தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 - பாரதீய ஜனதாக் கட்சி பகுப்பாய்வு
பாஜக தமிழகத்தில் - ஒரு அறிமுகம்
பாரதீய ஜனதா, இந்தியாவின் பெரும்பான்மை இந்து தேசியவாத அரசியலின் தூண் என்று வர்ணிக்கப்படும் அரசியல் இயக்கம் — பாரதீய ஜனதா கட்சி. வட இந்தியாவில் தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்த இந்தக் கட்சி, தெற்கை நோக்கி நகரும்போது ஒரு மிகப்பெரிய சவாலைச் சந்திக்கிறது. அந்தச் சவாலின் மிகப்பெரிய முகம் தமிழ்நாடு.
1998 ஆம் ஆண்டு அதிமுக, மதிமுக, பாமக மற்றும் பாரதீய ஜனதாக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் 30 நாடாளுமன்ற இடங்களை வென்றது பாஜக கூட்டணி ஆனால் அது பாஜகவின் வலிமையால் அல்ல, அது கூட்டணியில் இருந்த கட்சிகளின் வலிமையால், அதிமுகவின் திராவிட அடையாளத்தால் மட்டுமே. தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் வரலாறு என்பது தனித்து நிற்கும்போது தோல்வியைத் தவிர ஏதுமில்லை, கூட்டணியில் இருக்கும்போது வெற்றி என்ற ஒரே கதையின் தொடர்ச்சி.
பாஜக தமிழ்நாடு - வட இந்தியாவின் வெற்றி கோட்பாடு தெற்கில் பலிக்கவில்லை. (படம்: The Hindu)
எண்கள் சொல்லும் உண்மை
எண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வரலாற்றைப் பார்ப்போம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டது, சிறிய சாதிக் கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தலில் வென்ற இடங்கள் ஏதுமில்லை. பெற்ற வாக்குச் சதவீதம் 11.24%, ஏறத்தாழ 48.81 லட்சம் வாக்குகள், தமிழ்நாட்டில் பாஜக இதுவரைப் பெற்ற உயர் விகிதம் இதுதான்.
அண்ணாமலை தலைமையிலான பாஜகவிற்கு இளைஞர்களின் தரப்பில் ஒரு புதிய அடையாளம் காணப்பட்டது. அவரது உழைப்பும், பொதுப் பிரச்சினைகளில் அவர் காட்டிய தீவிரப் போராட்டக் குணமும் இந்த உயர் விகிதத்தைப் பாஜவுக்குக் கொண்டு வந்தது. கொங்கு மண்டலத்தில் சாதி ஒருங்கிணைப்பு நிகழ்ந்ததும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். NDA கூட்டணி மொத்தம் சுமார் 18.27% வாக்குகள் பெற்றது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தின் 39 இடங்களையும் கைப்பற்றியது.
பாஜக சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, கோயம்புத்தூரில் திரு. கே. அண்ணாமலை 32.8% விகிதமும், கன்னியாகுமரியில் திரு.பொன். ராதாகிருஷ்ணன் 35.6% விகிதமும் பெற்றுப் பாரதீய ஜனதாவின் கொங்கு மற்றும் தெற்கு மண்டல வளர்ச்சியை உறுதி செய்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி, 5 தொகுதிகளில் போட்டியிட்டது, வென்ற இடங்கள் ஏதுமில்லை. வாக்குச் சதவீதம் 3.58–3.66%.
கே. அண்ணாமலை - பாஜகவுக்கு புதிய முகம், ஆனால் 2026இல் போட்டியிடவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் NDA கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் திரு.பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் வெற்றி பெற்றார். வாக்குச் சதவீதம் 5.56–5.59%. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் வாக்கு விகிதப் பங்களிப்பு வெறும் 2.5–2.62%.
2016 மற்றும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் மிகக் குறைந்த செயல்திறன். 2011இல் 204 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றியில்லை, வாக்குச் சதவீதம் 2.22%. 2026 சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன (2021 ஆம் ஆண்டை விட அதிகம்). பாஜக தனது வேட்பாளர் பட்டியலை திரு.நயினார் நாகேந்திரன், திரு. எல். முருகன், திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் போன்றோருடன் வெளியிட்டிருக்கிறது.
