நிதியால் தாமதிக்கும் நீதி
செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு தொடர்ந்தும் தாமதமாகி வருகிறது. கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற அகழ்வின்போது, 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குவியல்களாகவும் ஒரு தொகுதி எலும்புகள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
மேலும் 8 வாரங்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டியிருந்ததால், அதற்கான நிதியொதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பருவ மழை காரணமாக அகழ்வை முன்னெடுப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளாலும், 7 மாதங்களுக்கு முன்னர் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன. செப்டெம்பர் 6ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட புதைகுழி அகழ்வை, ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் தொடங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள். 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாகி வருகின்றன. (புகைப்படம்: Tamil Guardian)
நிதி ஒதுக்கீட்டு தாமதம்
அதற்கமைய யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தின் மூலம், இந்த அகழ்வுக்குத் தேவைப்படும் நிதி தொடர்பான பாதீடு நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி, அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை அனுப்பப்பட்ட போதும், இதுவரை நீதி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என, கடந்த 7ஆம் திகதி நீதிமன்றில் இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்ட அகழ்வுக்கான செலவு மற்றும் ஏற்கனவே அகழ்தெடுக்கப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்வதற்கான செலவினங்களை உள்ளடக்கியதாக அந்தப் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, தீர்மானிக்கப்பட்டபடி, ஏப்ரல் 20ஆம் திகதி அகழ்வுகளை ஆரம்பிப்பதற்கு, இன்னமும் ஒரு வாரமே இருக்கிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு இன்னமும் கிடைக்காத நிலையில், திட்டமிட்டபடி 20 ஆம் திகதி அகழ்வுப் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்து, நிதி ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்த பின்னர், 27ஆம் திகதியளவில் அகழ்வு பணிகளை தொடங்குவதெனத் தற்காலிகமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனவர்களின் தலைவிதியை அறிய ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். (புகைப்படம்: Human Rights Watch)
அரசாங்கங்களின் அக்கறையின்மை
செம்மணியில் நூற்றுக்கணக்கான தமிழர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள், சான்றுகள் வெளிப்படுத்தப்பட்ட போதும், அந்தப் புதைகுழியை முழுமையாக முழு மூச்சுடன் அகழ்ந்தெடுப்பதற்கு, ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் அக்கறை செலுத்தவில்லை. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், அகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெருமடுப்பிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. இந்த விடயத்தில் தேவைப்பட்டால், சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் கூட தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் எனக் கூறியிருந்தார். ஆனால், அதற்கான கோரிக்கைகள் எதுவும் அரசாங்கத்தரப்பில் விடுக்கப்படவில்லை.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துகின்றனர். தங்கள் உறவினர்களின் நிலை பற்றி அறிய ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். (புகைப்படம்: Tamil Guardian)
வாக்குறுதிகள் மற்றும் செயல்கள்
செம்மணி புதைக்குழி குறித்து சர்வதேச விசாரணை கோரி போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, இந்தப் புதைகுழி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்வதாகவும், விரைவாக அகழ்வுகளை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார். அவர், ஜெனிவாவில் இடம்பெற்ற கூட்டத்திலும், இந்த வாக்குறுதியை கொடுத்திருந்தார். அதேவேளை, பாராளுமன்றத்திலும் பலமுறை இதனை குறிப்பிட்டிருந்தார்.
அதுதவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் செம்மணி புதைக்குழி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்குப் போதியளவில் நிதி ஒதுக்கீட்டை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி மனிதப் புதைக்குழி அகழ்வு முன்னெடுக்கப்படவில்லை.
