தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் - பின்னணியும் பகுப்பாய்வும்
தம்மைக் கொள்ளையடிக்க முயன்றதாக ஈழப்பகுதி மீனவரைக் கைது செய்துள்ள தமிழ்நாட்டு மீனவரின் நடவடிக்கையை முன்வைத்து எழும் விவாதங்கள் தொடர்பாகச் சில பின்னணி தகவல்களைப் பகிரவேண்டிய தேவையுள்ளது. அதை மிகச்சுருக்கமாகப் பதிகிறேன். மே17 இயக்கம் மீனவர் சிக்கல் குறித்துத் தொடர்ந்து 16 ஆண்டுகளாகப் பலவேறு போராட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வுகளைச் செய்துள்ளது. இதனடிப்படையில் சில தகவல்களைத் தெரிந்து கொண்டால் இருதரப்பினருக்குமிடையே முரண்பாடுகள் இல்லாமல் சிக்கல் தீர்க்கப்படலாம்.
தமிழ்நாடு மீனவர்கள் — பல நூற்றாண்டுகால மீன்பிடித் தொழில்
விடுதலைப்புலிகள் காலம் - தொடர்ந்த படுகொலைகள்
வி.பு இருக்கும் வரையில் தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள ராணுவம் புலிகள் எனச் சொல்லிக் கொன்றது. 2009க்குப் பின்னர் இக்கொலைகள் தொடர்ந்தன. 2011ம் ஆண்டில் 6 பேர் படுகொலையானார்கள். ஜனவரியில் இருவர் அடுத்தடுத்த மாதங்களில், பின்னர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இறுதிநாளில் நான்குபேர் கொடூரமாகச் சிங்களப் படையால் கொல்லப்பட்டனர். இதை இலங்கையால் நியாயப்படுத்த இயலவில்லை.
அச்சமயத்தில் இந்திய அரசு சார்ந்த ஊடகங்கள் வாயிலாக அரச சார்பான பார்ப்பனர்கள் (பிராமண கடப்பாரை) சில கட்டுரைகளைப் பார்ப்பன ஊடகத்தில் வெளியிட்டனர். பேராசிரியர் சூரியநாராயணன் எனும் பார்ப்பனர் தொடர்ந்து இந்தியா-இலங்கை உறவு குறித்து ஆய்வாளர் எனும் பெயரில் 'தி இந்து' எனும் பார்ப்பன ஊடகத்தில் ஈழத்தமிழருக்கு எதிராக எழுதுவார். 2011ல் அவர் நடுப்பக்கக் கட்டுரையை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் அடிமடி வலையைப் பயன்படுத்துவதாலேயே இலங்கை ராணுவம் கொலை செய்வதாகக் கருத்தை முன்வைத்தார். இதே கட்டுரை பார்ப்பன ஊடகமான 'காலச்சுவடு' இதழில் வெளியானது.
கடலில் மீனவர்கள் — உயிருக்கு உத்திரவாதமற்ற தொழில்
பின்னர் இந்தக் கருத்தைக் கர்னல் ஹரிஹரன் எனும் அமைதிப்படையின் உளவுப்பிரிவு அதிகாரி முதலாகப் பல பார்ப்பனர்கள் எழுதவும், பேசவும் செய்தனர். இந்தப் பொய் பரப்புரைக்கு எதிராக மே17 இயக்கம் மட்டுமே எதிர்வினையாற்றியது. உண்மை நிலையை உலகிற்குத் தெரிவிக்க ஊடகங்களுக்கு ஆய்வுக் காணொளியை இராமேஸ்வரம் சென்று களத்தில் விசாரித்துப் பதிவு செய்தோம். அன்றைய ஆட்சியாளர்களான காங்கிரஸ் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை நடத்திக் கைதானோம்.
பாஜக கடல்தாமரை மாநாடும் பேச்சுவார்த்தைக் கோரிக்கையும்
இச்சமயத்தில் பாஜக கடல்தாமரை எனும் பெயரில் மாநாட்டை நாகையில் நடத்தியது. இருநாட்டு மீனவர்களும் அழைக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கும்படியாக ஒப்பந்தம் உருவாக்கி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை வைத்தது மே17 இயக்கம். ஆயினும் இவை நடக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பும் கடந்த 2024ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 8 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2021 கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரன் படுகொலைக்கு முதல்முறையாகப் போராடி அழுத்தம் கொடுத்து தோழமை அமைப்புகள் வழியாகப் பிணக்கூறாய்வு செய்ய உத்திரவைப் பெற்றோம். ராஜ்கிரன் வாய் வழியாக அதியுயர் தண்ணீர்க் குழாய்கள் திணிக்கப்பட்டு பீய்ச்சியடித்து அவரது உடல் சிதறடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 2011இல் ஒரு மீனவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் புதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஜெயக்குமார் எனும் மாற்றுத்திறனாளி கடலில் தள்ளிவிடப்பட்டு நீண்டநேரம் நீந்தவைத்துச் சோர்வுற்று மூழ்கி இறக்கும்படி செய்தனர்.
