கொழும்பில் தொடங்கிய இராஜதந்திரப் போர்
ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் போல தெரியவில்லை.
இந்தக் கப்பல் உள்ளிட்ட தமது நாட்டின் மூன்று கப்பல்களை, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில்தான், அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டதாக, ஈரானிய தூதுவர் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
ஈரானிய தூதுவர் டாக்டர் அலிரேஸா டெல்கோஷ் கொழும்பில் ஊடக சந்திப்பு நடத்தினார் — "ஐஆர்ஐஎஸ் டேனா இலங்கையின் அழைப்பிலேயே வந்தது" என உறுதிப்படுத்தினார். (படம்: Gossip Lanka News / Daily Mirror)
சம்பவம் நடந்தவுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்த போதே, அவர் இந்த விஷயத்தை கூறியிருந்தார்.
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இந்தியாவில் கூட்டுப் பயிற்சியின் போது ஈரானிய கடற்படைக் கப்பல்களை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி, கடற்படை தளபதிக்கு இந்த விஷயத்தில் அழைப்பு விடுப்பதற்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு அரசாங்கம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே அரசாங்கம் கூறியிருந்தது.
அதேவேளை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பெப்ரவரி 26ஆம் திகதி காலையில் 3 ஈரானிய கப்பல்களை மார்ச் 9ஆம் திகதிக்கும் 13ஆம் திகதிக்கும் இடையில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், அன்று மாலையில் அமெரிக்காவிடம் இருந்து மற்றொரு அழைப்பு வந்ததாகவும் கூறியிருந்தார்.
ஜிபுட்டியில் இருந்து செயற்படும், இறக்கைகளில் தலா 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு போர் விமானங்களை, மார்ச் 4ஆம் திகதிக்கும் 8ஆம் திகதிக்கும் இடையில், மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையை கவனத்தில் எடுத்து, அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இது ஒரு நடுநிலைச் செயற்பாடு என்றும் அவர் வர்ணித்திருந்தார். மோதல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு இடமளிப்பது மோதலை எமது வாசலுக்கு கொண்டு வந்து நிறுத்தும் என எதிர்பார்த்து, அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அது இலங்கையின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையின் பிரதிபலிப்பு என்றும் பெருமைப்பட்டிருந்தார்.
நடுநிலை என்பது கூற்றில் அல்ல, செயலில்
அந்த விஷயத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசாங்கம் தன்னை நடுநிலையான நாடு என்று நம்ப வைப்பதற்கு கடுமையாகப் போராடுகிறது. கடுமையான பிரசாரங்களை மேற்கொள்கிறது.
இந்த விஷயத்தில் அரசாங்கம் அமெரிக்கா தொடர்பாக பகிரங்கமாக வெளிப்படுத்தியது முதிர்ச்சியற்ற இராஜதந்திரம் என விமர்சிக்கப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் ஈரானும் அதிருப்தி அடையும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
இரண்டு தரப்புகளும் இலங்கைக்கு முக்கியமானவை, பாரம்பரிய நட்புறவு கொண்ட நாடுகள். ஏற்றுமதி மற்றும் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவை. இரண்டு நாடுகளையும் சமாளிக்கின்ற விஷயத்தில் அரசாங்கம் சமநிலையான போக்கை கையாளவில்லை. இது முக்கியமான சிக்கல்.
இந்தச் சூழலில்தான் ஈரானிய தூதுவர் இலங்கையின் அழைப்பின் பேரிலேயே ஈரானிய கப்பல்கள் வந்தன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த அழைப்பு இராஜதந்திர ரீதியானதல்ல, ஒரு வழக்கமான, மரபுசார்ந்த அழைப்புதான் கடற்படைத் தளபதியினால் விடுக்கப்பட்டது என சமாளிக்க முற்படுகிறார்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் — அமெரிக்கா கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர் விமானங்களை இங்கு தரையிறக்க அனுமதி கோரியது சர்ச்சைக்குரியதாக உள்ளது. (படம்: Wikipedia)
அரசாங்கம் கூறுவது போல மார்ச் 9ஆம் திகதிக்கும் 13ஆம் திகதிக்கும் இடையில் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது என்றால், அந்தக் கப்பல்கள் தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் தரித்து நிற்பதற்கு திட்டமிட்டிருந்தன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
பெப்ரவரி 26ஆம் திகதியுடன் கூட்டுப் பயிற்சியை முடித்துக்கொண்டு அந்தக் கப்பல்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டிருந்தன. அவை விசாகப்பட்டினத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு 2 அல்லது 3 நாட்கள் போதும். அப்படியிருக்க, மார்ச் 9ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி கோரப்பட்டதென்றால், கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கத் திட்டமிட்டிருந்துள்ளன.
அமெரிக்க விமானங்கள் — ஏன் மத்தளம்?
நெருக்கடி தீவிரமான சூழலில்தான் அவசரமாக கப்பல்களை கொழும்பு அல்லது கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தரித்து நிற்க அனுமதி கோரப்பட்ட அதே நேரத்தில் கொச்சி துறைமுகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்கா ஏன் தனது விமானங்களை மத்தளவில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியது என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்க கடற்படை அல்லது விமானப்படை விமானங்கள், இலங்கையில் தரையிறங்குவது புதிய விஷயம் அல்ல. ஆனால் போக்குவரத்து விமானங்களே அவ்வாறு இறக்கப்பட்டனவே தவிர போர் விமானங்கள் அல்ல.
