elugai

திராவிடப் பேரியக்கமா? அல்லது பாஜகவின் நிழலா? - 2026 தேர்தலில் அதிமுகவின் எதிர்காலம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கை.அறிவழகன்

MGR - ஒரு புரட்சியின் தொடக்கம்

1972 அக்டோபர் 17, திமுகவிலிருந்து பிரிந்து M.G. ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கினார். MGR வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு நிகழ்காலத்தின் புரட்சி. திரையில் ஏழையின் நண்பனாக நடித்தவர், அரசியலிலும் அதை நிரூபித்தார். 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 130 இடங்களில் வென்று முதலமைச்சரானார். 1980 இல் 129 இடங்கள், 1984 இல் 132, மூன்று தொடர் வெற்றிகள்.

MGR ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சத்துணவுத் திட்டம் தமிழக பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மாற்றியது. 10+2 கல்வி முறையை 1978 இல் கொண்டு வந்தவர் MGR. அவரது மரணம் 1987 இல் தமிழகத்தை கண்ணீரில் ஆழ்த்தியது, அது வெறும் அரசியல் இழப்பல்ல, ஒரு மாபெரும் மனித இழப்பு.

MGR M G Ramachandran Tamil Nadu Chief Minister AIADMK founder எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR) - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர். திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஏழைகளின் அடையாளமாக மாறினார். (புகைப்படம்: The Hindu)

ஜெயலலிதா - முரண்பாடுகள் நிறைந்த ஆளுமை

MGR இறந்த பிறகு கட்சி இரண்டாக பிளந்தது. ஜெயலலிதா மற்றும் ஜானகி என்ற இரண்டு பக்கங்கள். இறுதியில் ஜெயலலிதா தலைமையில் கட்சி ஒன்றிணைந்தது. ஜெயலலிதா என்ற அரசியல்வாதியை மதிப்பிடுவது எளிதல்ல, ஏனென்றால் அவர் ஒரு முரண்பாடுகள் நிறைந்த ஆளுமை.

தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தார். 2016 இல் தனியாக போட்டியிட்டு 135 இடங்களில் வென்றார், 1984 க்கு பிறகு ஆட்சியில் இரண்டாம் முறையாகத் திரும்பிய முதல் கட்சியாக வரலாறு படைத்தார். அம்மா உணவகம் ஒரு புரட்சிகரமான நலத்திட்டம். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இதை பாராட்டினார். 1994 இல் 69% இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, சத்துணவுத் திட்ட விரிவாக்கம் போன்றவை மக்கள் நேரடியாக உணர்ந்த திட்டங்கள்.

அதே நேரத்தில் ஊழல் வழக்குகள், சினிமா நண்பர்களுக்கு சலுகைகள், பத்திரிகை சுதந்திரக் கட்டுப்பாடுகள் இவை ஜெயலலிதா ஆட்சியின் கரும்பக்கங்கள். ஆனால் அரசியல் மதிப்பீட்டில் அவர் தமிழக வரலாற்றின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Jayalalithaa Tamil Nadu Chief Minister AIADMK leader ஜெ.ஜெயலலிதா - தமிழகத்தின் மிகவும் சக்திவாய்ந்த முதலமைச்சர்களில் ஒருவர். ஆறு முறை முதலமைச்சர் பதவி வகித்து, பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். (புகைப்படம்: Times of India)

தேர்தல் வரலாறு

1991 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு 150+ இடங்கள், 1996 தேர்தலில் தனியாக 4 இடங்கள் மட்டும், 2001 இல் கூட்டணிக் கட்சிகளோடு 132 இடங்கள், 2006 இல் தனியாக 61 இடங்கள், 2011 இல் கூட்டணிக் கட்சிகளோடு 150 இடங்கள், 2016 இல் தனியாக 135 இடங்கள், 2021 இல் NDA கூட்டணியுடன் 66 இடங்கள்.

ஜெயலலிதாவுக்குப் பிந்தைய நெருக்கடி

2016 டிசம்பர் 5, ஜெயலலிதா மறைந்தார். அன்று தமிழக அரசியல் ஒரு வெற்றிடத்தை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளரானார். ஆனால் திடீரென உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கொடுத்தது. அவரது முதலமைச்சர் கனவு சிதைந்தது. TTV தினகரன் துணைப் பொதுச் செயலாளரானார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். ஒரே ஆண்டில் கட்சி EPS, OPS, சசிகலா, TTV என்று நான்கு திசைகளில் சிதறியது. இந்த சிதைவு கட்சியின் ஆழமான வேர்களை உலுக்கியது.