ஏழு மாதங்களாக புதைக்குழி அகழ்வு நின்று போயிருக்கிறது. அதற்கு நிதி மட்டுமல்ல, வானிலையும் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், துரிதமாக அந்த நிதி விடுவிக்கப்பட்டிருந்தால், செம்மணிப் புதைக்குழி அகழ்வு, ஏழு மாதங்களாக இழுபறிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்காது.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தால், இன்னும் 8 வாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய புதைக்குழி அகழ்வில் கணிசமான முன்னேற்றங்களை எட்டியிருக்க முடியும். பருவ மழைக் காலத்தில் செம்மணி பிரதேசம் நீர் நிரம்பியிருக்கும். அதனைத் தெரிந்து கொள்வதற்கு விசேட நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. மழைக்காலத்தின் பின்னர், அகழ்வு பணியை துரிதமாக மேற்கொள்வதற்கு இப்போது நிதி ஒதுக்கீடே சிக்கலாக உள்ளது.
கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்
இந்த விடயத்தில், நீதி அமைச்சு ஏன், நிதி ஒதுக்கீட்டு விடயத்தில், போதுமான ஒத்துழைப்பை வழங்கக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் ஏப்ரல் 20 ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கும். அவ்வாறாயின், இந்த அகழ்வு பணியை விரைவாக முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லையா?
இந்த அகழ்வுக்கு சர்வதேச பங்களிப்பை உறுதி செய்திருந்தால், அவர்களின் நிபுணத்துவத்துடன் இதனை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், புதைக்குழி அகழ்வு பணிகளை விரைவுபடுத்தியிருக்கலாம். அதைவிட, ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளை ஆய்வுக்குட்படுத்துவதற்கான பாதீடும் கூட அங்கீகரிக்கப்படவில்லை.
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உறவினர்கள் குறித்த உண்மையை அறிய ஏங்குகின்றனர். (புகைப்படம்: France 24)
அரசாங்கத்திற்கு, இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு போதுமான நிதி இல்லையா – அல்லது இந்த விடயத்தில் அக்கறையற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், காலம் காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் செம்மணி புதைக்குழியை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தின என்பது உண்மை.
இந்தப் புதைக்குழி அகழ்வு தாமதிக்கப்படுவது குறித்து முன்னர் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஏன் இதுவரை அமைதியாக இருந்தீர்கள் என்று தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் பதிலுக்குக் கேள்வி எழுப்பியிருந்தார் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.
பாதிக்கப்பட்டவர்களின் ஏக்கம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், புதைக்குழிகள் விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் முன்னோடிகளும், பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்ச் சமூகத்தில் பெரும் எண்ணிக்கையான பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நீதிக்காக, ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் போன உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என அறிந்து கொள்வதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலையில் இருந்து இந்த விவகாரத்தை அரசாங்கம் பார்க்கத் தவறுகிறது.
செம்மணி புதைக்குழி அகழ்வுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாததன் ஊடாக, அவர்களின் ஏக்கங்களும், கவலைகளும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான காலமும் இழுத்தடிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை பற்றிய கேள்விகளுக்கு பதிலை கொடுக்கக் கூடியதாக செம்மணிப் புதைக்குழி அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புதைக்குழி அகழ்வு விடயத்தில் அக்கறையற்ற நிலை இருப்பது ஏற்புடையதல்ல.
உண்மைகள் வெளியே வருவதை தடுக்கும் முயற்சியா?
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, தான் பல உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக, ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பியிருந்தார். ஆனாலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அல்லது உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்கு, அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவையெல்லாம், செம்மணிப் புதைக்குழியின் உண்மைகள் வெளியே வருவதை, இந்த அரசாங்கமும் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. செம்மணி புதைக்குழி கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்தும் ஒன்று. தற்போதைய ஆட்சியாளர்களும், கடந்தகால அரசாங்கங்கள் சிலவற்றில் நேரடி அல்லது மறைமுக பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். எனவே, செம்மணி புதைக்குழியின் உண்மைகள் வெளிவருவதை தற்போதைய அரசாங்கம் விரும்பவில்லையா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
இந்த புதைக்குழிகள் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அரச படையினர். அவர்களை காப்பாற்றும் பொறுப்பை விட, நீதியையும் உண்மையும் நிலை நிறுத்துவதற்கான கடப்பாடு அரசாங்கத்துக்கு அதிகம் உள்ளது.
0 Comments