நீடிக்கும் அச்சுறுத்தல்
மத்திய கிழக்கு போர் நீடிக்குமேயானால், இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் மேலும் நெருக்கடிக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்கு அமெரிக்கா, ஈரான், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தயார் என்று கூறியிருந்தாலும், இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு எங்கிருந்து வரப்போகிறது என்ற கேள்விக்கு, இன்னமும் சரியான பதில் இல்லை.
எரிபொருள் விநியோக அமைப்பு
இலங்கையின் எரிபொருள் தேவையில் 43 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களால் நிறைவேற்றப்படுகிறது. லங்கா ஐஓசி நிறுவனமும், ஆர்.எம் பார்க் நிறுவனமும், சினோபெக் நிறுவனமும் இதனை கையாளுகின்றன. அதேவேளை எஞ்சிய 57 வீத எரிபொருளை விநியோகிக்கின்ற நடவடிக்கையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஈடுபட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு மாத்திரம் எரிபொருள் விநியோக சிக்கல் ஏற்பட்டிருக்கவில்லை.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாகனங்கள். மத்திய கிழக்கு போர் நீடிக்குமேயானால் இந்த நிலைமை மேலும் மோசமாகலாம். (புகைப்படம்: Reuters)
லங்கா ஐஓசி நெருக்கடி
லங்கா ஐஓசி நிறுவனம் விநியோகிக்க வேண்டிய இரண்டு கப்பல் எரிபொருளை அனுப்பவில்லை. சிங்கப்பூரின் ஊடாக எரிபொருளைப் பெற்று வந்த லங்கா ஐஓசி நிறுவனம், எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கைவிரித்ததால், நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்த நேரிட்டது. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியிருந்தார்.
இதையடுத்து இந்தியாவில் இருந்து ஐஓசி நிறுவனத்தின் மூலமாக 20 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலும் 18 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலும் கப்பல் ஒன்றின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள் வெளியானபோது, இந்தியா ஏன் அவசரமாக எரிபொருள் கப்பலை அனுப்புகிறது என்ற கேள்வி எழுந்தது. அப்படியானால், எரிபொருள் கையிருப்பு இல்லையா அரசாங்கம் கூறிய கையிருப்பு பொய்யா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், லங்கா ஐஓசி நிறுவனம் விநியோகிக்க வேண்டிய இரண்டு எரிபொருள் கப்பல்களை அனுப்பவில்லை என்பதுதான், இந்த அவசரப் பேச்சுக்கும் இதன் மூலமாக கப்பல் ஒன்றில் எரிபொருள் அனுப்பப்பட்டதற்கும் காரணம்.
எவ்வாறாயினும், ஐஓசி நிறுவனம் தான், லங்கா ஐஓசியின் தாய் நிறுவனம். இரண்டு கப்பல்களில் அனுப்ப வேண்டிய எரிபொருளை விநியோகிக்காததால் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்தே, ஒரு கப்பலில் மாத்திரம் எரிபொருள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனூடாக பிரச்சினையின் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கிறதே தவிர, முழுமையாக நீக்கப்படவில்லை. லங்கா ஐஓசி நிறுவனம் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளுமா என்பது சிக்கலான கேள்வி.
இந்தியாவின் நெருக்கடி
ஏனென்றால் வழக்கமாக மேற்கொள்ளும் விநியோக வழிமுறைகளின் ஊடாக, அது தற்போது எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இந்தியாவிலிருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆனால், ஈரான் அனுமதித்தாலும், மத்திய கிழக்கின் ஊடாக, இந்தியாவுக்கு இன்னமும் முழுமையாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதால், நிலைமையை சமாளித்துக் கொள்கிறது.
இந்தியாவிலும் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், செயற்பட வேண்டிய பொறுப்பும் இந்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால், மிகக் கவனமாகவே தங்களின் கையிருப்பை விடுவிக்க முற்படும். இது இலங்கைக்கு நெருக்கடியான சூழலாகும்.
இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதி படி லங்கா ஐஓசி நிறுவனம் அல்லது அதன் தாய் நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால், அது பாரதூரமான பிரச்சினைகளை உருவாக்கும். சீனாவின் சினோபெக் நிறுவனம் அம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு ஆலையொன்றை நிறுவுவதற்கு எடுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்துவதற்கு, அமெரிக்காவும் இந்தியாவும் முயற்சிகளை மேற்கொண்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகைய முதலீடுகள் சீனாவின் செல்வாக்கை அதிகப்படுத்தும் என்ற காரணத்தினாலேயே அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறான நிலையில், இந்திய பெட்ரோலிய நிறுவனம் உறுதியளித்தது போல, எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்காமல் தவிர்க்குமேயானால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக, இந்தியாவுடன் கொண்டிருக்கக் கூடிய உறவுகளை, அது கேள்விக்குள்ளாக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, எண்ணெய் குழாய் இணைப்பை ஏற்படுத்துகின்ற திட்டங்கள் போன்ற பல திட்டங்களுக்கு அது சிக்கலாக மாறும்.
