elugai

சூத்திரதாரியைத் தேடும் அரசியல்: ஈஸ்டர் தாக்குதல் நீதிக்கான ஏழாண்டு கால ஏமாற்றம்.

சூத்திரதாரியைத் தேடும் அரசியல்

சூத்திரதாரியைத் தேடும் அரசியல்

கட்டுரையாளர் - சத்ரியன்

ஏழு ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லை

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தல்களின் போதும், ஒவ்வொரு ஈஸ்டர் ஞாயிறு வரும்போதும், நீதிக்கான கோரிக்கைகள் விடுக்கப்படுவது வழக்கமாகி விட்டது. அவ்வாறானதொரு கோரிக்கையுடன், இந்த முறையும் ஈஸ்டர் ஞாயிறு கழிந்து போயிருக்கிறது. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாடுகள், இன்னமும் முழுமை பெறவில்லை.

குற்றவாளிகள் யாரென கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு ஈஸ்டர் ஞாயிறு வருகின்ற போதும், அடுத்த ஈஸ்டருக்கு இடையிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மன்றாடுகின்ற நிலை தொடர்கிறது. அவர்களுக்கு அதனைச் செய்வதைத் தவிர, வேறு வழியும் இல்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் 2019 - ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை. (படம்: BBC)

அரசியல்மயமாக்கப்பட்ட நீதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலும் அதற்கு நீதி பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளும், அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை வழங்குவதை மையப்படுத்தி, பல தேர்தல்களில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை தேர்தலுக்கான கோசங்களாக - ஆட்சியைப் பிடிப்பதற்கான பிரசாரங்களாக இருந்தனவே தவிர, நீதியை நிலை நாட்டுவதற்கும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கும் வழிசெய்யக் கூடியவையாக இருக்கவில்லை.

இந்த நிலையை மாற்றியமைப்பதாக உறுதி கொடுத்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த நெடும் பயணத்தில் எந்தளவுக்குப் பயணித்திருக்கிறது என்பதை, இப்போது அனுமானிக்க முடியாத நிலையே இருக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதி காலக்கெடு எப்போதே முடிந்து விட்டது. ஆனால், விசாரணை எப்போது நிறைவடையும் என்பதை யாராலும் கூற முடியாத நிலையே நீடிக்கிறது.

சஹ்ரான் ஹாஷிம் சஹ்ரான் ஹாஷிம் - முதலில் சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டவர்.

சூத்திரதாரிகள் யார்?

அரசாங்கம் கூறுவது போல அல்லது மக்களை நம்ப வைக்கின்றது போல, இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகளை அடையாளம் காணும் பணி முழுமையடையவில்லை எனத் தான் தெரிகிறது. இதுதான் முக்கியமான பிரச்சினை. இந்த தாக்குதலின் சூத்திரதாரி என வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் உண்மையான சூத்திரதாரிகளா அல்லது அவர்களுக்குப் பின்னால் வேறு சூத்திரதாரிகள் இருந்தார்களா என்பது கேள்விக்குரியது. அதுதான் இந்த விசாரணையின் அடிப்படை. இந்த விசாரணையின் ஊடாக விடை தேடுகின்ற கேள்வியாக இருக்கிறது.

முன்னதாக, சஹ்ரான் ஹாஷிம் தான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி எனச் சொல்லப்பட்டது. அவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். அவர் ஒரு தொடர் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தால், தன்னைத் தற்கொலை குண்டுதாரியாக்கி, உயிரிழந்திருக்கமாட்டார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து, வேறு சூத்திரதாரிகள் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

அதையடுத்து, நௌபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரி என, முன்னர் பொதுபாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகர கூறினார். அதற்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தான், சூத்திரதாரியாகச் செய்யப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. சனல்-4 ஆவணப்படத்திலும் முன்வைக்கப்பட்ட அந்தக் குற்றச்சாட்டின் பின்னர் அரசபுலனாய்வு சேவையின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே - சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

தெற்கு அரசியல் எதிர்வினை

அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக முழுமையான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளனவா என்ற சந்தேகங்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இந்தச் சூழலில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட பின்னர், அதற்கு எதிராகத் தெற்கு அரசியலில் கடும் எதிர்வினைகள் ஆற்றப்படுகின்றன. குறிப்பாகப் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தின் மீது சுமத்தி வருகின்றனர்.