திரு. கே. அண்ணாமலை பட்டியலில் இடம்பெறவில்லை. ஒருவேளை அவர் தலைமையில் கட்சி இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால் கொங்கு மண்டலத்தில் சில இடங்களைக் கட்சி கைப்பற்ற வாய்ப்புகள் இருந்தது. இந்த எண்களும், புள்ளி விவரங்களும் என்ன சொல்கின்றன? 2016 ஆம் ஆண்டில் 188 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடம்கூட வெல்லாத கட்சி தமிழகத்தின் "முக்கிய அரசியல் சக்தி" என்று தன்னைத் தானே கூறிக்கொள்கிறது. இந்தக் கூற்றை அரசியல் ஆய்வாளர்களும், தமிழக மக்களும் நகைப்புடன் தான் பார்க்கிறார்கள், "பாஜக தமிழகத்தில் உண்மையில் பெரிய சக்தி இல்லை" என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
தமிழகம் ஏன் பாஜகவை ஏற்கவில்லை?
பாஜகவின் வலிமையான இந்தியக் கோட்பாடு "இந்துத்துவா". இந்து தேசியவாதம். ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம் என்ற கனவு. ஆனால் தமிழகம் இந்தக் கனவை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. 3000 ஆண்டுகள் பழமையான தன்னிச்சையான பண்பாட்டு அடையாளம் கொண்ட மண் இது. சங்க இலக்கியம், திருக்குறள், திருமுறை, சிலப்பதிகாரம் என்று மானுட ஒருங்கிணைப்பை வலியுறுத்திய பண்பாட்டு அடையாளங்கள் இந்த மண்ணின் அடையாளம்.
தமிழ் பெருமை எதிர் இந்துத்துவா - தமிழகத்தின் அடையாள அரசியல். (படம்: Indian Express)
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் இந்து முன்னணி இணைந்து நடத்திய இரு சக்கர ஊர்திப் பேரணியில் வகுப்புவாத முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகளில் கல் எறியும் சம்பவங்கள் நடந்தன. ஆனால் பிற மாநிலங்களைப் போல் அல்லாமல் இது தமிழக மக்களை மேலும் பாஜகவிலிருந்து விலகச் செய்தது. தமிழகத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பல நூற்றாண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த இணக்கத்தை உடைக்கும் அரசியலைத் தமிழர்கள் இதுவரை ஏற்கவில்லை. இனியும் ஏற்கப் போவதில்லை.
பாஜகவின் ஆழமான அரசியல் உத்தி என்னவென்றால் மதத்தையும் தேசபக்தியையும் கலந்து ஒரு புதிய உணர்ச்சி மயமான அரசியல் சொல்லாடலை உருவாக்குவது. கோவில்களை அரசியல் மேடையாக மாற்றுவது. ஆகமங்களையும் சடங்குகளையும் தேர்தல் பிரச்சாரத்தில் கலப்பது. "இந்துமதம் ஆபத்தில் இருக்கிறது" என்ற போலியான அச்சத்தை விதைப்பது. பாஜகவின் "என் மண், என் மக்கள்" பரப்புரை திரு.அண்ணாமலை தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு விகிதத்தை 3.6% இலிருந்து 11% ஆக உயர்த்தியது.
இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மை வேறு. அதே தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. தமிழர்கள் ஏன் பாஜகவை ஏற்கவில்லை? இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம் "அடையாளம்." தமிழன் தன் மொழியை, கலாசாரத்தை, வரலாற்றை, சுயமரியாதையை எதற்கும் விட்டுக் கொடுக்கவில்லை. ஏறாது.
மத்திய அரசின் கைரேகை
NEET திணிப்பு - தமிழ் மாணவர்களின் கனவைத் தகர்த்தது. இந்தித் திணிப்பு - தமிழின் அடையாளத்தைச் சவால் செய்தது. கல்லூரிக் கல்வியில் மத்திய அரசின் தலையீடு மாநில உரிமையைச் சீர்குலைத்தது. Hydrocarbon திட்டம் - தமிழகத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சித்தது. இவை எல்லாம் மத்திய அரசின் — பாஜகவின் — கைரேகை பட்டவை. திமுக தொடர்ந்து தமிழகத்தை "Tamil pride vs Hinduthva imposition" என்ற கோணத்தில் சித்தரிக்கிறது, மக்கள் அதை ஏற்கிறார்கள். ஏனென்றால் அதுதான் உண்மை.