2024 - இலங்கை நிறுவனங்கள் மூடல் போராட்டம்
இந்நிலையிலேயே 2024ம் ஆண்டில் நடந்த இரண்டு மீனவர் படுகொலைக்கு நீதி கேட்டு இலங்கை நிறுவனத்தை இழுத்து மூடும் போராட்டத்தை 10 ஊர்களில் தமிழ்த்தேசியக் கூட்டணி வாயிலாக நடத்தினோம். மீனவர் கொல்லப்பட்டால் இக்கடைகள் மூடப்படும் என எச்சரித்தோம். இதன்பின் இன்றுவரை அசம்பாவிதம் படுகொலை எனுமளவு நடக்கவில்லை. மாறாகக் கொத்துக்கொத்தாகக் கைதுகள் நடந்தன.
தமிழக மீன்பிடித் துறைமுகம் — பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம்
கடற்கொள்ளையர் தாக்குதல்கள்
இச்சமயத்தில் புதுவிடயம் ஒன்று வடக்குப் பகுதியில் நடந்தது. கடலூர், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் மீது அவ்வப்போது கடற்கொள்ளையர் தாக்குதல் நடந்ததாகச் செய்தி வெளியானது. மீனவர் உடமைகளை மிரட்டி, அடித்துப் பிடுங்கிச் சென்றதாகச் செய்தி வெளியான போது, களஆய்வு மேற்கொண்டது மே17 இயக்கம். பல மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தில் ஒரு சில, கடற்கரையிலிருந்து வெகு அருகில் நடந்தது. இவ்வாறு தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தோம். இவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டிருந்தனர் என்றார்கள். இதுகுறித்துப் புகார் அளித்தும் இன்றுவரை முறையான நடவடிக்கை இல்லை.
இவ்வாறு தாக்குதல் நடத்தி ஜி.பி.எஸ் கருவிகள், உள்ளிட்டப் பல விலையுயர்ந்த பொருட்களை இழந்திருந்தனர். இவ்வாறு தாக்கியவர்கள் தமிழீழப்பகுதி மீனவர்கள் அல்ல என்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர். இருபகுதி மீனவர்களுக்குள்ளும் நீண்டகால உறவு உண்டு. மீன்பிடித்தல் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளும் உண்டு. இருபகுதி மீனவர்களும் அறிமுகமானவர்களே. ஆகவே மீனவர்களுக்குள்ளாகச் சண்டைகள் எழுந்ததில்லை.
இரட்டைமடி வலை சிக்கல்
மேலும் இரட்டைமடி வலைச் சிக்கலைக் கவனித்தால், இது தமிழீழப்பகுதி மீனவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்களில் பாரம்பரிய, சிறிய விசைப்படகுத் தொழில் செய்பவர்களையும் பாதிக்கிறது எனும் குற்றச்சாட்டு இருபுறமும் உண்டு. இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசு இதுவரை எம்முயற்சியும் எடுக்கவில்லை. இதில் மீனவர் அல்லாத முதலாளிகள் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளனர். இந்தப் படகுகளைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினர், இப்படகில் செல்லும் மீன்பிடித் தொழிலாளர்களையே படுகொலை செய்கின்றனர். இதனால் முதலாளிகள் பாதிப்பிற்குள்ளாவதில்லை. இதனாலேயே மீனவர் படுகொலைக்கு எதிராகத் தீவிரப் போராட்டம் நடக்காமல், தீர்வுகாணாமல் முடிக்கப்படுகிறது.
படுகொலையான மீனவர்கள் பலரது வீடுகளுக்கு நேரில் சென்றுள்ளோம். அவர்கள் ஏழைத் தொழிலாளர்கள். உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையில் ஏழ்மையின் காரணமாகவே கடலுக்குச் செல்கின்றனர். இவர்கள் பலியிடப்படுவது போலவே நாகை-கடலூர்-காரைக்கால் பகுதி மீனவர்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
இந்திய அரசின் செயலற்ற தன்மை
இவர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொள்ளையடித்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் கடலோர காவல்படை மேற்கொண்டதில்லை. கடற்கொள்ளை குறித்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வச் செய்திகளே வெளியாகியும் உள்ளநிலையில், நடவடிக்கைகள், தேடுதல், கைது செய்தல், பாதுகாப்பை நீட்டித்தலை இந்திய அரசு செய்யவில்லை. ஒருபுறம் இரட்டைமடி வலை மீதும் எவ்விதக் கவனத்தையும் செலுத்தாமல் முரண்பாடுகளை வளர்க்கிறது இந்தியப் பார்ப்பன அரசு, மறுபுறம் கடற்கொள்ளையர்கள் நடத்தும் தாக்குதலைக் கவனப்படுத்தாமல் கடக்கிறது. இதனால் மீனவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலை உருவானது.