சுரேஷ் சலேயின் கைதுக்குப் பின்னர், உதய கம்மன்பில, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதியின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் கடந்த 31 ஆம் திகதி வெளியிட்டிருந்த ஒரு புத்தகத்தில், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புதிதாக எந்தச் சூத்திரதாரியையும் அவர் அந்த நூலில் அடையாளம் காட்டவில்லை. ஆனால் அவர், சூத்திரதாரியை அடையாளப்படுத்தப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தி மக்களைத் தன் வசப்படுத்த முயன்றார்.

உதய கம்மன்பில புத்தக வெளியீடு உதய கம்மன்பில புத்தக வெளியீடு விழா - பல முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டனர். (படம்: News First)

புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மாத்திரமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், கலந்து கொண்டிருந்தார். விழாவுக்குச் சென்ற அவர், உடனடியாக வெளியேறிச் சென்றது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த நிலையில் நூறு புத்தகங்களை எழுதினாலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளைக் காப்பாற்ற முடியாது என அரசாங்கம் கூறுகிறது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த தாக்குதல் தொடர்பாக, சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், முஜிபுர் ரஹ்மானுக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதாகவும், அவரும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும், பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, கருத்து வெளியிட்டிருந்தார். அதற்குப் பாராளுமன்றத்தில் பதிலடி கொடுத்த எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அப்படியானால் பொதுபாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, சரத் வீரசேகர தூங்கிக் கொண்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜே.வி.பியின் குற்றச்சாட்டு

இது நியாயமான கேள்வி. எழுந்தமானத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது என்பது இப்போது, அரசியல் வட்டாரங்களில் பொதுவான வழக்கமாகியுள்ளது. உதய கம்மன்பிலவின் நூல் வெளியீடு அரசாங்கத் தரப்பைச் சினம் கொள்ள வைத்திருக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதனைக் குழப்புவதற்குச் சில தரப்புகள் முற்படுவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.

இவ்வாறான நிலையில், வவுனியாவில் நடந்த ஜே.வி.பியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, உதய கம்மன்பிலவின், நூல் வெளியீட்டு விழாவிற்கு, பல சூத்திரதாரிகள் சென்றுள்ளார்கள் என கூறியிருந்தார். உதய கம்பன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்களில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் முக்கியமானவர்கள்.

ராஜபக்ஷவினரை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சூழலில், இந்த நூல் வெளியீட்டு விழாவில் பல சூத்திரதாரிகள் கலந்து கொண்டதாக அரசாங்கத் தரப்பு கூறுவது என்பது சாதாரண விடயம் அல்ல.

முடிவுரை

இது பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறதா அல்லது விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. முஜிபுர் ரஹ்மான் மீது சரத் வீரசேகர முன்வைத்த குற்றச்சாட்டுக்கும், புத்தக வெளியீட்டு விழாவில் சூத்திரதாரிகள் கலந்து கொண்டதாக, ரில்வின் சில்வா உள்ளிட்ட ஆளும்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையான சூத்திரதாரி யார் என கண்டறிந்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கத் தரப்புகள் நடவடிக்கை எடுத்திருக்க முடியும், அவ்வாறு செய்திருக்கவில்லை. அந்த உண்மையான சூத்திரதாரி பற்றிய முழுமையான தகவல்கள், ஆதாரங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் தான் ஒளிந்து நின்று விளையாடுகிறார்கள் போலத் தெரிகிறது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் புத்திசாலிகள். அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்பக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டுச் செல்கிறார்கள். ஆனால் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்கள், ஒவ்வொரு முறை வாக்களிக்கச் செல்லும் போதும், நீதிக்கான ஏக்கத்துடன் சென்று வாக்களித்து விட்டு ஏமாந்து போய் நிற்கிறார்கள்.

Post a Comment

0 Comments