elugai

PTA நீக்கப்படுமா? அல்லது புதிய வடிவம் பெறுமா? - இலங்கையின் அதிகார அரசியலும் மக்கள் ஏமாற்றமும்.

எல்லோரிடமும் உள்ள கேள்வி இது…

எல்லோரிடமும் உள்ள கேள்வி இது…

கட்டுரையாளர் - இலட்சுமணன்

நாட்டைப் பொறுத்தவரையில், ஒன்றுக்காக முன்வைக்கப்படுகின்ற பெயரினாலேயே ஏமாறும் மக்கள் இருக்கின்ற நிலையில், "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின்" உளவியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத வரையில், அதிகாரத்துக்கு வந்தவுடன் வாக்குறுதிகளையே மறந்துவிடும் அரசியல் தரப்பினர் இருக்கின்ற நிலையில், ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் எதிர்ப்புகளால் "பயங்கரவாதம்" என்கிற பெயர் தாங்கியிருக்கின்ற சட்டங்களை நாட்டிலிருந்து அகற்றவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

பட்டிக்கலோவில் PTA/PSTA எதிர்ப்பு போராட்டம் — பிப்ரவரி 28, 2026
பட்டிக்கலோவில் PTA ரத்து, PSTA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் — கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை நடைபயணம், பிப்ரவரி 28, 2026 (படம்: Newswire.lk)

இலங்கை அரசாங்கமானது திட்டமிட்டுத் தமிழர்கள் மீது வன்மத்தைத் திணிப்பதற்காகவும், அச்சுறுத்தல்களை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்" முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றுதான் தமிழ் மக்களும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் தமிழர்களை இலக்கு வைத்து இது கொண்டுவரப்பட்டிருந்தாலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களையும், 'அரகலய' போராட்டத்தின் பின் முழு இலங்கை மக்களையும் பாதிக்கும் சட்டமாக இது மாறியது என்பதே உண்மை.

தமிழ் மக்களுடைய போராட்டம் "பயங்கரவாதமாக"ச் சிங்கள மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பல்வேறு அடக்குமுறைகளைக் கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்களாகியும், தமிழ் மக்களது அரசியல் போராட்டத்திற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவு முன்வைக்கப்படவில்லை. மாறாக, ஏமாற்றுகளும், பின்கதவு வேலைப்பாடுகளும், அடக்குமுறைகளுமே நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு என்று ஒரு மாயையைக் காட்டி கொண்டுவரப்பட்ட, அரசியலமைப்புக்கு அப்பால் தற்காலிக ஏற்பாடாகவே இருந்து வரும் "பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" — "பயங்கரவாதமே நாட்டில் இல்லை, பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்துவிட்டோம்" என்று கூறிக்கொண்டிருந்த கடந்த அரசாங்கங்களால் முற்றாக நீக்க முடியவில்லை.

புலிப் பயங்கரவாதத்தைக் காட்டிச் சிங்கள மக்களை ஏமாற்றிய காலம் போய், தற்போது மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களை அடக்குவதற்காக "ஏமாற்று வித்தையாக" அரசைப் பாதுகாக்கும் எனும் சொற்பிரயோகத்துடன் சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதகமாக அமைந்துள்ள இக்கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்றே அனைவரும் கோரிவருகின்றனர். இது அரசுக்கும் அரசை இயக்குபவர்களுக்கும் தெரிந்திருந்தாலும், அச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இன்றுவரை விசாரணைகளுமின்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருப்பவர்களுக்கு என்னவாகும் என்ற முடிவே தெரியாமல் இருக்கின்ற நிலையில், புதிதாக ஒன்று புகுத்தப்படப்போகிறது என்பதே ஆபத்தானதாகும்!

ஐ.நா. மனித உரிமை ஆணையர் Volker Türk PTA நீக்கக் கோருகிறார்
ஐ.நா. மனித உரிமை ஆணையர் Volker Türk இலங்கை PTA நீக்கம் மற்றும் Online Safety Act ரத்துக்கு கோருகிறார் — ஜூன் 26, 2025 (படம்: Newswire.lk)

இருப்பினும், நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாதச் சட்டத்தினால் அவதியுறும்போது, புதிதாகத் தந்திரமான சொற்பிரயோகத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்" தேவையில்லை; "பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்குங்கள்" என்று ஒரு குறிப்பிட்ட தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், போராட்டங்களையும் தற்போது ஆரம்பித்திருக்கின்றனர். இருந்தாலும், அதன் அளவும் வீரியமும் போதாது என்கிற சிந்தனையும் காணப்படுகிறது.

