elugai

2026 தமிழகத் தேர்தல்: 75 ஆண்டுகாலச் சித்தாந்தப் பயணம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு வரலாற்றுப் பார்வை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

கட்டுரையாளர் - கை.அறிவழகன் | பட்டியல் வரிசை எண் - 10

விடுதலையும் பிரிவினையும்

1947 ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், அந்த விடுதலையின் கூடவே வந்தது ஒரு கொடூரமான துயரம் மிகுந்த பிரிவினை. முஸ்லிம் லீக் என்ற பெயரே ஒரு வலியைச் சுமந்தது. பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இந்தியாவில் தங்கிய இஸ்லாமியர்களுக்கு ஒரு கேள்வி எழுந்தது — இனி நமது அரசியல் அடையாளம் என்ன?

அந்த கேள்விக்கு தைரியமான பதில் சொன்னவர் மாண்பமை முகமது இஸ்மாயில் சாஹிப் (காயிதே மில்லத்). ஒரு தமிழர். சென்னையைச் சேர்ந்தவர். 1920களில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தேசியவாதி. 1948 மார்ச் 10 அன்று சென்னையில் (அன்றைய மதராஸ்) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதயமானது. அது வெறும் கட்சியின் பிறப்பு மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவில் இஸ்லாமிய சமூகம் இந்திய அரசியலின் ஒரு பகுதியாக, கண்ணியமாக வாழ முடியும் என்ற அறிவிப்பு.

காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நிறுவனத் தலைவர்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தொடக்கமே சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தலைவர் காயிதே மில்லத் என்கிற முகமது இஸ்மாயில் சாஹிப் பிறப்பால் ஒரு தமிழர், முதல் பொதுச்செயலாளர் K.T.M. அகமது இப்ராஹிம்.

தமிழகத்தில் அரசியல் இருப்பு

தமிழகத்தில் ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஒரு தொடர் அரசியல் இருப்பைத் தற்காத்து வருகிறது. ராமநாதபுரம் தொகுதியில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால் வெறும் சமூக தனிமைப்படுத்தலில் திளைக்காமல், இஸ்லாமிய சமூகத்தை இந்திய அரசியலின் மையத்தில் வைத்துச் செயல்பட்டது.

கல்வி சார்ந்த உரிமைகள், முஸ்லிம் தனிநபர் சட்டப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நிதி நிறுவனம் நிறுவல், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை தன்மை பாதுகாப்பு, இவை அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றிகரமான போராட்டங்களை நடத்தியது. மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமைகள், சமூக நீதி போன்றவை கட்சியின் மூன்று முக்கிய தூண்கள்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடி - மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமைகள், சமூக நீதியை பிரதிநிதித்துவம் செய்கிறது. (படம்: Wikipedia)

திமுகவுடன் நீண்டகால கூட்டணி

தமிழக அரசியல் சூழலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எப்போதும் ஒரு சமநிலையான ஆற்றலாகச் செயல்பட்டது. திமுக, காங்கிரஸ் என பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, முஸ்லிம் சமூகத்தின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்தது. 1960களில் இருந்து இன்று வரை திமுகவுக்கு சமூக நீதி அரசியலில் உண்மையான நண்பனாக இருந்தது இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அந்த உறவே கட்சியைத் தமிழகத்தில் நிலை நிறுத்தியது.

காயிதே மில்லத் என்கிற முகமது சாஹிப் இஸ்மாயில் கட்சியின் நிறுவனத் தலைவர், B. போக்கர் சாஹிப் முதல் மக்களவை உறுப்பினர், C.H. முகமது கோயா கேரள முன்னாள் முதலமைச்சர், E. அகமது, மத்திய அரசில் அமைச்சராக இருந்தவர்.

K.M. காதர் மொஹைதீன், இன்றைய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர். 2026 தேர்தலுக்காகத் திமுகவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். "இந்தக் கூட்டணி சித்தாந்த அடிப்படையிலானது, தேர்தல் பேரம் அல்ல" என்று உறுதியாக அறிவித்தார்.

2026 தேர்தல் - இடஒதுக்கீடு

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கட்சி 5 இடங்கள் கேட்டது. திமுக 2 இடங்கள் மட்டுமே வழங்கியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 3 இடங்களிலும் கட்சி தோற்றது என்பதைக் கணக்கில் கொண்டு திமுக இந்த முடிவை எடுத்தது. இறுதியில் DMK கூட்டணியில் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது ஒரு ஏமாற்றம் தருகிற முடிவுதான். ஆனால் கட்சி பின்வாங்கவில்லை. ஏனெனில் இந்தக் கூட்டணி வெறும் இடங்களுக்கானது அல்ல, இது ஒரு சித்தாந்த ரீதியிலான நட்பு, தமிழகத்தின் மதச்சார்பற்ற அரசியலைப் பாதுகாக்கும் ஒரு கூட்டு உறுதிமொழி.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - திமுக கூட்டணி - 60 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகால அரசியல் கூட்டணி. (படம்: The Hindu)

சாதனைகளும் சவால்களும்

75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்து, சிறுபான்மையினர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தியது, சமூக சார்பற்ற அரசியல் பாதை, கல்வி மற்றும் சமூக நலனில் தொடர் அக்கறை என்பவை கட்சியின் சாதனைகள். ஆனால், கேரளாவைத் தாண்டி தேசிய அளவில் வேர் விடாமல் போனது, தமிழகத்தில் பெரிய திராவிடக் கட்சிகளைச் சார்ந்திருக்கும் நிலை இன்னும் மாறவில்லை என்பவை சவால்களாக உள்ளன.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்பது வெறும் சிறுபான்மையினருக்கான கட்சி மட்டுமல்ல. அது இந்திய மதச்சார்பின்மையின் ஒரு வாழும் சாட்சி. பாகிஸ்தானுடன் சேராமல், இந்தியாவில் தங்கி, இந்திய அரசியலமைப்பின் கீழ் போராடி, தன் சமூகத்திற்குக் கண்ணியமான இடத்தைப் பெற்றுத் தந்த இந்த கட்சியின் பயணம் ஒரு வரலாற்று ஆவணம்.

எதிர்காலம்

இந்துத்துவா அரசியல் வலுப்பெறும் இன்றைய சூழலில் கட்சியின் மதச்சார்பற்ற நிலைப்பாடும், தமிழக அரசியலில் அதன் நிலையான இடமும் முன்னெப்போதையும் விட அவசியமானதாக இருக்கிறது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தாலும் கட்சியின் கொள்கைப் பயணம் தொடரும்.

கலைஞர், கட்சியுடன் ஒரு மிக நெருக்கமான உறவைப் பேணியது மட்டுமன்றி அதன் நிறுவனத் தலைவரான காயிதே மில்லத் என்கிற முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பெயரை நினைவு கூறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்தார். கட்சி பொதுச் சமூகத்தை நோக்கி நகர்ந்து பல்வேறு தரப்பு மக்களின் நன்மதிப்பை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் நிற்கிறது. வரும் காலங்களில் கட்சியின் அந்தக் கனவு நிறைவேறும்.

Post a Comment

0 Comments