தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 - திராவிட முன்னேற்றக்கழகம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 - திராவிட முன்னேற்றக்கழகம்

கட்டுரையாளர் - கை அறிவழகன்

1949 செப்டம்பர் 17, பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து C.N. அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார். இந்தப் பிரிவு வெறும் அரசியல் பிரிவல்ல, அது ஒரு தத்துவார்த்த பிரிவு. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் ஒரு அடிப்படைக் கருத்து வேறுபாடு இருந்தது, பெரியார் தேர்தல் அரசியலில் பங்கேற்பதை எதிர்த்தார். ஆனால், அண்ணா மக்களிடம் நேரடியாக போவது தவிர்க்க முடியாதது என்று நம்பினார்.

அந்த நம்பிக்கையே திமுகவின் நம்பிக்கை. திமுகவை முற்று முழுவதுமாகப் பெரியாரின் இயக்கம் என்று சொல்ல இயலாது, சொல்லாமல் விடுவதும் இயலாது. அண்ணா, 1935 இல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். பெரியாரின் பல்வேறு கருத்தியலோடு ஆழமாக அவரால் ஈர்க்கப்பட்டார். பெரியாரின் சமத்துவ சிந்தனை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை இவை அனைத்தும் சேர்ந்து அண்ணாவை வடிவமைத்தன.

அண்ணாதுரை சிலை C.N. அண்ணாதுரை — திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாட்டின் முதல் திமுக முதலமைச்சர். (படம்: The Hindu)
பெரியார் உழுதார், விதைத்தார், அண்ணா உரமிட்டுப் பயிராக்கினார். கலைஞர்தான் அறுவடை செய்து உணவற்றவர்களுக்கு அதை விருந்து வைத்தார்.

அண்ணா — தமிழ்நாட்டை உருவாக்கியவர்

பெரியார் திமுக நிறுவப்படுவதை துவக்கத்தில் ஆதரிக்கவில்லை. அண்ணா 1949 இல் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்தபோது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஆழமாக இருந்தது. தொடர்ந்து அரசியலில் இருவரும் தமிழர்களின் சமூக நீதிக்காகப் பாடுபட்டனர். ஆனால் வெவ்வேறு பாதைகளில். இந்த நுணுக்கம் புரிந்தால்தான் திமுகவின் வரலாறு புரியும்.

அண்ணா ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், பேச்சாளர், திரைப்பட வசனகர்த்தா, தமிழின்‌ பல்வேறு வடிவங்களை கட்சியின் கொள்கை பரப்புரைக்கு ஆயுதமாக்கினார். 1967 தேர்தலில் 234 இடங்களில் 137 இடங்கள் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். காங்கிரஸ் தவிர பிறிதொரு கட்சி ஆட்சி அமைத்த இந்தியாவின் முதல் மாநிலமும், தேர்தலும் இது.

"மதராஸ்" மாநிலத்தை தமிழ்நாடு என்று மாற்றினார். இந்தி திணிப்பை எதிர்த்து இரண்டு மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இவை வெறும் நிர்வாக முடிவுகளல்ல, தமிழர்களின் தொன்ம அடையாளத்தை மீட்டெடுத்த தருணங்கள். 1969 பிப்ரவரி 3, அண்ணா மறைந்தார். தமிழ்நாடு கண்ணீரில் ஆழ்ந்தது. ஆனால் அவர் விட்டுச் சென்ற மரபு இன்றும் திமுகவின் உயிரோட்டமாகத் தொடர்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அவரது அடியொற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் துவங்கின.

கலைஞர் கருணாநிதி கலைஞர் மு.கருணாநிதி — ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், திமுகவை 50 ஆண்டுகள் வழிநடத்தியவர். (படம்: India Today)

கலைஞர் கருணாநிதி — ஒரு சகாப்தம்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969 இல் கலைஞர் மு.கருணாநிதி திமுகவின் தலைவரானார். ஏறத்தாழ 50 ஆண்டுகள், 2018 இல் அவர் மறையும் வரை கட்சியை வழிநடத்தினார். தமிழ்நாட்டின் ஐந்து முறை முதலமைச்சர். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சவால்கள். ஒவ்வொரு முறையும் அவர் ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வந்தார்.