2021 தேர்தலில் 66 இடங்கள் மட்டுமே வென்றது. 2019 லோக்சபா தேர்தலில் BJP உடன் கூட்டணியிலும் கூட ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 1998 இல் முதல் BJP கூட்டணி 30 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ஆனால் ஒரு ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவை திரும்பப் பெற்றது.

Edappadi Palaniswami EPS AIADMK Tamil Nadu leader எடப்பாடி பழனிசாமி - தற்போதைய அதிமுக தலைவர் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர். கட்சியை சசிகலா, OPS, TTV ஆகியோரிடமிருந்து தனியே தக்க வைத்துக் கொண்ட தலைமைத்துவம் அவரது சாதனை. (புகைப்படம்: News18)

பாரதீய ஜனதா கூட்டணி - சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

2023 செப்டம்பர் 25 எடப்பாடி பழனிசாமி பாரதீய ஜனதாக் கூட்டணியை விட்டு வெளியேறினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2025 ஏப்ரல் 11 மீண்டும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார். EPS முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த கூட்டணி மாற்றங்கள் ஒரு கேள்வியை எழுப்புகின்றன, அதிமுகவிற்கு தெளிவான சித்தாந்த நிலைப்பாடு இருக்கிறதா? அல்லது தேர்தல் வாய்ப்பை பொறுத்து கூட்டணி மாறும் நடைமுறை அரசியலா?

பாரதீய ஜனதாவுடனான அதிமுகவின் கூட்டணி தமிழகத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இது மிக முக்கியமான கேள்வி. முதலாவதாக NEET தேர்வுத் திணிப்பு, இந்தி திணிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, இது தவிர பாரதீய ஜனதா ஆட்சியின் தமிழகத்திற்கு எதிரான செயல்கள். கூட்டணி வைத்திருக்கும் அதிமுக இந்தப் பிரச்சினைகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது. தமிழ் அடையாள அரசியலை பேசும் கட்சிகள் இதை தாக்குதலாகப் பயன்படுத்துகின்றன.

"நாங்கள் BJP வின் அடிமை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி எப்போதும் தாமாகவே சொல்கிறார். இந்த சொற்களை சொல்ல வேண்டிய நிலை அவருக்கு வருகிறதென்றால் அது ஒரு அரசியல் அழுத்தத்தை காட்டுகிறது.
AIADMK BJP alliance Tamil Nadu 2026 assembly election அதிமுக - பாரதீய ஜனதா கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய கேள்வி. (புகைப்படம்: Hindustan Times)

மூன்றாவதாக சிறுபான்மையினர் வாக்குகள். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் BJP உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை எந்த அளவிற்கு ஆதரிப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பாரதீய ஜனதா அரசின் நிதி வளங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படலாம். பாரதீய ஜனதாவின் சமீபத்திய வாக்கு வங்கி அதிகரிப்பு அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் சேரலாம், குறிப்பாக கொங்கு நாட்டில் நுட்பமாக செய்யப்படும் சாதி அரசியல் அதிமுகவிற்கு சாதகமாகலாம்.

எடப்பாடி பழனிசாமி - வலிமைகள் மற்றும் பலவீனங்கள்

எடப்பாடி பழனிசாமியால் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்ய முடியும்? எடப்பாடி எப்போதும் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவர். 2017 முதல் 2021 வரை முதலமைச்சராக இருந்தார். அவரது ஆட்சி திடுமென சிறப்பான ஆட்சியாகவோ, மிகவும் மோசமான ஆட்சியாகவோ மாறியதாக வரலாறு குறிப்பிடவில்லை, அது ஒரு சாதாரணமான நிர்வாகத்தைக் கொண்ட ஆட்சி.

கொங்கு மாவட்டங்களில் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் வலுவான தனிப்பட்ட வாக்கு வங்கி, முதல்வராக அனுபவமிக்க நிர்வாகி, ஆளும் திமுக அரசின் தவறுகளை கடுமையாக விமர்சிக்கும் திறன், கட்சியை OPS, சசிகலா, TTV ஆகியோரிடமிருந்து தனியே தக்க வைத்துக்கொண்ட தலைமைத்துவம் இவைதான் அவரது சாதனைகள். ஜெயலலிதாவின் கவர்ச்சிகரமான ஆளுமையை ஈடுசெய்ய முடியாத நிலை, இந்த ஒப்பீடு அவரைத் தொடர்ந்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடம் கூட வெல்ல முடியாமல் போனது, அது தலைமையிடம் கேள்விகளை எழுப்பியது.

