நடுநிலைக்கு வந்த சோதனை
இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தீவுக்கு, அவ்வப்போது சோதனை வருவதுண்டு.
1971 இந்திய-பாகிஸ்தான் போர்
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் நடந்த போது, பாகிஸ்தான் போர் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிச் சென்றன. அப்போது இது சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, அந்தப் போரின் போது, பாகிஸ்தான் போர் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்வதற்கு வசதி செய்து கொடுத்தது, பக்கசார்பான நிலைப்பாடாகக் கருதப்பட்டது. பிராந்தியத்தில் உள்ள இரண்டு நாடுகள் மோதிக்கொண்ட அந்த போரில், இலங்கை நடுநிலைப் பாத்திரத்தை வகிப்பதற்குத் தவறியிருந்தது.
1971 இந்திய-பாகிஸ்தான் போர் - இலங்கையின் நடுநிலைமை கேள்விக்குள்ளானது. (படம்: Al Jazeera)
ஜேவிபி கிளர்ச்சியும் வெளிநாட்டு உதவியும்
அதற்கு முன்னதாக, 1971 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் இராணுவ உதவி கோரியது. அப்போது, உடனடியாகப் பாகிஸ்தான் உதவ முன்வந்தது. தனது படையினரை அனுப்பி விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்தது. அது தவிர ஏனைய இராணுவ உதவிகளையும் வழங்க முன்வந்தது பாகிஸ்தான்.
இதற்குப் பின்னரே இந்தியா கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த 150 படையினரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட இலங்கை படையினர் வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. மேலும், ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்குப் படையினரையும் ஆயுதங்களையும் எடுத்துச் செல்வதற்கு, ஆறு செடெக் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கி உதவியது.
அந்த ஆயுதக் கிளர்ச்சியின் பின்னால் வடகொரியாவே இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், வடகொரியாவில் இருந்து கப்பல் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்காக, இந்தியா தனது ஐஎன்எஸ் கங்கா, ஐஎன்எஸ் கோமதி, ஐஎன்எஸ் கோதாவரி என மூன்று போர்க்கப்பல்களை அனுப்பி, இலங்கையைச் சுற்றி ஒரு வேலியை அமைத்திருந்தது.
கைமாற்று அரசியல்
ஜேவிபி கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுப் பல மாதங்களுக்குப் பின்னர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. கிழக்கு பாகிஸ்தானை விடுவித்துப் பங்களாதேஷை சுதந்திர நாடாக உருவாக்குவதற்கு நடத்தப்பட்ட போர் அது. அந்த போரில், பாகிஸ்தான் விமானப்படையின் விமானங்களால், இந்தியாவைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, பாகிஸ்தான் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு பங்களாதேஷ் நோக்கிச் சென்றன.
சிறிமாவோ பண்டாரநாயக்க - 1971 இல் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். (படம்: Wikipedia)
இது இந்தியாவுக்கு எப்போதும் நெருடலான ஒரு விடயமாகவே இருந்து வந்தது. அதனால் தான் இப்போது இந்தியா முதலில் வந்து உதவுகின்ற தீர்மானத்தை எடுக்கிறது. இலங்கைக்கு அருகே இடம்பெறுகின்ற அனர்த்தங்களின் போது அல்லது விபத்துக்களின் போது உடனடியாக இந்தியா முதல் ஆளாக உதவிக்கு வருகிறது. அயல்நாட்டுக்கு முன்னுரிமை முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கை இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அயல்நாடுகளில் பாகிஸ்தான் அல்லது பிற நாடுகள் தலையீடு செய்வதைத் தடுப்பதையே, இந்தியா பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஈரானிய போர்க்கப்பல் விவகாரம்
ஆனால் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஈரானிய போர்க்கப்பல் விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியத் தரப்பு வரவேற்றிருந்தது நினைவிருக்கலாம். இந்தியா தீர்க்கமாகச் செயல்படவில்லை என்றும் உடனடியாக உதவவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
எனினும், ஈரானின் மூன்று போர்க்கப்பல்களில் ஒன்றான ஐஆர்ஐஎஸ் லாவன், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னரே கொச்சி துறைமுகத்துக்குச் சென்று விட்டது. மற்றைய இரண்டு கப்பல்களில் ஒன்றே, அமெரிக்காவினால் குறிவைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் மூன்று கப்பல்களையும் இந்தியா தனது துறைமுகத்திற்குள் அனுமதித்திருந்தால், இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. அதேவேளை இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் அதற்குள் தாக்குதல் நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிய போர்க்கப்பல் விவகாரம் - இலங்கை மீட்பு பணிகளை மேற்கொண்டது. (படம்: News First)
இலங்கையின் நிலைப்பாடு
இது தொடர்பாக வரும் தகவல்கள் குழப்பமானவை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட தகவல்களின்படியும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படியும், ஈரானிய கப்பல்கள் மூன்றும் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கு அனுமதி கோரியது, மார்ச் 9ஆம் திகதி தொடக்கம் 13-ஆம் திகதி வரையுமாகும். அந்த அனுமதி கோரப்பட்டது பெப்ரவரி 26 ஆம் திகதி. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அந்தக் கப்பல்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி கோரியிருந்தன.
