தடுமாறும் அரசாங்கம்
உலகம் முழுவதற்கும் எரிசக்தி ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, எல்லா நாடுகளும் தமக்குத் தெரிந்த வழிகளில் ஓடித் திரிகின்றன, இலங்கையும் அவ்வாறே முயற்சி செய்கிறது.
எங்கிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது என்பதுதான் இலங்கைக்கு இப்போதுள்ள பிரச்சினை.
கண்டியில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மூன்று சக்கர வண்டி ஓட்டுநர்கள் — மார்ச் 2026 இலங்கை எரிசக்தி நெருக்கடி.
ஈரானின் உதவி — இலங்கையின் நிராகரிப்பு
கடந்த வாரம் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய ஈரானிய தூதுவர், இலங்கையுடனான நட்புக்கு உயர் மரியாதை கொடுப்பதாகவும், இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டால் எரிபொருள் மட்டுமல்ல, எந்தவொரு பொருளை வழங்கி உதவுவதற்கும், ஈரான் தயாராக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
ஈரானிடம் போதுமான எண்ணெய் வளம் உள்ளது. சபுகஸ்கந்தையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிப்பதற்கென்றே அந்த நாட்டினால் கட்டிக்கொடுக்கப்பட்டதுதான்.
அமெரிக்காவின் தடைகள் காரணமாகவே ஈரானிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை, இலங்கைக்கு ஏற்பட்டது. இப்போது, இந்தத் தடை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், ஈரானிடம் இருந்து, குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் எரிபொருளை பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. தேவையான எரிபொருளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஈரானும் கூறுகிறது.
ஈரானிடம் இருந்து எண்ணெய்க்குப் பதிலாக தேயிலையை ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பையும் இலங்கை கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டது.
ஈரான் இந்த உதவியை வழங்க முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையிடம் எண்ணெய்க் கப்பல்கள் இல்லை என்றும், அதனால் ஈரானிடம் இருந்து எண்ணெயைப் பெற முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்ட காரணமும் நியாயமானதல்ல. எண்ணெய்க் கப்பல்களை வைத்திருக்கக்கூடிய நாடுகள் மட்டும்தான், எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற தேவை கிடையாது. எல்லா நாடும் சொந்தக் கப்பல்களை வைத்துக்கொண்டுதான், எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை.
சீனா, கிரேக்கம், சவூதி அரேபியா, நோர்வே உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் மாத்திரமே எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கின்றன. அவையே உலகளாவிய ரீதியாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்றன.
இப்போது, இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருக்கிறது. அப்படியானால், இலங்கைக்கு எரிபொருளை எடுத்து வரும் கப்பல்களை அனுமதிக்கவும் அது தயாராக இருக்கிறது. இந்தச் சூழலில், அதற்கான வாய்ப்பு குறித்து அரசாங்கம் ஆராய்வதாக தெரியவில்லை. அவசரத்திலேயே அதனை நிராகரித்திருக்கிறது.
ஈரான் தனியே தனது துறைமுகங்களில் வைத்து எண்ணெயை விற்பதில்லை. அதற்கு சொந்தமாக எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 67 கப்பல்களை ஈரானின் தேசிய எண்ணெய்க் கப்பல் நிறுவனம் வைத்திருக்கிறது. இந்தக் கப்பல்கள் மூலமாக எரிபொருளை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி இலங்கை ஆராயவில்லை.
அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதித் தடைகளை விதித்த பின்னர், சர்வதேச தடைகளில் இருந்து தப்பிக்கொள்வதற்காக, ஈரான் இரகசியமாக ஒரு நிழல் கப்பல்படையை உருவாக்கியிருக்கிறது. ரஷ்யாவிடம் உள்ளது போல, இந்த நிழல் கப்பல்படையில் சுமார் 400 முதல் 560 வரையிலான கப்பல்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை காட்டும் கருவிகளை அணைத்துவிட்டு பயணிப்பதன் மூலம், கடலுக்கு நடுவே ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றி விற்கின்றன. இவ்வாறு நிழல் கப்பல்படை மூலமாக சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் எரிபொருளை வழங்கி வருகிறது. இந்த நிழல் கப்பல்படை ஊடாகவும் இலங்கை எரிபொருளை வாங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அதனை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
ஈரானில் நெருங்கிய நட்பு நாடு எனக் கூறிக்கொண்டாலும், இந்த விஷயத்தில், அமெரிக்காவை பகைத்துக்கொள்ள இலங்கை தயாராக இல்லை. அதனால்தான் இந்த வாய்ப்பை அது பயன்படுத்திக்கொள்ளாமல் தவிர்க்கிறது.
