elugai

ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்? - ரணில்-சஜித் மோதலும், திசைமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலமும்!

வலுப்பெறுமா ஒன்றிணைந்த எதிர்க்கட்சி?

வலுப்பெறுமா ஒன்றிணைந்த எதிர்க்கட்சி?

கட்டுரையாளர் - சத்ரியன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கு வலுவான போட்டியை கொடுக்கின்ற நிலையில் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் காணப்படுகின்ற பிளவு இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு அந்தக் கட்சியையும் வளரவிடவில்லை, பிளவுபட்டுச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியையும் அதிகாரத்திற்கு வர விடவில்லை.

இந்த நிலைமை காரணமாக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஒருமித்து செயற்பட முடியாத நிலையிலேயே உள்ளன.

தலைமைத்துவ பிளவு

2020ஆம் ஆண்டுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் மேல் நோக்கி வருவதற்கு ஒன்றையொன்று அனுமதிக்கவில்லை. அதன் உச்சக்கட்டமாகவே, வெற்றி வாய்ப்பு இல்லை எனத் தெரிந்திருந்தும், சஜித் பிரேமதாசவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தலைமைத்துவ பிரச்சினையைத் தான் இரண்டு கட்சிகளையும் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க - தலைமைத்துவப் பிரச்சினை இரண்டு கட்சிகளையும் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

ஆனால், இப்போது நிலைமையில் சற்று மாற்றங்கள் தென்படுகின்றன. சஜித் பிரேமதாச பல ஆண்டுகளாகவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என கூறி வந்தாலும், அதற்கு சாத்தியமான தீர்வு ஒன்றுக்கு இணங்க தயாராக இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க முற்று முழுதாக தலைமைத்துவத்தில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ தன்னை முன்னிறுத்திய அரசியலையே விரும்புகிறார். அவரைச் சுற்றியிருப்பவர்கள், அடிக்கடி ஜனாதிபதி கனவை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டிருப்பது அவரது இந்த மனோநிலைக்கு முக்கிய காரணம்.

புதிய பேச்சுவார்த்தைகள்

இந்த சிக்கல் நீடித்து வருவது இரண்டு கட்சிகளும் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், அண்மைக்காலத்தில் நிலைமைகள் மாறி இருக்கின்றன. கடந்த ஜனவரிக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இது இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான பேச்சுக்கள் அல்ல. இரண்டு கட்சிகளும் தனித்தனியான தலைமைத்துவங்களில் செயற்படுகின்ற அதேவேளை, கூட்டாக இணைந்து தேர்தல்களை எதிர்கொள்ளும் யோசனையின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி - ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தை ஐக்கிய தேசியக் கட்சி - ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகள் - தனித்தனியாக செயற்பட்டு கூட்டாக தேர்தலை எதிர்கொள்ளும் யோசனை. (படம்: News First)

இது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை கொள்கை முரண்பாடுகள் நீங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பழைய படி ஒன்றாக இணையும் சூழல் இப்போதைக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தனித்தனியாக இரண்டு கட்சிகளும் பிளவுபட்டு நிற்கின்ற போது அதனை வாக்காளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது பற்றி இரண்டு கட்சிகளும் யோசித்ததாக தெரியவில்லை. இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள்ளேயும் இருக்கின்ற தலைமைத்துவ போட்டி தான் இந்த சிக்கலுக்கான அடிப்படை காரணம்.

ரணில் விலகுவாரா?

ஆனால் அண்மையில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற்குழு கேட்டுக்கொண்டால் தான் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இது ஒரு அரசியல் நாடகமாகவே கருதப்பட்டது. அவர் பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு தீர்மானித்தால், அதனை அவர் உடனடியாக செய்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.

இப்போது அவர் சிங்கப்பூரில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் நாடு திரும்பிய பின் தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பார் என்று பரவலான செய்திகள் அடிபடுகின்றன. அவரது உடல்நிலை, அவரது மனைவியின் உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசியல் விடயங்களில் நாட்டத்தை குறைத்துக்கொள்ளும் தீர்மானம் அவருக்கு இருந்தால், அது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான பொது உடன்பாட்டிற்கு வழிவகுக்க கூடும்.

வாரிசு அரசியல் சிக்கல்

ஆனால் சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி அரசியல் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா என்ற சந்தேகங்களும் இருக்கின்றன. ஏனென்றால் அங்கு வாரிசு அரசியல் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் வாரிசுகளாக இருப்பவர்கள் அங்கு பலமாக இருக்கிறார்கள். குறிப்பாக நவீன் திசாநாயக்க, ருவான் விஜயவர்த்தன, தலதா அத்துகோரள போன்றவர்கள் மீண்டும் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்திற்குள் வருவதற்கு தயாராக இருப்பார்களா என்ற கேள்வி உள்ளது.

நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் - வாரிசு அரசியல் இணைப்புக்கு தடையாக உள்ளது. (படம்: News First)

இருந்தாலும், தாங்கள் பிளவுபட்டு இருப்பதால், தோல்வியடைந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அண்மையில் காமினி திசாநாயக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில், சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். அந்த நிகழ்வில் உரையாற்றிய நவீன் திசாநாயக்க தங்களுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது ஆனாலும் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இளம் தலைவர்கள் சாதித்த ஐக்கிய தேசியக் கட்சியில் தங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற கருத்து அவருக்குள் உருவாகியிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் சஜித் பிரேமதாசவுடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது சிக்கலான கேள்வியாக நீடிக்கிறது.

எதிர்க்கட்சியின் சவால்கள்

அரசாங்கம் வலுவான ஒன்றாக இருக்கின்ற சூழலில் அதற்கு போட்டியாக இருக்கக்கூடிய ஒரே கட்சியாக ஐக்கிய மக்கள் சக்திதான் உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லை. அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன தன்னை வலுப்படுத்துவதற்கு முற்படுகிறது. நாமல் ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி, அவரை ஒரு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக மாற்றுகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர் அதற்காக பல்வேறு மேடைகளை பயன்படுத்திக்கொள்கிறார். இது சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ள சவால்.

ஐக்கிய தேசிய கட்சியை பயன்படுத்தி தன்னை மேலே கொண்டு வருவதற்கு நாமல் ராஜபக்ஷ முயற்சித்தார். அதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தவறான மூலோபாயமும் ஒத்துழைத்திருக்கிறது. சஜித் பிரேமதாசவை விழுத்துவதற்காக நாமல் ராஜபக்ஷவுடன் பல சந்தர்ப்பங்களில் கூட்டு வைத்துக்கொண்டது, ரணிலின் தவறான மூலோபாயம். தன்னை ஜனாதிபதியாக்கிய ராஜபக்ஷவினருக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நடந்துகொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு அவர் செயற்பட்டிருக்கவில்லை.

முடிவுரை

இப்போது அடுத்த தேர்தலில் வெற்றிக்கான ஓட்டம் தொடங்கி விட்டது. மாகாண சபை தேர்தல்கள் நடக்கிறதோ இல்லையோ இன்னும் மூன்றரை ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலும் அதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. அதற்குள் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் தலைமைத்துவ பிரச்சினையை சீர் செய்து வலுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியாக வேண்டும். அதனை எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கப் பேச்சுக்களை நடத்தியும் கூட ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர முடியவில்லை. இந்த நிலைக்கு முடிவு கட்டாமல் அவர்களால் ஒருமித்த எதிர்க்கட்சியாக உருவெடுக்க முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மாற்றாக முடியாது.

Post a Comment

0 Comments