நிதியைத் திருப்புகிறதா வடக்கு மாகாணம்?
5.7 பில்லியன் ரூபாய் திரும்பியது
2025 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட, 5.7 பில்லியன் ரூபாய் நிதி திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் திரும்பியிருக்கிறது.
கணக்காய்வு அறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கேள்வி எழுப்பியிருந்தார். 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 5.7 பில்லியன் ரூபா திருப்பி அனுப்பப்பட்டது என்பது பாரதூரமான ஒரு விடயம்.
வடக்கு மாகாண சபை - நிதி ஒதுக்கீடு திருப்பி அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு. (படம்: News First)
நீண்டகால குற்றச்சாட்டு
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. வடக்கு மாகாண சபைக்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுவதாக ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்தின் போதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கம்.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் அதன் பதவிக்காலம் முடிவடையும் வரை ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிடாமல் வடக்கு மாகாண சபை திருப்பி அனுப்பியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதனை அப்போது ஆட்சியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் நிராகரித்து வந்திருந்தார்கள்.
இது ஒரு அரசியல் பிரசாரமாக வடக்கு மாகாண சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வந்தது. தமிழர் பிரதிநிதிகளால் வடக்கு மாகாணத்தை முன்னேற்ற முடியவில்லை, அதற்காக ஒதுக்கப்படும் நிதியைக் கூட சரியாகச் செலவிடத் தெரியாமல், அதற்குத் திட்டமிடத் தெரியாமல் இருக்கிறார்கள் என்ற ஒரு விம்பம் உருவாக்கப்பட்டு வந்தது. இது வடக்கு மாகாண நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் வைத்திருப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றும் கூடச் சொல்லலாம்.
சி.விக்னேஸ்வரன் - முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர், குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
தற்போதைய நிலைமை
தற்போது கூட வடக்கு மாகாணம் மத்திய அரசின் மேற்பார்வையின் கீழேயே - ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 4 பில்லியன் ரூபா மாத்திரமே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2025 ஆம் ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பதாகப் பரவலான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இது வடக்கின் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிக கரிசனை கொண்டிருக்கிறது என்ற பிரசாரத்திற்கு வழிவகுத்தது. ஆனால் அதில் 5.7 பில்லியன் ரூபா நிதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இது பற்றி எங்கும் வெளிப்படுத்தப்படவில்லை.
முரண்பட்ட அறிக்கைகள்
2026ஆம் ஆண்டின் கடமையை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் திகதி நடைபெற்ற போது, உரையாற்றிய வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன், 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை வினைத்திறனாகச் செலவு செய்து, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறியிருந்தார்.
வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் நூறு சதவீதக் கட்டு நிதியையும் நாம் திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளோம். டிசெம்பர் 30ஆம் திகதி நள்ளிரவு வரையில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை திறைசேரி - 5.7 பில்லியன் ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக அறிக்கை. (படம்: Financial Times)
வெளிப்படைத்தன்மையின்மை
இது வடக்கு மாகாண நிர்வாகத்தின் வினைத்திறனின்மையை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை, வெளிப்படைத்தன்மையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு மாகாண நிர்வாகம், 100 சதவீத நிதியையும் திட்டங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறோம் என உரிமை கோரியிருந்தது. இந்த நிலையில், 70 வீதத்திற்கும் அதிகமான நிதியைத் திறைசேரிக்குத் திருப்பி அனுப்பி விட்டே இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருப்பது பாரதூரமான விடயம். இது உண்மையைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கம் கொண்ட கருத்து.
அரசியல் நோக்கம்
கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதற்கு, அதனை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முனைப்புத்தான், அடிப்படைக் காரணம். தற்போதைய அரசாங்கத்திற்கு கூட, வடக்கு மாகாண சபையை மாத்திரமல்ல, ஏனைய மாகாண சபைகளையும் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கும் நோக்கம் இல்லை. அவற்றுக்குத் தேர்தலைக் கூட நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது.
மாகாண சபைகளை வெள்ளை யானை என்றும் அவற்றுக்கு வீண் செலவினங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படும் கருத்துக்களுடன் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வேறுபட்டதல்ல. மாகாண சபைகளை ஒழிக்கின்ற வேண்டும் என்ற கருத்தைக் கடந்த காலங்களில் கூறிய கட்சியே இப்போது ஆட்சியில் இருக்கின்றது.
ஆய்வு தேவை
இந்தச் சூழலில், வடக்கு மாகாண நிர்வாகம், மத்திய அரசாங்கத்தினால் கையாளப்படுகின்ற சூழலில் அதற்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை நிதி திருப்பி அனுப்பப்பட்டதானது மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் ஊடாக இடம்பெற்றதா அல்லது அதன் இரகசிய நிகழ்ச்சிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதா அல்லது மாகாணத்தின் வினைத்திறனற்ற தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியின் விளைவா என ஆராயப்பட வேண்டும்.
ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திற்கு இரட்டிப்பு நிதி ஒதுக்கப்பட்டது என்ற பிரசாரம் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை ஒரு முக்கிய பிரச்சாரமாக்கியது. இந்தச் சூழலில் அந்த நிதியின் பெரும்பகுதி மீண்டும் மத்திய அரசின் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதானது சாதாரண விடயமாக ஒதுக்கித் தள்ளக்கூடியதல்ல.
முடிவுரை
கடந்த காலகட்டங்களில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதனை ஒரு குற்றச்சாட்டாகக் கூறி வந்திருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு தற்போதைய நிலையிலும் நீடிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் அல்ல.
இப்போதைய ஆளுநர் நீண்டகாலம் நிர்வாகத் துறையில் அனுபவம் கொண்டவர். ஆனாலும் அவர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவராக உள்வாங்கப்பட்டுள்ள சூழலில் நிதி ஒதுக்கீடு செலவிடப்படாமல் திரும்பியுள்ளது. இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியது முக்கியம்.
கடைசி நேரம் வரை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்யாமல் இழுத்தடிப்பது வாடிக்கையான விடயம். கடைசி நேரத்தில் எஞ்சிய நிதியைச் செலவிட்டு முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும், அவை தரமற்றதாகக் குறைபாடுகள் கொண்டதாக இருப்பதும் வழக்கமானது.
வடக்கு மாகாண நிர்வாகத்தில் மாத்திரமன்றி ஏனைய நிர்வாகங்களிலும் இந்தக் குறைபாடு உள்ளது. தற்போதைய அரசாங்கம் இவ்வாறான குறைபாடுகளைக் களைவதாகக் கூறிக்கொண்டாலும் அதன் நேரடிக் கவனிப்பில் உள்ள வடக்கு மாகாணத்தில் கூடப் பெருந்தொகை நிதி திருப்பி அனுப்பப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்மயமாக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளைக் குற்றம் சாட்டிய தரப்புக்களே இப்போது சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
0 Comments