தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026: தாய், தந்தையர் அரசியலும் - பிள்ளைகளின் ஆவேசமும்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரு அசாதாரணமான நிகழ்வைப் பதிவு செய்தது. வாக்குச் சாவடிகளில் இரண்டு தலைமுறைகள் சந்தித்தன. ஒரு தலைமுறை, 70 ஆண்டு கால திராவிட அரசியல் வரலாற்றை சுமந்து வந்தது. இன்னொரு தலைமுறை ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் கனவைக் கையில் பிடித்து வந்தது.
தமிழ்நாடு — இரண்டு தலைமுறைகள் சந்தித்த தேர்தல்
இது வெறும் தேர்தல் மோதலல்ல. இது ஒரு தத்துவார்த்த சிக்கல். ஒரு தலைமுறை தனது அடுத்த தலைமுறையைப் புரிந்து கொள்ளத் தவறியதன் அரசியல் விளைவு. அரசியல் தத்துவ அறிஞர் ஹன்னா அரண்ட் இப்படிச் சொன்னார், "Every generation, civilization is invaded by barbarians and we call them children." குழந்தைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் பழைய உலகிற்குப் புதிய சவாலாக வருகிறார்கள். அந்த சவால் புரிந்து கொள்ளப்படாத போது மோதலாகிறது.
விஜய் - ஒரு உணர்வு
விஜய் என்பது ஒரு நபரல்ல, ஒரு உணர்வு என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும், ஒப்புக்கொள்ள வேண்டும். விஜயின் திரைக்கவர்ச்சி அடையாளம் என்பது ஒரு தலைமுறை ஏக்கத்தின் வெளிப்பாடு. அவர் தேர்தல் அரசியலில் இறங்கிய போது அந்த ஏக்கம் புதிய அரசியல் வடிவம் பெற்றது.
விஜயின் திரைக் கதாபாத்திரங்கள் நேர்மையானது, அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறது, எளிய உழைக்கும் மனிதனின் பக்கமாக நிற்கிறது. இளைஞர்கள் தங்கள் நிகழ்கால அரசியல் நிர்வாகத்தில் காணாத பண்புகள் இவை. திரையில் காண்பதை நிஜ அரசியல் தலைவரில் தேடுவது அப்பாவித்தனமா? என்றால் உறுதியாக இல்லை. இது ஒரு அரசியல் வெற்றிடத்தின் அறிகுறி.
இளைஞர்கள் அரசியலில் - ஒரு புதிய சகாப்தம்
அரசியல் உளவியலாளர் Harold Lasswell இப்படிச் சொன்னார், "Political symbols are powerful not because they create feelings, but because they attach to feelings that already exist." விஜய் என்ற அரசியல் குறியீடு இளைஞர்களிடம் ஏற்கனவே இருந்த வெறுப்பையும், ஏக்கத்தையும் மட்டும் தொட்டது. அந்த உணர்வுகளை அவர் மட்டுமே உருவாக்கவில்லை.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
இந்த இளைஞர்கள் வேற்று கிரகத்திலிருந்து வரவில்லை. அவர்கள் நம் வீடுகளிலிருந்து வந்தார்கள். நம் உணவைச் சாப்பிட்டு வளர்ந்தார்கள். நம் கதைகளைக் கேட்டுத் தூங்கினார்கள். நம் தேர்வுகளைப் பார்த்துக் கற்றுக்கொண்டார்கள்.
சமூகவியல் அறிஞர் Pierre Bourdieu சொன்ன "habitus" என்ற கருத்து இங்கே பொருந்துகிறது. "ஒரு தலைமுறையின் நடத்தை, மதிப்புகள், அரசியல் புரிதல் இவை அனைத்தும் சூழலால் உருவாகின்றன. குழந்தைகள் தன்னைச் சுற்றி என்ன பார்க்கிறார்கள் என்பதே அவனது அரசியல் ஆசிரியன்.
