elugai

உதாசீனம் செய்யப்படும் ஐ.நா அறிக்கை: தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அரசாங்கத்தின் ‘திட்டமிட்ட’ மௌனமும்!

உதாசீனம் செய்யப்பட்ட ஐ.நா அறிக்கை

உதாசீனம் செய்யப்பட்ட ஐ.நா அறிக்கை

கட்டுரையாளர் - கார்வண்ணன்

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிக்கை சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஜனவரி 13ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இலங்கையின் ஆயுதப் படைகள், துணை ஆயுத குழுக்களாக செயற்பட்ட ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. போரின் போதான, ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஐ.நா OHCHR இலங்கை போர்கால பாலியல் வன்முறை அறிக்கை ஜனவரி 2026 ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் (OHCHR) வெளியிட்ட இலங்கை போர்கால பாலியல் வன்முறை அறிக்கை — ஜனவரி 13, 2026. இந்த அறிக்கையில் 1986 முதல் 2024 வரையான குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (படம்: Newswire.lk)

இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகப் போகின்ற நிலையிலும், இது தொடர்பான அரசாங்கத்தின் பதில் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இப்போதைய கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவகாரம் சூடு பிடிக்காது என்பதால், அரசாங்கம் இதையிட்டு பெரிதாக அக்கறைப்படவில்லை. ஐ.நாவின் குற்றச்சாட்டுகளை, இலங்கையில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமுமே பாரதூரமாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த வழக்கத்தையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது என்பதால், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்த அறிக்கை வெளியான போது, உள்ளூரில் ஊடகங்களிலும் பெரிதான கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. அறிக்கை வெளியாகி ஒரு வாரத்துக்குள் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடக சந்திப்பில் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயந்திஸ்ஸ, இந்த அறிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பதில் அளிக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இரண்டு மாதங்களாகின்ற போதும், இந்த அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் பதில் எதுவும் வெளிவரவில்லை.

இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? நிராகரிக்கிறதா? அல்லது இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதுவுமே அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படவில்லை.

ஜெனிவாவில் அனுசரணை நாடுகள் குழுவின் அழைப்பு

இவ்வாறான நிலையில் ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில் அனுசரணை நாடுகள் குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர்களை மதிக்கிறோம். இதுதொடர்பாக இலங்கை ஆக்கபூர்வமாக செயற்படவும், சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் வலியுறுத்துகிறோம்."
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk திருகோணமலை இலங்கை ஜூன் 2025 ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கை வருகையின் போது திருகோணமலையில் — ஜூன் 2025. OHCHR இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. (படம்: Newswire.lk)

இந்த அறிக்கை தொடர்பாக ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்ற இந்த அழைப்புக்கூட இலங்கை அரசாங்கத்தின் பதிலும் வழங்கப்படவில்லை. உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை வழங்குமாறு சட்டப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறும் ஐ.நா அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருவதும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு நீதி கோருவது தொடர்பான செயற்பாடுகள் விடயத்தில் உள்நாட்டு அழுத்தங்கள் குறைவாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த அறிக்கை வெளியாகிய கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாத்திரம், இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அதற்கும் கூட அரசாங்கத்திடம் இருந்து பதில் வரவில்லை. பல அரசியல் தலைவர்கள் இந்த அறிக்கை வெளியானதைக் கூட பல வாரங்களாக அறியாமல் இருந்தனர். அந்தளவுக்கு இந்த விவகாரம் கவனிக்கப்படாத ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையின் தீவிரம் — 2024 வரை நீளும் குற்றங்கள்

போரின் போதான பாலியல் வன்முறைகள் குற்றச்சாட்டு தனியே — போர்க் காலத்திற்கு வரையறுக்கப்பட்டதல்ல. முன்னைய அரசாங்கங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் அல்ல. போருடன் தொடர்பான விவகாரங்களை மையப்படுத்தி, இப்போதும் நீண்டு கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள கடைசிக் குற்றச்சாட்டு, 2024ஆம் ஆண்டில் பதிவாகி இருக்கிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2024ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பதவிக்கு வந்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தக் குற்றச்சாட்டு பதிவாகியதா அல்லது அதற்கு முன்னர் பதிவாகியதா என்று தெரியவில்லை. ஆனாலும் 2024ஆம் ஆண்டின் ஒரு பகுதியில் பதவியில் இருந்த அரசாங்கம் என்ற வகையில், தற்போதைய அரசாங்கத்திற்கும் கடப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்முறைக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட 27 பேரின் சாட்சியங்களுடன் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக — இனப்படுகொலையாக கருதத்தக்கது எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டம் செப்டம்பர் 2025 ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் — OHCHR பரிந்துரைகளை நிராகரிக்கும் நிலைப்பாட்டை தொடர்ந்து கையாண்டு வருகின்றனர் — செப்டம்பர் 2025. (படம்: Newswire.lk)

ஐ.நா பரிந்துரைகளை புறக்கணிக்கும் எழுதப்படாத விதி

ஆனாலும் அரசாங்கம் இதன் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனை தட்டிக்கழிக்கும் போக்கிலேயே, இந்த அறிக்கையை கையாண்டிருக்கிறது. கடந்த காலங்களிலும் கூட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இவ்வாறு தான் நடந்துகொண்டது. அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலையை காணப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திலும் கூட, ஐ.நாவின் அறிக்கைகள் உதாசீனம் செய்யப்படும் நிலையே காணப்பட்டது. அவை முழுமையாக கவனத்தில் கொள்ளப்படுவதோ, ஐ.நாவின் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோ இல்லை.

ஐ.நா இதுவரை காலத்திலும் பல முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு, பல முக்கியமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பாகவும் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காணிகள் விடுவிப்பு தொடர்பாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பாக என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முன்வைத்த பரிந்துரைகள் எவையுமே அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

ஐ.நாவின் பரிந்துரைகளை புறக்கணிக்கின்ற அல்லது நிராகரிக்கின்ற வழக்கம் எழுதப்படாத விதியாகவே இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகிறது. இந்த சூழலானது தமிழ் மக்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தவிர்க்கின்ற அல்லது புறக்கணிக்கின்ற நிலையையும் கூட சுட்டிக்காட்டுகிறது.

Amnesty International OHCHR இலங்கை போர்கால பாலியல் வன்முறை நீதி கோரிக்கை ஜனவரி 2026 Amnesty International இலங்கையில் போர்கால பாலியல் வன்முறைகளுக்கு நீதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தது — OHCHR அறிக்கை "திட்டமிட்ட, பரவலான மற்றும் முறையான மீறல்கள்" என்று தெளிவாக குறிப்பிடுகிறது — ஜனவரி 2026. (படம்: Newswire.lk)

தற்போதைய அரசாங்கம் இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாக கூறுகிறது. ஆனால் இனவாதமற்ற அணுகுமுறையை அது கையாளவில்லை. தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாரதூரமான இந்த பாலியல் வன்முறைகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அது முற்று முழுதாக குழிதோண்டிப் புதைப்பதிலேயே கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அதனை கவனத்தில் எடுத்து நீதியை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்த போதும், அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுத்து, அதற்கான ஆதாரங்களை திரட்டுவதற்கு அல்லது அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ தனியான என்ற ஒரு முயற்சியையும் எடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதியும் கொடுக்கவில்லை. ஆக மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருப்பதால் இத்தகைய ஒரு அலட்சியம் அரசாங்கத்தினால் பேணப்படுகிறது. இதற்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டிய தமிழ்த் தரப்புகள் கூட, அமைதியாக இருப்பது கூட அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments