ஈரானின் கதியே கியூபாவுக்கும்
இலங்கைக்கான கியூப தூதுவர் பட்ரீசியா லசாரா பீகோ குவேரா (Patricia Lazara Pego Guerra) சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி இருந்தார். அவர் கடந்த மாதம் 3ஆம் திகதி, பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமையகத்திற்குச் சென்று, கட்சியின் பொதுச்செயலாளர் திலவின் சில்வாவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தீவிரமடைந்த பின்னர் இந்த பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. ஈரான் மீதான போருக்கும் இந்த பேச்சுக்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை எனக் கூறமுடியாது.
இலங்கைக்கான கியூப தூதுவர் பட்ரீசியா லசாரா பீகோ குவேரா இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
கியூபா - இலங்கை பாரம்பரிய நட்பு
கடந்த காலத்தில் ஈரானும் இலங்கையும் எந்தளவுக்கு நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயற்பட்டிருந்தனவோ, அதேயளவுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் செயற்பட்டிருக்கின்ற நாடுகள் தான், இலங்கையும் கியூபாவும். இரண்டு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமாக நெருங்கிய நல்லுறவு இருந்து வந்திருக்கிறது. சர்வதேச அரங்கில் இலங்கைக்காக கடுமையாக குரல் கொடுத்து வந்த நாடுகளில் ஒன்று கியூபா.
போரின் போதும், போருக்கு பின்னரும் இலங்கைக்காக சர்வதேச அரங்கில் கியூபா குரல் கொடுத்தது. ராஜபக்ஷவினர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நல்லாட்சி அரசாங்கத்திலும் சரி - கியூபாவின் ஆதரவு வலுவானதாக இருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் வேறு சர்வதேச தளங்களிலும் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தபோது, கியூபா துணை நின்றது.
தார்மீக அடிப்படைகளை தாண்டி, கியூபாவின் ஆதரவு இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்திருந்தது. இராஜதந்திர ரீதியாக அதற்குப் பலம் கிடைத்திருந்தது. ஈரானும் அவ்வாறே உதவிகளை வழங்கியிருந்தது. ஆனால் இப்போது ஈரானை இலங்கை அரசாங்கம் கைவிட்டு விட்டது என்றே சொல்லலாம். ஈரானுடன் நெருக்கம் காண்பிப்பதை விட, அது அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்க விரும்புகிறது. இது இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைகளின் முக்கியமான ஒரு மாற்றமாக கருதப்படுகிறது.
ட்ரம்பின் உலக திட்டம்
ஈரான் மீதான போர் தொடங்கிய நாளிலிருந்து இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பான விமர்சனங்கள் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில், ஈரானிய கடற்படைக் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து இலங்கை மௌனம் காத்து வருகிறது. கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டிக்கவில்லை, அனுதாபம் தெரிவிக்க வேண்டிய இடங்களில் அனுதாபம் தெரிவிக்கவில்லை, எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் மீது சுமத்தப்படுகின்றன. இது வெளியுறவுக் கொள்கை சார்ந்த மாற்றமாகப் பார்க்கப்படாமல், அரசாங்கத்தின் தந்திரமாக – தப்பிக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா மற்றும் கியூபா மீதான தனது தாக்குதல் திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகைத்துக் கொள்ளாத ஒரு உத்தியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இப்போது கியூபா விவகாரம் மேலோங்க தொடங்கியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற போதே, அவர் பல திட்டங்களைக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் எதிரிகளாக நீண்டகாலமாக கருதப்பட்டு வருகின்ற பல நாடுகளை, அவற்றின் வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அந்தத் திட்டமாகும். வர்த்தகர் என்ற வகையில் அவர் தனது வியாபாரத்தை விஸ்தரிப்பதற்கும் வெளிநாடுகளின் மூல வளங்களை கைப்பற்றுவதற்குமே பிரதானமாக திட்டமிட்டார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான போர் விடயத்தில் அவர் காசாவை கைப்பற்றுவதற்கு - கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு திட்டங்களை முன் வைத்திருந்தார். அது காசாவை அபகரிக்கும் ஒரு திட்டமாக கருதப்பட்டது. அடுத்து உக்ரைனுக்கு நெருக்கடி கொடுத்து, அங்குள்ள அரசாங்கத்தை அச்சுறுத்தி, அதன் கனிம வளங்களை அகழ்ந்தெடுக்கும் உரிமையைப் அபகரித்துக் கொண்டார். அதன்பின்னர், வெனிசுவேலாவில் மீது அவரது பார்வை திரும்பியது. அங்கு ஆட்சியில் இருந்த நிகோலஸ் மதுரோ இரவோடு இரவாக அமெரிக்க படைகளால் தூக்கிச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அங்குள்ள எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தன் வசப்படுத்தி கொண்டார்.
கியூபாவின் நெருக்கடி
இதன் மூலம் ட்ரம்ப் இன்னொரு காயை விழுத்தத் திட்டமிட்டார். வெனிசுவேலாவில் இருந்து தான் கியூபாவுக்கு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. கியூபாவின் கம்யூனிச ஆட்சியை வீழ்த்துவதற்கு அமெரிக்கா, ஆறு தசாப்தங்களுக்கு மேலாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு, சிஐஏ தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.
