இலங்கையும் ஜப்பானிய உதவிப் பொதியும்
ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி கடந்த 15 ஆம் திகதி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் நடத்திய மெய்நிகர் சந்திப்பை அடுத்து- POWERR Asia என்ற பெயரில் மிகப்பெரிய உதவிப்பொதி ஒன்றை அறிவித்திருக்கிறார்.
இந்த மெய்நிகர் சந்திப்பில் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், புருனே, கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, சிறிலங்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றதாக ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்மூஸ் நீரிணை வழியான எண்ணெய் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ள சூழலில், எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகளின் விநியோக சங்கிலியை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆராயவே ஜப்பானிய பிரதமர் இந்த உயர்மட்ட மெய்நிகர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜப்பானிய பிரதமர் சனே தகாய்ச்சி ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் மெய்நிகர் சந்திப்பு நடத்துகிறார் — POWERR Asia திட்டத்தின் கீழ் 10 பில்லியன் டொலர் உதவியை அறிவித்தார். (படம்: Japan Times)
எரிசக்தி நெருக்கடி மற்றும் 10 பில்லியன் டொலர் உதவி
இந்த சந்திப்பில், எரிபொருள் நெருக்கடி, விலை உயர்வு, பாதுகாப்பற்ற கப்பல் பாதை போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இவற்றின் விளைவாக, விநியோக சங்கிலியில் ஏற்படக் கூடிய தாக்கங்கள், அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானியப் பிரதமர் தகாய்ச்சி அறிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள், ஜப்பானுக்குத் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
விநியோகச் சங்கிலிகள் மூலம், ஒவ்வொரு ஆசிய நாட்டுடனும் ஜப்பான் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் பரஸ்பரம் சார்ந்துள்ளது என ஜப்பானியப் பிரதமர் தகாய்ச்சி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஆசியாவில் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறை அல்லது விநியோகத் தடைகள், ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கணிசமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான நிலையில், ஜப்பான் தனக்கு தேவையான பொருட்கள் ஆசிய நாடுகளில் இருந்து தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மேற்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட நோக்கங்களும் உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திட்டமிடப்பட்ட இந்த நிதியுதவியானது- 1.2 பில்லியன் பீப்பாய்கள் வரையான – அதாவது ஆசியான் நாடுகளின் சுமார் ஓராண்டு மசகு எண்ணெய் இறக்குமதிக்குச் சமமானது என்றும் ஜப்பானியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் பெட்ரோலிய சார்பு
மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட, பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பொருட்களை, ஜப்பான் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இந்தப் பகுதியில் உள்ள பல நாடுகள் குறைந்தளவிலான எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளதால், அது ஜப்பானுக்கான ஏற்றுமதிகளைப் பாதிக்கக் கூடும் என்ற கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனை சமாளிக்கும் வகையிலேயே, தனது தேவையான பொருட்களை விநியோகிக்கும் ஆசிய நாடுகளுக்கு, இந்த நிதி உதவியை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்திருக்கிறது.
இலங்கைக்கான உதவி — ஏன்?
இந்த நிதி உதவியை பெற்றுக் கொள்ளப் போகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று எனத் தெரியவருகிறது. ஆனால் அது இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி மூலம் வழங்கப்படும் கடன்கள் உள்ளிட்ட, நிதி உதவியின் மூலம், இந்த சிக்கலைச் சமாளிக்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தான் சேமித்து வைத்திருக்கின்ற-254 நாள்களுக்குப் போதுமான எண்ணெயின் 20 சதவீதத்தை விடுவிக்க ஜப்பான் இணங்கியிருந்தது.
ஆனால் இந்த நிதியுதவித் திட்டத்தில் ஜப்பானின் இருப்புகளிலிருந்து நேரடி மசகு எண்ணெய் ஒதுக்கீடுகள் இல்லை என்றும், இது உள்நாட்டு எரிபொருள் விநியோகங்களை பாதிக்காது என்றும் ஜப்பானியப் பிரதமர் கூறியிருக்கிறார்.
எண்ணெயை விடுவிப்பதற்குப் பதிலாக மாற்று வழிகளின் மூலம் ஆசிய நாடுகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு நிதியளிப்பது, சேமிப்புத் திறனை அதிகரிப்பது போன்றவற்றுக்கு நிதி உதவியை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது ஜப்பான். இது ஜப்பானின் எதிர்கால விநியோக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நகர்வு.
2024 ஆம் ஆண்டு 179.2 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை மாத்திரமே இலங்கையில் இருந்து ஜப்பான் இறக்குமதி செய்திருந்தது. இலங்கையின் ஏற்றுமதி சந்தையில் 15ஆவது இடத்திலேயே ஜப்பான் இருக்கிறது. அதிலும் தேயிலை ஏற்றுமதி கணிசமான பங்கை வகிக்கிறது.
அதேவேளை, ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் இறப்பர் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கையுறைகள், டயர்கள் போன்றவற்றுக்கு, பெட்ரோலிய மூலப்பொருட்கள் அவசியம்.
