தேவை ஒரு வலுவான அழுத்தக் குழு
போருக்கு பின்னரான காலப்பகுதியில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பது குதிரைக்கொம்பாகவே மாறிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் அங்கும் இங்குமாக அலைகின்ற நிலையே காணப்படுகின்றதேயன்றி, தீர்க்கமான நிலைப்பாட்டுடன் — தெளிவான இலக்கை நோக்கி பயணிப்பதாக இல்லை. இந்தக் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலுவான கட்டமைப்பாக இருந்த போதும், அது கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் இருந்த அதன் பலம், இறுதியில் முற்றாகவே இல்லாமல் போனது. இது ஒன்றும் தானாக நிகழ்ந்த விடயம் அல்ல. குறித்த காலகட்டத்தில் அரசியல் பரப்பில் இருந்தவர்களின் தவறுகளால், தவறான அணுகுமுறைகளால், தவறான தீர்மானங்களால் நிகழ்ந்த ஒன்று.
ஆயுதப் போராட்டத்தில் பாடங்களைக் கற்றுக்கொண்டும், அரசியல் போராட்டத்தில் அதனைப் பிரயோகிக்கத் தெரியாத நிலையே காணப்பட்டது. இல்லாவிட்டால் ஆயுதப் போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்த் தரப்பு அரசியல் ரீதியாக தன்னை பலப்படுத்தியிருக்கும். ஆனால் அவ்வாறான ஒரு பலப்படுத்தல் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் நடக்கவே இல்லை என்பதை இன்றுள்ள நிலை தெளிவாக காட்டுகிறது.
கூட்டமைப்பின் சிதைவும் அதன் காரணங்களும்
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற வலுவான ஒரு அரசியல் கட்டமைப்பு நாடாளுமன்றத்தில் காணப்பட்டது. அதை ஒரு அமைப்பு ரீதியான கட்டமைப்பாக மாற்ற தவறியது, தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் தவறு எனலாம். விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் அத்தகைய ஒரு அமைப்பு ரீதியான பலம் தேவைப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது விடுதலைப் புலிகள் நேரடியாக அரசியல் செயல்பாட்டில் ஈடுபடவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கையாளுகின்ற ஒரு அழுத்தக் குழுவாக அவர்கள் செயற்பட்டார்கள். கூட்டமைப்பைக் கொண்டு தங்களின் நோக்கங்கள், இலக்குகளை அடைவதற்கான முடிவுகளை எடுக்க வழிவகுத்திருந்தார்கள். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைப்பு ரீதியாக கட்டமைக்க வேண்டிய தேவை அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
ஆனால், விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில் வலுவிழந்து போனது. அதனை அமைப்பு ரீதியாக கையாளுவதற்கு, எழுதப்பட்ட யாப்பின் அடிப்படையில் கொண்டு செல்வதற்காக அடிப்படை இல்லாமல் போனதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் போனது. இது அதன் சிதைவுக்கு இன்னும் வசதியாகியது. அதனை சிதைப்பதற்கு முற்பட்டவர்களின் நோக்கங்கள் இலகுவாக ஈடேறுவதற்கும், அது வழிவகுத்தது.
இந்தக் கட்சிகள் காலத்துக்கு காலம் சமஷ்டி பற்றி அல்லது தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகள், அரசியல் தீர்வு நிலைப்பாடுகள் பற்றி பேசினாலும், அவற்றில் பெரும்பாலானவற்றின் உண்மை நோக்கு அவற்றுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் காலத்திலேயே இந்த விடயங்களை அவர்கள் உச்சரிக்க தலைப்பட்டார்கள். இது தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு சாபக்கேடு. ஆனால், இது தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இன்று வரை இல்லாமல் செய்திருக்கிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சி தலைவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார் — ITAK, TNA, SLMC உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் — நவம்பர் 22, 2025. (படம்: Newswire.lk)
அழுத்தக் குழுக்களின் தோல்வி — வரலாற்றுப் பாடம்
இனிமேலாவது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மேலெழ வேண்டும் என்ற சிந்தனை பல்வேறு தரப்புகளுக்கு இருந்தாலும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உபாயங்களோ உத்திகளோ தெரியாத நிலை நீடிக்கிறது. இதற்கு முக்கியமான இன்னொரு காரணம், விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு அழுத்தக் குழு, கடந்த 17 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து உருவாக முடியாமல் போனதாகும். இடையில் சில அழுத்தக் குழுக்கள் அல்லது அழுத்தம் கொடுக்கக்கூடிய தனி ஆளுமைகள் உருவாகியிருந்தாலும், அவை கூடிய விரைவிலேயே நீர்த்துப்போனது துரதிஷ்டம்.
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை, ஒரு காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கின்ற ஒருவராக, அதனை கையாளக்கூடிய ஒருவராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரை மீறி, செயற்படுகின்ற சூழல் ஏற்பட்டது. அவரும் உடல் நலம் குன்றி, மரணிக்கின்ற நிலை ஏற்பட்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவு இன்னமும் விரைவுபடுத்தப்பட்டது.