காஸ்ட்ரோவைக் குறிவைத்து, அமெரிக்காவினால் 634 படுகொலைத் திட்டங்கள் அல்லது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக 2006ஆம் ஆண்டில், கியூபாவின் முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவரான ஃபேபியான் எஸ்கலான்டே கூறியிருந்தார். அவருக்குப் பின்னர் வந்த தலைவர்களையும் அகற்றுவதற்கு அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் பெரு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள கேபிட்டல் கட்டடம். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் கியூபா இப்போது மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. (புகைப்படம்: Wikimedia Commons)
அமெரிக்காவினால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நெருக்கடியிலும், கியூபா தாக்குப் பிடிப்பதற்கு ரஷ்யாவின் உதவி மாத்திரமன்றி, வெனிசுவேலாவின் எண்ணெய் வளமும் காரணமாக இருந்தது. இதனைத் தாண்டி கியூபாவின் மீது கை வைக்க முடியாத நிலை அமெரிக்காவுக்கு காணப்பட்டது. கரீபியன் தீவுகளுக்குள் இருக்கும் இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிதான - சனத்தொகையில் பாதியை விடக் குறைவான கியூபா, புளோரிடா கரையில் இருந்து வெறுமனே 150 கி.மீ தொலைவில் இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தது.
இப்போது கியூபாவின் மீது ட்ரம்பின் பார்வை விழுந்திருக்கிறது. ஈரானை அடுத்து கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தான் தனது இலக்கு என்று ட்ரம்ப் பகிரங்கமாகவே அச்சுறுத்துகிறார். அவர் ஈரான் போரை முடித்த பின்னர், அடுத்த கட்டமாக கியூபாவின் மீது போர் தொடுக்கவோ அல்லது ஏதேனும் வழிகளில் அதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்குள் இருக்கும் அதிகாரவெறி அத்தகைய முயற்சிகளைத் தூண்டி விடும்.
வெனிசுவேலாவில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் கிடைக்காத நிலையில், கியூபாவில் கடுமையான எரிபொருள், மின்சார, மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது கியூப மக்களின் மன உறுதியை குலைக்கின்ற செயற்பாடுகளாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து முதலாவது ரஷ்ய எண்ணெய் தாங்கி கப்பல் சில நாட்களுக்கு முன்னர் தான் ஹவானாவைச் சென்றடைந்தது.
இலங்கையின் நிலைப்பாடு என்ன?
கியூபாவைக் குறிவைத்து தாக்குதலுக்கு தயாராகி வருகின்ற நிலையில் தான், கியூபாவின் தூதுவர் இலங்கையின் ஆட்சியாளர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறார். இதன் மூலமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என கியூபா எதிர்பார்க்கிறது என்று கருதுவதற்கு இடமில்லை. ஆனால், சர்வதேச அளவில் தனக்கு ஆதரவான நாடுகளை அணிதிரட்டும் தேவை அதற்கு இருக்கிறது. அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் கியூபா யாருக்கு ஆதரவு அளித்ததோ, அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்த முற்படுகிறது. அந்த வகையில் தான், இலங்கையின் ஆட்சியாளர்களிடமும் கியூபா நெருக்கத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கிறது.
ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் கியூபாவுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்று நம்ப முடியாது. அவர்கள் இன்று பச்சோந்தியாக இருக்கிறார்கள். கடந்த காலத்தில் உதவினார்கள் என்பதற்காக கியூபாவின் பக்கம் நிற்பார்கள் என்று கடைசி வரை எதிர்பார்க்க முடியாது. வெனிசுவேலாவில் இருந்து நிகோலஸ் மதுரோ பிடித்துச் செல்லப்பட்ட போது, அதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை. ஜேவிபி ஒரு அறிக்கையை வெளியிட்டது அவ்வளவு தான். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்களையும் அரசாங்கம் கண்டிக்கவில்லை.
ஏனென்றால் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்க சார்பு நிலையையும் அதன் ஆதரவையும் மாத்திரமே கருத்தில் கொள்கிறது. பாரம்பரிய அரசியல் உறவுகளையும் இராஜதந்திர உத்திகளையும் அது முற்றாக புறக்கணித்து செயற்படுகிறது. நவீன அரசியல் நோக்கில் இது ஒரு பிழைப்பு வாதம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் இலங்கைக்கு கை கொடுக்கும் என்று கருத முடியாது.
இலங்கையை காப்பாற்றுவதற்கு இதைவிட வேறு வழியில்லை என்று ஜேவிபியின் ஆட்சியாளர்கள் கருதலாம். தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு இது அவசியம் என அவர்கள் நினைக்கலாம். அது உண்மையும் கூட. ஆனால் சர்வதேச அரங்கில் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைகள், உன்னிப்பாக கவனிக்கப்படும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நாடுகளுடன் அது எப்படி நடந்து கொள்கிறது என்பது அவதானிக்கப்படும். அவ்வாறான பார்வையில் இலங்கை தவறான ஒரு விம்பத்தையே உலகத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கியூபாவுக்கு அமெரிக்காவினால் எத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் கூட, பெலவத்தை ஒரு அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளும், இலங்கை அரசாங்கம் அமைதியாக இருந்து விடும்.
0 Comments