இந்தச் சூழலை இந்தியா விரும்பாது. ஆனால் தனது நாட்டுக்கு தேவையான எரிபொருளை மட்டுப்படுத்தி அல்லது அங்கு விநியோகத்தை தவிர்த்துக் கொண்டு, இலங்கையின் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு நாடும் அத்தகைய தீர்மானத்தையே எடுக்கும். இது இலங்கைக்கு சாதகமற்ற நிலையாகும்.
ரஷ்யா - புதிய நம்பிக்கையா?
எரிபொருளை வழங்குவதற்கு ஈரான் வழங்கிய வாய்ப்பை இலங்கை நிராகரித்து விட்டது. அமெரிக்கா அல்லது வெனிசுவேலாவிலிருந்து எரிபொருளைக் கொண்டு வருவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் என கருதுவதால் அதனையும் தவிர்த்து வருகிறது. இந்தச் சூழலில் ரஷ்யாவின் பக்கம் தன் பார்வையை திருப்பி இருக்கிறது அரசாங்கம்.
ரஷ்ய எண்ணெய் தாங்கி கப்பல்கள். அமெரிக்காவின் தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. (புகைப்படம்: Times of India)
ஈரான் போரினால் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்ட போது, எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. அந்தச் சூழலில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது விதித்த தடையை, அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியது. ஒரு மாதத்திற்கு மாத்திரம் நீக்கப்பட்ட இந்த தடை வரும் 11-ம் திகதியுடன் நிறைவடையப் போகிறது. இந்தத் தடை நீக்கப்பட்டதும் இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முற்பட்டது.
அது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் கொழும்புக்கு வந்து பேச்சு நடத்தியிருந்தார். அதை அடுத்து கடந்த வாரம் ரஷ்யாவின் வெளியுறவு பிரதி அமைச்சரும் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்கள் எரிபொருள் கொள்வனவு தொடர்பான இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கை வகிக்கின்றன.
இந்த பேச்சுக்களில் இலங்கைக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணங்கியிருக்கிறது. ஆனால் நிபந்தனை அடிப்படையிலேயே அது சாத்தியமாகும். அவசர தேவைக்கு எரிபொருளை விநியோகிக்க ரஷ்யா தயாராக இல்லை. நிரந்தரமான நீடித்த ஒரு ஒப்பந்தமாக இந்த இணக்கப்பாடு இருக்க வேண்டும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது. நீண்டகால நோக்கில் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்கு அது திட்டமிடுகிறது.
தடைகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம்
ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடை தற்காலிகமாகவே தளர்த்தப்பட்டுள்ளது. வரும் 11-ஆம் திகதிக்குப் பின்னர் அந்த தடை மீண்டும் வரலாம் அல்லது தற்காலிகமாக தளர்வு நீடிக்கப்படலாம். தடை மீண்டும் நீடிக்கப்பட்டால், எரிபொருளை வாங்கும் இலங்கை தான் அமெரிக்காவின் நெருக்கடிக்குள்ளாகும். அத்தகைய நெருக்கடி ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ள இலங்கை விரும்பாது.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது என்பது இதுவரை கேள்விக்குள்ளான விடயமாகவே இருக்கிறது. ரஷ்யா எரிபொருள் வழங்குவதற்கு மறுக்கவில்லை, ஆனால் அதற்காக சில நிபந்தனைகளை முன் வைத்து பேசுகிறது. இதற்கான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை. இது சாத்தியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
சில சமயங்களில் ஓரிரண்டு பொருள் கப்பல்களை ரஷ்யா இலங்கைக்கு அனுப்பலாம். அது தற்காலிகமாக இலங்கையின் பிரச்சனைகளை தீர்க்கும். ரஷ்யாவும் இந்த மாதம் தொடக்கம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை ஏற்றுமதி செய்வதை நிறுத்தவுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் உள்நாட்டு சந்தை விலையை சமநிலையுடன் பேணுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தாக்குதல்களில் ரஷ்யாவின் உற்பத்தி, ஏற்றுமதி கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அதனைத் தாண்டி இலங்கைக்கு கிரமமான முறையில் எரிபொருளை விநியோகிக்கும் என்று எதிர்பார்க்க முடியாத சூழல் உள்ளது. அமெரிக்காவின் தடைகளையும் தாண்டி எரிபொருளை வாங்கிய இந்தியா போன்ற நாடுகளை அது முன்னுரிமைக்குரியதாக பார்க்கும்.
ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போது எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படையில் அதிகரிப்பு இடம்பெற்றதாகவும், அப்படி இல்லை என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டமை நினைவிருக்கலாம். இப்போதும் கூட ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய விடயமாக தெரியவில்லை.
தீர்வு - மாற்று எரிசக்தி
இலங்கைக்கு எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது. பாரம்பரிய எரிசக்தி மூலங்களின் நிலை கேள்விக்குள்ளாகி வரும் சூழலில், மாற்று எரிசக்தி திட்டங்களின் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டம் நெருங்கி விட்டது.
0 Comments