அவற்றை தரையிறக்கும் சூழலோ, அதற்கான தேவையோ அமெரிக்காவுக்கு இருக்கவில்லை. இலங்கையுடன், தனது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு வெளிப்படையான உடன்பாடுகள் எதையும் அமெரிக்கா செய்துகொண்டிருக்கவில்லை.
ஆனால் தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அவசரத் தேவையின் போது தரையிறக்குவதற்கு, இந்தியாவுடன் உடன்பாடு செய்திருக்கிறது. LEMOA (Logistics Exchange Memorandum of Agreement) உடன்பாட்டின் கீழ், அவசரநிலை, எரிபொருள் நிரப்புதல் அல்லது கூட்டுப் பயிற்சிகளுக்காக அமெரிக்க விமானங்கள், இந்தியத் தளங்களைப் பயன்படுத்த முடியும். எனினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஜிபுட்டியில் இருந்து இயங்கும் அமெரிக்கப் போர் விமானங்களை, இந்தியத் தளங்களில் இறக்காமல், மத்தளவில் தரையிறக்குவதற்கு ஏன் அனுமதி கோரப்பட்டது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மத்தளவுக்குப் பதிலாக கொச்சியிலோ அல்லது திருவனந்தபுரத்திலோ தரையிறக்கியிருக்கலாம்.
அரபிக்கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய கடற்படையின் F-35B போர் விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவசரமாக திருவனந்தபுரம் விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது. 5 வாரங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. அதுபோல, அமெரிக்காவும் தனது விமானங்களை தரையிறக்கியிருக்கலாம். ஆனால் அமெரிக்கா மத்தள விமான நிலையத்தை தெரிவு செய்தது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
தலா எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் அந்த விமானம் ஏன் அனுப்பி வைக்கப்படவிருந்தது? ஈரானிய கடற்படைக் கப்பல்கள் அந்தப் பகுதியில் நிலைகொண்டிருப்பதை அறிந்தே இந்த விமானங்களை, குறித்த காலப்பகுதியில் அதாவது மார்ச் 4ஆம் திகதிக்கும் 8ஆம் திகதிக்கும் இடையில் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்ப அமெரிக்கா தீர்மானித்திருந்ததா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
அந்த விமானங்களின் மூலம் ஈரானிய கடற்படைக் கப்பல்களை தாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்ததா என்ற சந்தேகத்தையும் இது உருவாக்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், நீர்மூழ்கி மூலம் தாக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்க விமானம் தரையிறக்குவதற்கு திட்டமிட்ட 4ஆம் திகதியே ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
கொழும்பு — இந்திய பெருங்கடலில் இலங்கை தீவை மையப்படுத்தி ஈரான்-அமெரிக்க இராஜதந்திரப் போர் நடைபெறுகிறது; இது கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.
கொழும்பு — புதிய இராஜதந்திர மையம்
இது ஒரு புறத்தில் இருக்க, இப்போது ஈரானிய தூதுவர் வெளிப்படுத்தியுள்ள விஷயம், இலங்கை அரசுக்கு சங்கடமானது. இலங்கை கடற்படை தளபதி அந்த அழைப்பை விடுத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது இராஜதந்திர அழைப்பு அல்ல என்கிறது அரசாங்கம்.
இது இலங்கையின் கடற்படைத் தளபதிக்கு சிக்கலான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இந்த விவகாரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார். இந்த அழைப்பை விடுக்குமாறு, அவரை உந்திய காரணம் என்ன என்ற கேள்வியும் இனி எழும். அதேவேளை இனி அவரது அழைப்புகள் சர்வதேச கடற்படைகளால் உதாசீனப்படுத்தப்படும் நெருக்கடியும் உள்ளது.
இலங்கைக்கு அருகே இடம்பெற்ற இந்தத் தாக்குதல் மனிதாபிமானமற்றது என்ற நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருக்கிறது. ஆனாலும் இலங்கையுடனான உறவை கையாளுகின்ற விஷயத்தில், ஈரான் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதை ஈரானிய தூதுவரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. அவர் இந்தப் பிரச்சினையை, அமெரிக்காவை விடவும் இராஜதந்திரத்துடன் கையாள முற்படுகிறார்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையை வைத்து ஈரான் ஒரு இராஜதந்திர ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் ஈரானின் தூதுவர்கள் இருந்தாலும் இலங்கையில் உள்ள தூதுவரின் ஊடாகவே அது இந்த இராஜதந்திரப் போரைத் தொடங்கியிருக்கிறது.
இலங்கைத் தீவை மையப்படுத்திய ஈரான்-அமெரிக்க இராஜதந்திரப் போர் கூட, கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக இருக்கப்போகிறது. முன்னதாக, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்காவுக்கு எதிரான, ஒரு இராஜதந்திரப் போருக்கான தளமாக செயல்பட்டது. இப்போது, ஈரானுக்கு வெளியே உள்ள ஒரு முக்கியமான இராஜதந்திர மையமாக, கொழும்பை மாற்றியிருக்கிறது ஈரானிய அரசாங்கம்.
அமெரிக்கா இதனை எந்தளவுக்கு சகித்துக்கொள்ளப்போகிறது என்பது இப்போதுள்ள முக்கியமான கேள்வியாகும்.
0 Comments