அவர்கள் பார்த்தது என்ன? பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியல். சித்தாந்தத்தை விலை கொடுத்து விற்கும் தலைவர்கள். மேடையில் பேசுவது வேறு, வீட்டில் நடப்பது வேறு என்ற இரட்டை வாழ்க்கை. கட்சியை விட குடும்பம் முக்கியம் என்கிற பரம்பரை அரசியல். இவற்றைத் தொடர்ந்து பார்த்தவர்கள் திரைப்படங்களில் பார்த்த தூய்மையான தலைவனைத் தேடுவது இயல்பானதல்லவா? நாம் அவர்களுக்குக் காட்டிய கண்ணாடியே இன்று நமக்கு எதிரே நிற்கிறது.
சமூக ஊடகங்களும் இயல்பு வாழ்வின் மறைப்பும்
இன்றைய இளைஞர்களை "Reel World Children" என்று சொல்வது சரிதான். ஆனால் அந்த உலகம் தோன்றியதற்கு என்ன காரணம்? நமது உண்மையான உலகம் அவர்களுக்குப் போதுமான பொருள் கொடுக்கவில்லை என்பதும் உண்மைதானே?
உளவியல் நிபுணர் Jean Baudrillard இப்படிச் சொன்னார், "We live in a world where there is more and more information, and less and less meaning." தகவல் வெள்ளத்தில் மூழ்கிய இளைஞர்கள் எதற்கோ அர்த்தம் தேடுகிறார்கள். சமூக ஊடகங்கள் அந்த அர்த்தத்தை ஒரு எளிய வடிவத்தில் நாயகன், வில்லன், போராட்டம், வெற்றி என்று வடிவமைத்துக் கொடுக்கின்றன.
சமூக ஊடகங்கள் — இளைஞர்களின் புதிய அரசியல் களம்
பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் வரலாறு, திராவிட இயக்கத்தின் தியாகம் இவை நீண்ட, சிக்கலான, முரண்பாடுகளும், கடுமையான உழைப்பும் கற்றலும் நிறைந்த வரலாறு. அதை ஒரு Instagram reel இல் சொல்லி விடுவது கடினம். உண்மையில் அதை நாம் அவர்களுக்கு நேரில் சொல்லியிருக்க வேண்டும். நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் அதிலிருந்து தவறினோம்.
வரலாற்றை மறந்த தலைமுறையின் ஆபத்து
பெரியார் என்ன செய்தார்? சாதி, மதங்களின் பெயரால் மனிதர்களை மனிதர்களாக நடத்தாத ஒரு அமைப்பைச் சொற்களால், தர்க்கத்தால், வீதியில் நின்று 50 ஆண்டுகள் உலுக்கினார். அண்ணாதுரை என்ன செய்தார்? பெரியார் கண்ட தத்துவங்களை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றி 1967 இல் ஒரு தேர்தலில் வென்று இந்திய அரசியல் வரலாற்றையே திருப்பினார். கலைஞர் கருணாநிதி என்ன செய்தார்? 50 ஆண்டுகள், தோல்விகளில் வீழாமல், சிறையில் மடிந்து விடாமல் கட்சியை, கொள்கையை, மக்களை எப்போதும் தத்துவங்களோடு இணைத்து வைத்திருந்தார்.
இந்த வரலாற்றை அறியாத இளைஞர்கள் அல்லது இளம்பெண்கள் விஜயைத் தலைவராக ஏற்கிறார்கள். அது அவர்களது தவறு மட்டும்தானா? அரசியல் அறிஞர் Alexis de Tocqueville இவ்வாறு எச்சரித்தார், "வரலாறு கற்பிக்கப்படாத தலைமுறை தனியாக ஒரு வரலாற்றை நிகழ்த்துகிறது."
நாம் என்ன கற்றுக்கொடுத்தோம்?
இளைஞர்களை "அரசியல் அறியாதவர்கள்" என்று சொல்வதற்கு முன்பு ஒரு கேள்வி. நாம் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தோம்? பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என்று நமது நடத்தைச் சொன்னது. கட்சி மாறுவது, கொள்கையை விட்டு விட்டு வெற்றிகரமான பொருளாதார வாழ்க்கை மாற்றத்திற்கான வழி என்று நமது அரசியல் எடுத்துக்காட்டியது. திட்டங்கள் மக்களுக்காக அல்ல, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்று நமது செயல்கள் நிரூபித்தது.
இளைஞர்களை மாற்றுவதற்கு முன்பு நாம் மாற வேண்டும். இது கடினமான உண்மை. ஆனால் மறுக்க முடியாத உண்மை.