தமிழ்நாடு 100% மின்சாரமயமாதலின் பிதாமகன், விவசாயிகளுக்கு கட்டணமில்லாத மின்சாரம் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம். 27,294 சுய உதவி குழுக்கள் நிறுவல். உட்கட்டமைப்பில் கிராமங்கள் தோறும் சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்லூரி கட்டணம் தள்ளுபடி.

பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய முதல் இந்திய மாநிலம். மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்து போராடினார். 1974 ஏப்ரல் 16 அன்று சட்டமன்றத்தில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். கலைஞர் மு.கருணாநிதி ஒரு தலைவர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர். அவரது "திருக்குறள் உரை" — தமிழ் அறிஞர்களால் இன்றும் போற்றப்படுகிறது.

சங்கத் தமிழை வெகு மக்களிடம் கொண்டு சேர்ந்தவர்களின் பட்டியலில் அவருக்கு இல்லாத இடம் வேறு எவருக்கும் இல்லை. அரசியலும் இலக்கியமும் அவரது இரண்டு கண்கள், இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்ட அரிய தலைவன். கலைஞர் தமிழகத்திற்கும், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் ஆற்றிய பணிகள் பெரும்பாலும் இன்றுவரை ஊடகங்களால் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஆனால் காலம் அவரை எப்போதும் நினைவு கொள்ளும்.

மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் (இடது) மற்றும் உதயநிதி ஸ்டாலின் (வலது) — தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர். (படம்: News18)

தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும்

திமுக தேர்தல் வரலாறு: 1967 - 137 இடங்கள் | 1971 - 184 இடங்கள் | 1977 - 48 இடங்கள் | 1989 - 150 இடங்கள் | 1991 - 80 இடங்கள் | 1996 - 173 இடங்கள் | 2001 - 31 இடங்கள் | 2006 - 96 இடங்கள் | 2011 - 23 இடங்கள் | 2016 - 89 இடங்கள் | 2021 - 133 இடங்கள்.

இந்த எண்கள் ஒரு முக்கியமான உண்மையை சொல்கின்றன, திமுக வென்றது மட்டுமல்ல, மோசமாகத் தோற்றும் இருக்கிறது. ஆனால், ஒரு கட்சி தோற்றும் மீண்டும் எழுவது தான் அதன் உண்மையான வலிமையை காட்டுகிறது.

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி — புதிய சகாப்தம்

2018 இல் கலைஞர் மு.கருணாநிதி மறைந்த பிறகு மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2021 இல் முதலமைச்சரானார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இல் 39 இடங்களையும் வென்றது, ஒரு அசாதாரண சாதனை. உதயநிதி ஸ்டாலின், இன்றைய துணை முதலமைச்சர். இளைஞர்களை கட்சியில் இணைக்கும் சக்தி. குடும்ப அரசியல் வாரிசு என்ற விமர்சனம் தொடர்கிறது.

ஆனாலும், அவர் தந்தையைப் போல மென்மையாக இல்லாமல் தாத்தாவைப்‌ போல அதிரடி ஆட்டம் ஆடுகிறார். சனாதன சங்கிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார் என்பதுதான் ஹைலைட். இந்த இரண்டு தலைவர்களும் சேர்ந்து கட்சியை நவீனப்படுத்துகிறார்கள், Digital Outreach, Youth Engagement, Welfare Delivery என்று புதுமைகளோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள், இதுதான் இன்றைய திமுகவின் வலிமை.

கலைஞர் உரிமைத்தொகை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை — 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம். (படம்: Indian Express)

2026 தேர்தல் — திமுகவின் வெற்றி வாய்ப்பு

DMK கூட்டணி 44% முதல் 47% வரை வாக்கு விகிதம் பெறும் என்று கணிப்பிடப்படுகிறது, நலத்திட்டங்கள் மக்கள் மனதில் மெல்ல மெல்லப் பரவுகிறது. நம்பகத்தன்மை தான் முதன்மைக் காரணம் என்பதன் சாட்சி.