2026 தேர்தலில் AIADMK-BJP-PMK கூட்டணி DMK எதிர்ப்பு அணியாக அணி திரண்டுள்ளது. திமுக "Tamil pride vs BJP" என்ற திரைக்கதையை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்கிறது. அது பெரிய அளவில் வெற்றி பெறும். பாஜக இந்தத் தேர்தலில் என்ன சாதிக்கும்? எனது நேர்மையான மதிப்பீடு இதுதான். அதிமுக வலிமையாக இருக்கும் சில தொகுதிகளில் குறிப்பாகக் கொங்கு மண்டலம் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்கள் வெல்லலாம். ஆனால் திமுகவின் பல்வேறு நலத்திட்டங்களும், வாக்குறுதிகளும் இந்தச் சிறிய அளவிலான வெற்றிக் கனவை அடித்து வீழ்த்தக்கூடும்.
திமுக எதிர் பாஜக - 2026 தேர்தலின் முக்கிய போட்டி. (படம்: TOI)
பாஜக சாதிக்க முடியாதது
சாதிக்க முடியாதது: தமிழகத்தில் ஆட்சி அமைப்பது. 15 % வாக்கு விகிதத்தைக் கடப்பது. திராவிட அரசியலை அழிப்பது. அண்ணாமலை 2026 தேர்தலில் போட்டியிடாமல் பிரச்சாரப் பயணம் மட்டுமே செய்கிறார், அதிமுகவின் ஆட்சேபணையால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இது பாஜகவின் சொந்தத் தொகுதிகளில் கூட நிலை பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது.
பாஜக தமிழகத்தில் வளரும், ஆனால் ஆட்சி அமைக்கும் அளவிற்கு என்றுமே வளராது. அதற்கான காரணங்கள் தெளிவானவை: முதல் காரணம்: திராவிட அரசியல் தமிழகத்தில் 70 ஆண்டுகளாக வேர் விட்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக இரண்டும் அந்த வேர்களின் மீது நிற்கின்றன. பாஜகவால் அந்த வேர்களை அகற்ற முடியாது.
இரண்டாவது காரணம்: தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், கணிசமான சிறுபான்மையினர் இருக்கிறார்கள். இந்துத்துவா அரசியல் அவர்களை ஒரே நேரத்தில் எதிரிகளாக்கி விடுகிறது. மூன்றாவது காரணம்: தமிழகத்தில் சாதி அரசியல் மிகவும் சிக்கலானது. பாஜக ஒரு சாதித் திரட்டலை உருவாக்க முடியாமல் திணறுகிறது. நான்காவது காரணம்: மொழி. இந்தித் திணிப்பு என்ற வரலாற்று வலியைத் தமிழர்களால் மறக்கவே முடியாது.
முடிவுரை
மத்திய அதிகாரத்தின் வலிமையைக் கொண்டு ED, CBI, வருமான வரித்துறை உதவியுடன் மாநில அரசுகளை அச்சுறுத்தலாம். ஆனால் தமிழக மக்களின் வாக்குகளை அச்சுறுத்திப் பெற முடியாது. தமிழன் தன் வரலாறு தெரிந்தவன். தன் மொழியின் மதிப்பு தெரிந்தவன். தன் அடையாளத்தை யாரோ வரைந்து தர வேண்டியதில்லை என்பதை நன்கு அறிந்தவன்.
பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு அரசியல் யதார்த்தம், ஆனால் ஒரு போதும் அரசியல் சக்தியல்ல. அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் 2026 தேர்தல் முடிவுகள் யாரையும் ஆச்சரியப்படுத்தாது. திமுக இப்போது 200 தொகுதிகளில் வெற்றியை நெருங்கி விட்டது. மீதமிருக்கும் 34 இடங்களுக்கே தமிழகத்தின் பிற எல்லாக் கட்சிகளும் சண்டையிட வேண்டும். அவற்றில் பெரும்பாலானவை அதிமுக விடம் தானிருக்கும்.
0 Comments