கடற்கொள்ளையரால் வெட்டப்பட்டுத் தாக்குதலுக்குள்ளான மீனவர்களை நேரில் கண்டு சந்தித்தும், இதை ஊடகச் சந்திப்பின் வாயிலாக அம்பலப்படுத்தியும் மே17 இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. ஆயினும் இதுகுறித்து இந்திய அரசு திட்டமிட்டுக் கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து வருகிறது.
அதானி ஒப்பந்தமும் மீனவர் படுகொலையும்
இதே சமயத்தில், அதானி நிறுவனத்தின் துறைமுக ஒப்பந்தத்திற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாட்டுப் பார்ப்பனரான ஜெய்சங்கர் தொடர்ந்து இலங்கை சென்று வந்தார். அவரது பயணத்திற்கு அடுத்தநாள் இரண்டு மீனவர் கொல்லப்பட்டனர். பார்ப்பனக் கடப்பாரை தமிழ் மீனவனுக்காகச் செய்திகூட வெளியிட்டதில்லை. குஜராத்தில் 2021ல் பாகிஸ்தான் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவனுக்காகக் கொலை வழக்கைப் பதிவு செய்தார் ஜெய்சங்கர், அத்தோடு நில்லாமல், பாகிஸ்தான் தூதரை அழைத்துக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார் மோடி. இப்படியெல்லாம் ஏதும் செய்யாமல், தமிழ் மீனவர் கொல்லப்பட்ட அடுத்த ஓரிரு நாளில் இலங்கை-இந்தியக் கூட்டுக் கப்பற்படைப் பயிற்சி நடந்தது வரலாறு.
இருதரப்பு மீனவர்களின் உறவு
இதுவரை இந்தியா, இலங்கை ஆட்சியாளர்கள் இருபகுதி தமிழர்களுக்கும் எதிராகவே இயங்கி வந்துள்ளனர். இரண்டு பகுதி மீனவர்களுக்குமான உறவு பலநூற்றாண்டு உறவு. இந்த உறவினாலேயே ஈழப்போராளிகள் இக்கடற்பரப்பைத் தமது வீட்டு முற்றம் போல பயன்படுத்தினர். இருபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, இருவரையும் எதிரிகளாக்க வேண்டுமெனும் முயற்சியை இந்தியாவின் பார்ப்பனக் கடப்பாரைகளும், சிங்களப் பேரினவாதிகளும் மேற்கொண்டு வருவதைக் கடந்த 16 ஆண்டுகளில் பல கருத்தரங்கு, போராட்டங்களில் மே17 இயக்கம் பதிவு செய்துள்ளது.
நிதானமான விவாதத்தின் தேவை
தற்போது நடந்துள்ள தமிழ்நாட்டு மீனவர் ஈழப்பகுதியைச் சார்ந்த ஒருவரைக் கொண்டு வந்துள்ளது தொடர்பாக இரண்டு பகுதி தமிழர்களுக்குள்ளாக நடக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதானத்துடன் இருதரப்பும் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை எனும் இருநாடுகளின் ஆளும் வர்க்கங்கள் இணைந்தே நம் தமிழினத்தை அழித்தன என்பதை மறக்கக்கூடாது. கடுமையான வார்த்தைகளோ, வன்மமான குரல்களோ இச்சிக்கலைத் தீர்க்காது. இரண்டு பகுதித் தமிழ்த்தேசியத் தமிழர்களும் பேச்சுவார்த்தை வாயிலாகவே இச்சிக்கலில் தீர்வுகாண இயலும். நாம் ஓநாய்களின் சதிகளுக்குப் பலியாகக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர் மீது தவறிருப்பின், கைதான தமிழீழத் தமிழருக்காகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மே17 இயக்கம் முயற்சிக்கும், அதே சமயம், இவர் மீது தவறிருப்பின் ஈழத்தமிழ் தோழமைகள் உண்மைப் பின்புலத்தைக் கண்டறிய முயலவேண்டும். இந்திய-இலங்கை அரசின் செயலற்ற தன்மையை அம்பலப்படுத்துவதே நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கும். இந்தி-சிங்கள பாசிஸ்டுகளின் இடையே சிக்கியுள்ளது தமிழினம் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.




0 Comments