elugai

திராவிட நிழலில் கரையும் காங்கிரஸ்: 2026 தேர்தலில் காமராஜர் ஆட்சி சாத்தியமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 | காங்கிரஸ் கட்சி

தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026

பட்டியல் வரிசை எண் - 3 | இந்திய தேசிய காங்கிரஸ் கை.அறிவழகன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்ததன் சுவடுகளாவது இன்று இருக்குமா என்று கேள்வி எழுப்பினால் உறுதியாக இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உருவான காங்கிரஸ் கட்சியின் எழுச்சி, திமுகவுடன் அதன் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் புத்துணர்வு கொண்ட இணக்கத்தோடு சேர்ந்திருந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்காக உருவான கூட்டணி முரண்பாடுகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்து அழியும் நிலைக்கு வந்திருக்கிறது காங்கிரஸ்.

காமராஜர் தமிழக முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரஸ் கர்ம வீரர் காமராஜர் — 1954 முதல் 1963 வரை மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்; இந்திய அரசியலில் "King Maker" என்று போற்றப்பட்டவர். (படம்: Wikipedia)

காமராஜரின் பொற்காலம் — காங்கிரஸின் கதை

தமிழக அரசியலில் காமராஜரின் காலம் ஒரு பொற்காலம் என்பதை எந்த முரண்பாடுகளும் இல்லாமல் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் தனிப்பெரும் செல்வாக்கோடு ஆட்சி செய்த கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். 1967 வரை காங்கிரஸே தமிழகத்தின் ஆட்சிக் கட்சி. அந்தக் காலத்தை ஒரு தனி மனிதர் தமிழகத்தின் அரசியல் இயக்கமாக வடிவமைத்தார், அவர்தான் காமராஜர். 1954 முதல் 1963 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். இந்திய அரசியலில் "King Maker" என்று போற்றப்பட்டவர். ஏழை மக்களுக்கான கல்வி, உணவு, வேலைவாய்ப்பு இவைதான் அவரது அரசியலின் ஆத்மா.

கர்ம வீரர் காமராஜர் என்ற அந்த ஒரு மனிதரை வைத்தே தமிழக காங்கிரஸ் இன்றும் உயிர் வாழ்கிறது. அது அந்தத் தலைவரின் தனிப்பெரும் உழைப்பைக் காட்டுகிறது. அதே நேரத்தில் கட்சியின் தற்போதைய நிலையையும் காட்டுகிறது — 60 ஆண்டுகளாக இன்னொரு காமராஜர் பிறக்கவேயில்லை. இனியும் அது நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

1967 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலின் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இன்று வரை ஏறத்தாழ 60 ஆண்டுகளாக காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு முறைகூட தனித்து ஆட்சி அமைக்கவில்லை.

ஏன் காங்கிரஸ் தோற்றது? ஏனென்றால் திராவிட இயக்கம் ஒரு சமூகப் புரட்சியை கொண்டு வந்தது. சாதி ஒழிப்பு, தமிழ் மொழி அடையாளம், பெரியாரின் பகுத்தறிவு இவை அனைத்தும் காங்கிரஸின் மத்திய அரசு சார்பு அரசியலை விட மக்களுக்கு நெருக்கமாக இருந்தன. அந்தத் தோல்வியிலிருந்து காங்கிரஸ் இன்னும் மீளவில்லை. மீள்வதற்கான எந்த முயற்சிகளையும் அதன் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை.

தேர்தல் வெற்றிகள் — உண்மையா? திமுக நிழலா?

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 இடங்கள், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 இடங்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் 18 இடங்கள். இதுதான் கடந்த 15 ஆண்டுகளில் தேர்தல் வெற்றி. 2016 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்றதற்கு மிக முக்கியக் காரணம், காங்கிரஸ் தான் போட்டியிட்ட இடங்களில் வெறும் 16% மட்டுமே வெற்றி பெற்றது. 2021-ல் 18 இடங்கள் வென்றது ஒரு வளர்ச்சிதான், ஆனால் உண்மையில் அது திமுகவின் ஒன்றிய எதிர்ப்பு அலையின் பலன். காங்கிரஸின் தனிப்பட்ட வலிமை அல்ல.