தொடர் ஆட்சியில் திமுக கொண்டு வந்த திட்டங்கள்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை — 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000. தேர்தலுக்கு முன் ₹5,000 வழங்கியது. புதுமைப் பெண் திட்டம் — அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ₹1,000. நான் முதல்வன் திட்டம் — இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு. முதலீடு ஈர்ப்பு — VinFast, Tata-JLR உட்பட பல நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்றியது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள். நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை மசோதா எதிர்ப்பு — தமிழ் அடையாள அரசியலை வலுப்படுத்தி இருக்கிறது.

வாக்கு விகிதம் மற்றும் கணிப்பு

2021 இல் DMK கூட்டணி வலுவாக வென்றது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100% வெற்றி விகிதம், அந்த momentum உறுதியாகத் தொடரும். 2016 இல் 40.8% வாக்கு விகிதம் 98 இடங்கள், 2021 இல் 44.4% வாக்கு விகிதம் 159 இடங்களைக் கொடுத்தது. 200 இடங்களுக்கு தேவையான வாக்கு விகிதம் கிட்டத்தட்ட 48% - 52%. அது எட்டமுடியாத ஒன்றல்ல.

OPS பிரிவின் வாக்கு வங்கி, சசிகலா மற்றும் பெரிய ஐயா ராமதாஸ் குழு, இவர்கள் பிரிக்கப் போகும் வாக்குகள் உறுதியாக அதிமுகவை பலவீனப்படுத்தும். OPS மற்றும் மனோஜ் பாண்டியன் போன்றோர் 2026 பிப்ரவரியில் DMK வில் சேர்ந்தனர். இது உண்மையிலேயே திமுகவுக்கு சாதகம். AIADMK பிளவு 2021 இல் 66 இடங்கள் மட்டுமே கொடுத்தது.

2026 இல் இது இன்னும் குறையும். அதிமுகவின் பலவீனம் திமுகவுக்கு நேரடி லாபம் கொடுக்கும். இது 10-15 இடங்கள் திமுக கூட்டணி கூடுதலாகப் பெறுவதற்கு வாய்ப்புக் கொடுக்கலாம். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி எதிர்ப்பு வாக்குகளை உறுதியாகப் பிரிக்கும், அது அதிமுகவுக்குப் போகாமல் தடுக்கப்படும், எனவே இதுவும் திமுகவுக்கு சாதகமான சூழலே.

தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம்

தவெகவின் வாக்குகள் எங்கிருந்து வருகின்றன என்பது முக்கியம். பல்வேறு கணிப்புகளில் TVK 15% வாக்கு விகிதம் பெற்றாலும் இடங்களை வெல்வது கடினம். திமுக vs அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் இடங்களில் திமுகவிற்கு சாதகமாக தவெக மாறும் என்பதே கள நிலவரம்.

நான்கு முனைப் போட்டியில் குறைந்த வாக்கு விகிதத்திலேயே பல தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லலாம். Four-cornered fight இல் First Past The Post system இல் தொகுதிக்கு 30-35% வாக்குகள் பெற்றால் வென்று விடலாம். இதுதான் கள்ள ஊடகங்கள் மறைக்கும் உண்மை.

எடுத்துக்காட்டுக்கு காரைக்குடி தொகுதியை எடுத்துக் கொள்வோம், திமுக கூட்டணி 32%, அதிமுக கூட்டணி 28%, அதிகபட்சமாக நாம் தமிழர் 20%, தவெக 22% என்று வைப்போம். மாங்குடி எளிதாக வெற்றிக் கோட்டை அடைந்து விடுவார். வெறும் 32% வாக்குகள் பெற்றாலும் திமுக கூட்டணி பல தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதுதான் திமுக 200+ இடங்களை வெல்வதற்கான மிகவும் சாத்தியமான வழி.