அமெரிக்கா — வர்த்தக அச்சம்
அமெரிக்காவுடன் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்கிறது இலங்கை. இந்த சமனற்ற வர்த்தகச் செயற்பாட்டைக் குறிவைத்து, ட்ரம்ப் வரிகளை விதித்ததால் இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. இதனை சமாளிப்பதற்கு அமெரிக்காவிடம் இருந்து 800 மில்லியன் டொலருக்கு எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்வதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
ஆனாலும் அமெரிக்காவில் இருந்து என்னென்ன பொருட்களை, எவ்வளவு இறக்குமதி செய்வது என்ற இறுதியான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதற்குள் ட்ரம்பின் வரிகள் தொடர்பான உத்தரவுகள் நீதிமன்ற உத்தரவினால் காலாவதியாகிவிட்டன.
ட்ரம்ப் தொடர்பாக இலங்கைக்கு அதிக பயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டதும் அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள், எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்தது. இது செலவுமிக்கது. கப்பல் பயணத்திற்கு கூடுதல் காலம் செல்லும். அது சுமைக் கூலியை அதிகரிக்கச் செய்யும். அந்த சுமைக் கூலி அதிகரிப்பு உள்நாட்டில் எரிபொருள் விலைகளை கணிசமாக உயர்த்தும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா — புதிய வாய்ப்புகள்
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின் மார்ச் 26 அன்று கொழும்பிற்கு வந்து இலங்கை அரசாங்கத்துடன் எரிபொருள் வழங்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.span>
இன்னொரு பக்கம், எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டதும் இந்தியாவுடன் பேச்சு நடத்தியது அரசாங்கம். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரண்டு முறை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜய்சங்கருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் தொலைபேசி உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் பிரதானமாக பேசப்பட்ட விஷயம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள்தான். இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி இருக்கிறது இந்தச் சூழலிலும் இந்தியா, இலங்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்க முற்படுகிறது.
இந்தியாவுக்கான எரிபொருள் விநியோகம் இன்னமும் சீராகவில்லை, ஆனால் ஈரானிடம் இருந்து இந்தியா ஹோர்மூஸ் நீரிணை வழியாக எரிபொருளைப் பெறத் தொடங்கியிருக்கிறது. இந்தியா தனக்கு கிடைக்கும் எரிசக்தியில் ஒரு பகுதியை இலங்கைக்கு வழங்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த உரையாடல் நடந்திருக்கிறது.
எரிசக்திக்கு இலங்கை பிற நாடுகளின் மீது தங்கியிருக்கும் சூழலை ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை. அது பிற நாடுகள் இலங்கையில் தலையீடு செய்வதற்கு வழிவகுக்கும் என கருதுகிறது.
இன்னொரு பக்கம் ஈரான் போர் நெருக்கடியால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை தொடர்ந்து, ரஷ்யா மீதான எரிபொருள் ஏற்றுமதி தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியிருக்கிறது.
எரிபொருல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை உக்ரைன் போருக்கு ரஷ்யா பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறி தடைகளை விதித்த அமெரிக்கா இன்று உலகம் முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டதும் ரஷ்யா மீதான தடையை தளர்த்தியிருக்கிறது.
ரஷ்யாவின் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதும் கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதுவருடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசரமாக எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார். இதற்குப் பின்னர், கடந்த 20ஆம் திகதி ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதுவர், எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவினை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் திகதி ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டு நடத்திய பேச்சுகளை அடுத்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னர் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எரிசக்தி, அணுசக்தி பரிமாற்றங்கள் தொடர்பாக பேச்சுகள் நடத்தப்பட்ட போதும், இலங்கை அதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. அது ரஷ்யாவுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இப்போது, ரஷ்யாவின் பக்கம் இலங்கை திரும்பியிருக்கிறது.
ஆனால் இது நிரந்தரமான தீர்வு அல்ல, ஏனென்றால் ரஷ்யாவின் மீதான தடையை தற்காலிகமாகவே அமெரிக்கா நீக்கியிருக்கிறது. ஹோர்மூஸ் நீரிணை வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டால், மீண்டும் பழையபடி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதிக்கும். அப்போது இலங்கையினால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்க முடியாத நிலை ஏற்படும்.
ஹோர்மூஸ் நீரிணை — உலக எரிபொருலின் 20% இங்கு கடந்து செல்கிறது. ஈரான் இதை மூடியதால் இலங்கை உட்பட உலகின் பல நாடுகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
சவாலான முடிவு — யாரிடம் வாங்குவது?
எவ்வாறாயினும் இப்போது, இலங்கைக்கு பல முனைகளில் எரிபொருள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவற்றை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதுதான் சிக்கலானது.
யாரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதுதான் பிரச்சினையாக உள்ளது. குறுகிய கால நோக்கில் — நீண்ட கால நோக்கில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்பது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவாலான ஒரு விஷயமாக இருக்கப்போகிறது.
0 Comments