast நிறுவனத்தின் ₹16,000 கோடி முதலீடு. Tata-Jaguar Land Rover ₹9,000 கோடி முதலீடு. GSDP 11.19% வளர்ச்சி, 14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி. வேலைவாய்ப்பை உருவாக்கும் தலைவர் என்ற படிமம் வலுப்பட்டது.
கூட்டணி நிர்வாகம் — ஒரு நுட்பமான சாதனை: திமுக கூட்டணியை நிர்வகிப்பது அவ்வளவு எளிதல்ல, VCK, IUML, காங்கிரஸ், CPI, CPM, MDMK என பல்வேறு போராட்ட குணமுள்ள கட்சிகள். ஆனாலும் இறுதிவரை கூட்டணியில் எந்த சேதாரமும் இல்லாமல் நெகிழ்வாகக் கவனித்துக் கொண்டார். இந்த வேலையை அவர் தனியொருவராகவே செய்து முடித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு திமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டார், இது அரசியல் சாணக்கியம்.
தேமுதிகவுக்கு 10 இடங்கள், VCK க்கு 8 இடங்கள், IUML க்கு 2 இடங்கள், காங்கிரஸுக்கு 28 இடங்கள் என்று ஒவ்வொரு கட்சிக்கும் அதன் வலிமைக்கு ஏற்ற இடங்களைக் கொடுத்து கூட்டணியை உறுதியாக வைத்திருக்கிறார்.
முடிவுரை
மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தலைவராக உருவெடுத்தது தந்தையின் பண்பாட்டுத் தொடர்ச்சியால் மட்டுமல்ல. நீண்ட போராட்டத்தால், நிர்வாகத் திறனால், மக்களை நேரடியாக தொட்ட அவரது திட்டங்களால்.
0 Comments