elugai

கேள்விக்குறியாகும் எரிசக்திப் பாதுகாப்பு: பல்தேசிய நிறுவனங்களின் பிடியில் சிக்கியதா இலங்கை?

கேள்விக்குள்ளாகிய எரிசக்தி பாதுகாப்பு

கேள்விக்குள்ளாகிய எரிசக்தி பாதுகாப்பு

கட்டுரையாளர் - கார்வண்ணன்

மத்திய கிழக்கு போர் இலங்கையின் எரிசக்தி ஆற்றலை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஏப்ரல் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது, அவை எந்தப் பிரச்சினையுமின்றி கைக்கு வந்து விடும் என்று, கதையளந்து கொண்டிருந்த அரசாங்கம், இப்பொழுது அவசர அவசரமாக எரிசக்தி சிக்கனத்தை பேணுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. சிங்கப்பூரில் இருந்தே எரிபொருளை வாங்குகிறோம், ஈரான் மீதான போர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என, மூன்று வாரங்களுக்கு முன்னர் கூறிய இலங்கை அரசாங்கம், இப்பொழுது இந்தப் போரினால் எல்லா வழிகளிலும் நெருக்கடி வந்து விட்டதாக கூறுகிறது.

மத்திய கிழக்கு எரிசக்தி மையம்

மத்திய கிழக்குத்தான் எரிசக்தி கேந்திர மையம். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, வெனிசுவேலா, நைஜீரியா என பல இடங்களில் போதுமான எரிசக்தி இருப்பு இருந்தாலும், அவற்றை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான மையமாக மத்திய கிழக்கு நாடுகளே இருக்கின்றன. அவற்றின் விநியோகம் தடைப்படுமானால் உலகளவில் அதன் பாதிப்பு எதிரொலிக்கும். மத்திய கிழக்கில் இருந்து எரிபொருளை வாங்காத கனடா, அமெரிக்காவில் கூட, எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என்றால் இதன் தாக்கம் எந்தளவுக்கு வலுவானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மத்திய கிழக்கு எண்ணெய் நெருக்கடி மத்திய கிழக்கு போர் - உலகளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. (படம்: Al Jazeera)
மத்திய கிழக்கில் ஏற்படும் நெருக்கடி, உலகளவில் விலையேற்றம், தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்ற அடிப்படை புரிதல் கூட அரசாங்கத்திடம் இல்லாமல் போனது ஆச்சரியம்.

இந்தளவுக்கும், தங்களை முற்போக்கானவர்கள், எனக் காட்டிக்கொள்ளுகின்ற அரசாங்கத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமேதாவிகளையும், துறைசார் நிபுணர்களையும் கொண்ட அமைச்சரவை தான் இந்த இக்கட்டான நிலைக்கு காரணமாகியிருக்கிறது. இப்போது, திட்டமிட்டபடி மசகு எண்ணெய் வரவில்லை, அதனால் எரிபொருளுக்கு மாத்திரமல்ல, மின்சார உற்பத்தி கூட நெருக்கடியில் சிக்கப் போகிறது என அரசாங்கம் எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுகின்ற செயல்.

உலக அரங்கில் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது, அது எதிர்பாராத முனைகளில் இருந்து சிக்கல்களை உருவாக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். இந்தியாவே நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற போது, இலங்கை மட்டும் விதிவிலக்காக இருக்க முடியும்?

விலை உயர்வு மற்றும் கட்டுப்பாடுகள்

இந்த சூழலில் அரசாங்கம் எரிபொருள் விலைகளை உயர்த்தி, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிக்க முற்படுகின்றது. அதேவேளை உள்ளூரில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை ஒன்றரை தொடக்கம் இரண்டு மடங்கு வரை ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளூரில் அரசாங்கம், எரிபொருள் விலைகளை 35 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. ஏற்கனவே வாங்கப்பட்ட எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக கூறிக்கொண்டே தான், எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை எரிபொருள் வரிசை இலங்கை எரிபொருள் வரிசை - விலை உயர்வு மற்றும் கட்டுப்பாடுகள் மக்களை பாதித்துள்ளன. (படம்: News First)

கொள்கை குழப்பங்கள்

அரசாங்கத்தின் எரிபொருள் விநியோகக் கொள்கை விடயத்தில் பல சர்ச்சைகள் இருக்கின்றன. விலை அதிகரிப்பு எரிபொருள் சூத்திரத்திற்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நேத்திகுமாரகே கூறுகிறார். அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, எரிபொருள் சூத்திரத்திற்கமைய விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்கிறார். இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் நடக்கின்றன.

ஆரம்பத்திலேயே, கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை கருத்தில் எடுக்கப்படவில்லை. தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் விலை அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் நிலைமை சீராகத் தொடங்கியபோது கியூ ஆர் குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் எரிபொருள் வரிசை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மாறி மாறி மேற்கொள்ளப்பட்டும் இந்த நகர்வுகள் எரிபொருள் தட்டுப்பாட்டையும் வரிசைகளையும் குறைக்கவில்லை.

