தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் கட்சிகளும், அவற்றின் செயல்பாடுகளும் கூறாய்வுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. திராவிட இயக்க சிந்தனைத் தொகுப்புகளின் வழியாக நாம் (தமிழ் சமூகம்) இன்று அடைந்திருக்கும் மேம்பாடுகள் போற்றத்தக்கவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்காகவே திராவிட இயக்கங்களைப் புனிதப்படுத்தி வழிபட வேண்டும் என்ற அழுத்தமோ, தேவையோ யாருக்கும் இல்லை.
திராவிட இயக்கம் தமிழ் சமூகத்திற்கு பல மேம்பாடுகளை அளித்துள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. (புகைப்படம்: New Indian Express)
தனிப்பட்ட நிலைப்பாடு குறித்து
நாம் தமிழர் குறித்த கட்டுரையில் சீமானுக்காக இரண்டு நாட்கள் பரப்புரை செய்வேன் என்று நான் சொன்னது அந்தக் கட்சியின் கொள்கைகளை வழிமொழிந்து அவற்றை முன்னகர்த்துவதற்காக அல்ல. தனிப்பட்ட அண்ணன் சீமான் அவர்கள் மீதான அன்பின் காரணமாக மட்டும் தான். அதையும் அடிப்படைக் கோட்பாட்டு இயக்கத்திற்கு முரணானது என்று நான் உணர்ந்தேன், அதற்காக வருந்தினேன், மன்னிப்புக் கோரினேன். அதை மையமாக வைத்து சில நண்பர்கள் என் மீதான தங்கள் தனிப்பட்ட வன்மத்தைப் பல வழிகளில் வெளிப்படுத்தினார்கள்.
அதில் ஒருவர் தமிழ் நூல்களை PDF வடிவமாக்கி புலனத்தின் வழியாக பல நூறு பேருக்கு பரப்புவதை வாழ்நாள் சாதனையாகக் கருதுபவர். நூல் வடிவம் என்பது இன்று பல்வேறு தொழில்நுட்ப செயலிகள் வழியாக மின்னணு முறையில் வணிகம் செய்யப்படுகிறது. அதில் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு முறையாக உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், முறையற்ற வழியில் துளியும் நீதியில்லாத இந்த போலிப் பதிப்புகளை உருவாக்கிப் பரப்பி அச்சு உலகை அழிக்கும் வேலையை மாபெரும் சாதனை போல செய்கிறவர்கள் பேசுகிற அறமெல்லாம் உண்மையில் என்னைப் புல்லரிக்க வைத்தது.
கோட்பாட்டு முரண்பாடுகள்
ஜெயலலிதா இறந்த பிறகு திருமதி சசிகலா (பல்வேறு வழிகளில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுத் தண்டனை பெற்றவர்) அவர்கள் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரத்தில் ஏதோ அவரை ஆகப் பெரும் அரசியல் தலைவர் என்று எண்ணிக் கொண்டு அவரது இல்லத்தில் சென்று சந்தித்தவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள். இரண்டாவது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
தமிழக சட்டமன்றம். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகள் குறித்த விவாதங்கள் தீவிரமாகி வருகின்றன. (புகைப்படம்: India Today)
இந்த சந்திப்பை எல்லாம் என்ன ராஜதந்திரக் காரணம் சொல்லி யாரும் முட்டுக் கொடுத்தாலும், உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவையெல்லாம் அதிகாரத்தை நோக்கிய அவசர ஓட்டம் தானன்றி வேறில்லை. அது போல் திமுக என்கிற மாபெரும் இயக்கம் வாக்கு வங்கி அரசியலுக்காக என்று காரணம் சொல்லி எந்தக் கொள்கை வடிவமும் இல்லாத தேமுதிகவிற்கு மாநிலங்களைப் பதவி வழங்குவது, 10 சட்டமன்றத் தொகுதிகள் வழங்குவது என்பதெல்லாம் மாபெரும் ஊழல்.
கம்யூனிஸ்டுகளைப் போல நம்பிக்கையும், கோட்பாட்டு உறுதியும் கொண்டவர்களை ஒற்றைத் தொகுதிக்கு நெருக்கடி தந்து விட்டு தேமுதிக போன்ற கட்சிகளுக்கு வாரி வழங்குவதை எல்லாம் திமுக தலைவர்கள் வேண்டுமானால் முட்டுக் கொடுக்கலாம், உடன்பிறப்புகள் என்கிற பெயரில் கருப்பு சிவப்பு சங்கிகள் முட்டுக் கொடுப்பது அவர்களுக்கு வேண்டுமானால் வாழ்நாள் பெருமையாக இருக்கலாம். என்னைப் போன்ற மனதில் தோன்றுவதை, நான் நீதி என்று நம்புவதை எழுதுகிற எழுத்தாளர்களுக்கு அப்படி எல்லாம் யாருக்கும் முட்டுக் கொடுக்கிற தேவையும் இல்லை.
இதுபோல் எண்ணற்ற முரண்பாடுகள், திராவிடர் கழகங்கள் செய்கிற கோட்பாட்டு ஊழல்களும், கொள்கை முரண்களும் ஏராளம் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு கே.என்.நேரு திருப்பதி தேவஸ்தானத்துக்கு 44 லட்சத்தை அள்ளிக் கொடுத்தது. அது அவரது சொந்தப் பணமாகவே இருந்தாலும், அதை அவர் ஏன் தமிழகத்தில் அவரது தொகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு வழங்கி இருக்கக் கூடாது?
அமைதி என்பது அச்சம் அல்ல
ஆனாலும், அரசியல் என்பது மானுட சமூகத்தின் நீதியாகப் பரிணாமம் அடையும் இயக்கம். மேலே நான் குறிப்பிட்ட தற்காலிகப் பின்னடைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு மதம் என்கிற குறியீட்டின் வழியாக இந்திய தேசத்தை பிளவுபடுத்தி அதில் அதிகாரச் சுரண்டலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இந்துத்துவப் பிற்போக்கு வாதத்தை எதிர்த்து நிற்பதில் நாம் பின்னடைவை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் நான் அமைதியாக இருப்பேன்.
தமிழக சட்டமன்றம், சென்னை. அரசியல் என்பது மானுட சமூகத்தின் நீதியாகப் பரிணாமம் அடையும் இயக்கம். (புகைப்படம்: Indian Express)
அந்த அமைதியை அச்சம் என்றோ, பின்வாங்கல் என்றோ கருதி என் மீது வன்மத்தைக் கக்கும் எவருக்கும் மிகுந்த கனிவோடு சொல்வது என்னவென்றால் அமைதி என்பது அச்சம் அல்ல. நீதியின் வழியில் அது தற்காலிக இளைப்பாறுதல், அவ்வளவுதான். தேர்தலுக்குப் பிறகு நாம் இந்த சமரில் இறங்குவோம். அதுவரை நான் பின் வாங்குகிறேன். அமைதி காக்கிறேன். மற்றபடி இந்தக் கோட்பாட்டு முரண்களையும், விவாதங்களையும் நான் தனிப்பட்ட மனிதர்கள் மீதான வெறுப்பாக எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.
மனித நேயம்
பார்ப்பனர்கள், இடைநிலைச் சாதியினர், ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் என்று அனைவரும் உயிரியல் இயக்கத்தில் எனக்கு மிக நெருக்கமான சக மனிதர்கள் மட்டுமே. ஏனெனில் இருத்தலின் வாதையிலும், நீதியின் பாதையை விடாது பற்றிக் கொண்டு பயணிப்பது தான் அனைவருக்கும் பொதுவான பேரண்டத்தின் வெளிச்சம்.
0 Comments