அதுபோல, வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் அரசியலுக்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பு சார் பலவீனங்களால், அதனுடன் முரண்படுகின்ற நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் அவரது இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை சென்ற ஒரு அழுத்தக் குழு உருவாக்கியது. சிவில் சமூகத்தின் தீவிரமான பங்களிப்புடன் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை, மிகவும் வலுவான ஒன்றாகவே காணப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிக மிகச் சவாலான ஒன்றாக உருவெடுத்தது.
ஆனால் அது சிவில் சமூக அமைப்பாக — தீவிரமான ஒரு அழுத்தக் குழுவாகச் செயற்படுவதற்குப் பதிலாக, அரசியல் திசையில் நகரத் தொடங்கியது. அதனால், அழுத்தக் குழு என்ற நிலையை அது இழக்கும் நிலை ஏற்பட்டது. அந்த அழுத்தக் குழுவை பேணக்கூடிய சூழல் அல்லது அதனைத் தக்கவைப்பதற்கான உபாயங்கள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவு. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கையாளுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக, அதனுடன் முட்டி மோதி அரசியல் செய்கின்ற, எதிர்ப்பு அரசியல் செய்கின்ற ஒன்றாக மாறியது. அந்த இடத்தில், வலுவான ஒரு அழுத்தக் குழுவின் உருவாக்கம் தோல்வியில் முடிந்தது.
ITAK பொதுச் செயலாளர் சுமந்திரன் மற்றும் ஜனாதிபதி AKD — உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் ITAK மற்றும் TNPF தமிழ் ஒற்றுமை குறித்த பேச்சுகளை தொடங்கியுள்ளன — 2025. (படம்: Newswire.lk)
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் புதிய முயற்சி
அதன் பின்னர் பெரும்பாலும் அழுத்தக் குழுக்களாக உருவெடுக்கத் தொடங்கிய தரப்புகள், சிறியளவிலான முயற்சிகளுடன் அமுங்கிப் போயின. இப்பொழுது இன்னொரு அழுத்தக் குழு உருவாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்ற அமைப்பு எல்லா தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறது. தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனை தமிழ்த் தேசிய கட்சிகள் விரும்பியோ, விரும்பாமலோ, வரவேற்றிருக்கின்றன. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து, இனப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என, தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.ரட்ணவேல் கூறியுள்ளார்.
"வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் யாவும், ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட — மூடிய அறைக் கூட்டமாக அமைந்த இந்தச் சந்திப்பில் பகிரப்பட்ட கருத்துகள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். மிக விரைவில் மீண்டும் கூடி, பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும்," சட்டத்தரணி ரட்ணவேல் குறிப்பிட்டிருக்கிறார்.
சிதறி கிடக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒரு மேசைக்கு கொண்டு வருவதே இன்று, கடினமான காரியமாக மாறியுள்ள சூழலில், இவ்வாறான ஒரு சந்திப்பு முதல் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பேசுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதும், அங்கு தான் அதிக சிக்கல்கள் மறைந்திருக்கின்றன என்பதும் உண்மை.
தமிழ்க் கட்சிகளை ஒரே குடையில் ஒன்றிணைப்பது என்பது, இன்றைய நிலையில் சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. ஒரே கொள்கையில், ஒரே தலைமையில், ஒரே அமைப்பாக செயற்படுவதற்கு எந்தத் தரப்புகளுமே தயாராக இல்லை என்பது கசப்பான உண்மை. போலியான ஒற்றுமை கோஷத்தை முன்வைக்கின்றனவே தவிர, தேர்தலை எதிர்கொள்வதற்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டுகளை உருவாக்க மட்டுமே விரும்புகின்றன. அரசியல் ரீதியாக தங்களின் மேலாதிக்கம் கைவிடப்படுவதை, எந்தவொரு தரப்புமே விரும்புவதாக தெரியவில்லை. ஆனால், எல்லா தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் இருப்பை — தங்களின் மேலாதிக்கத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மை தெரியாமலேயே இருந்துகொண்டிருக்கின்றன.
தமிழ் கட்சி தலைவர்கள் கூட்டங்கள் — உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் TNPF, ITAK, DTNA கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்காக பேச்சுகளை நடத்தி வருகின்றன — ஆனால் உண்மையான ஒற்றுமை இன்னமும் சாத்தியமாகவில்லை — 2025. (படம்: Newswire.lk)
முன்னேறுவதற்கான வழி
இந்தச் சூழலில், ஒருமித்த நிலைப்பாட்டை நோக்கிய இந்த நகர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இந்த முயற்சி இன்னும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டுக்கு வருவது என்பது பிரச்சினை அல்ல, அதை எப்படி அடைவது என்பதுதான் சிக்கலானது. அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு, தமிழ்ச் சட்டத்தரணிகள் குழு ஒரு வலுவான அழுத்தக் குழுவாக மேலெழ வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.
0 Comments