"நாம் வென்றது திமுகவின் செல்வாக்கு காரணமாகவே. நாம் தனித்துப் போட்டியிட்டால் தனிச்சிறப்போடு தோற்றிருப்போம்." — E.V.K.S. இளங்கோவன், மூத்த காங்கிரஸ் தலைவர்

அன்றைய மூத்த காங்கிரஸ் தலைவர் E.V.K.S. இளங்கோவன் நேர்மையாக ஒன்றைச் சொன்னார் — "நாம் வென்றது திமுகவின் செல்வாக்கு காரணமாகவே. நாம் தனித்துப் போட்டியிட்டால் தனிச்சிறப்போடு தோற்றிருப்போம்." இது ஒரு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொன்னது, அது ஒன்றே போதும் காங்கிரஸின் இன்றைய நிலையை நாம் புரிந்துகொள்ள.

ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி — கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நன்மதிப்பு பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர்; ஆனால் கட்சியின் உட்கலகங்களால் அவரின் செல்வாக்கும் தேய்ந்து வருவதாக கள நிலவரம் கூறுகிறது. (படம்: Wikipedia)

2026 தேர்தலில் என்ன நடந்தது?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடங்கள் கிடைக்கும் வரை ஒரு பெரிய போராட்டம் நடந்தது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் போன்ற திமுகவின் தயவால் நாடாளுமன்ற உறுப்பினர்களான தலைவர்கள் ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் என்று போர்க்கொடி தூக்கினார்கள். காங்கிரஸ் கட்சியில் இப்போது 17 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. அது கட்சிக்கு ஏற்பட்ட அவமானமாக உணரப்பட்டது.

இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது — 28 இடங்கள் கொடுத்தது திமுகவின் "அன்பா?" அல்லது "அரசியல் கணக்கா?" உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சில தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு உதவுகிறது. அதனால் 28 இடங்கள். இது கூட்டணிக் கணக்கு, தேவை — உறுதியான ஒருதலைப்பட்ட அன்பல்ல.

2025 ஆம் ஆண்டில் சுமார் 20 மாவட்ட தலைவர்கள் டெல்லி சென்று செல்வப்பெருந்தகையை பதவி நீக்கும்படி தலைமையிடம் கோரினார்கள். மாவட்டத் தலைமைக்கு மரியாதை இல்லை என்று குற்றம் சாட்டினார்கள். கட்சியின் IT அணியும், elite அணியும் செல்வப்பெருந்தகையைப் புறக்கணித்தது. War Room தலைவர்களும் கட்சித் தலைவரை விட்டு விலகியது ஒரு வெட்கக்கேடான நிகழ்வு. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இது வழக்கமாக நிகழும் உட்கட்சிக் குழப்பம்தான். இந்தியா முழுவதும் ஆளுமை நிறைந்த ஒரே கட்சியாக இருந்த காங்கிரஸ் பாரதீய ஜனதாவிடம் தொடர்ந்து தோற்பதன் காரணமும் அதுதான்.

செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவர் 2026 K. செல்வப்பெருந்தகை — தமிழக காங்கிரஸ் தலைவர்; "காமராஜர் காலத்தை மீட்டெடுப்பேன்" என்று சொல்கிறார், ஆனால் கட்சிக்குள் உட்கலகங்கள் தொடர்கின்றன. (படம்: Wikipedia)

காங்கிரஸின் உண்மையான வாக்கு வங்கி

தமிழகத்தில் சுமார் 10 தனிக்குழுக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இயங்குகின்றன. இவர்களது முழு நேர வேலையே கட்சியை வளர்ப்பதோ அல்லது மக்கள் பணியாற்றுவதோ அல்ல. மாறாக ஒருவருக்கொருவர் எப்படிக் குழி பறிப்பது என்று கூடிப்பேசுவது மட்டும்தான். ஒரு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது கட்சிக்கு உள்ளே இப்படிக் கலகம் நடப்பது வெற்றிக்கான நல்ல அறிகுறியல்ல.

இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்கு வங்கி — குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு ஆதரவு இருக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தில் சில தென்மாவட்டத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. தலித் சமூகத்தில் இருந்து செல்வப்பெருந்தகை தலைவராக இருப்பதால் சில வாக்கு வங்கி மாற்றங்கள் நடக்கலாம். ஆனால் இந்த வாக்கு வங்கிகள் எதுவும் உறுதிப்படுத்தப்படாதவை. காங்கிரஸ் கட்சி திமுக-அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இந்த வாக்குகள் திராவிடக் கட்சிகளோடு சேர்ந்தே வரும், காங்கிரஸிற்கு மட்டும் தனியே வராது.

2026 தேர்தல் — என்ன நடக்கும்?

தமிழக சட்டமன்றம் 2026 தேர்தல் காங்கிரஸ் தமிழக சட்டமன்றம் — 2026 ஏப்ரல் 23 வாக்குப்பதிவு; காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 12 முதல் 18 இடங்கள் வரை வெல்லும் என்று அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். (படம்: Wikipedia)

28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி அதன் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் களமிறங்குகிறது. 85% வேட்பாளர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் ஆலோசனையோடு தேர்வு செய்யப்பட்டனர். செல்வப்பெருந்தகை திமுகவிடம் இணக்கம் காட்டுவதும், ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் திமுகவிற்கு நன்றிக் கடன் காட்டுவதும் மட்டும்தான் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை.

சாதகமான சூழல்: திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு அலை ஏதும் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ராகுல் காந்திக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தமிழகத்தில் இருக்கிறது, அவர் நேர்மறையான தாக்கம் கொண்டவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற 18 இடங்களில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு — இவைதான் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நேர்மறையான தாக்கம்.

கட்சிக்குள் தொடர்ந்து குழிபறிப்பு வேலைகள், கலகம், தனி அடையாளம் ஏதும் இல்லாமல் திராவிடக் கட்சிகளின் நிழலில் தொடர்ந்து இயங்குவது, போட்டியிடும் 28 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் போன்ற புதிய சக்திகள் காங்கிரஸின் கொஞ்ச நஞ்ச வாக்குகளையும் பிரிக்கலாம். நேர்மையான சட்டமன்றத் தேர்தல் மதிப்பீடு — 28 இடங்களில் போட்டியிடும் சூழலில் 12 முதல் 18 இடங்கள் வரை வெல்லலாம். திமுகவின் நலப்பணிகள் உருவாக்கியிருக்கும் அலை மிக வலிமையாக இருந்தால் 22 வரை சாத்தியம்.

செல்வப்பெருந்தகை "காமராஜர் காலத்தை மீட்டெடுப்பேன்" என்று சொல்கிறார். அது ஒரு அழகான கனவுதான். ஆனால் அதற்கு ஒரு தெளிவான சித்தாந்தம், வலுவான அமைப்பு, மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டுப் போராடும் வலிமை, மற்றும் திராவிட நிழலிலிருந்து வெளியே வரும் துணிவு தேவை. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்தது காங்கிரஸ் கட்சியின் அறிவீனமான முடிவு. அதன் விளைவாக அந்தக் கட்சியின் வெற்றி விகிதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றமும் நிகழாது.

இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு மாபெரும் வரலாறு கொண்ட கட்சி. காமராஜர் முதல் காந்தி குடும்பம் வரை அந்தக் கட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். ஆனால் தமிழகத்தில் அந்தப் பெருமை அழிந்து நீண்ட காலமாகிறது. இது யாரையும் குற்றம் சொல்வதற்காக எழுதப்படும் சொற்கள் அல்ல. இங்கே திராவிட அரசியலின் வலிமை அதிகம். அந்த வலிமையோடு மோதுவதை விட அதோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்வதுதான் நடைமுறை அரசியல் ஞானம். ஆனால் அதற்கான நம்பிக்கையாக இருந்த ராகுல் காந்தியும் இன்று தமிழகத்தில் செல்வாக்கிழந்த தலைவராக மாறிக்கொண்டே வருகிறார் என்பதே கள நிலவரம். காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் குரலாக மாறுவதற்கான வாய்ப்பு ஒரு நேர்மையான மக்கள் பணியாற்றும் தலைவரால் ஒருவேளை நிகழலாம். ஆனால் ஒருபோதும் ஆட்சி அமைக்கும் ஆற்றலாக அல்ல.

— கை.அறிவழகன்

Post a Comment

0 Comments