இந்தச் சூழலில் அரசாங்கம் விலைகளை உயர்த்துவதற்காக, கடந்த வாரம் விநியோகத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது அரசாங்கம் கறுப்புச் சந்தைக்காரர்கள் போல நடந்து கொள்வதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை முற்று முழுதாக பொய்யானவை என்று நிராகரிக்க முடியாது. அதில் உள்ள நியாயத்தை அரசாங்கத்தினால் மறுக்க முடியாத நிலை இருக்கிறது.

உலகளவில் விலை உயர்வு

போர்ச் சூழலினால், உலகம் முழுவதும், 95 நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. வியட்நாமில், 50 வீதமும், கம்போடியாவில், 68 வீதம் வரையும், லாவோசில், 33 வீதமும், நைஜீரியாவில், 35 வீதமும், ஸ்பெயினில் 34.3 வீதம் வரையும், பாகிஸ்தானில், 24.49 வீதமும், கனடாவில், 28 வீதமும், அவுஸ்திரேலியாவில் 18.23 வீதமும், அமெரிக்காவில், 17 வீதம் வரையும், சீனாவில், 11% வரையும், இந்தியாவில், 5 வீதமும் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதனைக் காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலை உயர்த்தியதை நியாயப்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எரிபொருள் நெருக்கடி சர்வதேச ரீதியான ஒன்றாக இருந்தாலும், உள்நாட்டில் மக்களின் நெருக்கடியையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

அமெரிக்காவிலோ கனடாவிலோ ஏனைய பல நாடுகளிலோ உள்ள வசதிகள் இங்குள்ள மக்களுக்கு கிடையாது. அவர்களுக்கு கிடைக்கின்ற ஊதியங்களும் வாய்ப்புகளும் இங்குள்ள சாதாரண மக்களுக்கு கிடைப்பதில்லை. எனவே எரிபொருள் விலை உயர்வை பிறநாடுகளுடன் ஒப்பீடு செய்து, நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.

சர்வதேச நிறுவனங்களின் அழுத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில், அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுத்தது எரிபொருள் விநியோகத்தில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச நிறுவனங்கள் தான். இது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. இலங்கையில் வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்களை முதலீடு செய்ய வைத்தது ஆபத்தான ஒரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும், அது போட்டித்தன்மையை ஏற்படுத்தும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நியாயங்கள் கூறப்பட்டன. தற்போதைய அரசாங்கமும் கூட அதே கொள்கையில் தான் செயற்படுகிறது.

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் இலங்கை வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் - இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. (படம்: Financial Times)

தற்போதைய அரசாங்கம், சீனாவின் சினோபெக் நிறுவனத்தை, அம்பாந்தோட்டையில் பெருமுதலீடு செய்வதற்கான உடன்பாட்டை செய்து கொண்டது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான். இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 43 சதவீதம் சீன, இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. எஞ்சிய 57 வீத விநியோக உரிமை தான் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது.

எரிபொருள்களின் விலையை உயர்த்தாவிட்டால் விநியோகத்தை நிறுத்துவோம் என வெளிநாட்டு எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அச்சுறுத்தியே அரசாங்கத்தை விலை அதிகரிப்பிற்கு இணங்க வைத்திருக்கின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த நிறுவனங்கள் விநியோகத்தை கைவிட்டால், இலங்கையில் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். 43 வீதமான விநியோகத்தை திடீரென, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஈடு செய்ய முடியாது. அது பெரும் எரிபொருள் நெருக்கடியை தோற்றுவிக்கும். அத்தகைய நிலையை தவிர்க்கவே – அவர்களுடன் முரண்படாத வகையில், விலை அதிகரிப்புக்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எரிசக்தி பாதுகாப்பு அவசியம்

இந்த விடயத்தில் மக்களின் சார்பில் செயற்பட வேண்டிய அரசாங்கம், பல்தேசிய நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நிறுவனங்களை எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய வைப்பதற்கு முன்னர், இவ்வாறான ஆபத்துக்களையும் உணர்ந்திருக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் கால் வைக்கின்ற போது அவை தங்களின் நலன்களை அடைவதிலும், பொருளாதார வளங்களையும் சுரண்டுவதிலுமே கவனம் செலுத்தும். அமெரிக்க நிறுவனங்களோ, சீன நிறுவனங்களோ இந்திய நிறுவனங்களோ அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியானவை - ஒரே இலக்கை கொண்டவைதான்.

இப்போது தான், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு எந்தளவு கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பது உணரப்பட்டிருக்கிறது. எரிசக்தி பாதுகாப்பு பிற நாடுகள் அல்லது பிற நாட்டு நிறுவனங்களின் கையில் சிக்குவது எந்தவொரு நாட்டினதும் சுயாதீனத்தன்மைக்கும் இடையூறாகவே இருக்கும். அவ்வாறான ஒரு சிக்கலைத் தான் இன்று இலங்கை எதிர்கொள்கிறது.

Post a Comment

0 Comments