தோல்வி நிரந்தரமல்ல, ஆனால் சவால் தொடரும்
இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்த்த தாக்கத்தைச் செலுத்தவியலாது. ஆனால் 15-20% வாக்காளர்கள், குறிப்பாக முதல் முறை வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் ஒரு மாற்றுத் தலைமையைத் தேடி நடந்தனர். அது வெறும் தேர்தல் செய்தியல்ல. அது ஒரு சமூகத்திற்கான செய்தி.
அரசியல் அறிஞர் ராபர்ட் தாஹி இப்படிச் சொல்கிறார், "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மட்டுமல்ல, சிறுபான்மையின் கேள்விகளையும் கேட்கும் திறன்." இன்று புதிய 20% இளைஞர்கள் கேட்கும் கேள்விகளை "இவர்கள் அரசியல் அறியாதவர்கள்" என்று அலட்சியப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர்கள் 30% ஆக மாறுவார்கள், அதற்கடுத்த தேர்தலில் 40%. ஏனென்றால் காலம் அவர்களின் பக்கம் சாதகமாக நிற்கிறது, நம்முடைய கால்கள் தளர்வடையும் போது அவர்கள் வலிமையடைகிறார்கள்.
உரையாடல்தான் இதற்குத் தீர்வு, ஒடுக்குதல் அல்ல
பாலோ பிரேரி சொல்கிறார், "அரசியல் கல்வி என்பது பேச்சு வார்த்தைகளில் இருந்து மட்டுமே வருகிறது." இளைஞர்களை "zombie" என்று சொல்வது எளிது. ஆனால் அந்தச் சொல் ஒரு உரையாடலின் வாயிலை மூடுகிறது. ஒரு தலைவன் அல்லது ஒரு கட்சி இளைஞர்களை முழுமையாக வென்று விட முடியாது. அவர்களோடு நடக்கும் தலைவன் மட்டுமே வரலாறு படைக்கிறான்.
பெரியார் — தெருக்களில் இருந்த இளைஞர்களிடம் போனார்
பெரியார் தெருக்களில் இருந்த இளைஞர்களிடம் போனார். அண்ணா கல்லூரி மேடைகளில் தொடர்ந்து பேசினார். கலைஞர் கருணாநிதி புதிய இளைஞர் அணியைக் கட்டினார். அந்த வரலாற்று உத்தியை நாம் மறந்து விடக்கூடாது.
3000 ஆண்டுகாலப் பழமையான தமிழ் நாகரீகம் ஒரு சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட முடியாதது. பெரியாரின் மகத்தான பகுத்தறிவு ஒரு முதிர்ச்சியற்ற திரைப்பட அரசியல்வாதியால் அழிக்கப்பட முடியாதது. திராவிட இயக்கத்தின் தத்துவங்களை ஒரு தலைமுறையின் ஆவேசத்தால் கவிழ்த்து விட முடியாது. ஆனால் இந்தச் சவாலை நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். உரையாடல்களைத் துவக்க வேண்டும். நம் சொந்த முகங்களை நேர்மையாக ஒருமுறை உளச்சான்று என்கிற கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
இளைஞர்கள் இன்று ஒரு தவறான தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அரசியலில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள், அது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறி. அந்தத் தயார் நிலையைச் சரியான திசையில் வழிநடத்துவது நம்முடைய கடமை. அவர்களை நிராகரிப்பதல்ல.
தமிழகத்தின் அரசியல் எதிர்காலம், இரண்டு தலைமுறைகளும் சேர்ந்து கட்டும்போது மட்டுமே பலமாக இருக்கும். தனித்தனியே நின்று போரிடும்போது — இரண்டு தலைமுறைகளும் இழப்பதற்கு நிறையவே இருக்கிறது. நாம் இந்த முறை எண்களில் வெற்றி பெற்று விடுவோம், ஆனால் உறுதியாகக் கோட்பாட்டு அரசியலில் தோல்வி அடையப் போகிறோம். அது நிகழாமல் காக்கும் பொறுப்புணர்வை இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு வழங்குகிறது. அதுதான் நமது நிரந்தர வெற்றிக்கான படிக்கல்.
0 Comments