இதற்குரிய காரணம் என்னவென்று சிந்திப்போமானால், சிலவேளைகளில் அது தேவையற்றதாகவே இருக்கும். காரணம், அனைத்துவிதமான பிரச்சினைகளிலும் அல்லல்பட்டுச் சிரமப்பட்டுப் போனவர்களுக்கு "எது வேண்டுமானாலும் நடந்துவிடட்டும்" என்கிற எண்ணம் ஏற்படுவது வழமையே. அதேநேரத்தில், நாட்டில் கடந்த கால அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக (Online Safety Act) இருக்கட்டும்; எதுவுமே முயற்சித்தும், எதிர்த்தும் நிறுத்தப்படவில்லை. அப்படியிருக்கையில் "இதற்கும் அதே நிலைமைதான்" என்கிற மனோநிலை மக்களிடம் உள்ளது. அத்துடன், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம். அதுவும் மக்களால் எதிர்ப்புகளையே தொழிலாகக் கொண்டிருந்த பல்வேறு அமைப்புகள் இணைந்து உருவாக்கியிருக்கின்ற அரசாங்கம். அவ்வாறிருக்கையில், எதிர்ப்புகளைக் காண்பிக்கக்கூடியவர்கள் வெளியில் இல்லை என்கிற நிலை காணப்படுகின்ற வேளையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான எதிர்ப்புகள் குறைந்திருக்கின்றமை மற்றொரு காரணமாக இருக்கிறது.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது, 1979ஆம் ஆண்டில் 48ஆம் இலக்கச் சட்டமாக 6 மாதங்களுக்கான தற்காலிகமான ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் அது 1983இல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜே.ஆர். ஜயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டுவரப்பட்டதாகும். "இந்தச் சட்டம் அரசியல் யாப்புக்கே முரணானது" என்றுதான் சொல்லப்பட்டது; ஆனால், இப்போது வரை நடைமுறையில் இருந்துவருகிறது. ஒருவர் தன்னுடைய கருத்தைப் பொதுவெளியில் அல்லது சமூக ஊடகங்களில் கூடப் பகிர முடியாத நிலை பயங்கரவாதச் சட்டத்தினால் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியான நெருக்கடிகள் மற்றும் சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்காகத் "தற்போது அதில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறோம்" என்று பூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடே கடந்த கால அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Justice for All — PTA நீக்க கோரிக்கை — நவம்பர் 2025
Justice for All அமைப்பு PTA நீக்க குழு அறிக்கை மற்றும் மசோதாவை வெளியிடக் கோருகிறது — நவம்பர் 14, 2025 (படம்: Newswire.lk)

தமிழர்கள் யாழ்ப்பாண இராஜ்யத்தைப் போர்த்துக்கேயரிடம் இழந்து, அவர்களால் நாடு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து, பின் பிரித்தானியரால் நாடு கையளிக்கப்பட்டபோது சிங்களவர்களின் ஆளுகைக்குள் சிக்குண்ட தமிழர்கள், அன்றிலிருந்தே போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்தும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படாததால், அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. ஆனாலும் தீர்வின்றி யுத்தங்களும், பேச்சுக்களும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆனால், தமிழர்களை வென்றதாகக் கருதி அவர்களுக்கான தீர்வை இன்னமும் இலங்கை அரசாங்கம் வழங்காமலேயே மௌனம் காத்துக்கொண்டிருக்கிறது.

இதுவரையில், 1979ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 46 வருடங்களை எட்டிவிட்ட "பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை" நீக்குவதற்கான முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆட்சியாளர்கள் தமது தேவைக்கேற்பத் தமக்கு எதிரானவர்களைப் பழிவாங்குவதற்கு இந்தச் சட்டம் உதவியுள்ளது. அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதற்கு இந்தச் சட்டம் வாய்ப்பளித்துள்ளது. வழக்குகள் தாக்கல் செய்யாமல் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கும், சித்திரவதைகள் செய்வதற்கும் இந்தச் சட்டம் உதவுகின்றது. உள்நாட்டுப் போர் இல்லாதபோதும் தமிழ்க் கைதிகளைப் பழிவாங்கக்கூடிய விதத்தில் இந்தச் சட்டம் பாய்ச்சப்படுகிறது. "விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் கையடக்கத் தொலைபேசியில் இருந்தது" என்பதற்காக விசாரணையின்றிப் பல இளைஞர்கள் சிறையில் மாதங்கள், வருடங்கள் கடந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் — இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிகளால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் பயன் ஏதும் விளையவில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கும், முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கும் பதிலே இல்லாமல், தீர்வுகள் இன்றி ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை மிரட்டும் செயற்பாடுகள், கைது செய்யும் செயற்பாடுகள் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குக் கடந்த கால ஆட்சியாளர்களால் பொறுப்புக்கூற முடியவில்லை; தற்போதைய அரசாங்கமும் அதனை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. "இராணுவத்தினரைப் பாதுகாப்போம்" என்றுதான் அவர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

ITAK ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கண்டனம் — செப்டம்பர் 2025
ITAK ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அரசாங்கத்தின் PTA தொடர்பான நிலைப்பாட்டை கண்டிக்கிறது — செப்டம்பர் 9, 2025 (படம்: Newswire.lk)

ஜெனிவா அரங்கு தொடங்கும்போது, தமிழ் மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாக நோக்கப்படுவதே வழக்கம். இந்தத் தடவையிலும் அந்த மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அரசாங்கத் தரப்பு அதனை வெற்றிகரமாக வென்று வருகின்ற நிலைமையே தொடர்ந்து வருகிறது. இவ்வாறிருக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டுவர இருக்கின்ற "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை" நிறுத்தக் கோரியும், வடக்கு-கிழக்கு தழுவிய ரீதியில் பொது அமைப்புகள் நடத்தியிருக்கும் மக்கள் போராட்டம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இப்போராட்டங்களால் பயன் கிடைக்க வேண்டும் என்று மாத்திரம் எண்ணிக் கொள்வோம்.

மொத்தத்தில், பதில் கிடைக்காமலேயே மறைந்துபோகும் பல கேள்விகளுடன் இந்தக் கேள்வியும் காணாமல் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற முடிவுக்கே வரமுடியும். மாற்றாக ஏதும் நடந்துவிடப் போவதில்லை என்பது மாத்திரமே நிச்சயம். "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்" வந்தே தீரும், அதற்கும் நாம் தயாராக வேண்டும் என்பதுவும் நிச்சயம்!

Post a Comment

0 Comments