பெண் வாக்காளர்கள் — திமுகவின் பலம்

மகளிர் உரிமைத்தொகை, புதுமை பெண் திட்டம் போன்றவை நேரடியாக 1+ கோடி குடும்பங்களை தொட்டிருக்கின்றன. Inside Elections கணிப்பில் திமுகவின் நலத்திட்டங்கள் வாக்காளர்களின் உளவியலில் ஆழமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண் வாக்காளர்களில் DMK வலுவாக முன்னிலையில் இருக்கிறது.

இதுதான் 100% உண்மை. 1.31 கோடி பெண்கள் நேரடியாக பயன் பெற்றவர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக குடும்பத்தில் 3-4 பேரை தொடர்பு கொள்கிறார்கள். அந்தப் பெருக்கல் கணக்கு மிகவும் சக்தி வாய்ந்தது.

இறுதிக் கணிப்பு

பலவீனமான பிளவுற்ற அதிமுகவுடன், அதன் கூடுதல் சுமையான பாரதீய ஜனதாவும் 20-35 இடங்கள் வரை திமுகவிற்கு எளிதான வெற்றியைக் கொடுக்கும். நான்கு முனைப் போட்டியின் split vote advantage கூடுதலாக 15-20 இடங்களை திமுகவிற்குக் கொடுக்கும், நலத்திட்டங்கள் மூலம் நேரடிப் பயனடைந்த பெண்களின் வாக்கில் மேலும் 10-12 இடங்கள்.

எதிர்மறைகள்: தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்ட அளவிலான திமுக வாக்கையும் பிரிக்கும். நமது கணக்கில் இந்தப் பிரிப்பு 8 முதல் 12 இடங்கள் வரை இழப்பை ஏற்படுத்தக் கூடும். திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக்கால எதிர்ப்பு உணர்வு 3-5 இடங்கள் வரை இழப்பை ஏற்படுத்தலாம். வடக்கு மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியும், அதிமுகவும் நெருக்கமாக இணையும் இடங்களில் 3 முதல் 5 இடங்கள் இழப்பு ஏற்படலாம்.

2021 வாக்கு வங்கி : 159 இடங்கள் + அதிமுக பிளவு லாபம் +15 + பெண் வாக்காளர்கள் அலை +15 - தவெக ஏற்படுத்தும் தாக்கம் -6 - ஆட்சிக்கான எதிர்ப்பு வாக்குகள் -5 - பாமக-அதிமுக -5

திமுக இந்தத் தேர்தலில் 173 இடங்களை இயல்பாகவும், 185 இடங்களை கொஞ்சம் கடினமாக முயற்சி செய்தும் பெற்று விடலாம். ஆனால், எனக்குள் ஏதோ ஒரு பட்சி இந்தக் கணக்கை எல்லாம் தாண்டி இந்த முறை மக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை உயர்த்திப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் கடந்த 10 நாட்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறது.

முடிவுரை

திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல. அது ஒரு சமூக இயக்கம். பெரியாரின் பகுத்தறிவு விதையிலிருந்து துவங்கி, அண்ணாவின் தத்துவ நீரூற்றப்பட்டு, கலைஞர் மு.கருணாநிதியின் 50 ஆண்டு உழைப்பில் செழித்து வளர்ந்த ஒரு ஆலமரம்.

மு.க.ஸ்டாலினின் நிர்வாகம், முதிர்ச்சி, நலத்திட்டங்கள் வழங்குதல், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நம்பிக்கை, முதலீட்டு ஈர்ப்பு, பெண்களின் முன்னேற்த்தையும், கல்வியையும் முன்னிறுத்தி அவர் நிகழ்த்திய சாதனைகள் இவை அனைத்தும் சரியாக செயல்பட்டிருக்கின்றன. அது திமுகவை 2026 தேர்தலில் வெற்றிக்கான சாதகமான சூழலில் வைக்கிறது.

பார்க்கலாம். மே 4 அன்று.