"210 இடங்களில் வெல்வோம்" என்று தொடர்ந்து சொல்கிறார் எடப்பாடி, இது வெறும் தேர்தல் பரப்புரைக்கான நம்பிக்கையூட்டல், நடைமுறையில் கள யதார்த்தமல்ல என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி), அமமுக, தொண்டர்களே இல்லாத ஜி.கே.வாசன் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. பாமக அன்புமணி அணி வட தமிழகத்தில் ஒரு கணிசமான ஆற்றலாக இருக்கலாம்.

2026 தேர்தல் கணிப்பு

திமுக அரசுக்கு எதிர்ப்பு உணர்வு சில தொகுதிகளில் இருக்கலாம், மேலும் அதிமுகவிற்கு ஒரு உறுதியான வாக்கு வங்கி இன்னும் இருக்கிறது. 2021 இல் 66 இடங்கள் மட்டுமே. 2024 நாடாளுமன்றத்தில் முட்டை. இந்த வீழ்ச்சி மிக வேகமானது. பாரதீய ஜனதாவுடனான கூட்டணி சிறுபான்மை வாக்குகளை விலக்கலாம். தமிழக மக்களின் இந்துத்துவ எதிர்ப்பு அரசியலால் புறக்கணிக்கப்படலாம், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளின் இளைஞர் ஆதரவு அதிமுகவின் கணிசமான திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கலாம்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 35 முதல் 50 இடங்கள் வரை வெல்லலாம். அதிமுக மட்டும் தனியே 25 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறுவது மட்டுமே சாத்தியம். 210 இடங்களில் வெல்வோம் என்பது வெற்றுத் தேர்தல் பரப்புரைப் பேச்சு மட்டுமே. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பெண்களுக்கான பல்வேறு நேரடி நலத்திட்டங்கள் இந்தத் தேர்தலில் ஒரு ஆழமான புலப்படாத அலையாக அடிக்கும் பட்சத்தில் இந்த 35 முதல் 50 இடங்களும் கரைந்து காணாமல் போகும் வாய்ப்பையும் உருவாக்கலாம்.

முடிவுரை - எதிர்காலம் எது?

அதிமுக இன்றும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். MGR இன் ஏழைகளுக்கான கனவு, ஜெயலலிதாவின் கவர்ச்சிகரமான ஆளுமை, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள் இவை தமிழக அரசியலில் நிரந்தரமான பங்களிப்புகள். ஆனால் உறுதியும், அறிவாற்றலும் கொண்ட தலைவர்கள் இல்லாத அரசியல் கட்சி அலையில்லாத கடல் போல. ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக அந்த அலையை உறுதியாக இழந்திருக்கிறது.

பாரதீய ஜனதாவுடனான கூட்டணி ஒரு கட்சிக்கு எப்போதும் ஒரு சித்தாந்த சுமை, தமிழக மக்களின் மதச்சார்பற்ற அடையாளத்தோடு ஒட்டாத ஒரு தேவையற்ற ஆணி. எடப்பாடி புத்திசாலியான அரசியல் சாதுர்யம் கொண்ட தலைவராக உட்கட்சி வரலாற்றில் பரிணாமம் அடைந்திருக்கிறார். ஆனால் இந்த இந்துத்துவ சுமையை சுமந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெல்வது சவாலானது.

இறுதியாக ஒரு கேள்வி. அதிமுக, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய பிம்பமான ஏழைகளின் கட்சியாகத் திரும்புமா? அல்லது பாரதீய ஜனதாவின் தமிழகக் கிளையாக மாறுமா? இந்தத் தேர்வை எடப்பாடி தான் செய்கிறார். அந்த தேர்வின் விளைவை 4 மே 2026 முடிவுகள் தெளிவாகச் சொல்லும்.

கை.அறிவழகன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் அரசியல் பகுப்பாய்வாளர். தமிழக அரசியல் மற்றும் தேர்தல் பகுப்பாய்வு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

Post a Comment

0 Comments