அதற்குள் மார்ச் 4-ம் திகதி ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட மற்றைய கப்பலை இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்டது. உடனடியாக இலங்கை கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்தியா அதற்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியாவில் பரவலாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு ஈரானிய கப்பலை அது தார்மீக அடிப்படையில் பாதுகாத்திருந்தது. அதில் இருந்த 133 மாலுமிகளையும் பத்திரமாக ஈரானுக்குத் திருப்பி அனுப்பி விட்டது.
இந்த விடயத்தில் இந்தியாவின் கொள்கையை இலங்கை பின்பற்றவில்லை. இந்த விடயத்தில் இந்தியாவுடன் கலந்தாலோசிக்கவில்லை. அவ்வாறு கலந்தாலோசனை நடத்தியிருந்தால் இலங்கைக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெறாமல் தடுத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சந்தர்ப்பவாத வெளியுறவுக் கொள்கை
இந்த விடயத்தில், இந்தியாவைப் பின்பற்றி இலங்கை செயல்படவில்லை என்பது உண்மை. அப்படிச் செயற்பட்டிருந்தால் உயிர் தப்பிய ஈரானிய மாலுமிகளில் ஒரு பகுதியினரையாவது, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை திருப்தி அனுப்பியிருக்க முடியும். உயிரிழந்த கடற்படை மாலுமிகளின் சடலங்களுடன், சென்ற விமானத்தில் இலங்கையிலிருந்து ஈரானிய மாலுமிகளை அனுப்பி வைத்திருக்க முடியும். அதை இலங்கை செய்யவில்லை. அதனால் இந்தியா தனது நாட்டில் பாதுகாப்பில் இருந்த 133 மாலுமிகளை அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பியது.
பாகிஸ்தான் – இந்தியா போரின் போது வெவ்வேறான உபாயங்கள் கையாளப்பட்டதைப் போலவே, இப்போதும் கையாளப்படுகிறது. ஈரானும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தாலும், அமெரிக்காவுடனான உறவுகளைப் பாதுகாப்பதற்கே இலங்கை முன்னுரிமை கொடுக்கிறது.
அதேவேளை, 1971 இல் சிறிமாவோ, இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு அனுமதி அளித்தது போல, இப்போது இருநாடுகளுக்கும் இடையில் மோதல் ஒன்று வந்தால் நிச்சயமாக இலங்கை, பாகிஸ்தானுடன் நிற்காது. ஏனென்றால் பாகிஸ்தானை விட இந்தியா இப்பொழுது சர்வதேச அளவில் வல்லமை பெற்றிருக்கிறது. அதுபோலத்தான் அமெரிக்கா இப்போது, சர்வதேச அளவில் வல்லமை பெற்றிருப்பதால், அதன் மீது இலங்கை நம்பிக்கை வைக்கிறது. அதனுடன் முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் உறவுகளைத் தீர்மானிக்கின்ற விடயத்தில், யார் வலுவானவர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானம் எடுக்கப்படுகிறது. இந்தியா பிராந்தியத்தில் முதல் நிலை பெற்றிருப்பதால் அதனைப் பகைத்துக்கொள்ளாமல் அதனுடன் இசைந்து போகிறது. இது நடுநிலையான வெளியுறவுக் கொள்கை அல்ல. சந்தர்ப்பவாதக் கொள்கை. ஆனால் இதனைத் தான் நடுநிலையானது என்று நிரூபிக்க முற்படுகிறது அரசாங்கம்.
0 Comments