அதேவேளை, இறால், நண்டு மற்றும் மஞ்சள் துடுப்பு துனா போன்ற கடலுணவு வகைகளையும், இலங்கையில் இருந்து ஜப்பான் இறக்குமதி செய்கிறது. இதுபோன்ற துறைகள் எரிபொருள் நெருக்கடியால் பாதிக்கப்பட கூடியவை தான்.
ஆனால் இந்த திட்டத்திற்குள் இலங்கையை ஜப்பான் கொண்டு வந்துள்ளமைக்கு இதுதான் காரணம் அல்ல. இலங்கையை சுற்றி இப்போது நடந்து கொண்டிருக்கின்ற பூகோள அரசியல் மற்றும் மூலோபாய போட்டியின் காரணமாகவே ஜப்பான் இந்த திட்டத்திற்குள் இலங்கையைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடியும் வல்லரசு போட்டியும்
இலங்கை எரிபொருள் நெருக்கடியை சந்தித்தபோது, பல நாடுகள் உதவ முன்வந்தன. அமெரிக்கா, ஈரான், இந்தியா, சீனா, ரஷ்யா என்று பல நாடுகள் எண்ணெய் நெருக்கடியைத் தீர்க்க முன் வந்திருக்கின்றன.
ஆனால் எந்த நாடும் முழுமையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு இணங்கவில்லை. ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராக இல்லை.
அமெரிக்காவில் இருந்து மசகு எண்ணெயை வாங்குவதற்கும் தயங்கித் தயங்கி, இப்போது முதல் தொகுதி மசகு எண்ணெய் வாங்கப்பட்டு, அந்தக் கப்பல் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக ஒரு கப்பலில் பெட்ரோல், டீசல் போன்றன அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. சீனாவும் அவ்வாறே அவசர உதவியாக எரிபொருளை அனுப்பியுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி — இந்தியாவுடன் இணைந்து புனரமைக்கப்படும் மிகப்பெரிய களஞ்சியப்படுத்தல் வசதி. ஜப்பானும் இதில் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. (படம்: News First)
அதுமாத்திரமல்ல, இலங்கைக்கு எப்போது நெருக்கடி ஏற்பட்டாலும் எந்த வகையான உதவியை வழங்குவதற்கும் சீனா தயாராக இருக்கிறது என கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்.
அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக் நிறுவனம் மிகப்பெரியளவிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கு இணங்கியது. எனினும், அந்தத் திட்டம் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.
இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இது சீனாவின் செல்வாக்கு மற்றும், பிராந்தியத்தில் அதன் முதலீடுகள், என்பன, இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று இந்த நாடுகள் கருதுகின்றன.
குவாட் மூலோபாயமும் இலங்கையும்
இலங்கைக்கு உள்ள பிரதான பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி வசதி இல்லாமல் இருப்பது மற்றும் அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லாமையாகும்.
திருகோணமலையில் மிகப்பெரியளவிலான எண்ணெய் தாங்கி தொகுதி ஒன்றைக் கொண்டிருந்தாலும், அதனை தொடர்ந்து பராமரிக்காமல் போனதாலும், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாதாலும், இலங்கை நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
தற்போதைய அரசாங்கம், அந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்து,புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த களஞ்சியப்படுத்தல் வசதியை மேலும் வலுப்படுத்துவதற்கு, இந்தியாவுக்கு கை கொடுக்க ஜப்பான் விரும்புவதாகத் தெரிகிறது.
அதன் ஒரு கட்டமாக ஜப்பான், இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்க முன்வந்திருக்கிறது.
முடிவுரை — வாய்ப்போ வலையோ?
இப்போது ஜப்பானியப் பிரதமர் அறிவித்திருக்கின்ற 10 பில்லியன் டொலர் உதவித் தொகுப்பில் எத்தனை நாடுகள் இடம்பெறவுள்ளன, அதில் இலங்கைக்கு எவ்வளவு நிதி கிடைக்கக் கூடும் என்பன போன்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
ஆனால் இது இலங்கைக்கு கணிசமான நிதியை வழங்கக் கூடும். இது இலங்கையில் எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பதற்கும், விநியோக சங்கிலியை பாதுகாத்துக் கொள்வதற்கும் உதவக் கூடும்.
ஆனால் அது உடனடியாக கிடைக்குமா என்பது சந்தேகம். அவசர நிலை கருதி ஜப்பான் இந்த நிதியை மிக வேகமாக விடுவிக்க கூடும்.
ஆனாலும் இது இலங்கையின் எரிசக்தி சுதந்திரத்தை உறுதிப்படுத்துமா அல்லது சீன எதிர்ப்பு மூலோபாயத்திற்காக கையாளப்படும் தந்திரம் என்பதால், மேலும் கால் கட்டுப்போட்டு விடுமா என்பதை காலப்போக்கில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
0 Comments